

காதல் உயிர் இயற்கை. பூனையும், புழுவும் காதலிக்கின்றன. விதை மண்முட்டி விருட்சமாக மலர்வதன் முயற்சிக்குள் காதல் ஒளிந்துள்ளது. மண்ணில் ஜீவராசிகள் யாவும் காதலித்தாலும், மனிதன் தனக்கு மட்டுமே பிரத்யேகமாக வழங்கப்பட்டிருக்கிற அறிவாலும் கலாரசனையாலும் காதலைப் பொங்கி வழியச் செய்தான். பொங்கி வழியும் எதுவும் பாட்டாகிவிடுகிறது. மனிதன் காதலைப் பாடத் துவங்கினான்.
நமது சங்கத் தழிழ் மரபில் காதல் கொண்டாடப்பட்டுள்ளது. நமது தலைவனும் தலைவியும் காதலில் திளைத்து வாழ்ந்தவர்கள். சங்கத்து அகப்பாடல்களுக்கு எவ்விதத்திலும் குறைவில்லா வண்ணம் பாடப்பட்டிருந்தாலும், ஏனோ திருக்குறளின் காமத்துப்பால் போதுமான அளவு கவனப்படுத்தப்படவில்லை. வள்ளுவர் ‘தெய்வப் புலவ’ராதலால் கடவுள் காதலிக்கக் கூடாது என்பதில் நாம் கண்டிப்போடு இருந்துவிட்டோமோ. முந்தைய உரையாசிரியர்கள் சிலர் காமத்துப்பாலுக்கு முகம் திருப்பிக்கொண்டனர். மொழிபெயர்ப்பாளர்கள் அதற்கு அநீதி செய்தனர். காமத்துப்பாலின் சிறப்பும், புறக்கணிப்புமே என்னை அதற்கு உரை செய்ய வைத்தது.
காமத்தால் விளைந்தது இவ்வுலகு. ஆனால், ‘காமம்’ என்கிற சொல்லைச் சொன்னவுடனேயே நம் நாக்கு எரிந்து கருகிவிடுகிறது. நாம் ‘அவ்வளவு சுத்தம்’. சின்னஞ்சிறுமிகளைச் சிதைத்துக் கொன்று புதைக்கும் அளவு அவ்வளவு சுத்தம். காமம் நாம் பயில வேண்டியது. ஆனால், பயில மறுப்பது. இத்தனைக்கும் காமத்துப்பால் ஒன்றும் ‘காம சூத்திர’மல்ல. காமத்துப்பாலில் உள்ள காமம் என்கிற சொல் வெறும் புணர்ச்சியை மட்டும் குறிப்பதல்ல. அதில் புணர்ச்சி முறைகள் எதுவும் விவரிக்கப்படவில்லை.
‘கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்/ செம்பாகம் அன்று பெரிது’ என்கிறது ஒரு குறள். அதாவது, காதலர் கள்ளத்தனமாக நோக்கிக்கொள்ளும் அந்தச் சின்னஞ்சிறு பார்வையே போதுமாம். அதுவே காமத்தின் பெரும்பகுதியை நிரப்பிவிடுமாம். கவனியுங்கள்... ‘செம்பாதி’ என்றுகூடச் சொல்லவில்லை. ‘செம்பாதி அன்று பெரிது’ என்கிறார் அய்யன்.
காமத்துப்பாலின் 25 அதிகாரங்களுள் 15 அதிகாரங்கள் பிரிவைப் பாடுபவையே. கூடலைப் போன்றே ஊடலையும் நயம்பட உரைப்பது காமத்துப்பால். ‘ஊடல் உவகை’ என்றே ஒரு அதிகாரம் இயற்றியுள்ளார் அய்யன். ‘புலத்தலின் புத்தேள் நாடுண்டோ...’ என்று கேட்கிறார். அதாவது, காதலர் தமக்குள் ஊடி அடையும் இன்பத்துக்கு இணையான இன்பம் தேவர் உலகிலும் கிட்டாது என்கிறார். ஒரு உளவியல் நிபுணரின் பாத்திரமேற்று ஊடலின் சகல பரிமாணங்களையும் காட்டித் தருகிறார். காமம் ஒரு சடங்காக, தினசரி நடவடிக்கையாக, கல் உடைப்பதன்ன கடின உழைப்பாக மாறிவிடும்போது, அதன் பரவசம் குன்றிவிடுகிறது. ‘ஊடல்’ கட்டிலுக்குப் போதுமான ஓய்வளிப்பதால் காமம் அதன் அழகு குறையாமல் பொலிவுடன் நீடிக்கிறது .
‘ஊடிப்பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்/ கூடலில் தோன்றிய உப்பு’ என்கிறார். நெற்றி வியர்த்து உப்பாக வழியும்படியான நீடித்த கலவி இன்பத்தை ஊடிப் பெறுவோம் என்கிறது குறள். அதாவது, ஊடலின் பின்னான கூடலில். ‘உடற்பயிற்சி’யில் இந்த உப்பு கிட்டாது.
நமது சங்கப் பாடல்களில் ‘உண் கண்’ என்கிற சொற்றொடர் அடிக்கடி காணக்கிடைக்கிறது. அதற்கு ‘மையுண்ட கண்’ என்று பொருள் சொல்லப்படுகிறது. வள்ளுவர் ‘கண்டார் உயிர் உண்ணும் கண்’ என்கிறார். ‘மையுண்ட கண்’ என்பது ஒரு அலங்காரம். ‘உயிர் உண்ணும் கண்ணோ’ அதைவிட ஆயிரம் மடங்கு பொலிவது. காதல் உயிரின் ஆதார உணர்வு என்பதால், காலத்தால் அதைப் பழசாக்க முடிவதில்லை. காமத்துப்பாலின் முதல் பாடலில் இடம்பெறும் காதல் காட்சியே, இதோ இப்போது இந்தக் கணத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு காதலுக்கும் முதல் காட்சியாக இருக்கக்கூடும்.
‘அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை/ மாதர்கொல் மாலுமென் நெஞ்சு.’ இவள் அணங்கோ, அன்றி மயிலோ அல்லது பெண்ணேதானோ என்று மயங்கித் தவிக்கிறான் முதன்முதலில் காதலியைக் காணும் காதலன். சதா ‘தான்’, ‘தான்’ என்று கொதித்துக்கொண்டிருக்கும் ஒருவன் ‘தன்னை’ மறந்து அடையும் இந்த மெய்மறப்பு காதலின் தலையாய இன்பங்களில் ஒன்று. இது ஆன்மிகப் படிநிலைகளில் ஒன்றாகவும் சொல்லப்படுகிறது. ஆகவே, காதல் எளிய உயிர்களின் ஆன்மிகப் பயணத்தையும் துவக்கி வைக்கிறது. நமது சங்க அகப் பாடல்கள் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் போன்றவை விரவி எழுதப்படுபவை. எனவே, கொஞ்சம் சிக்கலானவை. மேலும், அளவில் நீண்டவை. குறள் உரிப்பொருள் மட்டும் உடையது. அளவில் சிறியதாயினும் கவிதை அனுபவத்தில் குறையவே குறையாதது. புத்திளைஞர் அணுக எளியது.
உலகம் முழுதும் ஆன்மிகவாதிகள், ‘ஒரு பெண்ணைக் கண்ணெடுத்துப் பார்ப்பதுகூடத் தவறு’ என்று கூறுகின்றனர். ‘பாலுறவைத் தவிர்க்கும் முயற்சியில் கண்ணும் காதும் மூடப்பட்டுவிடுவதால் உலகில் காணும் அழகைக்கூட அவர்களால் ரசிக்க முடிவதில்லை. அவர்கள் மனம் வாடி வதங்கிவிடுகிறது’ என்கிறார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. மிக உறுதியாக, தமிழின் மகத்தான காதல் பாடல்களால் ஆனது காமத்துப்பால். ஆம்! நமக்கு அழகு வேண்டும்; காதல் வேண்டும்; பாடல் வேண்டும். இல்லையெனில் வாடி வதங்கிவிடுவோம்.
- இசை, கவிஞர் ‘மாலை மலரும் நோய்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.