பிஹார் தேர்தல் முடிவுகள்: இனி என்னாகும்?

பிஹார் தேர்தல் முடிவுகள்: இனி என்னாகும்?
Updated on
2 min read

இம்மாத இறுதியில் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கவிருக்கிறது. முக்கியமான சீர்திருத்த மசோதாக்கள் நிலுவையில் இருக்கின்றன. இக்கூட்டத் தொடரையொட்டி எதிர்க் கட்சிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுக்காவிடில், பிஹாரில் பாஜகவுக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய தோல்வி காரணமாக பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வாய்ப்புகள் அருகிவிடும்.

அரசு ஊழியர்களுக்குக் கணிசமான ஊதிய உயர்வு வழங்குவதற்கான பரிந்துரைகளுடன் நவம்பர் 20-ல் ஏழாவது ஊதியக் குழு தனது அறிக்கையைப் பிரதமரிடம் அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் பொதுச் சரக்கு மற்றும் சேவை வரியைச் சீராக அமல்படுத்துவதற்கான அரசியல் சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை, அதாவது 163 வாக்குகள் தேவை. ஆனால், மோடி அரசுக்கு மாநிலங்களவையில் இருப்பதோ 63 வாக்குகள்தான். அதிமுக, சமாஜ்வாதி கட்சிகள் ஆதரவு தந்தாலும் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 100-ஐ எட்டாது.

மாநிலங்களவையில் 70 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆதரவைப் பெறாமல், இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாது. மாநிலங்களவையில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 16. இவர்களில், 5 உறுப்பினர்கள் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இடங்களுக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கிறது. இவற்றில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒரே ஒரு இடம்தான் கிடைக்கும்.

2018-ல் 6 இடங்களுக்கு மறு தேர்தல் நடக்கவிருக்கிறது. இவற்றில், பாஜகவுக்கு 2 இடங்களும், ஐக்கிய ஜனதா தளத்துக்கு 4 இடங்களும் உள்ளன. இவற்றில் பாஜகவுக்கு எதுவும் கிடைக்காது என்று கருதப்படுகிறது. 2019 வரை நடக்கவிருக்கும் மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் அனைத்து இடங்களிலும் பாஜக வென்றாலும், அக்கட்சியால் மாநிலங்களவையில் பெரும்பான்மை பெற முடியாது. அக்கட்சிக்கு மாநிலங்களவையில் மொத்தமாக 100 இடங்கள்கூடக் கிடைக்காது.

குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கவிருப்பதையொட்டி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து இந்த மசோதா தொடர்பாகப் பேசவிருப்பதாக பிஹார் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருந்தார். பிரதமரே முயற்சி செய்தாலும் எதுவும் நடக்கப்போவதில்லை என்றும், இக்கூட்டத் தொடரையோ, இந்த மசோதாவையோ அவரால் காப்பாற்ற முடியாது என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிஹார் தேர்தல் முடிவு குறித்து கருத்துத் தெரிவித்த முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், பிரதமர் மோடி தனது செயல்பாடுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும், எதிர்க் கட்சிகளை அணுக வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஐக்கிய முற்போக்கு ஆட்சியின்போது சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை பாஜக கண்மூடித்தனமாகவும் காரணமில்லாமலும் எதிர்த்தது என்றும், இப்போது காங்கிரஸ் காட்டும் எதிர்ப்புக்குக் குறிப்பிட்ட சில காரணங்கள் இருப்பதாகவும் ப. சிதம்பரம் குறிப்பிட்டிருக்கிறார்.

எதிர்க் கட்சிகள் மீது பாஜக உறுப்பினர்கள் காட்டும் எரிச்சல் தொடர்ந்தாலோ, சகிப்பின்மைக்கு எதிராக நடக்கும் போராட்டங்களை, ‘ஏற்பாடு செய்த போராட்டம்’ என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தாலோ, அரசின் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வது கடினமாக இருக்கும் என்றும், அதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் அறிக்கையும், குளிர்காலக் கூட்டத் தொடரில் வெளியிடப்படவிருக்கிறது. நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தை அரசு மூன்று முறை அறிமுகப்படுத்தி அது காலாவதியாக விட்டுவிட்ட நிலையில், அந்த மசோதா பெரு நிறுவனங்களை விடவும் விவசாயிகளுக்கே சாதகமானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திவால் சட்டத்தைச் சீர்திருத்துவது வணிகத்தை எளிமையாக்குவதற்கான மிக முக்கியமான காரணியாக இருக்கும் என்று பிப்ரவரி மாதம் தனது பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி குறிப்பிட்டார். சர்வதேசத் தரத்துக்கு இணையானதாகவும், தேவையான நீதித் துறை அதிகார வரம்புடனும், விசாலமான திவால் சட்ட நெறிமுறைகளை இந்த நிதியாண்டில் கொண்டுவருவதாக ஜேட்லி அறிவித்தார்.

திவால் சட்டத் திருத்த கமிட்டி தனது அறிக்கையை ஏற்கெனவே சமர்ப்பித்திருக்கிறது. நவம்பர் 19 வரை இதுதொடர்பான கருத்துகளைத் தெரிவிக்குமாறு அரசு அறிவித்திருக்கிறது. இந்தச் சட்டங்களின் தலைவிதியும், தற்போதைய அரசியல் சூழலைப் பொறுத்தே அமையும்.

தமிழில் சுருக்கமாக வெ.சந்திரமோகன் ‘தி இந்து’ ஆங்கிலம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in