Published : 17 Mar 2021 03:14 AM
Last Updated : 17 Mar 2021 03:14 AM

என்ன வேண்டும் தமிழ்நாட்டுக்கு?- வறீதையா கான்ஸ்தந்தின், பேராசிரியர், கடல் சூழலியல் - வள அரசியல் ஆய்வாளர்

தொழிலை முறைப்படுத்தல்: மிகை முதலீடும் பிழையான மீன்பிடி முறையும் கரைக்கடல் மீன்வள வீழ்ச்சிக்கு முதன்மையான காரணங்கள். தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்காற்றுச் சட்டம்-1983-ன்படி, வெவ்வேறு தரப்பு மீனவர்களுக்கான கடல் பகுதிகளை நிர்ணயித்து, முறையாகக் கண்காணித்துவந்தால் ஓரளவு தீர்வு பெறலாம். ஆழ்கடல் பரப்புகளில் விசைப்படகு மீனவர்கள் சென்று மீன்பிடிக்க ஏதுவான தொழில்நுட்ப, மானிய உதவிகளும் வழிகாட்டலும் அவர்களுக்குத் தேவை. கப்பல்/ கடல் பாதுகாப்பு/ மீன்வளம்/ மீன்பதனப் புலங்களில் குறுகிய காலப் படிப்புகளின் வழி மீனவ இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி வழங்க வேண்டும். முழுமையான அடிப்படைக் கட்டுமான வசதிகளுடன் போதுமான எண்ணிக்கையில் மீன்பிடித் துறைமுகங்களை நிறுவி வழங்க வேண்டும்.

அடிப்படைக் கட்டுமான வசதிகள்: மீனுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமை மீனவர்களிடம் இல்லை. சிறுதொழில் மீன்வளப் பொருளாதாரத்தை மீள உருவாக்குவதற்குக் கடற்கரையில் கூட்டுறவு முறையில் மீன் உறைபாட, பதன, விற்பனை மையங்களை உருவாக்க வேண்டும். அதனால் உள்ளூர் சந்தைப் பிணைப்புகளை மீளக் கொணர முடியும். மரணப் படுக்கையில் இருக்கிற மீனவர் கூட்டுறவுச் சங்கங்களை உயிர்ப்பித்து, ஒருங்கிணைந்த மீன்வள நடவடிக்கைகளில் அவற்றை ஈடுபடுத்த வேண்டும். ஒருங்கிணைக்கப்படாத பிற தொழில் குழுக்களுக்கு வழங்குவதுபோல கூட்டுறவுச் சங்க உறுப்பினர் எல்லோருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கடலில் மரணமடையும் மீனவர் சார்ந்த நிவாரண ஒழுங்குமுறைகளை எளிமைப்படுத்தி, நேர் சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தாமதமின்றி நிவாரணம் வழங்க ஆவன செய்ய வேண்டும். அதோடு, காணாமல்போகும் மீனவரின் குடும்பத்துக்கான அன்றாட நிவாரணத்தை உயர்த்த வேண்டும்.

பெண்களுக்குத் தொழில் வாய்ப்புகள்: அடிப்படைக் கல்வியும் திறன் பயிற்சிகளும் கடற்கரைப் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும். மதிப்புக்கூட்டிய மீன்பண்டங்கள், மீன் பதனம், மீன் சந்தைப்படுத்தல் போன்ற அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்கேற்புக்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். பாலின சமத்துவமும் சுகாதாரமும் கொண்ட சந்தைகள் வேண்டும். கடல் அபலையர்க்குப் பெருந்தொழில் நிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து குழு அடிப்படையில் நிதியளிக்க அரசு அறிவுறுத்த வேண்டும். ஊர்தோறும் உழைக்கும் மீனவப் பெண்களுக்கான கூட்டுறவுச் சங்கங்களை நிறுவி, தொழில் வளர்ச்சி, இலவசக் காப்பீடு, ஓய்வூதியம் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

பொருளாதார விடுதலை: பொதுத்துறை வங்கிகள் மீனவர்களுக்குத் தொழில் கடன் கொடுப்பதில்லை. வட்டிக்காரர்கள் 40% வரை வட்டி வசூலிக்கிறார்கள்; தொழில்கருவி முதலீட்டுக்கு வியாபாரிகள் கடன் கொடுத்தால் அறுவடையை அடிமாட்டு விலைக்குக் கொள்முதல் செய்கிறார்கள். இது போன்ற சட்டவிரோதமான நிதிப் பரிவர்த்தனைகளைத் தடைசெய்துவிட்டால் மட்டும் மீனவர்களின் சிக்கல் தீர்ந்துவிடாது; அவர்களுக்கு மாற்றுப் பொருளாதாரத்தின் வாசலை அரசு திறந்துவிட வேண்டும். மீனவர் கூட்டுறவு அமைப்புகளைப் பொருளாதாரரீதியில் வலுப்படுத்தி, சேமிப்புக்கும் முதலீட்டுக் கடனுக்கும் ஏற்றதாகச் சீரமைக்கலாம். மண்டல-மாவட்ட அளவில் மீன்வள வங்கிகளை நிறுவி, மீனவர்களுக்குக் கடனளிக்க ஏற்பாடு செய்யலாம்.

கடற்கரை நன்னீர்வளம்: தமிழகத்தின் செழுமையைத் தீர்மானித்துவந்த நீர்வளங்களின் முக்கியமான ஒரு பகுதி கடலோர நன்னீர்வளங்கள். இந்நீர்நிலைகள் (உவர்நீர்ப் பரப்புகள், கழிமுகங்கள், ஏரிகள்) கண்டல் காடு உள்ளிட்ட ஏராளமான கடலோர வனங்களைப் பராமரித்து நின்றன. இன்று கடலோர வனங்களில் பெருமளவு அழிந்துள்ளன. உவர்நீர் இறால் பண்ணைகள் போன்ற நாட்பட்ட சிக்கல்களை இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். நன்னீர்வளத்தைப் பாதுகாத்து, கடற்கரையின் இயற்கைச் சூழலைக் காக்க வேண்டும்.

கடற்கரைப் பாதுகாப்பு: கடற்கரைக் கட்டுமானங்களுக்கு உயர் அலைக் கோட்டிலிருந்து 500மீட்டருக்கு அப்பால் மட்டுமே அனுமதி என்றிருந்த நிலை இப்போது 50மீட்டராகக் குறுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பண்ணைவிடுதி, தொழில் கட்டுமானங்களுக்காகக் கடற்கரை நத்தம் புறம்போக்கு நிலங்கள் முதலாளிகளுக்கு விற்கப்படுகின்றன. குப்பங்கள் மட்டுமல்ல, அவற்றை ஒட்டிக் கிடக்கும் பகுதிகளும் சேர்ந்தேதான் கடலின் தன்மையைப் பேணுகின்றன. கடல் சூழலுக்கும் மீனவர்களுக்கும் இந்த நிலங்கள் தேவைப்படுகின்றன. தேசிய மீன்வளக் கொள்கை (2020) கரைக்கடலில் மீன்வளர்ப்புத் திட்டங்களை அனுமதிக்கிறது. பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் இந்த அனுமதியை அரசு திரும்பப் பெற வேண்டும்.

பேரிடர்கள், கடல் மட்டம் உயர்தல்: கடற்கரைகள் விளிம்புநிலம். சமவெளி மக்களின் மீறல்களின் கெடுவிளைவுகள் கடற்கரையை, அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்றன. வங்கக் கடலில் ஆண்டுதோறும் ஏற்படும் புயல்களின் எண்ணிக்கையும் கடுமையும் அதிகரித்திருக்கின்றன; கடற்கரைகள் முன்பைவிட மிகுதியாகப் பலவீனப்பட்டுப் போயுள்ளன என்பதை அண்மைக் காலப் புயல்கள் வெளிப்படுத்தியுள்ளன. கடல் மட்டம் 25 செமீ உயர்ந்தால் சென்னை உட்பட பல கடலோரக் குடியிருப்புப் பகுதிகள் மூழ்கிப்போகும். அங்குள்ள மக்கள் பருவநிலை அகதிகளாகிவிடுவார்கள். கடற்கரை நெடுக உயரும் பெரும் துறைமுகங்கள், அணு, அனல்மின் நிலையக் கட்டுமானங்கள் செயற்கைப் பேரிடர்களை வலிந்து வரவழைப்பதன்றி வேறில்லை. தமிழகக் கடற்கரை கடல் மட்ட உயர்வையும் புயல்களையும் தாக்குப்பிடிக்கும் வகையில் அடிப்படைக் கட்டுமானங்களை வலுப்படுத்த வேண்டும். இயற்கை அரண்களை வலுப்படுத்த வேண்டும். புதைவட மின்பாதைகள், புயல் பாதுகாப்பு மையங்கள் நிறுவுவதும், இணையவழி தகவல் - தொடர்புக் கருவிகளும் இவற்றில் அடங்கும்.

கொள்கை வகுப்பில் மீனவர் பங்கேற்பு: மீனவர் தொடர்பான கொள்கைத் தளங்களில் மீனவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x