Last Updated : 09 Nov, 2015 09:08 AM

 

Published : 09 Nov 2015 09:08 AM
Last Updated : 09 Nov 2015 09:08 AM

பிஹார் நாயகன் நிதிஷ்!

நிதிஷ் முதல்வரான பின்னர்தான், முதல் முறையாக பிஹாரில் வளர்ச்சித் திட்டங்கள் வேகம் பெறலாயின.

மென்மையானவர், எளிமையானவர், நேர்மையானவர், ஆர்ப்பாட்ட அரசியலை விரும்பாதவர், மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் களைவதில் முன்னோடி என்றெல்லாம் அழைக்கப்படும் நிதிஷ்குமார், மீண்டும் பிஹார் தன் களம் என்பதை நிரூபித்திருக்கிறார்.

2014 மக்களவைப் பொதுத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகு, ஒரு வருஷத்துக்குள் தடதடவென்று மீண்டெழுந்து மேலே வந்திருக்கிறார் நிதிஷ். மக்களவைப் பொதுத் தேர்தலில் பிஹாரின் 40 தொகுதிகளில் 2-ல் மட்டுமே நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றது; பாஜக கூட்டணி 31 இடங்களுடன் அசாதாரணமான இடத்துக்கு வந்தது. நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு ஒரு முதல்வர் பொறுப்பேற்க வேண்டிய தேவை இல்லை. ஆனால், தார்மீகப் பொறுப்பேற்று முதல்வர் பதவியைவிட்டு விலகினார் நிதிஷ். ஜித்தன் ராம் மாஞ்சி எனும் அமைச்சரவை சகாவை முதல்வர் பதவியில் அமர்த்தினார். ஆனால், மாஞ்சிக்கு அரசை நிர்வகிக்கத் தெரியவில்லை; போதாக்குறைக்கு வாய்ச் சவடால்களால் வம்புகளை விலைக்கு வாங்கினார்.

பிஹார் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது. பாஜக விஸ்வரூபம் அடைந்துவந்த நிலையில், மாஞ்சி முதல்வர் பதவியில் தொடர்ந்தால் தேர்தலைத் தம்மால் எதிர்கொள்ள முடியாது என்று உணர்ந்து மாஞ்சியைப் பதவி விலகச் சொன்னார் நிதிஷ். மாஞ்சி மறுத்தார். நிதிஷைத் தூற்றினார். பாஜகவோடு கை கோத்துக்கொண்டார். கடைசியில் கட்சியில் தனக்கிருந்த பலத்தால் மாஞ்சியைப் பணியவைத்தார் நிதிஷ். ஆனால், மாஞ்சி தனிக் கட்சி தொடங்கி பாஜகவோடு கூட்டு சேர்ந்துகொண்டார். போதாக்குறைக்குத் தன்னை அவமானப்படுத்தியதன் மூலம் எல்லா மகா தலித்துகளையும் நிதிஷ் அவமானப்படுத்திவிட்டார் என்று சொல்லி, மகா தலித்துகள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவரான நிதிஷை சாதிரீதியாகக் கட்டம் கட்டினார் மாஞ்சி. எல்லாவற்றுக்கும் பின்னால் பாஜக இருந்தது.

இந்தச் சூழலில்தான், மாஞ்சியிடமிருந்து லகானை மீண்டும் தன் கைக்குக் கொண்டுவந்த நிதிஷ், ராகுல் யோசனைப்படி, மோடி சுனாமியை எதிர்கொள்ள தன்னுடைய பரம எதிரியான லாலுவுடன் கை கோத்தார்.

அந்த நாள் உறவு

இன்றைக்கு மீண்டும் நண்பர்களாகிவிட்ட நிதிஷ் - லாலு இருவரும் 40 ஆண்டுகளுக்கு முன்பே நண்பர்களாக இருந்தவர்கள்தான். ஜெயப்பிரகாஷ் நாராயணனின் மாணவர் படைத் தளபதிகளாக இருந்தவர்கள் இருவரும். 1977-ல் முதல் அரசியல் பிரவேசம் கண்டார் லாலு. மக்களவைப் பொதுத் தேர்தலில் வென்றார். அரசியலில் ஹானர்ஸ் பட்டம் பெற்றவர் லாலு. பொறியியல் பட்டதாரி நிதிஷ். 1985-ல்தான் சட்டப்பேரவையில் காலடி எடுத்துவைத்தார். 1989-ல் பேரவை எதிர்க் கட்சித் தலைவர் பதவியை லாலு பிரசாத் பெற நிதிஷ் நிறையவே உதவினார். அதேபோல, 1990-ல் பிஹாரில் ஜனதா தளம் ஆட்சியைப் பிடித்தபோது முதல்வர் பதவிக்கான வேட்பாளர்களாக வி.பி. சிங் ஆதரவில் ராம் சுந்தர் தாஸும் சந்திரசேகர் ஆதரவில் ரகுநாத் ஜாவும் களத்தில் இருந்தனர். அப்போது லாலு முதல்வர் பதவியில் அமரவும் முக்கியப் பங்காற்றியவர் நிதிஷ்.

அதன் பிறகு தேசிய அரசியலில்தான் கவனம் செலுத்தினார் நிதிஷ். 1989 மக்களவைப் பொதுத் தேர்தலில் பார் தொகுதியில் வென்றார். தொடர்ந்து 1991, 1996, 1998, 1999 தேர்தல்களில் மீண்டும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வாஜ்பாய் அமைச்சரவையில் வேளாண் துறை இணையமைச்சராகப் பதவி வகித்தார். பிறகு சிறிது காலம் ரயில்வே அமைச்சராக இருந்தார். மேற்கு வங்கத்தின் கைசாலில் நடந்த ரயில் விபத்தில் 300 பேர் உயிரிழந்தபோது, தார்மீகப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

ரயில்வே துறை மறுமலர்ச்சி

2001-ல் நிதிஷ் மீண்டும் ரயில்வே அமைச்சரானார். அப்போது அவர் ஏற்படுத்திய பல மாற்றங்களும் சீர்திருத்தங்களும் அடுத்து அந்தப் பதவியில் லாலு உட்கார்ந்து பெயர் வாங்கும் வரை நீடித்தன. ஒரு வகையில் இதன் மூலமாகவும் லாலுவுக்கு அனுகூலம் செய்தவர் நிதிஷ் என்று கூறலாம். இதனிடையே நடந்த முக்கியமான மாற்றம் பிஹாரிலும் கட்சிக்குள்ளும் லாலுவின் ஆதிக்கம் தலைவிரித்தாடியது. விளைவாக, லாலுவை விட்டுப் பிரிந்தார் நிதிஷ்.

நிதிஷுக்கும் மோடிக்கும் இடையேயான பூசலுக்கு முக்கியமான காரணம் குஜராத் கலவரம். 2002 பிப்ரவரியில் கோத்ராவில் ரயில் பெட்டி எரிக்கப்பட்ட பிறகு, குஜராத் முழுக்க வகுப்புக் கலவரம் பற்றி எரிந்ததே, அப்போது நிதிஷ்தான் ரயில்வே அமைச்சர். பாஜக கூட்டணியில் இருந்தாலும், மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் நலன் போன்ற விஷயங்களில் வாஜ்பாய் அரசுக்குப் பெரும் அழுத்தம் கொடுத்தவர் நிதிஷ்.

வாஜ்பாய் அரசு வீட்டுக்குச் செல்லவும் பிஹாரில் லாலுவின் குடும்ப ஆட்சி பேயாட்டம் அதிகரிக்கவும் ஒருவகையில் சரியாக இருந்தது. அதுவரை டெல்லி அரசியலில் கவனம் செலுத்திவந்த நிதிஷ், பிஹார் நோக்கி மீண்டும் தன் கவனத்தைத் திருப்பும் நேரம் வந்தது. ராப்ரி தேவி அப்போது மக்கள் செல்வாக்கை இழந்துகொண்டிருந்தார். லாலு-ராப்ரி கூட்டாட்சியை எதிர்த்து நிதிஷ் தீவிரப் பிரச்சாரம் செய்தார். 2005 சட்டப் பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி அரசு ஆட்சியைப் பிடித்தது. நிதிஷ் முதல்வரானார்.

பிஹாரின் மறுமலர்ச்சி

நிதிஷ் முதல்வரான பின்னர்தான், முதல் முறையாக பிஹாரில் வளர்ச்சித் திட்டங்கள் வேகம் பெறலாயின. அடித்தளக் கட்டமைப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டன. கல்வித் துறை உதாரணம், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேலையில் சேர்க்கப்பட்டனர். தொலைதூரப் பகுதியில் உள்ள பள்ளிகளிலும் அரசு மருத்துவமனைகளிலும் ஆசிரியர்களையும் மருத்துவர்களையும் பார்க்க முடிந்தது. இந்தச் சாதனைகள் அடுத்த தேர்தலிலும் நிதிஷுக்கு வெற்றியைக் கொடுத்தது. 2010 தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி மொத்தம் 206 தொகுதிகளில் வென்றது. லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு 22 இடங்கள்தான் கிடைத்தன.

பாஜகவின் தேசியத் தலைவர்களுடன் நிதிஷுக்கு நல்ல நட்புறவு இருந்தாலும் நரேந்திர மோடியுடனான உறவு மோசமடைந்துகொண்டே வந்தது. 2014 மக்களவைப் பொதுத் தேர்தலுக்கு மோடி தங்கள் பிரதமர் வேட்பாளர் என்று பாஜக அறிவித்தபோது, பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி வந்தார் நிதிஷ். அவருடைய அரசுக்கு லாலு கட்சி, காங்கிரஸ், இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்தனர். இடையில் ஏற்பட்ட மக்களவைத் தேர்தல் பின்னடைவுக்குப் பிறகு, ‘மோடி யாராலும் வெல்ல முடியாதவர்; பிஹார் பாஜக வசமாகிவிடும்’ என்ற முழக்கங்களுக்கு இடையில்தான் தன்னுடைய ராஜதந்திரத்தால் மீண்டும் பிஹாரைத் தன் கூட்டணி வசமாக்கியிருக்கிறார் நிதிஷ். ஒருவகையில் நிதிஷின் இந்த வெற்றி பிஹாரின் வெற்றி!

பிஹார் தேர்தல் ராகுல் காந்தியை மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு, 8% வாக்குகளுடன் வெறும் 4 தொகுதிகளை மட்டுமே வென்ற காங்கிரஸ், இந்தத் தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 25 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டிருந்தால், அது வென்றிருக்குமோ, இல்லையோ நிச்சயம் நிதிஷ் ஓட்டுகளைப் பிரித்து அவர் தோல்விக்கு வழி வகுத்திருக்கும். ஆனால், புத்திசாலித்தனமாக மோடியை எதிர்கொள்ள நிதிஷுடன் கை கோத்தார் ராகுல். மேலும், எதிரும் புதிருமாக இருந்த நிதிஷ் குமார் - லாலு இருவரையும் ஒன்றுசேர்த்தார். தொகுதி உடன்பாட்டில், லாலு முரண்டு பிடித்தபோது, கூட்டணியை விட்டுப் பிரிந்தால் அவர் தனித்துவிடப்படுவார் என்று கோடிட்டுக் காட்டினார். காங்கிரஸுக்குப் புது ரத்தம் பாய்ச்சும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார் ராகுல். முக்கியமாக, இளைஞர்களுக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவம் அதிகார சுகத்திலேயே ஊறிய பழம் தலைவர்களுக்குக் கடுப்பை ஏற்படுத்திவந்தது. பிஹாரில் நிதிஷ் தோற்றிருந்தால், அதையே காரணமாக்கி ராகுலுக்குக் கட்சிக்குள் குடைச்சல்கள் அதிகரித்திருக்கும். பிஹார் வெற்றி ராகுலுக்கு ஒரு கல்லில் ரெண்டு மாங்காய்!

ஜெயப்பிரகாஷ் நாராயணனின் அரசியல் சீடர், 1977-ல் தன்னுடைய 29 வயதில் நாடாளுமன்ற உறுப்பினரானவர், 1990-ல் பிஹாரின் முதல்வர், 2004-ல் மத்திய ரயில்வே அமைச்சர் என்று நீளும் லாலு பிரசாத் யாதவின் அரசியல் பயணத்தின் அடுத்த மைல்கல் இந்த பிஹார் தேர்தல் வெற்றி.

இந்தத் தேர்தலில் மோடியும் பாஜகவும் நிதிஷுக்கு எதிராகக் கையாண்ட மிகப் பெரிய அஸ்திரம் லாலுவின் கடந்த காலக் ‘காட்டாட்சி ராஜ்ஜியம்’தான். ஆனால், தேர்தல் முடிவுகள், நிதிஷ் கட்சியையும் தாண்டி லாலுவின் கட்சிக்குத்தான் தனிப் பெரும் கட்சி எனும் அந்தஸ்தைத் தந்திருக்கின்றன. ஒருபுறம், பிஹார் அரசியலில் ஆதிக்க சாதியினரின் மேலாதிக்கத்தை நொறுக்கியவர், மதச்சார்பின்மைக்கான வலுவான குரல்களில் ஒன்று அவருடையது என்ற பெருமைகள் லாலுவுக்கு உண்டு. எனினும், அவற்றைத் தாண்டிய ஊழல்கள், வன்முறைகள், குடும்ப வாரிசு அரசியல் இன்று வரை அவருடைய கட்சியில் நீடிக்கிறது. நிதிஷ் இந்த ஆட்சியில் எதிர்கொள்ளவிருக்கும் பெரும் சவால் லாலுவினுடையதாகவே இருக்கும். ஆனால், கடந்த தேர்தல்களில் கிட்டத்தட்ட துடைத்தெறியப்படும் நிலைக்கு வந்துவிட்ட லாலுவின் கட்சி, இம்முறை இவ்வளவு வெற்றி பெற நிதிஷுடன் கைகோத்ததே காரணம் என்பதை லாலு நினைவில் வைத்திருக்கும் வரை நிதிஷுக்கு ஆபத்து இல்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x