Published : 01 Mar 2021 03:16 AM
Last Updated : 01 Mar 2021 03:16 AM

எழுதும்போது கதாபாத்திரங்கள் எதிர்க்கேள்வி கேட்கின்றன!- மயிலன் ஜி.சின்னப்பன் பேட்டி

5 கேள்விகள் 5 பதில்கள்

தஞ்சாவூர் மாவட்டம் சூரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த மயிலன் ஜி.சின்னப்பன், மூளை - தண்டுவட அறுவைச் சிகிச்சை மருத்துவராக திருச்சியில் பணியாற்றிவருகிறார். சிறுகதைகள், குறுநாவல், கட்டுரைகள் எனப் பல வடிவங்களில் எழுதிவரும் இவருடைய முதல் நாவலான ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’, இலக்கிய வட்டத்தில் பெருவாரியாகக் கவனம் பெற்றது. முதல் சிறுகதைத் தொகுப்பான ‘நூறு ரூபிள்கள்’ இந்தப் புத்தகக்காட்சிக்கு வெளிவந்திருக்கிறது.

மருத்துவரை எழுத்தாளராக மாற்றிய தருணம் எது?

வாசகன் எழுத்தாளனாக மாறியதாக வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம். மருத்துவம் - இலக்கியம் இரு துறைகளையும் எப்போதும் குழப்பிக்கொள்வதில்லை. என்னுடைய சில கதைகள் மருத்துவப் பின்னணியைக் கொண்டிருப்பதால் வாசகருக்கு நான் மருத்துவன் என்பது அடிக்கடி நினைவூட்டப்பட்டுவிடுகிறது, அவ்வளவுதான். அதே நேரத்தில், இரு துறைகளுக்கும் துளியும் தொடர்பில்லை என்றும் சுருக்க மாட்டேன். மருத்துவனாக அனுதினமும் பயிலும் வாழ்க்கை எழுத்துக்கு ஒரு பிரத்யேக ஈரமளிப்பதாகவும், எழுத்தாளனாய் நோக்கும் விஷயங்கள் ஒரு மருத்துவனாய் என்னை நெறிப்படுத்துவதாகவும் முழுமையாக நம்புகிறேன்.

உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய படைப்பாளிகள்?

உரைநடையை என் களமாகக் கொண்டதற்கு முக்கியக் காரணமே அசோகமித்திரன்தான். எத்தனை முறை வாசித்தாலும் அவரது கதைகளின் உள்ளீடுகள் பிரம்மிப்பூட்டவே செய்கின்றன. அந்த எழுத்தில் இருக்கும் கலையமைதியை எட்டுவது உண்மையில் மிகப் பெரிய இலக்கு. அதேபோல, ஆதவனின் கதாபாத்திரங்கள் எனக்கு ரொம்பவே நெருக்கமானவை. மனச் சித்திரங்களை வரையும் அவரது எழுத்துமுறைக்கு நான் முதல் ரசிகன். ‘என் பெயர் ராமசேஷன்’ அளவுக்கு எந்தவொரு புதினத்தையும் திரும்பத் திரும்ப வாசித்ததில்லை.

‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ நாவல் உருவான பின்புலம்?

மருத்துவக் கல்லூரி ஒன்றில் முதுநிலை படித்துக்கொண்டிருந்த நண்பன் ஒருவன் தற்கொலை செய்துகொண்டான். எந்தக் காரணமும் துலக்கமாகத் தெரியாத அந்தச் சாவின் வடு கிட்டத்தட்ட பத்து வருடங்களாக என் உள்ளே எங்கேயோ இருந்திருக்கிறது. அது எப்படி நாவலானது என்பது எனக்கே ஆச்சரியம்தான். அந்த நண்பனின் இறுதிச் சடங்குக்குச் செல்ல முடியாமல் திணறிய நிகழ்வைச் சிறுகதையாகப் புனைய நினைத்தபோது, அதுவே நாவலாகத் திரண்டுவந்தது. தற்கொலையை நாம் எப்படி அணுகுகிறோம் என்ற சிறிய கேள்விக்கான மிக நீண்ட பதிலாக அந்த நாவல் மாறியது. மார்க்குவெஸின் ‘முன்கூறப்பட்ட சாவின் சரித்திர’த்தின் விசாரணை தொனி இந்நாவலிலும் உண்டு. எனினும், இதை வெறும் குற்றப் புலனாய்வுக் கதையாக மட்டும் நிறுத்த முடியவில்லை. மரணத்துக்குப் பின்னரான பிணக் கூராய்வில், உடலை விடுத்து உளப் பகுப்பாய்வை எடுத்துக்கொண்டேன். அந்தப் படைப்பின் அசல் முகம் ‘உளவியல் கூராய்வு’ என்ற படிநிலைக்கு மேலெழுந்தது. என்னளவில், நிறைவான படைப்பாக அது அமைந்தது.

உங்கள் புதிய சிறுகதைத் தொகுப்பு பற்றி?

இரண்டு தொகுப்புகளுக்கான கதைகள் கடந்த மூன்று ஆண்டுகளில் சேர்ந்துவிட்டன. இப்போது ‘உயிர்மை’ வெளியீடாக முதல் தொகுப்பு வெளியாகிறது. ‘தமிழினி’ மின்னிதழில் டால்ஸ்டாய் சிறப்பிதழ் கொண்டுவரப்பட்டபோது, அவரது ‘புத்துயிர்ப்பு’ நாவலுக்கு மதிப்புரை எழுத நினைத்தேன். ஆனால், நாவலை வாசிக்கும்போது அந்த முடிவை மாற்றிக்கொண்டு, நாவலின் ஒரு முக்கியத் தருணத்திலிருந்து ஓர் ஊடுகதையாகப் புனைந்ததுதான் ‘நூறு ரூபிள்கள்’. சமீபத்தில் எழுதியவற்றில் எனக்குப் பிடித்தமான கதை. ஊரடங்கு நாட்களில் எழுதப்பட்ட பெரும்பாலான கதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெறுகின்றன. தனிப்பட்ட முறையில் இந்தக் கதைகள் எனக்குத் தனித் தனி நினைவுச் சின்னங்கள்.

மனித உணர்வுகளை, மனச்சிடுக்குகளைப் பற்றியே அதிகம் எழுதுகிறீர்களே, ஏதாவது தனிப்பட்ட காரணம் இருக்கிறதா?

அகம்தான் இங்கே அவ்வளவு ஆட்டங்களுக்குமான ஆதாரம். மந்தை மனநிலையைக் கடந்து பார்த்தால், ஒரே சம்பவத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் உள்வாங்கியிருப்பார்கள். ஒரு எழுத்தாளரின் முதல் படிநிலையே இப்படியான தனிமனித மனப்பாங்குகளுடன் ஒத்திசைவதுதான் என்பது என் நம்பிக்கை. சக மனிதரை இன்னும் உன்னிப்பாக வாசிக்க அது சொல்லிக்கொடுக்கிறது. கற்றதை எழுத்தில் கடத்தும்போது ஒவ்வொரு கதாபாத்திரமும் என்னையே எதிர்க்கேள்வி கேட்கிறது. அப்படியான எதிர்வினைகளுடன் விவாதிப்பது ஒரு கதாபாத்திரத்தின் துல்லியத்தை இன்னும் உண்மைக்கு நெருக்கமாக்குகிறது. எதார்த்தக் கதைகளின் எல்லா சாத்தியங்களும் எழுதி முடிக்கப்பட்டுவிட்டதாகச் சிலர் சொல்கிறார்கள். மனிதனின் மன அலைவுகளில் மட்டும் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கான கதைகள் மிச்சமிருக்கின்றன. அதில் ஒரு துரும்பையாவது நான் கிள்ளிப்போட வேண்டும், அவ்வளவுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x