Last Updated : 25 Nov, 2015 09:21 AM

 

Published : 25 Nov 2015 09:21 AM
Last Updated : 25 Nov 2015 09:21 AM

வெள்ளத்தைவிட ஆபத்தானது அலட்சியம்!

கடலூர் வெள்ளச் சேதத்தைத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நேரில் பார்த்து வந்தார்கள். அரசியல்வாதிகளுக்கு இதுபோன்ற புயல், வெள்ளம் எல்லாம் புதிது அல்ல. ஆனால், அவர்களையுமே நிலைகுலைய வைத்திருக்கிறது வெள்ளப் பாதிப்புகளும் சேதங்களும். தங்கள் அனுபவங்களைப் பகிர்கிறார்கள் தலைவர்கள்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழக காங்கிரஸ் தலைவர்.

கடந்த 10 ஆண்டுகளில் சுனாமி, தானே புயல் எனப் பெரும் பேரழிவுகளைத் தொடர்ந்து சந்தித்துவருகிறது கடலூர் மாவட்டம். மக்களின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டிருக்கிறது இந்தப் பெருமழை. எங்கும் வெள்ளக்காடு. பல ஆயிரம் மக்கள் பள்ளிக்கூடங்களில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்திருப்பதை நேரில் பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்துபோனேன். எனது அனுபவத்தில் இதுபோன்ற துயரத்தைக் கண்டதில்லை. நீர்நிலைகளையும் அவற்றுக்குத் தண்ணீர் செல்லும் பாதைகளையும் ஆண்டுதோறும் தூர்வாரிச் சீர்ப்படுத்தியிருந்தால் இந்தப் பேரழிவைத் தடுத்திருக்கலாம். ஆறுகள் கடலில் கலக்கும் முகத்துவாரமே மணல் மேடிட்டிருந்ததை நான் பார்த்தேன். அப்புறம், ஆற்றின் கரைகள் உடைந்து குடியிருப்புக்குள் தண்ணீர் புகாமல் என்ன செய்யும்? நீர்நிலைகளைச் சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். அப்படியென்றால், அந்த நிதியெல்லாம் எங்கே? யாருடைய தவறுக்கு யார் பலியாவது? இதற்கெல்லாம் நிச்சயம் பதில் சொல்ல வேண்டும்.

ஜி.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர்.

கடலூர் முழுக்க இந்த வெள்ளக்காட்டில் சுற்றினேன். மறக்கவே முடியாதது, பெரியகாட்டுப்பாளையத்தில் 10 பேர் உயிரிழந்த வீடு. நேற்றைக்குக்கூட ‘தி இந்து’வில் வெளியாகியிருந்ததே, அதே செல்வியின் வீடுதான். இங்குதான் வீடு இருந்தது என மக்கள் அடையாளம் காட்டிய இடத்தில் வீடே இல்லை. அந்த அளவுக்குக் காட்டாற்று வெள்ளம் கோரதாண்டவம் ஆடியிருந்தது. அந்த இடத்தில் கிடந்த நோட்டுப் புத்தகத்தில், ‘சிவா, 7-ம் வகுப்பு’என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ‘உடலை நீர் தூய்மை செய்யும், உள்ளத் தூய்மையை வெளிப்படுத்துவது வாய்மை’என்று அதில் எழுதியிருந்தான் அந்தக் குழந்தை. இப்போது அவன் உயிரோடு இல்லை. கடலூரின் பேரழிவைச் சொல்ல இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது சேதங்களே இல்லாமல் தடுப்பது எவருக்கும் இயலாத காரியம். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் பெருமளவு சேதங்களைத் தவிர்த்திருக்கலாம். நிச்சயம் உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம். வெள்ளத்தைவிடவும் அலட்சியம் பெரிய ஆபத்து!

இரா.முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர்.

கடலூர் மாவட்டத்தில் பல கிராமங்களில் நேரில் பார்த்தோம். வீடுகள், உடமைகளை இழந்து மாற்றுத் துணிகள்கூட இல்லாமல் மக்கள் படும் துயரங்கள் கல் நெஞ்சையும் கரைத்துவிடும். ஏரிகள், குளங்கள், வடிகால்கள், வாய்க்கால்கள் தூர்வாரப்படாதது யாருடைய தவறு? சுனாமி எதிர்பாராமல் நடந்த பேரழிவு. ஆனால், வட கிழக்குப் பருவ மழை இந்தத் தேதியில் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மழை கொட்டிக்கொண்டிருக்கும்போது வீராணம் ஏரியில் இருந்தும், நெய்வேலி ஆலையிலிருந்தும் முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக மக்கள் சொல்கிறார்கள். அலட்சியத்தின் பெயரால் இப்படி மக்கள் உயிரைப் பலிகொடுக்கப்படுவது இனியேனும் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர்.

கடலூர் துயரம் சகிக்கவே முடியாதது. நாமெல்லாம் விஞ்ஞானம் வளர்ந்த ஒரு காலகட்டத்தில் இருக்கிறோம் என்று வெளியே சொன்னால் சிரிப்பார்கள். மழை, வெள்ளம் தவிர்க்க முடியாதவைதான். ஆனால், சேதங்களை அப்படிச் சொல்ல முடியுமா? முன்னெச்சரிக்கையோடு திட்டமிட்டு செயல்பட்டு சேதங்களைத் தவிர்ப்பதற்குப் பெயர்தானே பேரிடர் மேலாண்மை? ஒரே வீட்டில் 10 உயிர்கள் போயிருக்கின்றனவே பெரியகாட்டுப்பாளையத்தில், யார் பொறுப்பு? கடலூரில் ஒரு விவசாயியிடம் போய் கேட்டுப்பாருங்கள், அவர் சொல்வார் இந்தப் பேரிழப்புக்கு யார் காரணம் என்று. நீர்நிலைகளைத் தூர்வாருவது என்பது அடிப்படைப் பராமரிப்புப் பணிகளில் ஒன்று அல்லவா? அதைக்கூடச் செய்யவில்லை என்றால், எப்படி? இந்த அரசாங்கம் அறிவிப்புகளாக வெளியிட்டவை எல்லாம் செயல்பாடுகளாக மாறியிருந்தாலே இந்தத் துயரம் நடந்திருக்காது. இக்கட்டான சமயங்களில் அரசோடு சேர்ந்து பணியாற்ற நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அரசு இனியாவது அரசியல் காழ்ப்புணர்வுக்கு அப்பாற்பட்டு அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டி அடுத்தடுத்த நடவடிக்கைகளைத் திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டும்.

பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக, மத்திய இணை அமைச்சர்.

கடலூர் மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பெரியகாட்டுப்பாளையத்துக்குச் சென்றிருந்தேன். இதே ஊரில் 5 ஆண்டுகளுக்கு முன்பு பெரும் வெள்ளம் வந்து வீடுகளும், விளைநிலங்களும் மூழ்கியிருக்கின்றன. ஆனாலும் எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாததால் மீண்டும் பேரழிவு ஏற்பட்டுள்ளது.

மழை வரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்திருந்தால் பெருமளவு சேதத்தைத் தடுத்திருக்கலாம். நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, தூர்வாரப்படாததும் அழிவை அதிகமாக்கிவிட்டன. பல கிராமங்களில் பாதி இடிந்த வீடுகளில் பாதுகாப்பற்ற நிலையில் மக்கள் இருப்பதைக் கண்டு மனம் பதைபதைத்தது. அதிகாரிகளிடம் கேட்டால் சரியான பதில் இல்லை. கடலூர் பேரழிவுக்கு இந்தச் செயல்பாடற்றதன்மையே காரணம்.

தொல்.திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்.

கடந்த இரு வாரங்களாகப் பெய்த பெரும் மழையால் கடலூர் மாவட்டம் எப்போதும் இல்லாத அளவுக்குப் பேரழிவைச் சந்தித்துள்ளது. பருவ மழை பெய்யும் எனத் தெரிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே இந்த அழிவுக்குக் காரணம். கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்குத் தீர்வு காண நீர்வள வல்லுநர்கள், பொறியாளர்கள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய ஆணையத்தை அமைக்க வேண்டும். ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் மழைக் காலங்களில் வெள்ள அபாயத்தைத் தடுக்க முடியும்.

- எம்.சரவணன், தொடர்புக்கு: saravanan.mu@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x