

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டையைச் சேர்ந்த சுகிர்தராணி, அடிப்படையில் தமிழாசிரியர். `கைப்பிடித்து என் கவிதை கேள்’, `இரவு மிருகம்’, `அவளை மொழிபெயர்த்தல்’, `தீண்டப்படாத முத்தம்’, `காமத்திப்பூ’, `இப்படிக்கு ஏவாள்’ ஆகியவை இவரது படைப்புகள். இவரது கவிதைகள் உடலரசியலோடு சமகால அரசியலைப் பேசும். தலித் விடுதலை, பெண் விடுதலை இரண்டையும் மையமாகக் கொண்டு இயங்குவது இவரது கவிதைச் செயல்பாடு.
பெண் படைப்பாளிகளில் நீங்கள் உட்பட பலரும் ஏன் உடலை மையமிட்டே எழுதுகிறீர்கள்?
பெண்ணுடல் புனிதமல்ல; ஆணின் உடலைப் போன்றதுதான் அது. பெண்ணுடலைப் பற்றி ஆண்கள் எழுதும்போது வராத பதற்றம் பெண்கள் எழுதினால் மட்டும் ஏன் வருகிறது? பாலியல் வல்லுறவு, உழைப்புச் சுரண்டல், சாதிய அடக்குமுறை எனப் பலவற்றுக்கும் பெண்ணின் உடலே களமாக இருக்கும்போது அதைப் பற்றி எழுதுவதில் தவறு என்ன? நாடு முழுவதும் பெண்களின் உடல் சிதைக்கப்படும்போது வேறு எதைப் பற்றி எழுதுவது? பாலியல் உணர்வை எழுதுவதற்கும், பாலின பேதத்தை எழுதுவதற்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாதவர்கள்தான் உடலைப் பற்றி எழுதுவதைப் பாலியல் இச்சையைப் பற்றி எழுதுவதாகப் புரிந்துகொள்கிறார்கள். உடலரசியல் பேசும் கவிதைகள் இன்று வெகுஜன இதழ்களில் வெளியிடப்படும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. இன்னும் மாற வேண்டும்.
படைப்புலகில் பெண் என்பது பெருமிதமாக இருக்கிறதா, பின்னோக்கி இழுக்கிறதா?
தமிழ் இலக்கணத்தில் வரும் ஐம்பால் வகையில் முதலில் ஆண்பால்தான் குறிப்பிடப்படுகிறது. அப்படித்தான் நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். அதனால்தான், ஆண் எழுத்து முதல் தரமானது என்றும், பெண் எழுத்து இரண்டாம் தரமானது என்றும் இப்போதும் பலர் நம்புகிறார்கள். அதற்காக, பெண் என்கிற அடையாளத்தைக் கைவிட முடியாது. காரணம், ஒரு பெண் எழுதுவது என்பது ஓர் அரசியல் செயல்பாடு. தனக்கான வெளியைக் கண்டடைவதற்கான கூட்டுச் செயல்பாடு. இந்தியாவில் இருக்கிற 65 கோடிப் பெண்களுக்கும் 65 கோடிக் கதைகள் இருக்கும். பெண்ணின் வலியை, தன்னுணர்வை ஆண் எழுதுவதைவிடப் பெண் எழுதுவதுதான் சரியாக இருக்கும். அந்த எழுத்து ஆண் மனத்தையும், ஆழ்மனத்தில் ஆணாதிக்கம் நிறைந்திருக்கும் பெண் மனத்தையும் தொந்தரவு செய்கிறபோது, அதற்கு எதிர்மறை விமர்சனம்தானே கிடைக்கும்? அதில் சாதியமும் சேர்ந்துகொண்டால் சொல்லத் தேவையே இல்லை.
சமகால அரசியல் நிகழ்வுகளைத் தொடர்ச்சியாகப் பதிவுசெய்துவருவது பற்றி?
மறு உற்பத்தியில் ஈடுபடுவதால் பெண்ணும் இயற்கையும் ஒன்று. பெண்ணுக்கும் இயற்கைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கட்டாந்தரையில் குடிசையைப் போட்டுக்கொடுத்தால் அதைச் சுற்றி இயற்கைச் சூழலை அமைக்கிறவள் பெண்தான். பெண்ணுடலைப் பேசுகிற அதே வேளையில், இயற்கை சீரழிக்கப்படுவதையும் பேச வேண்டும். எல்லா அரசியல் செயல்பாடுகளும் பெண்ணை நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கிறபோது அவற்றை எழுதுவது ஒருவகையில் கடமையும்கூட. மலையை வெட்டிக் கனிமங்கள் எடுக்கிறோமே, மலையை நம்மால் உற்பத்தி செய்ய முடியுமா? மலைக்கு விதை ஏது? மக்களுக்கு எதிரான அதிகாரத்தின் செயல்பாடுகள் அனைத்தையும் தொடர்ந்து எழுதத்தான் வேண்டும்.
நீங்கள் எழுத வந்த காலத்துக்கும் இப்போதைய சூழலுக்கும் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்திருக்கின்றனவா?
அனைத்துத் தளங்களிலும் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நான் படித்தபோது எங்கள் ஊரிலிருந்து மூன்று பெண்கள்தான் பதினோராம் வகுப்புப் படிக்க நகரத்துக்குச் சென்றோம். அதில் நான் மட்டுமே பன்னிரண்டாம் வகுப்பை நிறைவுசெய்தேன். இன்று ஏராளமான பெண்கள் படிக்க வருகிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்திருக்கிறது. பொருளாதாரத் தன்னிறைவு ஓரளவுக்குச் சாத்தியப்பட்டிருக்கிறது. திருநர்கள் குறித்த சமூகத்தின் பார்வை மாறியிருக்கிறது. 25 ஆண்டுகளுக்கு முன்னால் நான் எழுத வந்தபோது, பெண்ணியம் குறித்து எழுதியவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இன்று அப்படியல்ல. அவர்களும் சமூக அரசியல், பொருளாதாரம் போன்றவை குறித்து எழுதினால் இன்னும் நல்லது.
பெண்களின் பொதுச் செயல்பாடுகளுக்காக எழும் எதிர்மறை விமர்சனங்கள் குறித்து?
2,000 ஆண்டுகளின் அழுத்தம் அது. இப்போது 50 ஆண்டுகளாகத்தானே இங்கே பாலினச் சமத்துவம் குறித்துப் பேசத் தொடங்கியிருக்கிறோம்? அதற்குள் மாற்றம் நிகழ்ந்துவிடாதுதானே? தவிர, பொதுவெளியில் இயங்கும் பெண்ணை முடக்கிப்போட ஆண்கள் கைக்கொள்ளும் முதல் ஆயுதம் அந்தப் பெண்ணின் நடத்தையைச் சிதைப்பதுதான். பெண்கள் அதைப் பொருட்படுத்தாமல் கடந்துபோகக் கற்றுக்கொள்ள வேண்டும். எல்லா நேரமும் அது சாத்தியப்படுவதில்லை. பொதுவெளியில் இயங்கும் பெண்கள் மீது சமூக ஊடகங்களின் வழியாக ஆண்கள் செலுத்தும் வன்முறை மோசமானது. அதை எதிர்கொள்ள அந்தப் பெண்களுக்குத் துணைநிற்க வேண்டும். உரையாடலும் களப்பணியும் அதற்கு அவசியம்.