

ஜனதா தளம், திமுக, தெலுங்கு தேசம், அஸாம் கண பரிஷத் கட்சிகளின் கூட்டணியான தேசிய முன்னணியின் தொடக்க விழா 1988 செப்டம்பரில் சென்னையில் நடந்தது. அது ஒரு தேர்தல் கூட்டணியாக மட்டுமின்றி, கொள்கைக் கூட்டணியாகவும் அமைந்திருந்தது. வி.பி.சிங், மு.கருணாநிதி இருவரிடையேயான நட்பு இறுதிவரை நீடித்தது. 1989-ல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது அதன் முடிவை ஆவலோடு இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கேட்டு ராஜீவ் காந்தியும் தேசிய முன்னணிக்கு ஆதரவு கேட்டு வி.பி.சிங்கும் தமிழகத்தைச் சுற்றிவந்தார்கள்.
தேசிய முன்னணியில் அங்கம் வகித்த திமுக அத்தேர்தலில் 202 இடங்களை வென்று13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பதவியேற்பு விழா நடந்தது. தனது முந்தைய ஆட்சியில் அக்கோட்டத்தைக் கட்டிய கருணாநிதி, ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு, திறப்பு விழாவுக்குக்கூட அழைக்கப்படவில்லை. ஆட்சிக்கு வந்த பிறகுதான் கோட்டத்துக்குள் நுழைவேன் என்ற கருணாநிதியின் சபதம் நிறைவேறியது. 1989 மக்களவைத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிபெறுவதற்கான சமிக்ஞைகளைச் சொல்வதாக அமைந்திருந்தது தமிழகச் சட்டமன்றத் தேர்தல்.