Published : 13 Mar 2021 03:12 AM
Last Updated : 13 Mar 2021 03:12 AM

என்ன வேண்டும் தமிழ்நாட்டுக்கு? - சி.மதிவாணன், அனைத்திந்திய கிராமப்புற விவசாயத் தொழிலாளர் சங்கம்

கிராமப்புறப் பெண்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு உறுதி: கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் சுருங்கிக்கொண்டே வருகின்றன. பெண்களுக்கு வாய்த்த நல்லதொரு வாய்ப்பான ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்ட’த்தின்படி 100 நாள் வேலைத் திட்டம் இருக்கிறது. கேட்கும் அனைவருக்கும், அவர்கள் கேட்கும் காலத்தில் குறைந்தது 100 நாள் வேலையை, குறைந்தபட்ச ஊதியத்தோடு அளிப்பது அரசின் கடமை என்று இந்தச் சட்டம் சொல்கிறது. ஆனால், 256 ரூபாய் குறைந்தபட்சக் கூலி என்ற அறிவிப்பு பல இடங்களில் இன்னும் முறையாகச் செயல்படுத்தப்படுவதில்லை; பஞ்சாயத்துத் தலைவர்/ நிர்வாகிகள், அதிகாரிகள் விருப்பத்தின்படியே வேலை கொடுக்கப்படுகிறது. சம்பளம் முறையாக வங்கிக் கணக்கில் ஏறுவது இல்லை, வேலை நடந்ததாகக் கணக்குக் காட்டி டிஜிட்டல் முறையில் முறைகேடுகள் நடக்கின்றன என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இந்தக் குறைகள் களையப்பட வேண்டும்.

கடன் தொல்லையிலிருந்து காக்க வேண்டும்: கிராமப்புறப் பெண்களுக்கு வங்கிக் கடன் கிடைப்பதில்லை. கந்துவட்டிப் பிரச்சினையில் பெண்கள் சிக்கிக்கொள்வது அதிகமாக இருந்த நிலையில், அந்தப் பிரச்சினையிலிருந்து அவர்களைக் காக்கும்வகையில் சுய உதவிக் குழுக்களை அமைத்து 1% அல்லது 2% வட்டிக்குக் கடன் அளிப்பதும், சேமிக்கும் பண்பை ஊக்குவிப்பதும் 90-களில் பெரிய வேலையாக நடந்தது. தொண்டு நிறுவனங்கள் இந்த வேலையில் பங்கெடுத்தன. சுய உதவிக் குழுக்களுக்கு அளிக்கப்பட்ட கடன் 100% திரும்புவதைக் கண்ட வங்கிகளும், நிதி நிறுவனங்களும், நுண்கடன் நிறுவனங்களும் கதவைத் திறந்துவிட்டன. அரசு வங்கிகளும் தனியார் முதலீட்டாளர்களும் தொழிலில் குதித்தனர். இப்போது நேரடி வட்டியாகவும், மறைமுகப் பிடித்தங்களுமாக 36%க்கு மேல் கூடுதல் பணத்தைக் கொடுத்துக் கடனை அடைக்க வேண்டியிருக்கிறது. 1%-க்குக் கடன் கிடைத்த காலம் போய் 30%-க்கும் மேல் வட்டி என்று அறிவித்தே கடன் அளிக்கிறார்கள். இதனால் தமிழகப் பெண்கள் மீளவே முடியாத கடன் புதைகுழிக்குள் சிக்கிக்கொண்டுள்ளனர். கரோனா காலத்தில் இப்பிரச்சினை பூதாகாரமாக வெடித்தது. முதல் பொது முடக்கத்தின்போது அமைதியாக இருந்த நுண்கடன் நிறுவனங்கள், பின்னர் தங்கள் பணியாளர்களைக் கிராமங்களுக்கு அனுப்பிக் கடன் வசூலில் ஈடுபட ஆரம்பித்தன. இப்போதும் கூடப் பெண்கள் கடன் வலையிலிருந்து வெளியில் வரவில்லை. நுண்கடன் நிறுவனங்களிடமிருந்து பெண்களைக் காக்கும் வகையில் சட்டங்கள் உருவாக்கி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ரேஷன் விநியோகம் சீர்ப்படுத்தப்பட வேண்டும்: பொதுவிநியோகக் கடைகள் மக்களின் உயிரைக் காக்க எந்த அளவுக்கு முக்கியமானவை என்பதை இந்தப் பொதுமுடக்கக் காலத்தில் பார்த்திருப்போம். ஆனால், அரிசியின் தரத்தில் இன்னமும்கூட எந்த முன்னேற்றமும் இல்லை. அரிசியைப் பொட்டலமாக (பாக்கெட்) வழங்க வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கை கண்டுகொள்ளப்படவே இல்லை. சமீபத்தில் கொண்டுவரப்பட்ட குடும்பத் தலைவர் கைரேகையின் பேரில் பொருள் விநியோகம் என்பது உணவுப் பொருள் விநியோக முறைகேடுகளுக்குப் புதிய வாய்ப்பாக மாறிவிட்டது; எத்தனை டிஜிட்டல் முறை வந்தாலும், ரேஷன் கடைகளில் முறைகேடுகள் தொடரவே செய்கின்றன என்ற குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

பெண்களின் கண்ணியத்தைக் காப்பாற்றுங்கள்: திறந்தவெளியில் மலம் கழிக்காத பஞ்சாயத்து என்று அறிவிக்க ஆரம்பித்து, கடைசியில் ஒட்டுமொத்த இந்தியாவிலும் திறந்தவெளியில் மலம் கழிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதைக் கிராமப்புறங்களில் இருப்பவர்கள் நன்கு அறிவார்கள். இதற்கு முன்பு கட்டப்பட்ட பொதுக் கழிப்பிடங்கள் நீரின்றி மூடிக் கிடப்பதை, சிதைந்து போயிருப்பதைப் பெரும்பாலானோர் அறிவார்கள். எல்லா வீடுகளுக்கும் கழிப்பறைகளை உறுதிசெய்வது, ஏற்கெனவே கட்டப்பட்ட கழிப்பிடங்களுக்குப் புத்துயிர் கொடுத்து அவற்றைச் சரியாகப் பராமரிப்பது போன்றவையே கிராமப்புறப் பெண்களின் கண்ணியம் காக்கும். அரசியல் கட்சிகளின் செயல்திட்டங்களில் ஒன்றாக இதுவும் இடம்பெற வேண்டும்.

மதுவிலக்கில் சமரசங்கள் வேண்டாம்: மதுப் பழக்கத்தின் விளைவான சகல துயரங்களும் கடைசியில் பெண்கள் மீதுதான் வந்து விழுகின்றன. ஒரு பக்கம் குடிக்கு அடிமையான கணவனை வைத்துக்கொண்டு, இன்னொரு பக்கம் வீட்டுச் சுமையைச் சுமந்துகொண்டிருக்கும் பெண்கள் ஏராளம். மதுவிலக்கு என்பதை ‘சட்டவிரோத மது ஒழிப்பு' என்ற அளவுக்கே மாற்றியிருக்கிறது. விளிம்பு நிலையில் உள்ளவர்களில் மதுவுக்கு அடிமையானவர்கள் தாங்கள் சம்பாதிப்பதில் பெருந்தொகையை மதுவுக்கே தினமும் செலவழிக்கிறார்கள். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000, ரூ.1,500 தருவதாக அரசியல் கட்சிகள் அறிவித்திருக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் மதுக் கடைகளுக்கு ஒவ்வொரு மாதமும் செல்லும் பணத்தை ஒப்பிட்டால் இது மிகவும் குறைவே. எனவே, குடும்பத் தலைவிகளுக்கு ஊதியம் தருவதைவிட மதுவிலக்கை நோக்கிப் படிப்படியாக அடியெடுத்து வைத்தால், அதுவே அவர்களின் ஆதரவைப் பெருவாரியாகப் பெற்றுத்தரும். ஆகவே, மதுவிலக்கையும் அரசியல் கட்சிகள் தங்கள் பிரதானமான செயல்திட்டங்களில் ஒன்றாகக் கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x