Published : 03 Feb 2021 03:15 AM
Last Updated : 03 Feb 2021 03:15 AM

தமிழ்த் தேசியத்தின் அரசியல் செல்வாக்கு?

பி.எஸ்.கவின்

நாம் தமிழர் கட்சி தமிழகத்தின் பிரதானக் கட்சிகளைக் காட்டிலும் முன்கூட்டியே சட்டமன்றத் தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவிக்க ஆரம்பித்துவிட்டது. முதற்கட்டமாக 35 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்தத் தொகுதிகளில் பிரச்சாரங்களும் தொடங்கிவிட்டன. இன்னொரு பக்கம், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி அக்கட்சியின் மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரம் அதிமுகவிலும், மாநில இளைஞரணிச் செயலாளர் ராஜீவ்காந்தி திமுகவிலும் இணைந்துள்ளனர்.

இதுவரையிலும் இருபெரும் திராவிடக் கட்சிகளையும் எதிர்த்து மேடைகளிலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் பேசிவந்த கல்யாணசுந்தரமும் ராஜீவ்காந்தியும் இப்போது அதே கட்சிகளில் இணைந்திருக்கிறார்கள். இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா என்று தான் அதிமுகவில் இணைந்ததற்குக் காரணம் சொல்லியிருக்கிறார் கல்யாணசுந்தரம். தனி ஈழத்துக்கு ஒருபோதும் திமுக எதிராக இருந்ததில்லையே என்று சொல்லியிருக்கிறார் ராஜீவ்காந்தி. இருவருமே சீமானைக் குறித்து அவமரியாதையாகவோ அவதூறாகவோ எந்தக் கருத்தையும் தெரிவித்துவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார்கள். தனிப்பட்ட கருத்து வேற்றுமைகளே பிரிவுக்குக் காரணம் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

இதற்கு முன்பு திமுக, அதிமுக கட்சிகளுக்கிடையே மாறிக்கொள்வது கொள்கைரீதியில் யாருக்கும் உறுத்தலாக இருந்ததில்லை. ஆனால், தமிழ்த் தேசியம் பேசியவர்கள் இப்போது திராவிடக் கட்சிகளில் இணைந்திருப்பதால், அக்கொள்கை தோல்வியடைந்துவிட்டதா என்ற கேள்வியையும் சேர்த்தே எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கொள்கைக்கும் திராவிட இயக்கத்துக்கும் கருத்தளவில் எந்த வேறுபாடும் இல்லை என்று விளக்கம் அளித்திருக்கிறார்கள் கல்யாணசுந்தரமும் ராஜீவ்காந்தியும். இருவருமே தாங்கள் தேசியக் கட்சிகளில் இணையவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

ஆதித்தனாரும் ம.பொ.சி.யும்

‘நாம் தமிழர்’ என்ற பெயரில் ஏற்கெனவே சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனாரும் அமைப்பொன்றை நடத்தியிருக்கிறார். லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்று சிங்கப்பூரில் வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவங்களைக் கொண்டவர் ஆதித்தனார். சிங்கப்பூரிலிருந்து திரும்பியதும் ‘தமிழ் ராஜ்ஜியக் கட்சி’ என்ற பெயரில் கட்சியைத் தொடங்கினார். தொடங்கிய ஓராண்டு காலத்திலேயே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். காங்கிரஸிலிருந்து விலகி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அங்கிருந்து விலகி சோஷலிஸ்ட் கட்சி என்று பல்வேறு கட்சிகளுக்கு மாறிய பிறகு, 1958 பிப்ரவரி 9-ல் ‘நாம் தமிழர்’ இயக்கத்தைத் தொடங்கினார். தமிழர் நலனை முன்னிறுத்தி, பிறமொழி பேசுபவர்கள் தமிழகத்தின் அரசியல் கலாச்சாரத் துறைகளில் முதன்மை இடம்வகிப்பதைக் கண்டித்தார்.

ஆதித்தனாருக்கு முன்பே தமிழகத்தில் தமிழ்த் தேசிய அரசியலுக்கான விதையை ஊன்றியவர் ம.பொ.சிவஞானம். அச்சுத் தொழிலாளியாகத் தனது வாழ்வைத் தொடங்கிய அவர், தனது தீவிர வாசிப்பாலும் எழுத்தாலும் சிலம்புச்செல்வர் எனக் கொண்டாடப்பட்டவர். 1946 நவம்பர் 21-ல் தமிழரசுக் கழகத்தைத் தொடங்கினார் ம.பொ.சி. தமிழகத்தின் வடக்கெல்லைப் போராட்டத்தை முன்னின்று நடத்தியும் தெற்கெல்லைப் போராட்டத்துக்கு ஆதரவு தந்தும் தமிழக எல்லைகளைக் காத்தவர்.

சி.பா.ஆதித்தனார், ம.பொ.சி இருவருமே, 1967 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்ததோடு உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டு வென்றனர். திமுக ஆட்சியில் சட்டமன்றத் தலைவராகவும் அமைச்சராகவும் பதவிவகித்த ஆதித்தனார் பின்பு எம்ஜிஆருடன் இணைந்தார். 1977-ல் சாத்தான்குளம் தொகுதியில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடவும் செய்தார். திமுக ஆட்சிக்காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ம.பொ.சி, எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் சட்டமன்ற மேலவைத் தலைவராகப் பொறுப்புவகித்தார்.

சம்பத்தின் தனிப் பாதை

ஆதித்தனாரும், ம.பொ.சியும் தமிழ்த் தேசிய அரசியலை முன்வைத்தாலும் 1967 தேர்தலில் திராவிட இயக்கத்தில் ஏறக்குறைய தங்களைக் கரைத்துக்கொள்ளவே செய்தார்கள். இவர்களுக்கு எதிர்த் திசையில் திமுகவிலிருந்து விலகி 1962 ஏப்ரல் 19-ல் ‘தமிழ்த் தேசியக் கட்சி’யைத் தொடங்கிய ஈ.வி.கே.சம்பத், ஒரு கட்டத்தில் கட்சியைக் கலைத்து விட்டு காங்கிரஸிலேயே இணைந்து கொண்டார்.

தமிழ்த் தேசியக் கட்சியிலிருந்து சம்பத் தலைமையில் காங்கிரஸில் இணைந்த பழ.நெடுமாறன், 1979-ல் காங்கிரஸிலிருந்து விலகி, ‘தமிழர் தேசிய இயக்க’த்தைத் தொடங்கியது வரலாற்றின் ஒரு முரண்நகை. இலங்கைத் தமிழர் போராட்டங்களின் அதிர்வுகள் தமிழகத்தையும் பாதித்ததன் விளைவாக தமிழ்த் தேசிய அரசியல் தீவிரம்கொண்டது. பொதுவுடைமை இயக்கத்திலிருந்து விலகிய பெ.மணியரசன், இராசேந்திர சோழன் முதலானோர் ‘தமிழ்த் தேசியப் பொதுவுடைமைக் கட்சி’யைத் தொடங்கினர். பெ.மணியரசன் தலைமையிலான தற்போதைய கட்சி, பெயரில் பொதுவுடைமையைத் தவிர்த்துவிட்டு ‘தமிழ்த் தேசியப் பேரியக்க’மாகச் செயல்பட்டுவருகிறது. பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த தியாகு, தற்போது ‘தமிழ்த் தேசிய விடுதலை இயக்க’த்தின் பொதுச்செயலாளராக இருக்கிறார்.

எழுவர் விடுதலையைப் பற்றி இன்று விவாதிக்கப்பட்டுவரும் சூழலில், ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அனைவரையும் அத்தண்டனையிலிருந்து விடுவிப்பதற்கான சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் இந்தத் தமிழ்த் தேசிய அமைப்புகளின் தலைவர்கள்தாம் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது. தஞ்சைப் பெருவுடையார் குடமுழுக்கு விழாவில் தமிழும் ஒலிப்பதற்கு பெ.மணியரசன் ஒருங்கிணைத்த போராட்டங்களும் ஒரு முக்கிய காரணம். தமிழகத்தை ஆளும் திராவிடக் கட்சிகள் தமிழர் நலனை முன்னிட்டே செயல்பட்டாலும் மொழியுரிமை சார்ந்த சில அடிப்படையான கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்துவதற்கு தேர்தல் அரசியலுக்கும் அப்பாற்பட்டு ஓர் இயக்கம் அவசியமாக இருக்கிறது. அந்த இடத்தைச் சந்தேகமின்றித் தமிழ்த் தேசிய அமைப்புகள் வகிக்கின்றன.

தனித்தமிழ் வேர்கள்

பண்பாட்டுத் தளத்தில் தனித்தமிழ் இயக்கமும் அரசியல் தளத்தில் திராவிட இயக்கமும் கைகோத்துக்கொண்டுதான் பயணித்திருக்கின்றன. இன்று தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் அனைவரும் தனித்தமிழ் இயக்கத்திலிருந்து கிளைத்தவர்களே. பெருஞ்சித்திரனாரின் முதன்மை மாணவர்களில் ஒருவரான மு.தமிழ்க்குடிமகன், திமுகவில் தன்னை இணைத்துக்கொள்ளத் தயங்கவில்லை. பின்பு அதிமுகவிலும். ஆனால், ‘திராவிட இயக்கத் தமிழர் பேரவை’யைத் தொடங்கி நடத்திவரும் சுப.வீரபாண்டியன் இன்று தேர்தல் அரசியலில் கரைந்துவிடாமலும் அதேநேரத்தில் இடைவெளி அதிகமாகிவிடாமலும் மாறுபட்ட ஒரு அணுகுமுறையைக் கடைப்பிடித்துவருகிறார்.

அழுத்தக் குழுக்கள் என்ற நிலையில், தமிழ்த் தேசிய அமைப்புகளுக்குத் தவிர்க்கவியலாத இடமுண்டு. ஆனால், அரசியல் கட்சிகளாக அவை வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு என்பது தற்போதைக்கு இல்லவே இல்லை. இந்த எதார்த்த உண்மையை உணர்ந்ததன் விளைவாகத்தான் கல்யாணசுந்தரமும் ராஜீவ்காந்தியும் தங்களது அன்புக்குரிய அண்ணன் சீமானை விட்டுவிட்டு, திராவிடக் கட்சிகளில் சேர்ந்திருக்கிறார்கள். தமிழ்த் தேசியம் பேசும் இவர்களுக்கு திமுக, அதிமுக என்று எந்தக் கட்சியில் சேர்ந்துகொள்வதிலும் தயக்கங்கள் இல்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.

கடைசியில், இந்தத் தமிழ் தேசியர்களை திமுகவும் அதிமுகவும் என்னவாகப் பயன்படுத்திக்கொள்ளப்போகின்றன என்றொரு கேள்வியும் எழுகிறது. வெறும் பேச்சாளர்களாக மட்டும்தான் இவர்கள் மேடையேறுவார்கள் என்றால் திண்டுக்கல் லியோனிக்கும் இவர்களுக்கும் என்னதான் வித்தியாசம்? தமிழகம் முழுவதும் தமுஎகச கலை இரவு மேடைகளில் பட்டுக்கோட்டையார் பாடல்களைப் பாடிப் பொதுவுடைமைப் பிரச்சாரம் செய்த லியோனி, இன்று வெறும் நட்சத்திரப் பேச்சாளராக மட்டுமே எஞ்சியது கவனிக்க வேண்டிய விஷயமல்லவா!

அழுத்தக் குழுக்கள் என்ற நிலையில் தமிழ்த் தேசிய அமைப்புகளுக்குத் தவிர்க்கவியலாத இடமுண்டு. ஆனால், அரசியல் கட்சிகளாக அவை வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு என்பது தற்போதைக்கு இல்லவே இல்லை!


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x