Published : 07 Nov 2015 08:36 am

Updated : 07 Nov 2015 08:36 am

 

Published : 07 Nov 2015 08:36 AM
Last Updated : 07 Nov 2015 08:36 AM

ஒரு பிடி மண்

கம்பீரமிக்க போராளியான நேதாஜிக்கே ஒரு தூண்டுதலை ஏற்படுத்திய பெருமகன், மாமன்னர் பகதூர்ஷா

'நாளை ஈத் பெருநாள். முஸ்லிம்கள் மாடுகளை குர்பான் (பலி) கொடுப்பார்கள். இந்துக்களின் புனித வழிபாட்டுக்குரிய மாடுகளை முஸ்லிம்கள் குர்பான் கொடுப்பதா என்று இந்துக்கள் கொதித்தெழும் சூழலை உருவாக்கியுள்ளேன். எனவே, நாளை டில்லியில் இந்து - முஸ்லிம் கலவரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நான் எதிர்பார்க்கும் நல்ல செய்தியும் அதுவாகத்தான் இருக்கும்!’


இது, டெல்லியை ஆண்ட முகலாயர்களின் கடைசி மன்னர் பேரரசர் பகதூர்ஷா ஜாபரின் ஆட்சியைச் சீர்குலைக்க, இந்து - முஸ்லிம் கலவரத்தைத் தூண்டிவிடும் நோக்கத்தில் ஆங்கில அதிகாரி கெய்த் தனது மனைவிக்கு 1847-ல் எழுதிய கடித வாசகம்.

பிரிட்டிஷார் தங்கள் ஆட்சி விரிவாக்கத்துக்காக, டெல்லி மொகலாய மன்னர்களின் ஆட்சியிலும் தலையிட்டனர். இந்தச் சூழலில்தான் 1837-ல் பகதூர்ஷா ஜாபர் டெல்லி அரியணையில் அமர்ந்தார். மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த செல்வாக்கை முறியடிக்க பிரிட்டிஷார் செய்த முயற்சிகளில் ஒன்றுதான் மாடுகளைப் பலியிடுவதை முன்னிறுத்திய அரசியல்.

முந்திக்கொண்ட பகதூர்ஷா

இந்த நாசப் பின்னணியை அறிந்த பகதூர்ஷா, ஈத் பெருநாளுக்கு முந்தைய நாள் இரவு, “ஆடுகளை மட்டுமே குர்பான் கொடுக்க வேண்டும். மாடுகளை வெட்டக் கூடாது” என்று பிரகடனப்படுத்தினார். நடக்க இருந்த கெய்த்தின் சூழ்ச்சி கானல் நீரானது. ஏமாற்றம் அடைந்த கெய்த், தனது மனைவிக்கு எழுதிய அடுத்த கடிதத்தில், ‘என் எண்ணம் ஈடேறவில்லை. வருத்தமாக இருக்கிறது. பகதூர்ஷா முந்திக்கொண்டார்’ என்று எழுதியுள்ளார்.

பிரிட்டிஷாரை விரட்டியடிக்க பகதூர்ஷாவின் தலைமையில் திட்டம் தயாரானது. “இந்தியாவின் புதல்வர்களே! உறுதியுடன் முடிவு செய்து கொண்டோமேயானால், எதிரியை நொடியில் அழித்துவிட நம்மால் முடியும். அவர்களை முடித்து, உயிரினும் அருமையான நமது நாட்டையும், சமயங்களையும், அவற்றை எதிர்ப்பட்டுள்ள அபாயங்களிலிருந்தும் காப்போம்!” - என்ற அரசு பிரகடனத்தைத் துணிச்சலுடன் வெளியிட்டார்.

தேசத்தின் விடுதலை விரும்பிகளான ராஜாக்கள், நவாப்கள், சிற்றரசர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, பிரிட்டிஷாருக்கு எதிரான ஒன்றுபட்ட போர் தொடுக்கத் திட்டம் வகுக்கப்பட்டது. அத்திட்டத்தைச் செயல்படுத்த 1857 மே மாதம் 31-ம் தேதியையும் தேர்ந்தெடுத்தனர்.

“…இந்துக்களும் முஸ்லிம்களும் தோளோடு தோள் நின்று தேசத்தின் சுதந்திரத்துக்காகப் போர் புரிவது என்றும்; சுதந்திரம் பெற்றதும் இந்திய மன்னர்களின் தலைமையில் ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தனர்.”

இம்முயற்சியில் ஒன்றுபட்ட ஜான்சிராணி லட்சுமிபாய், நானா சாஹிப், தாந்த்யா தோப், ஔத் பேரரசி பேகம் ஹஜ்ரத் மஹல், பிஹாரின் சிங்கம் குவர்சிங், மௌல்வி அஹமதுல்லா ஷாக், ஹரியாணா - ராஜஸ்தான் - மகாராஷ்டிர மன்னர்கள் மே 31-ம் தேதிக்காகக் காத்திருந்தனர்.

ஆனால், மே 10-ம் தேதியே சிப்பாய் புரட்சி வெடித்தது. இதனால், பகதூர்ஷா தலைமையில் தீட்டிய திட்டம் செயல்படாமல் போனாலும், இத்திட்டத்தில் இணைந்தவர்கள் தனியாகவும், கூட்டாகவும் சிப்பாய் புரட்சிக் காலகட்டத்தில் பிரிட்டிஷாருக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் முழுமையாக இறங்கினர். தங்களுக்குள் இருந்த கருத்து வேறு பாடுகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, பகதூர்ஷா தலைமையில் சுதந்திர இந்தியாவை உருவாக்க வடஇந்திய மக்கள் அன்று சிந்திய ரத்தம் கொஞ்சமல்ல. மாமன்னர் பகதூர்ஷா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டு ஜீனத் மஹல் மாளிகையில் சிறை வைக்கப்பட்டார்.

கலங்காத பகதூர்ஷா… அதிர்ந்த ஹட்சன்!

ஒரு நாள் காலைப் பொழுதில், பெரிய தட்டுகளில் துணியால் மூடப்பட்டு உணவு எடுத்து வரப்படுகிறது. உடன் வந்த மேஜர் ஹட்ஸன் முகத்திலோ விஷமச் சிரிப்பு!

“பகதூர்ஷா! நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த கம்பெனியின் பரிசுகள் இவை!” என்றவனாக, உணவுத் தட்டுகளை மூடியிருந்த துணிகளை அகற்றுகிறான். அங்கே... பகதூர்ஷாவின் மகன்கள் மிரிஜா மொஹல், கிலுருசுல்தான் இருவரின் தலைகள்! இருவரையும் சுட்டுக் கொன்று, தலைகளை வெட்டித் தட்டுகளில் ஏந்தி வந்ததோடு... ‘‘இவை பிரிட்டிஷ் கம்பெனியாரின் பரிசுகள்!” என்று கிண்டலுடன் நிற்கிறான் ஹட்ஸன். திடநெஞ்சுடன் அவனைப் பார்த்து பகதூர்ஷா சொன்னார், “தைமூர் வம்சத் தோன்றல்கள் தமது முன்னோர்களுக்கு இவ்வாறுதான் தங்கள் புனிதத்துவத்தை நிரூபிப்பார்கள்!” அவருடைய கம்பீரமான வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்தான் ஹட்ஸன். மகன்களின் மரணத்தை தேசத்துக்கான அர்ப்பணிப்பாய் நினைத்ததால் பகதூர்ஷா கலங்கவில்லை.

“கேப்டன் ஹட்ஸன், பகதூர்ஷாவின் மூன்று இளவல்களைச் சுட்டுக் கொன்றான். அந்த உடல்கள் கழுகுகளுக்கு ஆகாரமான பின்னர்தான் ஆற்றில் இழுத்தெறியப்பட்டன” என்று எரிமலை நூலில் குறிப்பிட்டார் வீரசாவர்க்கர்.

பசுவின் கொழுப்பும் பெர்ஹாம்பூர் சிறையும்

பன்றிக் கொழுப்பும் பசுக் கொழுப்பும் தடவப்பட்ட என்பீல்டு ரகத் துப்பாக்கிகளைப் பயன்படுத்த மாட்டோம் என்று பிரிட்டிஷாருக்கு எதிராக ஒன்றுபட்டு எழுந்த இந்தியச் சிப்பாய்கள், பெர்ஹாம்பூர், மீரட் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.

சிறைச்சாலைகளை உடைத்துவிட்டு, ரிஸால்தார் ஹுசைன் அலி தலைமையில் ஒன்று திரண்ட இந்தியச் சிப்பாய்கள், பேரரசர் பகதூர்ஷாவை இந்தியப் பேரரசின் தலைவராக அறிவித்தனர். ‘டெல்லி சலோ’ என்ற கோஷத்துடன் மாபெரும் புரட்சியை ஆரம்பித்தனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இப்புரட்சியை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியது.

சிப்பாய் புரட்சியாளர்களுக்கு உதவி செய்தார், 47 ஆங்கிலேயர்களைக் கொலை செய்தார் எனப் பல குற்றங்களை பகதூர்ஷா மேல் சுமத்தி, அவரை பர்மாவிலுள்ள ரங்கூனுக்கு பிரிட்டிஷ் அரசு நாடு கடத்தியது. மன்னராக இருந்தவர் என்பதால் மாதம் ரூ.600 உபகாரச் சம்பளம் வழங்க பிரிட்டிஷ் அரசு முன்வந்தது. “என் மண்ணின் செல்வத்தை எடுத்து எனக்கே கொடுப்பதற்கு நீ யார்?” என்று அதை ஏற்க மறுத்துவிட்டார் பகதூர்ஷா.

தாய் மண்ணை இனி தரிசிக்கும் பாக்கியம் தனக்குக் கிடைக்காது என்று வருந்தியவராக, இறந்தபின் தன்னை அடக்கம் செய்யும் சமாதியில் தூவ, ஒரு பிடி இந்திய மண்ணைக் கையில் அள்ளிக்கொண்டு கப்பல் ஏறினார். 1862 நவம்பர் 7-ல் தனது 92-ம் வயதில் ரங்கூனில் காலமானார்.

தங்க வாளில் இந்திய மண்

தேச விடுதலைக்காக பர்மாவைத் தளமாகக் கொண்டு படை திரட்டிக்கொண்டிருந்த காலத்தில், ரங்கூன் யார்க் சாலையில் உள்ள பகதூர்ஷாவின் சமாதியைப் பல லட்ச ரூபாய் செல்வில் புதுப்பித்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். சமாதியில் இருந்து ஒருபிடி மண்ணை எடுத்து, தமக்கு மக்கள் அன்புடன் அளித்த தங்க வாளின் பிடியில் அடைத்து, அவ்வாளினை ஓங்கிப் பிடித்தவராக, “நம் வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும் இம்மஹானிடம் இருந்ததுபோல் தேசபக்தியும் அணுவளவாவது இருக்கும் வரையில், இந்துஸ்தான் வாள் மிகக் கூர்மையாக இருப்பதுடன், ஒரு நாள் லண்டனின் வாசற்படியையும் தட்டும்!” என்று சபதமேற்றார். இந்திய விடுதலை வரலாற்றில் கம்பீரமிக்க போராளியான நேதாஜிக்கே, ஒரு தூண்டுதலை ஏற்படுத்திய பெருமகன் மாமன்னர் பகதூர்ஷா.

தேசத்தின் முதல் விடுதலைப் போரான சிப்பாய் புரட்சியைத் தூண்டிவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்காக நாடு கடத்தப்பட்ட பேரரசர் பகதூர்ஷா ஜாபர் நினைவு நாள் இன்று!

- மு. அப்துல் சமது, தமிழ்த் துறைப் பேராசிரியர்,

ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, உத்தமபாளையம்.

தொடர்புக்கு: ab.samad@yahoo.co.in


தேசத்தின் முதல் விடுதலைப் போர்சிப்பாய் புரட்சிபேரரசர் பகதூர்ஷா ஜாபர் நினைவு நாள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

இடைவேளை தாகம்

இணைப்பிதழ்கள்
x