Published : 01 Feb 2021 03:12 am

Updated : 01 Feb 2021 06:55 am

 

Published : 01 Feb 2021 03:12 AM
Last Updated : 01 Feb 2021 06:55 AM

சி.சுப்பிரமணியம்: ஏழ்மையை அகற்றுவதற்கான தொழில்நுட்பர்

c-subramaniyam

டி.ராமசாமி

இந்திய நாட்டுக்கும் அறிவியல் துறைக்கும் 1910-ம் ஆண்டு மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் முக்கியமானது. இந்த ஆண்டில்தான் இந்தியாவின் இரண்டு நட்சத்திர நாயகர்கள் பிறந்தார்கள். ஒருவர், வானியற்பியலரான சுப்பிரமணியன் சந்திரசேகர். மற்றொருவர் சிஎஸ் என்று அழைக்கப்படும் சி.சுப்பிரமணியம்.

பிரபஞ்சத்தில் விண்மீன்களின் பரிணாமத்தில் நிகழும் முக்கியமான செயல்முறைகளைக் குறித்து சந்திரசேகர் ஆராய்ச்சிகளை நடத்தினார். சி.சுப்பிரமணியமோ இந்தியாவில் உணவுப் பாதுகாப்புச் சிக்கலுக்குத் தீர்வுகாண முயன்றார். இந்திய வேளாண் துறையில் பசுமைப் புரட்சிக்கான விதைகளை அவர்தான் தூவினார். சந்திரசேகர் விண்வெளியை ஆராய்ந்து கருந்துளை பற்றிய கொள்கையை முன்வைத்தபோது, சுப்பிரமணியமோ சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியில் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதில் வெற்றிகண்டார். பிரபஞ்ச அறிவியலுக்கான அழைப்பை சந்திரசேகரும், மானுடத்துக்கான அறிவியலுக்கான அழைப்பை சுப்பிரமணியமும் விடுத்தார்கள். ஜனவரி 30 அன்று சி.சுப்பிரமணியத்தின் பிறந்த தினம். இந்திய அறிவியல் துறைக்கான அரசுக் கொள்கைமுடிவை உருவாக்கிய சிற்பி அவர். நாட்டில் நடந்த பசுமைப் புரட்சிக்கும் அவரே சிற்பி. மேலும், அறிவியல் துறைகளில் திட்டமிட்ட அரசு முதலீடுகளுக்கும் அவர் முக்கியக் காரணமாக இருந்தார். இந்த 2021-ம் ஆண்டு இன்னொரு காரணத்துக்காகவும் முக்கியத்துவம் கொண்டது. இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் நிறுவப்பட்டதன் பொன்விழா ஆண்டு இது. அறிவியலின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருந்தார் சிஎஸ். சமூகம் எதிர்கொண்டுவரும் சிக்கல்களுக்குத் தொழில்நுட்பத்தால் மட்டுமே தீர்வுகளை வழங்க முடியும் என்று அவர் நம்பினார். அறிவியலர்களால் மட்டுமின்றி குடிமக்களாலும் மானுட சமுதாயத்தாலும் கொண்டாடப்படும் அறிவியல் நடைமுறைகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.


உணவுத் தன்னிறைவு இலக்கு

வாழ்க்கையெனும் இலக்கணத்தின்படி, சிஎஸ் தனது வாழ்க்கையை அறம் சார்ந்த விழுமியங்களின்படியே அமைத்துக்கொண்டவர். சிஎஸ்ஸின் முத்திரைகளை ஒருவர் தேடினால், அவர் கண்டறியக் கூடியவை இவையாகத்தான் இருக்கும்: மிகவும் உயர்ந்த தேசியக் குறிக்கோள்கள், பொதுவாழ்விலும் நிறுவன இயங்குமுறைகளிலும் கண்ணியம் தவறாமை. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகமானது அவர் வாழ்ந்த வாழ்க்கையின் சாட்சியமாக விளங்கிக்கொண்டிருக்கிறது. 1960-களில் இந்தியா தனது உணவுத் தேவைக்காக வெளிநாட்டுக் கப்பல்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்த காலத்தில்- அப்போது ஆயிரக்கணக்கான டன் தானியங்கள் இறக்குமதி செய்யப்பட்டுவந்தது- அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் இந்தியா உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டும் என்ற இலக்கு மிகவும் அசாதாரணமான ஒன்றாகும். அந்த இலக்கு அடையப்பட்டதோடு தொடர்ந்து தக்கவைக்கப்பட்டும் வருகிறது.

பொதுச் சட்டம் 480-ன் கீழ் அமெரிக்க அரசின் உதவியுடன் கட்டப்பட்ட தானியக் கிடங்கானது பசுமைப் புரட்சிக்குப் பிறகு, ‘டெக்னாலஜி பவன்’ என்ற பெயரில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அலுவலகமாக இயங்கிவருகிறது. இந்தக் கட்டிடமானது, அறிவியல் துறைகளில் செய்யப்படும் அரசு முதலீடுகளின் நோக்கமானது சமூக மற்றும் பொதுப் பயன்பாடுகளை உறுதிப்படுத்த வேண்டிய கடமையையும் உள்ளடக்கியது என்பதை அறிவியலர்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.

கல்வி, விவசாயம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளுக்கு சிஎஸ் அளித்த பங்களிப்புகளின் நீண்ட கால விளைவுகளால் நமது தலைமுறை பயனடைந்துவருகிறது. நவீன இந்தியாவின் சிற்பிகளில் அவரும் ஒருவர். அரசின் கொள்கை முடிவுகளை எடுப்பதில் ஆதாரங்களின் அடிப்படையிலான அணுகுமுறைகளைச் சார்ந்திருந்தவர். வெளிப்படைத்தன்மையும் நேர்மையும் அவருடைய வலிமை வாய்ந்த கருவிகளாக இருந்தன. மிகவும் பிரத்யேகமாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தை உருவாக்குவதற்கு முன்பே அறிவியல் தொழில்நுட்பத்தையும் இந்தியாவின் மேம்பாட்டுத் திசைவழியையும் இணைக்கும் வரைபடத்தை உருவாக்கியவர் சிஎஸ். தொலைநோக்காளராக மட்டுமின்றி அதை நோக்கிப் பயணிப்பவராகவும் ஓர் அபூர்வச் சேர்க்கையாக அவர் இருந்தார். அதன் பயனை இந்திய அறிவியல் துறை இன்றும் தொடர்ந்து பெற்றுவருகிறது.

தேசிய வேளாண் நிறுவனம்

நமது நாட்டின் ஒவ்வொரு குடிமக்களது பொருளாதாரச் சுதந்திரமும் நமது விவசாயிகளிடம் உள்ள நான்கு விஷயங்களையே பெரிதும் சார்ந்திருப்பதை சிஎஸ் உணர்ந்துகொண்டார். அவை: கல்வி, சுற்றுச்சூழல், பொருளாதாரம், அதிகாரம். அந்த வகையில், தேசிய வேளாண் நிறுவனமானது அவரது 90-வது பிறந்த நாளில் இந்த நாட்டுக்கு அவரால் பரிசளிக்கப்பட்டது. கடந்த 21 ஆண்டு காலப் பயணத்தில், தேசிய வேளாண் நிறுவனமானது சிஎஸ் அளித்த லட்சியங்களோடு முன்னேறிவருகிறது. விவசாயிகளை மையமாகக் கொண்ட செயல்திட்டங்களின் வாயிலாக அவரது விருப்பங்களுக்கு அந்நிறுவனம் உருவம் கொடுத்துக்கொண்டிருக்கிறது. இன்றைய உலகத்தில், அவரைப் போன்ற தலைவர்கள் மிகவும் அரிதாகத்தான் இருக்கிறார்கள். தங்களுக்காகவும் தங்களது குடும்பத்தினருக்காகவும் அவர்கள் வாழவில்லை. புகழுக்காகவோ பட்டம் பதவிகளுக்காகவோ அவர்கள் பணிபுரிவதில்லை. அவர்கள் அரசியல் அதிகாரங்களை எதிர்பார்ப்பவர்களாகவும் இல்லை. மிகவும் பண்பட்ட மரபுகளைப் பின்பற்றுபவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பண்பாட்டில் வேர்கொண்டிருந்தாலும் தங்களது காலத்திலேயே மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் வேகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்; அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைக் கொண்டு மாற்றங்களை உருவாக்குபவர்களாகவும் இருக்கிறார்கள். அடுத்து வரும் தலைமுறைகளுக்கு முன்மாதிரியாக வாழ்ந்த அத்தகைய தலைவர்களில் சுப்பிரமணியமும் ஒருவர். அத்தகைய நிறைவாழ்க்கையின் மதிப்பை வார்த்தைகளுக்குள் முழுமையாகக் கொண்டுவந்துவிட முடியாது.

ஜனவரி 30 அன்று சி.சுப்பிரமணியத்தின் 111-வது பிறந்த தினம். அந்த நாள், இந்தியாவில் முதன்முறையாக கேரளத்தில் கரோனா தொற்று கண்டறியப்பட்டதன் ஓராண்டு நிறைவும்கூட. கரோனா பெருந்தொற்று பல்லாயிரக்கணக்கான மக்களை வறுமைக் கோட்டுக்கும் கீழே தள்ளியிருக்கிறது. சுப்பிரமணியம் போன்ற ஒரு தேசபக்தருக்கு நாம் செலுத்தும் சிறந்த மரியாதை என்பது ஏழைகளுக்கு எப்படி உதவுவது என்பதையும் அறிவியலையும் ஒன்றிணைப்பதுதான். அவர் அறிவியல் மனப்பான்மையின் மதிப்புக்குரிய விளம்பரத் தூதராகவும் பாரதத்தின் ஒளிவீசும் ரத்தினமாகவும் இருந்தார். அவரது பிறந்த நாளில், மானுடத்தின் பொருளாதார சுதந்திரத்திற்காக அவர் விடுத்த அழைப்பு எதிரொலித்தபடியே இருக்கிறது. ஏழ்மையை அகற்றுவதற்கான தொழில்நுட்பத்துக்காக ஒலித்த அவரது குரல் செயல்வடிவம் காணட்டும்.

- டி.ராமசாமி, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முன்னாள் செயலர்.

‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: புவிசி.சுப்பிரமணியம்ஏழ்மையை அகற்றுவதற்கான தொழில்நுட்பர்C subramaniyam

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

milkha-singh

ஓடு மில்கா ஓடு

கருத்துப் பேழை

More From this Author

x