

சென்னை
கடலூர் மாவட்டத்தில் கனமழை, வெள்ளத்தால் வீடுகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் நம்முடைய சகோதர, சகோதரிகளுக்கு உதவ அழைப்பு விடுத்திருந்தோம். அவர்களது உடனடித் தேவை ஒரு புது பாயும் போர்வையும் என்பதையும் குறிப்பிட்டிருந்தோம். இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்டு, பரிதவித்து நிற்கும் மக்களுக்கு தக்க சமயத்தில் தோள் கொடுப்பதில் ஒருபோதும் சளைத்தவர்கள் அல்ல நாம் என்பதை ‘தி இந்து’ வாசகர்கள் நிரூபித்துவருகிறார்கள். நமது வாசகர்களின் அன்பின் வெளிப்பாடாக பாய்களும் போர்வைகளுமாக குவிந்தவண்ணம் இருக்கின்றன. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் வாசகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை கேபிஎன் போக்குவரத்து நிறுவனம் மூலம் நேற்று 2-வது நாளாக அனுப்பிவருகின்றனர்.
வந்த உதவிகள் அனைத்தையும் கொண்டுசேர்க்கும் பணி நேற்று மாலை தொடங்கியது. ஒவ்வொரு கிராமமாக, கடுமையாக பாதிக்கப்பட்ட கிராமங்களை நோக்கி வருகிறோம்.
சென்னையில் கிருஷ்ண பிரியா பவுண்டேஷன் சார்பில் 10 பெட்ஷீட்கள், பரமகுரு 10 பாய்கள், திருவள்ளுவன், ஜெ.அல்லி, டி.ஆர்.நாராயணன், லட்சுமி ஆனந்த், இளங்கோவன், மற்றும் குடும்பத்தினர், செந்தில்குமார், ராதாகிருஷ்ணன், சாமிராஜ், ஆல்வின், எம்.ராமசந்திரன், டி.மாதவன், நாராயணசாமி ஆகியோர் பாய் மற்றும் பெட்ஷீட்களை சென்னையில் இருந்து நேற்று அனுப்பியுள்ளனர்.
மதுரை
மதுரையில் இருந்து நேற்று முன்தினம் முதல் வாசகர்கள் நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றனர். நேற்று முன்தினம் நமது வாசகர்கள், திறக்குறள் ஊழியம், கண்ணன், முகமது அலி, சாகுல், ஜெயலட்சுமி, பாண்டி, விஜயலட்சுமி, பூபதி, தென்னரசு ஆகியோர் பாய், போர்வை, ஆடைகள் உள்ளிட்டவற்றை 9 பண்டல்களில் அனுப்பியுள்ளனர். நேற்று மதியம் 2 மணி வரை ஜெசீமா, மணிகண்டன், மீனாட்சி சேல்ஸ் கார்ப்பரேஷன், சங்கர் சேல்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், போடி சரவணன் மற்றும் அவரது நண்பர்கள், பெயர் கூற விரும்பாத 2 பேர் 5 பண்டல்களில் பாய், போர்வை, ஆடைகளை அனுப்பினர். தொடர்ந்து இரவு வரை வாசகர்கள் இவற்றை அனுப்பிய வண்ணம் இருந்தனர்.
இதுபோல தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இருந்தும் வாசகர்கள் பலர் நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றனர்.
வேலூர்
காட்பாடி காந்தி நகரை சேர்ந்த பைனான்சியர் சிவப்பிரகாசம் ஒரு பாய், ஒரு போர்வையை வேலூரில் உள்ள கேபிஎன் பார்சல் அலுவலகத்தில் வழங்கியுள்ளார்.
விழுப்புரம்
விழுப்புரம் செயின்ட் ஜார்ஜ் பிரைமரி பள்ளி நிர்வாகிகள் சிவஜோதி, பன்னீர்செல்வம், தர்வேஸ் ராஜா ஆகியோர் நேற்று தலா 2 பாய் மற்றும் போர்வை வழங்கியுள்ளனர்.
திருப்பூர்
திருப்பூரில் உள்ள 14 பனியன் ஏற்றுமதி நிறுவனங்களில் இருந்து, சுமார் 3 ஆயிரம் பனியன்கள் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வாயிலாக, நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் ஆகும். 22 பண்டல்கள் மூலம், இவை அனுப்பப்பட்டன. திருப்பூரை சேர்ந்த டிசைன்ஸ் நிறுவனம், 1 பண்டலில் பனியன், துணிகளை மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பியது. தொழில் துறையினர் பலரும் ‘தி இந்து’வுடன் இணைந்து உதவி செய்யக் காத்திருப்பதாக தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
திருநெல்வேலி
திருநெல்வேலியை சேர்ந்த வேல்சாமி, சீனிவாசன், சோமசுந்தரம், சந்திரசேகரன், பி.மீனாட்சி, முத்துலட்சுமி, டாக்டர் கலைவாணி ஆகியோர் நேற்று பாய் மற்றும் போர்வைகளை கொடுத்துள்ளனர்.
ஈரோடு
ஈரோட்டில் ரீட் அமைப்பு இயக்குநர் ஆர்.கருப்பசாமி ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள 25 பாய் மற்றும் 18 பெட்ஷீட்கள் வழங்கியுள்ளார்.
தருமபுரி
தருமபுரியில் கவிப்பிரியா என்பவர் தன் நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து 19 பாய் மற்றும் ஒரு போர்வை ஆகியவற்றை கொடுத்துள்ளார். பல்வேறு இடங்களில் பணியாற்றும் சுமார் 15 பேர் ஒன்றாக இணைந்து நட்பு வட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறார்கள். இவர்கள் மாதம்தோறும் தங்கள் ஊதியத்தில் இருந்து ஒவ்வொருவரும் ரூ.200 வீதம் தனி வங்கிக் கணக்கில் சேமித்து வருகின்றனர். இவர்கள் இயற்கை பேரிடர் போன்ற பாதிப்புகள் ஏற்படும்போது இந்த நிதியில் இருந்து தங்களால் முடிந்த உதவிகளை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பிறகு ஒரு வாசகர் 2 பாய், 1 போர்வை ஆகியவற்றை கொடுத்து அனுப்பும்படி கூறிவிட்டு தன்னைப் பற்றிய விபரம் எதையும் தெரிவிக்காமல் சென்றுவிட்டாராம்.
கோவை
கோவையில் இருந்து எம்.பால்ராஜ், 10 போர்வை, எம்.சுப்புராஜ் ஒரு பெட்ஷீட், பி.மொய்தீன் 3 போர்வை, சி.ஆர்.கிருஷ்ணன் 12 பாய், 23 போர்வை, அப்துல் ரபீக் 2 பெட்ஷீட், ஆர்.பாலமுருகன் 10 போர்வை ஆகியவற்றை வழங்கியுள்ளனர்.
திருச்சி
கிருஷ்ணமூர்த்தி, சுசீலா சுப்ரமணியன், இளவரசி, ஆர்.கமலம், சாதிக் பாட்சா ஆகியோர் பாய் மற்றும் பெட்ஷீட்களை வழங்கியுள்ளனர்.
கரூர்
சென்னை சில்க்ஸ் சார்பில் 50 பாய்கள் மற்றும் 50 போர்வைகள் வழங்கப்பட்டன. பாபா பார்த்திபன் 10 போர்வைகள் மற்றும் பெயர் தெரியாத சிலர் 10 போர்வைகள் வழங்கியுள்ளனர்.
தஞ்சாவூர்
கும்பகோணத்தில் இருந்து ரூ.3,150 மதிப்புள்ள 15 பிளாஸ்டிக் பாய், 15 போர்வைகள் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஊழியர்கள் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் அய்யங்கடைத்தெருவை சேர்ந்த டி.ராஜேந்திரன், எஸ்.ராமபத்திரன் இருவரும் சேர்ந்து 6 பாய்களை அனுப்பியுள்ளனர்.
கனரா வங்கி முதன்மை மேலாளர் எம்.ஆர்.ரமணன் ரூ.1,200 மதிப்புள்ள போர்வை, பாய் ஆகியவற்றை வழங்கியுள்ளார்.
சேலம்
சேலம் குகை டிரயம்ப் கிளப் நண்பர் குழுவினர் 50 போர்வைகள், 50 பாய்கள் கொடுத்துள்ளனர். வாழப்பாடியை சேர்ந்த கண்ணன், ராஜீ, சேலம் ராஜாராம் நகரின் ஆடிட்டர் அலுவலக பணியாளர்கள் செல்வகுமார், நாகராஜன், ராஜ்குமார், அரிசிபாளையத்தை சேர்ந்த சீனிவாசன், ஆடிட்டர் துரைசாமி ஆகியோர் பாய் மற்றும் போர்வைகளை கேபிஎன் அலுவலகம் மூலம் அனுப்பியுள்ளனர்.
உதவிகள் தொடரட்டும். தொடர்ந்து, அடுத்தடுத்த உதவிகளை சேர்ந்தே யோசிப்போம். நம் சகோதரர்களின் துயர் துடைப்போம்!
* மழையால் வாழ்க்கை சூறையாடப்பட்ட மக்களின் அடுத்த தேவை ஒரு எளிமையான, தரமான மண்ணெண்ணெய் ஸ்டவ். நேற்றைய தினம் நாம் பாதிக்கப்பட்ட மக்களிடம் வாசகர்கள் அனுப்பிய பாய் - போர்வையை அனுப்பியபோது, அதைப் பெற்றுக்கொண்டவர்கள் பலரும் விடுத்த வேண்டுகோள் இதுதான்.
* முன்னதாக, இவர்களில் பலரும் சமையலுக்கு விறகு அடுப்புகளையே பயன்படுத்திவந்தனர். வீடோடு சேர்த்து அடுப்பும் நாசமாகிவிட்ட நிலையில், இப்போதைய சூழலில் விறகு கிடைப்பதும் சிரமம் ஆகியுள்ளது. முதல் கட்ட உதவியாக அரசு சார்பில் 5 லிட்டர் மண்ணெண்ணெய் இந்தப் பகுதியில் வழங்கப்பட்டிருக்கிறது. தவிர, தொடர்ந்தும் ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் கிடைக்கும். ஆனால், அதை எரிபொருளாக்க ஸ்டவ் இல்லை.
* தரமான, அதேசமயம் எளிமையான மண்ணெண்ணெய் ஸ்டவ்கள் இவர்களுக்குக் கிடைத்தால் பேருதவியாக அமையும். காற்றடித்து மண்ணெண்ணெயில் எரிக்கும் ஸ்டவ்; கூடவே ஒரு செட் காற்றடைப்பை நீக்கும் பின்கள் ஆயிரக்கணக்கான வீடுகளுக்குத் தேவை. இணைந்த கைகளால் ஆறுதல் அளிப்போம்!