

பாலினச் சிறுபான்மையினர் தங்களின் ஒற்றுமையையும் சமூகத்தில் தங்களுக்கான இடத்தை உறுதி செய்யவும் கடந்த 2009 முதல் சென்னையில் வானவில் பேரணியை நடத்து கின்றனர். இந்தியாவில் முதன்முதலாக கொல் கத்தாவில் 1999-ல் இத்தகைய பேரணி நடந்தது. சென்னை, பெங்களூர், மும்பை என இந்தியாவில் 13 நகரங்களில் இந்தப் பேரணி நடத்தப்படுகின்றது.
இவர்கள் வித்தியாசமானவர்களா?
திருநங்கை, திருநம்பி, தன்பாலின உற வாளர், இருபாலின உறவாளர் போன்றோர் அனைவருமே பாலினச் சிறுபான்மையினர் என அழைக்கப்படுகின்றனர். இவர்களை வித்தியாச மானவர்கள். இயற்கைக்கு மாறானவர்கள். அந்நிய இறக்குமதிகள்… இப்படிப் பலர் விமர்சிக்கின்றனர். இடது கையால் ஆட்டோகிராஃப் போட்டு வலதுகை பேட்ஸ்மேனாக வலம்வந்தவரின் வித்தியாசத்தை நாம் இயல்பாக எடுத்துக்கொள்கிறோம். தலை கீழாகக் கைகளை ஊன்றியே படிக்கட்டுகளில் பயணிப்பவரை, கால்களைக் கொண்டு ஓவியம் வரைபவர்களை இப்படி உடல்ரீதியாக வித்தியாசப்படும் அனைவரையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். உணர்வுரீதியாக, மனரீதியாக வேறுபட்டு நிற்பவர்களை மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது சரியா? மனம் ஒரு பால் சார்ந்தும் உடல் இன்னொரு பால் சார்ந்தும் இருப்பது எத்தகைய நெருடலாக இருக்கும்? இத்தகைய நெருடலால் வெளிப்படும் கூட்டம்தான் பாலின சிறுபான்மையினர். இதுதான் இவர்களின் சுயம்.
எல்லோருக்கும் அவரவரின் சுயம் முக்கியம். சட்டபூர்வமான பாதுகாப்பு கிடைத்தால்தான் இவர்களின் சுயம் காப்பாற்றப்படும். இவர்களின் சுயத்தை மதித்து கடந்த 2009-ல் டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
“வயதுக்கு வந்த இருவரின் சம்மதத்துடன் தனிமையில் நடைபெறும் பாலின சம்பந்தப்பட்ட உறவு குற்றமல்ல” என்பதுதான் அந்தத் தீர்ப்பின் சாராம்சம். இதன்மூலம் தனிப்பட்ட இருவரின் பாலின உறவு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் 377-வது சட்டப்பிரிவு அகற்றப்படும் என எதிர்பார்த்திருந்தவர்களின் தலையில் இடியாக இறங்கியது, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு.
சட்டம் ஒரு இருட்டறையா?
தனிமனித சுதந்திரத்தை வலியுறுத்தும் அரசியல் சாசனத்துக்கு 377-வது சட்டப்பிரிவு எதிரானது என்னும் அடிப்படையிலேயே டெல்லி நீதிமன்றம், தனிப்பட்ட இருவரின் பாலினம் சார்ந்த உறவில் சட்டம் தலையிடக் கூடாது எனத் தீர்ப்பு வழங்கியது. ஆனால், உச்ச நீதிமன்றம் எந்தக் காரணங்களுக்காக உயர் நீதிமன்றத் தீர்ப்பை மறுக்கிறது என்பது அதன் தீர்ப்பில் இல்லை.
தீர்ப்புகள் திருத்தப்படுமா?
சில சமயங்களில் குறிப்பிட்ட ஒரு சட்டப் பிரிவை அரசியல் சாசனத்துக்கு விரோதமாக இருக்கிறது எனக் குறிப்பிடாமல் அதன் விளைவைத் தளர்த்தும் வகையில் நீதிமன்றம் எடுக்கும் நடவடிக்கையைச் சட்ட மொழியில் `ரீடிங்-டவுன்' என்பார்கள். அந்த அடிப்படையில்தான் டெல்லி உயர் நீதிமன்றம் சட்டப் பிரிவு 377-ஐக் கையாண்டது. ஆனால், உச்ச நீதிமன்றமோ சட்டத்தின் அடிப்படையில் இல்லாமல் மத, கலாச்சார, பண்பாட்டின் வழிநின்று வழங்கியிருக்கும் தீர்ப்பு திருத்தப்பட வேண்டும் என்பதுதான் பாலினச் சிறுபான்மையினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
சட்டபூர்வமான பாதுகாப்பு ஏன்?
சட்டபூர்வமான பாதுகாப்பு இல்லையென்றால், பால் வேறுபாட்டுடன் இருக்கும் பிள்ளைகளுக்கு அவர்களின் விருப்பத்துக்கு மாறாகப் பெற்றோர்கள் வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்துவைக்கும் போக்கு அதிகரிக்கும். பொதுச் சமூகத்தில் அவர்களுக்கு அன்பும் ஆதரவும் கிடைக்காது. மாறாக, அச்சுறுத்தல்கள் எழும். இதுபோன்ற காரணங்களை முன்வைக்கின்றனர் பாலினச் சிறுபான்மையினர்.
அவனா நீயி..?
- தன்பாலின ஈர்ப்புள்ள ஒருவரைக் குறித்து, சமீபத்திய திரைப்படம் ஒன்றில் பேசப்படும் இந்த வரி, சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் பிரபலமாகியிருக்கிறது.
“இதற்கு மாற்றாக உங்களை எப்படி அழைப் பது?” என்று சென்னை தோஸ்த் அமைப்பின் நிறுவனர் விக்ராந்திடம் கேட்டார் ஒரு அன்பர்.
“ ‘மகிழ்நன்' என்று கூறுங்கள்” என்றார் விக்ராந்த். இந்தத் தெளிவைச் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் கொண்டுசெல்ல வேண்டியது நம் எல்லோரின் கடமை. பள்ளிப் பருவத்திலேயே இதற்கான பயிற்சியை அளிக்க வேண்டும்.
பாலின அடையாளத்திலும், நியாயமான பாலுறவு விருப்பங்களிலும் வேறுபட்டவர்களை முதலில் அவர்களின் குடும்பம் ஆதரிக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு இந்தியா என்பது உண்மையானால், இவர்களையும் உள்ளடக்கியதுதான் இந்தியா என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.
- வா. ரவிக்குமார் தொடர்புக்கு: ravikumar.cv@thehindutamil.co.in