Last Updated : 17 Feb, 2021 03:12 AM

 

Published : 17 Feb 2021 03:12 AM
Last Updated : 17 Feb 2021 03:12 AM

உத்தராகண்ட் பெருவெள்ளம்: மனிதர்களால் ஏற்பட்ட பேரழிவு இது!- சுற்றுச்சூழலியர் ரவி சோப்ரா பேட்டி

ரவி சோப்ரா, ‘பீப்பிள்ஸ் சயன்ஸ் இன்ஸ்டிடியூட்’டின் இயக்குநர். உத்தராகண்டில் நீர் மின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதைக் கடுமையாக விமர்சித்துவருபவர். சுற்றுச்சூழலில் பாதிப்பு ஏற்படாமல் அந்த மாநிலத்தில் அடிப்படைக் கட்டுமானங்களின் மேம்பாட்டை எப்படி முன்னெடுப்பது என்பது குறித்து உருவாக்கப்பட்ட பல்வேறு குழுக்களின் தலைவராகவும் அங்கமாகவும் இருந்திருக்கிறார். உத்தராகண்ட் வெள்ளம், நீர் மின் திட்டங்கள், வளர்ச்சியின் வேறு மாதிரிகள் இருக்கின்றனவா என்பது பற்றியெல்லாம் அவர் பேசியதிலிருந்து...

உத்தராகண்ட் பேரிடர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அது இயற்கையாக ஏற்பட்டதா, மனிதர்களால் ஏற்பட்டதா?

நமக்கு இதுவரை கிடைத்த தகவல்கள்படி தெரிந்துகொண்டது என்னவென்றால், முந்தைய ஆண்டுகளில் இருப்பதைவிட பிப்ரவரி 5, 6-ம் தேதிகளில் அதிக வெப்பநிலை காணப்பட்டிருக்கிறது. பனிப் பாளங்களும் பனிப் பொழிவும் நன்னீரும் எப்போதுமே ஆபத்தான கலவையாகும். அன்றைய தினத்தில் இவை மூன்றும் கலந்து மேலிருந்து பெரும் பாறைகள், கற்கள் போன்றவற்றைச் சேர்த்துக்கொண்டு சரிவை நோக்கிப் பாய்ந்து ரிஷி கங்கா நதியில் கலந்திருக்கின்றன. இதில் சிக்கிப் பலியாகி, அடித்துச்செல்லப்பட்டவர்களைப் பொறுத்தவரை இந்த வெள்ளம் பனி ஏரி உடைந்து வந்ததா அல்லது பனியாற்றில் பெரும் பாறை விழுந்து ஏற்பட்டதா என்பதெல்லாம் விஷயமில்லை. இவை இயற்கை நிகழ்வுகளாக இருந்தாலும் இவை போன்ற ஆபத்துகளைப் பற்றி வெவ்வேறு சமயங்களில் எச்சரித்திருக்கிறோம். 2,200 மீட்டர் உயரத்துக்கு மேலே உள்ள இடங்களில் அணைகளையும், நீர் மின் திட்டங்களையும் கட்டிக்கொண்டிருப்பது முட்டாள்தனமானது. அந்த வகையில், இது முழுவதும் மனிதர்களால் ஏற்பட்ட பேரழிவே.

2013 வெள்ளத்துக்குப் பிறகு, நீர் மின் திட்டங்களின் சாத்தியப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி அமைக்கப்பட்ட குழுவொன்றின் தலைவராக நீங்கள் இருந்தீர்கள். அந்தக் குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டனவா?

அந்தப் பேரழிவுக்குப் பிறகும், ஏகப்பட்ட மனுக்களுக்குப் பிறகும் அரசிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அதாவது, இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லும் வரையில். எனினும், சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தின் செயலராக அப்போது இருந்த சசி சேகர் எங்களின் முக்கியமான பரிந்துரையை, அதாவது உத்தராகண்ட் அரசினால் உத்தேசிக்கப்பட்ட பெரும்பாலான நீர் மின் திட்டங்களைக் கைவிட வேண்டும் என்ற பரிந்துரையை ஏற்றுக்கொண்டார். இதனை மின்சக்தித் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் எல்லா வழிமுறைகளையும் பின்பற்றியும் தாங்கள் தண்டனைக்குள்ளாக்கப்படுவதாக முறையிட்டார்கள். அதையடுத்து, இரண்டாவது குழு அமைக்கப்பட்டது. எல்லா சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வழிமுறைகளும் பின்பற்றப்பட்டதாக அந்தக் குழு கருத்துத் தெரிவித்தாலும் நீர் மின் திட்டங்களை ரத்துசெய்துவிடுவது நல்லது என்றே பரிந்துரைத்தது.

மூன்றாவது குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த முறை அந்தக் குழுவில் கிட்டத்தட்ட எந்த சுற்றுச்சூழலியருமே இல்லை. அதில் கிட்டத்தட்ட முழுவதும் பொறியாளர்களே இருந்தார்கள். இந்த விஷயத்தில் இன்னும் போராட்டமாகத்தான் இருக்கிறது. எனினும், தற்போது உத்தராகண்ட் அரசு பெரும்பாலான நீர் மின் திட்டங்களை ரத்துசெய்துவிட்டது. கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டமும் கங்கை வரைவுச் சட்டமும் இதில் குறிப்பிடத் தக்கப் பங்காற்றின. அவற்றின் காரணமாகத்தான் ஒன்றிய அரசு புதிய நீர் மின் திட்டங்களைச் செயல்படுத்தப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்தது.

உத்தராகண்ட் அரசானது தொடர்ந்து நீர் மின் திட்டங்களை முன்னெடுத்துவந்திருக்கிறது. அந்தப் பிரதேசத்தை வளர்ச்சியடையச் செய்வதற்காக மின்சாரத்தை உற்பத்தி செய்ய அது ஒன்றே வழி என்றும் காரணம் கூறிவருகிறது. இந்த விஷயத்தில் சமநிலை பேண முடியுமா?

சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் நீர் மின் திட்டங்களை உத்தராகண்டில் முன்னெடுக்க முடியும் என்று 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நானும் நம்பிவந்தேன். இப்போது அப்படி நம்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. சூரிய மின் சக்தியின் விலை மிகவும் குறைந்துவிட்டது; சூரிய மின் சக்தி ஒரு யூனிட் ரூ. 2-க்குக் கிடைக்கும்போது, மரபான மின் உற்பத்தியில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 7-8-க்கு உற்பத்தி செய்வதில் அர்த்தமே இல்லை. இரண்டாவதாக, இவை போன்ற திட்டங்களால் சேரும் குப்பைக் கூளங்கள், கழிவுகளை எப்படி கழித்துக்கட்டுவது என்ற சவால்கள் இருக்கின்றன. இது போன்ற திட்டங்களில் சுற்றுச்சூழல் விதிமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை. ஆகவே, இந்தத் திட்டங்கள் வளங்குன்றா வளர்ச்சியைத் தராது. அண்மையில் ஏற்பட்ட பனிச்சரிவும் 2013 அனுபவமும் பனியாற்றுப் பகுதியான 2,200 மீட்டருக்கு மேலே அணைகள் கட்டுவதென்பது கீழ்ப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஆபத்தானது என்பதை உணர்த்தியிருக்கின்றன.

பெரும்பாலான மாநிலங்களைப் போல உத்தராகண்டும் மின் வசதி, இணையத் தொடர்பு போன்றவற்றைக் கொடுக்க விரும்பும் நிலையில், மின் விநியோகத்தில் எப்படிப்பட்ட மாற்று வழிகள் சாத்தியமாகும்?

சூரிய மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சியைப் பெற வேண்டும். நிலவுக்கு விண்கலங்கள் அனுப்புவதை வடிவமைப்பது சாத்தியமாக இருக்கும்பட்சத்தில், மின்சாரத்தின் பிரதான ஆதாரமாக சூரிய மின் சக்தியும் பெருமளவில் உற்பத்திசெய்யப்பட்டு, சேமித்துவைக்கக் கூடிய தொழில்நுட்பத்தையும் உருவாக்க வேண்டும். முன்பு உத்தராகண்டில் 80 உருக்கு உருட்டாலைகள் இருந்தன. மாநிலத்தின் மின்சாரத்தில் பாதிக்கும் மேல் அவற்றுக்கே செலவானது. தாக்குப்பிடிக்க முடியாத ஒரு நிலை அது.

அதிக அளவு மின்சக்தி தேவைப்படாத, இன்ஃபோஸிஸ், விப்ரோ போன்ற தகவல் தொடர்பு சேவை அளிக்கும் பொருளாதாரம் உத்தராகண்டுக்குத் தேவை. இம்மாநிலத்தின் சாலைகளை மேம்படுத்த வேண்டும், போக்குவரத்துக் கட்டமைப்பை மேம்படுத்தி, சுற்றுலாவை வளர்ச்சி பெறச் செய்ய வேண்டும். இம்மாநிலத்தில் இன்னும் பயன்படுத்திக்கொள்ளப்படாத ஏராளமான பகுதிகள் உள்ளன. அங்கெல்லாம் வசதிகளை மேம்படுத்தி, சாலைப் போக்குவரத்தைச் சரிசெய்தால், உள்ளூர்ப் பொருளாதாரத்துக்கு அது பெரும் நன்மையைத் தரும்.

© ‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x