

புதிய சட்டத் திருத்தம் தலித் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்!
சாதிப் பாகுபாடுகளால் சகமனிதர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளைத் தடுக்க வேண்டுமென்றால், அதற்கென தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதை உணர்ந்துதான் 1955-ல் ‘குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம்’ இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதால் 1989-ல் ‘தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்’ 1995-ல் உருவாக்கப்பட்டது. ஆனாலும், இந்தச் சட்டமும் வலுவாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இவற்றை வலுவாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்று இந்தியாவில் உள்ள தலித் உரிமை ஆர்வலர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் போராடினார்கள். இதன் பலனாகத் தற்போது, ‘தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமைத் திருத்த அவசரச் சட்டம்-2014’ என்கிற சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தத் திருத்த அவசரச் சட்டம் 2014-ஐ ரத்துசெய்ய வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத் தில் கே.பாலு என்பவர் வழக்குப் பதிவுசெய்திருந்தார். சென்னை உயர் நீதிமன்றம் இவ்வழக்கை எடுத்துக் கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு 10.06.2014 அன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
“இந்தச் சட்டத்தால் ஒரு பிரிவினர் மட்டும் பயனடைகின்றனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மற்ற பிரிவினர்மீது பொய்ப் புகார் கொடுக்கின்றனர். இதனால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாதோர் கடுமையாகப் பாதிக் கப்பட்டுவருகின்றனர். அதுமட்டுமல்லாமல், இந்தச் சட்டத்தில் பதிவுசெய்யப்பட்டு விடுதலை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆகவே, இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
நிஜத்தில் நடப்பது என்ன?
இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற வாதத்தைவிட, சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்ற வாதம்தான் வலுவானது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளைத் தடுக்க வேண்டும்; வன்கொடுமையால் பாதிக்கப் பட்டோருக்கு நீதி, மறுவாழ்வு, நிவாரணம் போன்ற தீர்வு கிடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட லட்சியங்களுடன் இயற்றப்பட்ட சட்டம் இது. உண்மையில், இந்தச் சட்டம் முற்றிலுமாகச் செயல்படுத்தப்படவில்லை என்றுதான் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் 2,00,474 வழக்குகள் உட்பட மொத்தம் 7,44,538 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவற்றில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்குகள் வெறும் 1,647-தான். அதாவது, மொத்த வழக்கில் 0.22 சதவீதம். கடந்த 2012-ம் ஆண்டு இறுதியில் இந்தச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் 4,039 வழக்குகள் நிலுவையில் இருந்தன. இவற்றில் 119 வழக்குகளுக்கு மட்டும்தான் தண்டனை கிடைத்துள்ளது.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்படும் குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் கொடுக்கக் கூடாது என்று சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும், இதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. இந்தச் சட்டத்தின் விசாரணை அதிகாரியாக, குறைந்தபட்சம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் விசாரணை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் அது பின்பற்றப்படுவதில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் வன்கொடுமை வழக்குகளை விசாரிப்பதற்கென்று தனிச் சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும். ஆனால், பல மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்படவில்லை. வேண்டுமென்றே கடமையைப் புறக்கணிக்கும் அதிகாரிகளுக்கு இந்தச் சட்டத்தின் பிரிவு 4-ன்படி தண்டனை உண்டு. ஆனால், இதுவரை தமிழகத்தில் ஒரு அதிகாரிக்குக்கூட தண்டனை கிடைக்க வில்லை. சாதிய வன்கொடுமையால் கொல்லப்பட்டோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை அல்லது மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் அல்லது வேளாண்நிலம் கொடுக்கப்பட வேண்டுமென்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இதன் பலனை ஐந்து சதவீதம்கூட தலித்துகள் அனுபவிக்கவில்லை.
இந்தச் சட்டம் சரியாகச் செயல்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்கு மாநில அளவிலான 25 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவர் மாநில முதல்வர்தான். எனினும், இதுவரை எத்தனை முறை இந்தக் குழு கூட்டப்பட்டுள்ளது என்கிற அறிவிப்புகூட பொது மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.
திசைதிருப்பப்படும் வழக்குகள்
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர் காவல்நிலை யம் சென்று புகார் கொடுக்கும்போது புகாரை போலீ ஸார் ஏற்க மறுப்பது அல்லது புகார் கொடுக்கச் சென்ற பாதிக்கப்பட்ட மக்களையே மிரட்டுவது போன்ற பல கொடுமைகள் தொடர்ந்து நடக்கின்றன. உரிய விசாரணை நடத்தாமல் இருப்பது, குற்றப்பத்திரிகையில் தவறான வாக்குமூலத்தைப் பதிவுசெய்வது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாக்குமூலத்தை எழுதுவது போன்ற சட்டரீதியான மீறல்களும் அதிக அளவில் நடந்துவருகின்றன. 1997-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி மேலவளவு பஞ்சாயத்துத் தலை வர் முருகேசன் உள்ளிட்ட ஏழு தலித்துகள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால், அது அரசியல் படுகொலை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
சலுகை அல்ல, உரிமை!
வன்கொடுமைகளைத் தடுப்பதற்கென்று கொண்டு வரப்பட்ட சட்டம் வலுவாகச் செயல்படுத்தப்படாமல் இருப் பதுதான் உண்மை. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 07.09.2009 அன்று அனைத்து மாநில சமூக நலத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற மாநாட்டில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் வலுவாகப் பயன்படுத்தப்படவில்லை என்று தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தார். இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசு அதிகாரிகளை, சாதிய அரசியல் சக்திகள் குறுக்கீடு செய்து எளிதாகத் தடுத்துவிடுகின்றன. இதனால் பாதிக்கப் பட்ட தலித் மக்களுக்கு இந்தச் சட்டத்தின் பலன் பெரும்பாலும் சென்றடைவதில்லை.
ஆகவே, இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமென்று தேசிய அளவில் வலுவான குரல்கள் எழுப்பப்பட்டன. இதன் விளைவாக 04, மார்ச் 2014 அன்று ‘தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புத் திருத்த அவசரச் சட்டம்’ கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தில் தலித்துகளை மொட்டை அடித்தல், மீசையை மழித்தல், துப்புரவுப் பணியைச் செய்யக் கட்டாயப்படுத்துதல், சவக்குழி தோண்ட கட்டாயப்படுத்துதல், தலித் மற்றும் ஆதிவாசி பஞ்சாயத்துத் தலைவர் மீது பாகுபாடு கடைப்பிடித்தல், தலித் பெண்களைத் தேவதாசிகளாகப் பணியாற்ற வற்புறுத்தல் போன்ற பல்வேறு வன்கொடுமைகளை விரிவாகப் பட்டியலிட்டு அவற்றுக்கு எதிராகக் கடுமை யான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல் லாமல், இந்த அவசரச் சட்டத் திருத்தத்தில் வன் கொடுமை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த இரண்டு மாதங்களில் தீர்ப்பு வழங்க நீதிமன்றங் களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் தாண்டி, சட்டத்தால் மட்டுமே சாதி ஒழிப்பு என்பது சாத்தியமில்லை. ஆனால், பாதிக்கப் பட்ட மக்களுக்குக் குறைந்தபட்ச அளவிலாவது இதுபோன்ற பாதுகாப்புச் சட்டங்கள் உரிமையைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய ஆயுதங்களாக உள்ளன. இந்த ஆயுதத்தையும் பிடுங்கிக்கொண்டால், அவர்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்? வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய சட்டத்துக்கே தற்போது அச்சுறுத்தல் வந்திருப்பதுதான் அவலத்திலும் அவலம். இதை அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டியது அவசியம்.
- ‘எவிடென்ஸ்’ கதிர், சமூகச் செயல்பாட்டாளர், தொடர்புக்கு: vikathi@yahoo.co.in