Published : 23 Nov 2015 07:49 AM
Last Updated : 23 Nov 2015 07:49 AM

என்ன நடந்திருக்கிறது கடலூரில்?

2004 டிசம்பரில் சுனாமி, 2011 டிசம்பரில் தானே புயல் என்று பேரழிவுகளைச் சந்தித்த கடலூரை இம்முறை கனமழையும் வெள்ளமும் நிலைகுலைய வைத்துவிட்டன. 43 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

நவம்பர் 8 நள்ளிரவு முதலே தொடங்கிய மழை, 9-ம் தேதி அதிகாலையில் சூறைக்காற்றுடன் பெய்யத் தொடங்கியது. இதில் ஏற்பட்ட வெள்ளத்தில், அன்று ஒரு நாள் மட்டும் 14 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, குறிஞ்சிப்பாடிப் பகுதியில் 7 பேர் இறந்தனர்.

40,000 ஹெக்டேர் நாசம்!

செங்கால் ஓடை, வெள்ளியங்கால் ஓடை, விசூர் ஓடைகளின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில், விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் உள்ளிட்ட 9 வட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, கரும்பு என சுமார் 40,000 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வீராணம் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் காட்டுமன்னார்கோயில் மற்றும் சிதம்பரம் சுற்றுவட்டாரக் கிராமங்களில் குடியிருப்புகளைச் சூழ்ந்து இன்னமும் வெள்ளநீர் நிற்கிறது. வெள்ளநீரில் அடித்துவரப்பட்ட மணல் படிந்து, விளைநிலங்கள் மேடாகிவிட்டன. ஆழ்துளைக் கிணறுகள், ஆயில் இன்ஜின்கள், சோலார் பம்புகள் பழுதாகியுள்ளன.

11,000 குடிசைகள் சேதம்

11,049 குடிசைகள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டு முற்றிலும் சேதமடைந்துள்ளன. குறிஞ்சிப்பாடியை அடுத்த பூதம்பாடி, கல்குணம், கொத்தவாச்சேரி, அந்தராசிப் பேட்டை, அரங்கமங்கலம் உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளநீரில் மூழ்கின. பல வீடுகளில் சுமார் 3 அடி உயரத்துக்கு மண் குவிந்துள்ளது.

400 கால்நடைகள் பலி!

ஆடு மாடு, கோழிகள் என 413 கால் நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. 2,000-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்திருப்பதால் பெரும்பாலான ஊராட்சிகளில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் 619 கி.மீ. நீள சாலைகள் சேதமடைந்துள்ளன. 23 இடங்களில் பாலங்கள் சேதமடைந்துள்ளன. குறிஞ்சிப்பாடி அருகே எல்லப்பன்பேட்டையில் ரயில் தண்டவாளத்தின்கீழ் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், தண்டவாளம் சேதமடைந்தது. இதனால் கடலூர்-திருச்சி பயணிகள் ரயில் மற்றும் நாகூர்-பெங்களூர் ரயில் விழுப்புரம் மார்க்கமாக இயக்கப்பட்டது.

கடலூர் முதுநகர் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 50 படகுகள் சூறைக்காற்றில் கடலில் அடித்துச் செல்லப்பட்டன. இவற்றில் 10 படகுகள் மீட்கப்பட்டுள்ளன.

குறிஞ்சிப்பாடி அருகே கடலூர் - விருத்தாசலம் மார்க்கத்தில் ஏற்பட்ட சாலை அரிப்பு.

48 செ.மீ. மழை!

மாவட்டத்தின் உட்பகுதிகளான பண்ருட்டி, சேத்தியாத் தோப்பு, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோயில், நெய்வேலி ஆகிய இடங்களில் சராசரியாக 38 செ.மீ. மழை பெய்தது. நெய்வேலியில் அதிகபட்சமாக 48 செ.மீ. மழை பதிவானது. வடகிழக்குப் பருவமழை தொடங்கி கடலூர் மாவட்டத்தில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் 22-ம் தேதி வரை பெய்திருக்கும் சராசரி மழையளவு 36 செ.மீ. ஆகும். பொதுவாக, வடகிழக்குப் பருவ மழையின் சராசரி மழையளவு 63 செ.மீ. என்பது குறிப்பிடத் தக்கது.

மீட்புப் பணிகள்

85 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர். சாலைகளைச் செப்பனிடுதல், மீண்டும் மின்இணைப்பு வழங்குதல் போன்ற பணிகள் நடைபெற்றுவருகின்றன.

தொடர்ந்து மழை பெய்வதால், குடிசைப் பகுதி மக்கள் தொடர்ந்து நிவாரண முகாம்களிலேயே தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அரசும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் உதவிசெய்தாலும், நிரந்தரத் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதுதான் கடலூர் மாவட்ட மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

நிவாரண நடவடிக்கைகள்

 37 மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டிருக்கிறது. வீடுகளை இழந்த 10,810 நபர்களுக்கு ரூ.4.83 கோடி மதிப்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

 25 ஜேசிபி இயந்திரங்களும், 3 நீர் மிதவை ஜேசிபி இயந்திரங்களும், 1,800 பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நியாயவிலைக் கடைகளுக்கு கூடுதலாக பொதுமக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்க திட்டமிடப்பட்டு, 89,300 லிட்டர் கூடுதல் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாராபட்சமின்றி அனைவருக்கும் நிவாரணம் கோரி முற்றுகையில் ஈடுபட்ட பெரியக்காட்டுப்பாளையம் கிராம மக்கள்.

 683 ஊராட்சிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 174 பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 10,769 புத்தகங்களும், 4,655 சீருடைகளும் வழங்கப்பட்டுள்ளன. பலியான 43 நபர்களில் 39 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் வீதம் ரூ.1.52 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

 பொதுப்பணித்துறை மூலம் தற்காலிகச் சீரமைப்புப் பணிகளுக்காக ரூ. 21 கோடி, நிரந்தரச் சீரமைப்புப் பணிகளுக்காக ரூ. 183 கோடி என்று மொத்தமாக ரூ. 204 கோடி மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

மீண்டும் மிரட்டும் மழை

சில தினங்களாக ஓய்ந்திருந்த மழை சனிக்கிழமை முதல் மீண்டும் பெய்யத் தொடங்கியிருப்பதால், ஏற்கெனவே கையறு நிலையில் தவித்துவரும் கிராம மக்கள் மேலும் வேதனைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

சாலை மறியல்

நிவாரண உதவிகள் சரிவர கிடைக்கவில்லை எனவும், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பாரபட்சத்தோடு செயல்படுவதாகவும் கூறி குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வெள்ள சேதப்பகுதிகளை பார்வையிடச் சென்ற அமைச்சரவைக் குழுவினரையும், அதிகாரிகளையும் சில இடங்களில் பொதுமக்கள் முற்றுகையிட்டு கேள்வி மேல் கேள்வி எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x