

சட்டமன்றத் தேர்தலில் திமுக போட்டியிடுவது என்று முடிவெடுத்து 1957-ல் தேர்தல் களத்தில் இறங்கியபோது கருணாநிதி அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடவே விரும்பினார். திமுகவின் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதற்கு முன்பு நாகப்பட்டினம் சென்று கிராமம் கிராமமாகச் சுற்றிக் கள நிலவரங்களைப் பார்த்து திருப்தியுடன் சென்னை திரும்பினார் கருணாநிதி. ஆனால், அதற்குள் கழக வேட்பாளர்களின் பட்டியலில் குளித்தலைத் தொகுதியை கருணாநிதிக்கு ஒதுக்கியிருந்தார் அண்ணா. நாகையில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அத்தொகுதியில் இருந்த கட்சியினருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு குளித்தலையில் முகாமிட்ட கருணாநிதி தான் போட்டியிட்ட முதல் தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானார். 1957 தேர்தலில் நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சி வென்றது. இதுவரையிலான 15 சட்டமன்றத் தேர்தல்களில் நாகப்பட்டினத்தில் 1971-ல் ஒரே ஒரு முறைதான் திமுக வெற்றிபெற்றிருக்கிறது. பெரும்பாலும் கூட்டணிக் கட்சிக்கு இத்தொகுதியை ஒதுக்கிவிடுவதே இரண்டு கட்சிகளும் கடைப்பிடித்துவரும் அணுகுமுறை.