

ஈரோடு நகரத்தில் ஒளிபாய்ச்சிவந்தவர் மருத்துவர் வெ.ஜீவானந்தம் (1946-2021). மக்கள்-மருத்துவர்கள் கூட்டுறவோடு மருத்துவமனைகளை உருவாக்கிய முன்னோடி. சமூக, அரசியல் செயல்பாடுகளில் நேரடியாகப் பங்கெடுத்துக்கொண்டவர். மருத்துவம், சூழலியல், வரலாறு, அரசியல் என்று பல துறைகளையும் சேர்ந்த முக்கியமான நூல்களைத் தனது மொழியாக்கத்தின் வாயிலாகத் தமிழ் வாசகர்களுக்குக் கொண்டுவந்து சேர்ந்தவர். கடந்த சில பத்தாண்டுகளில் ஈரோட்டில் சமூக ஆர்வலர்கள், இலக்கியவாதிகள் சந்திப்புகள் என எதுவும் அவர் இல்லாமல் நடந்ததில்லை. காலம் அவருடனான சந்திப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
ஜீவானந்தத்தின் பெற்றோர் 75 ஆண்டுகளுக்கு முன்னால் பெரியார் தலைமையில் திருமணம் செய்துகொண்டவர்கள். ஜீவானந்தத்தின் தந்தை எஸ்.பி.வெங்கடாசலம் சுதந்திரப் போராட்ட வீரர். இளம் வயதிலேயே தன்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக்கொண்டவர். ஜீவானந்தத்தின் தாய்வழிப் பாட்டனார் ஈரோட்டில் பெரியாருடன் இணைந்து பணியாற்றியவர். தந்தை வழியில் மார்க்ஸியக் கருத்துகளையும், தாய் வழியில் பெரியாரியக் கருத்துகளையும், தன் வழியில் காந்தியக் கருத்துகளையும் கற்று, அக்கொள்கைகளுக்கு ஒரு பாலமாகத் தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர் ஜீவா. தமிழ்நாட்டில் இந்த மூன்று போக்குகளும் ஒன்றுக்கொன்று கைகோத்துச் செயல்பட வேண்டிய அவசியத்தை இங்கிருந்தே ஜீவா பெற்றிருக்கிறார் என்று சொல்லலாம். இந்த மூன்று போக்குகளைச் சேர்ந்தவர்களோடு உரையாடி, அவர்களுடன் இணைந்தே தன் வாழ்நாளெல்லாம் பணியாற்றிவந்தார். காந்தியை கம்யூனிஸ்ட்டுகளிடம் கொண்டுசென்றவர். அதே போல காந்தியர்களிடம் கம்யூனிஸத்தைக் கொண்டுசென்றவர் ஜீவா.
போதைக்கு எதிரான போராட்டம்
பள்ளிப் படிப்பை ஈரோட்டில் முடித்த ஜீவானந்தம், மருத்துவப் படிப்பை தஞ்சையிலும், மயக்கவியல் படிப்பை சென்னையிலும் முடித்தார். அடிப்படையில் ஒரு மயக்கவியல் மருத்துவரான ஜீவா, போதை மயக்கத்துக்கான போராட்டத்தை ஒரு இயக்கமாகவே முன்னெடுத்தவர். மதுபோதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களது உடல்நலத்தை மட்டுமின்றிக் குடும்பத்தையும் சீரழிப்பதைக் கண்டு மனம் வருந்தி, மதுவுக்கு எதிரான தீவிரப் பிரச்சாரத்தை நடத்தினார். குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி உடல் நலிந்து, மரணப் படுக்கையை நோக்கிச் சென்ற இளைஞர்களைக் காப்பாற்றி, அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக 40 ஆண்டுகளுக்கு முன்பே ஈரோட்டில் மது அடிமைகள் மறுவாழ்வு மருத்துவமனையைத் தொடங்கி நடத்திவந்தார் ஜீவா.
இன்றைய வணிகமயக் காலத்தில் ஏழை எளியவர்களும் குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வகையில் 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்களை இணைத்து கூட்டுறவு முறையில் ‘ஈரோடு டிரஸ்ட்’ மருத்துவமனையைத் தொடங்கினார் ஜீவா. உண்ணும் உணவும் அருந்தும் தண்ணீரும் விஷமாகி, புற்றுநோயின் பாதிப்பு அதிகமாகிக்கொண்டிருக்கும் காலம் இது. ஈரோடு, பெங்களூரு, தஞ்சாவூர், புதுச்சேரி ஆகிய ஊர்களிலும் புற்றுநோய் மருத்துவமனைகளை அவர் தொடங்கினார்.
சூழலியல் களப் பணிகள்
களச் செயல்பாட்டாளராகவும் அவரது பங்களிப்புகள் என்றென்றும் நினைவுகூரத் தக்கவை. காவிரி, முல்லை பெரியாறு நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைகள் தமிழக, கர்நாடக, கேரள அரசுகளால் தீர்க்க முடியாத அளவுக்கு உருவெடுத்த நிலையில், சம்பந்தப்பட்ட மாநில விவசாயிகளை, அந்தந்தப் பாசனப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று கலந்துரையாடி, பிரச்சினையைத் தீர்க்கத் தன்னால் இயன்ற அளவில் முயன்றவர் ஜீவா. நதிநீருக்கான உரிமையை நிலைநிறுத்தும் முயற்சிகளோடு நதிகளைப் பாதுகாக்கும் கடமையையும் ஒருசேர வலியுறுத்திக்கொண்டிருந்தவர் அவர். 30 ஆண்டுகளுக்கு முன்பே, பவானி நதியைத் தம் கழிவுகளால் விஷமாக்கும் ஆலைகளுக்கு எதிராக ஈரோட்டுப் பள்ளி மாணவர்களைக் கொண்டு அவர் கவன ஈர்ப்பை ஏற்படுத்தினார்.
சூழலியல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் நம்மாழ்வார், மேதா பட்கர், ராஜேந்திர சிங் ஆகியோருடன் சேர்ந்து களத்தில் நின்றவர் அவர். இந்தியாவில் உள்ள முதன்மையான சூழலியல் செயல்பாட்டாளர்கள் பலருடனும் அவர் நெருக்கமான நட்புகொண்டிருந்தார். மாதவ் காட்கில் மேற்குத் தொடர்ச்சி மலை குறித்து எழுதிய முக்கிய கருத்துகளையெல்லாம் உடனுக்குடன் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அதன் ஒரு பகுதியாக பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் எழுதப்பட்ட உதகையின் வரலாற்றையும் தமிழாக்கம் செய்தார். கோத்தகிரி, அமைதிப் பள்ளத்தாக்கு போன்ற இடங்களுக்கு எழுத்தாளர்களையும் பத்திரிகையாளர்களையும் ஜீவா அழைத்துச் சென்றார். புவி வெப்பமாதலால் எதிர்காலச் சந்ததியினருக்கு ஏற்படக் கூடிய ஆபத்துகளை எல்லோருக்கும் புரிய வைப்பதற்காகத் தொடர்ந்து சூழலியல் சந்திப்புகளை நடத்தியவர் அவர். சூழலியல் பாதுகாப்புக்காக மட்டுமின்றி, பழங்குடி மக்களின் உரிமைக்காகவும் அவர் குரல்கொடுத்தவர். சந்தனக் கடத்தல் வீரப்பன் விவகாரத்தில் காவல் துறையால் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களின் பக்கம் நின்று போராடியவர் அவர்.
மருத்துவம், சூழலியல் பணியுடன் கல்விப் பணியிலும் தீவிர கவனம் செலுத்தினார். ‘சித்தார்த்தன்’ என்ற பெயரில் பள்ளி ஒன்றையும் அவர் தொடங்கினார். காந்தி வலியுறுத்திய சமய நல்லிணக்கத்தின் தூதுவராகவே வாழ்ந்து மறைந்தவர் மருத்துவர் ஜீவா. காந்தியின் இந்திய சுயராஜ்ஜியம் நூலைச் சமீபத்தில் அவர் தமிழில் மொழியாக்கம் செய்திருந்தார். ஜே.சி.குமரப்பாவின் காந்தியப் பொருளாதாரத் திட்டங்களின் தற்போதைய அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்தினார். மறக்கப்பட்ட தீர்க்கதரிசி என்று குமரப்பாவைக் குறிப்பிட்ட அவர், அவரது கட்டுரைகளைத் தாய்மைப் பொருளாதாரம் என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார்.
வரலாற்றின் மீது ஜீவாவின் ஆர்வம் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது. தனது ஆட்சிக் காலத்தில் மதநல்லிணக்கத்தைக் கடைப்பிடித்து, வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடி மாண்ட திப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாற்றை எழுத்தாக்கித் தமிழ் மக்களின் முன்வைத்தார் அவர். ரொமிலா தாப்பர், யு.ஆர்.அனந்தமூர்த்தி என்று நாம் வாழும் காலத்தின் முக்கிய ஆளுமைகளின் எழுத்துகள் அவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
உழைக்கும் மக்களைச் சங்கமாக ஒருங்கிணைத்து அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தரப் போராடியவர் ப.ஜீவானந்தம். கொள்வாரும் இல்லாத கொடுப்பாரும் இல்லாத லட்சிய சமூகத்தைக் கனவுகண்ட அந்த மாபெரும் தலைவரின் பெயரைத் தனது மகனுக்குச் சூட்டியபோது எஸ்.பி.வெங்கடாச்சலம் என்ன நினைத்தாரோ? சாதிய ஏற்றத்தாழ்வு இல்லாத இந்தியாவே நமது நோக்கமாக இருக்க வேண்டும் என்று காந்தியிடம் வாதாடிய ப.ஜீவானந்தத்தின் வழியிலேயே மருத்துவர் வெ.ஜீவானந்தமும் வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
- வி.பி.குணசேகரன், பழங்குடிகள் உரிமைச் செயல்பாட்டாளர்.