Published : 28 Nov 2015 08:51 AM
Last Updated : 28 Nov 2015 08:51 AM

பிஹார் சுட்டும் அரசியல் வெற்றிடம்!

பிஹார் தேர்தலின் வெற்றி மாற்று அரசியல் கூட்டணியின் தொடக்கமாகிவிடாது

பாட்னா நகரின் காந்தி மைதானத்தில் கடந்த வாரம் நிகழ்ந்த பிஹார் அமைச்சரவைப் பதவியேற்பு விழா பல விதங்களில் சுயமுரணாகத் திகழ்ந்தது. நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராகப் பதவியேற்பதற்கான விழா, லாலு பிரசாத் மீண்டும் ‘விழா நாயகனாக’ உருவெடுக்கும் நிகழ்ச்சியாகிவிட்டது. பாரதிய ஜனதாவுக்குத் தேசிய அளவில் மாற்றாக உருவெடுக்க வேண்டிய எதிர்க் கட்சிகள் கூட்டணி, நரேந்திர மோடி தேசியத் தலைவராக உருவாவதற்கு வழிசெய்த போண்டியான அரசியல் தலைவர்களின் சங்கமமாகிவிட்டது. இடைவெளியை இட்டு நிரப்புவதற்குப் பதில், தேசிய அரசியலில் நிலவும் அரசியல் வெற்றிடத்தையே காந்தி மைதானத்து மேடை பறைசாற்றியது.

இந்த வெற்றிடம் இயல்பாகக் கண்ணுக்குத் தெரியாமல் போனதற்குக் காரணம், பிஹாரில் இணைந்து சாதித்த அரசியல் வெற்றி தந்த மன நிம்மதி, அரசியல் உணர்வை மரத்துப்போகச் செய்துவிட்டது. அரசியல் சட்டம் தொலைநோக்கில் உருவாக்க விரும்பிய நெறிசார்ந்த, பன்மைத் தன்மையுள்ள, சுதந்திரமான இந்தியாவைக் காணவே பலரும் விரும்பினர்.

எச்சரிக்கை அவசியம்

பிஹார் சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலில் கிடைத்த வெற்றி வலிமையானது, உண்மையானது என்பதில் சந்தேகமே கிடையாது. மோடியின் வெற்றிப் பயணத்தைத் தடுத்து நிறுத்த முடியும் என்பதை டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் காட்டியது என்றால், மோடி வெற்றி பெறுவதைத் தடுக்க முடியாது என்ற மாயையை உடைத்தது பிஹார் தேர்தல் முடிவு. சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல்கள் என்பவை மக்களவைப் பொதுத் தேர்தலின் பிரதிபலிப்புகள் அல்ல என்பதை அது உணர்த்திற்று. வலுவிழந்த காங்கிரஸ் கட்சி பிரதான எதிரியல்ல என்றாலும், வெற்றி பெறுவது நிச்சயமில்லை என்பதை பாஜகவுக்கு இத்தேர்தல் முடிவு உணர்த்தியிருக்கிறது.

தேசிய அரசியலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதிக்கத்தையும், அந்தக் கூட்டணிக்குள் பாஜகவின் ஏகபோகத்தையும், பாஜகவுக்குள் மோடி-ஷா இரட்டையர்களின் இரும்புப் பிடியையும் கேள்விக்குறிகளாக்கிவிட்டது பிஹார் தேர்தல் முடிவு. மோடியின் செருக்கான நடை காணாமல் போனது. அது தரும் நிம்மதி சாமான்யமானது அல்ல. எதை வேண்டுமானாலும் பேசிவிட்டு வெற்றி பெற்றுவிட முடியும் என்ற ஆளும் கட்சியின் ஆணவத்துக்குத் தக்க பதில் தரப்பட்டிருக்கிறது. பெரும்பான்மைக் கட்சியின் ஆணவப் போக்கால் அவதிப்பட்டோருக்கு, ஜனநாயகத்தின் வலிமையை எடுத்துக்காட்டியுள்ளது.

எனினும், இந்த ‘வழுக்குப் பாதையில்’தான் நாம் கவனமாக நடக்க வேண்டியிருக்கிறது. எச்சரிக்கையுடன் அரசியலைத் தீர்மானிக்க வேண்டும். பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய பின்னடைவு முற்போக்கு சக்திகளுக்குக் கணிசமான ஆதாயமாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. சிறுபான்மைச் சமூகத்துக்கு உடனடியாக ஏற்படவிருந்து விலகிய ஆபத்து மதச்சார்பற்ற அரசியலுக்கு வெற்றியாக அமைய வேண்டிய அவசியம் இல்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி, சமூக நீதியின் முன்னேற்றமாக இருக்க வேண்டியதில்லை. மாநிலத்தைச் சிறப்பாக நிர்வகித்த முதல்வர், மீண்டும் அப்பதவியை ஏற்றிருப்பதால் எதிர்காலத்திலும் நல்ல நிர்வாகத்தைத்தான் தருவார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

கணக்குகளுக்கு அப்பால்…

மதச்சார்பற்ற அரசியலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி முற்றவில்லை என்றாலும் தொடர்கிறது. பசு விவகாரத்தைப் பெரிதாகக் கையிலெடுத்தது வெற்றியைத் தரவில்லை. அதேவேளையில், இந்துக்களும் முஸ்லிம்களும் மதரீதியாகத் திரளவில்லை என்று கூறிவிட முடியாது.

மகா கூட்டணியின் வெற்றிக்குக் காரணம் இதுதான்: 1-ம் எண்ணும் (ஐக்கிய ஜனதா தளம்) 2-ம் எண்ணும் (ராஷ்ட்ரிய ஜனதா தளம்) 3-ம் எண்ணை (பாஜக) தோற்கடிக்க ஒன்றுசேர்ந்தன. 4-ம் எண்ணின் (காங்கிரஸ்) உதவியும் தேவைப்பட்டது. இவ்வாறு 3 கட்சிகள் சேர்ந்ததே பாஜகவின் வலிமைக்குக் கிடைத்த அங்கீகாரம். இந்தப் பேரவைத் தேர்தலிலும் பாஜகவுக்குக் கணிசமான வாக்குகள் கிடைத்திருப்பது ஒப்புக்கொள்ளப்பட வேண்டியது. இப்போது கிடைத்துள்ள தோல்வியும் இப்போதுள்ள வாக்கு சதவீதமும் உடனடியாக அந்தக் கட்சி பலம்பெற்று மிகப் பெரிய சக்தியாக பிஹாரில் உருவெடுக்க உதவாது என்றாலும், 2020 தேர்தலில் பாஜக பிஹாரில் எப்படி வளர்ந்திருக்கும் என்று இப்போதே ஊகித்துவிட முடியாது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பாஜக வளர்ந்துவரும் போக்கு மாறிவிடவில்லை.

தொடரும் நெருக்கடி

மதச்சார்பற்ற அரசியலுக்கு நெருக்கடி தொடர்வதையே பிஹார் தேர்தல் காட்டுகிறது. சிறுபான்மைச் சமூகத்தவரை தாஜா செய்யும் போலி மதச்சார்பின்மையின் வாக்கு வங்கி அரசியலைக் குறிவைத்துதான் மோடியால் அரசியல் செல்வாக்கை வளர்த்துக்கொள்ள முடிந்தது. தேசியக் கண்ணோட்டமே பெரும்பான்மையின வாதத்தை நோக்கித் திரும்பியது. பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்துத்துவத் தீவிரவாதிகள் அளவுக்கு அதிகமாக ஆட்டம் போட்டதை மக்கள் தண்டித்து மூலையில் உட்கார வைத்துவிட்டனர். அதே சமயம், இந்துக்களும் முஸ்லிம்களும் மத அடிப்படையில் திரளவில்லை என்று அர்த்தமில்லை. கடந்த சில பத்தாண்டுகளைவிட இந்த முறை பெரும்பான்மையினவாத வகுப்புவாதம் எல்லா வகையிலும் தீவிரமாகவே இருந்தது. பாஜகவைத் தோற்கடிக்கக்கூடியவர்களுக்கு வாக்களிப்பதைவிட, முஸ்லிம்களுக்கு வேறு வாய்ப்பே இல்லை. ஹைதராபாத்தில் அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தேதுல் முஸ்லிமினுக்கு ஏன் வாக்களிக்கிறார்களோ, அசாமில் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஏன் வாக்களிக்கிறார்களோ அதே காரணம்தான் பிஹாரில் மகா கூட்டணிக்கு வாக்களித்ததும். இது முஸ்லிம்களுக்கு நிம்மதியைத் தந்திருக்கலாம்; மதச்சார்பற்ற தன்மைக்கு இது வெற்றியில்லை. அதேபோல, பிஹார் தேர்தல் முடிவானது மேல் சாதிக்காரர்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் வாய்ப்பைத் தடுத்து நிறுத்திவிட்டது. ஆனால், அதை சாதி அடிப்படையிலான அணி திரட்டல் மூலமே நிகழ்த்த முடிந்திருக்கிறது.

வளர்ச்சிப் பாதையில் பின்னடைவு

ஆட்சி நிர்வாகம் அல்லது வளர்ச்சிப் பாதையில் பின்னடைவு நேரப்போவதையே இத்தேர்தல் உணர்த்துகிறது. தன்னுடைய ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சியை மையமாக வைத்து ஐக்கிய ஜனதா தளத்தால் தனித்து நின்று வெற்றி பெற முடியாது என்று கருதி, பிற கட்சிகளுடன் கூட்டணி சேர நிதிஷ்குமார் முடிவு செய்தபோதே பிஹாருக்குத் தோல்வி ஏற்பட்டுவிட்டது. அவருடைய ஆட்சியின் சாதனைகளால்தான், வளர்ச்சி - முன்னேற்றம் ஆகியவற்றை பாஜக தேர்தலில் பேசியும்கூட நிதிஷ் கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது. ஆனால், மாநில நிர்வாகத்தில் மிகப் பெரிய உத்வேகத்தைப் புதிய கூட்டணி அரசு அளிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

தேசிய அரசியலில் எதிர்க் கட்சியினரிடம் ஒரு கற்பனை வறட்சி நிலவுகிறது. அதைத்தான் ‘காந்தி மைதானக் கூடல்’ காட்டுகிறது. எப்போதாவது ‘சூட்-பூட்-கி சர்க்கார்’ என்று கிண்டலடிப்பது, நிலம் கையகப்படுத்தல் மசோதாவுக்கு ஒன்றுதிரண்டு எதிர்ப்புத் தெரிவிப்பது போன்றவற்றைத் தவிர, பாஜகவின் திட்டங்களுக்கு மாற்றான ஒரு திட்டம் எதிர்க் கட்சிகளால் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எல்லா ஜனநாயக அமைப்புகளையும் புறக்கணித்துவிட்டுச் செயல்பட அரசு முற்பட்டால், நாடாளுமன்றத்தை முடக்குவது என்ற பதில் நடவடிக்கையை எதிர்க் கட்சிகள் கையாள்கின்றன. அரசு நிர்வாகத்திலும் எதிர்க் கட்சிகள் இடையேயும் மிகப் பெரிய அரசியல் வெற்றிடம் காணப்படுகிறது. இந்த வெற்றிடம் காரணமாகவே, கடந்த காலங்களில் கடைப்பிடிக்கப்பட்ட - சலித்துப்போன - அரசியல் கூட்டணிகளை உருவாக்கும் முயற்சியில் எதிர்க் கட்சிகள் திரும்பவும் ஈடுபடுகின்றன. அதிக முறை கையாளப்பட்டு மதிப்பிழந்த ‘காங்கிரஸ் எதிர்ப்பு’ என்ற உத்திக்குப் பதிலாக ‘பாஜக எதிர்ப்பு’என்ற வெற்றிடக் கொள்கை உத்தி கையாளப்படுகிறது.

வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்பதை ஏற்பது நம்பிக்கை இழந்துவிட்டதற்கான அடையாளம் அல்ல; நெறிசார்ந்தும் அறிவுசார்ந்தும் அரசியல்ரீதியாகவும் மேற்கொள்ளவேண்டிய சவாலைக் குறிப்பது. செயலில் இறங்கக்கோரும் அழைப்பு இது.

தமிழில்: சாரி © தி இந்து ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x