

சிரியாவில் நடந்துவரும் படுகொலைகளுக்குத் துருக்கி அதிபர் தயிப் எர்டோகன்தான் முக்கியக் காரணம். சிரியாவில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எர்டோகன் அரசு ஆதரவாகச் செயல்படுகிறது. விஷ வாயு உள்ளிட்ட ஆயுதங்களை அந்த அமைப்புகளுக்கு அளிப்பதுடன், துருக்கிக்குச் சுதந்திரமாகச் சென்று வருவதற்கும் அந்த அமைப்பினருக்கு உதவுகிறது.
8 முதல் 15 வயதுள்ள சிறுவர்களுக்குப் பயிற்சியளித்து, சிரியாவின் அலெப்போ நகருக்கு அருகில் உள்ள கிராமங்களில் பயங்கரவாதக் குற்றங்களில் அவர்களை ஈடுபடவைக்கிறது ஐ.எஸ். அமைப்பு. துருக்கியின் பல்வேறு பகுதிகளில் ஐ.எஸ். அமைப்பின் கிளைகள் செயல்படுகின்றன. துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள காஸாயின்டெப் மாகாணத்தில் ஐ.எஸ். அமைப்பின் போக்குவரத்து மையம் செயல்படுகிறது. தாக்குதலுக்குத் தேவையான ஆயுதங்கள் முதல், மருந்துப் பொருட்கள், உணவு வரை எல்லாமே அந்த அமைப்பினருக்கு அனுப்பப்படுவது அங்கிருந்துதான்.
மேற்கத்திய மற்றும் துருக்கி உளவு அமைப்புகள் தங்கள் தீய நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள பயங்கரவாத அமைப்பினரைப் பயன்படுத்திக்கொள்கின்றன. ஆயுதம் ஏந்திய போராளிகளை சிரியாவுக்கு அனுப்பும் நாடுகளில் மிக முக்கியமான இடத்தைத் துருக்கி வகிக்கிறது. துருக்கி நாட்டின் நீதி மற்றும் வளர்ச்சி கட்சித் தலைமையிலான அரசுகள் இந்த பயங்கரவாத அமைப்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றன.
சிரியா, இராக் மற்றும் அந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாதிகள் உருவானதற்குக் காரணமாக எர்டோகனின் கொள்கைகள் அமைந்துவிட்டன.
கடந்த ஜூலை மாதம் துருக்கியின் சுருக் நகரில் நடந்த குண்டுவெடிப்பு, அக்டோபரில் அந்நாட்டின் தலைநகர் அங்காராவில் நடந்த குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்கள் நடந்ததற்கு எர்டோகன் நேரடிப் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில், துருக்கியில் ஐ.எஸ். அமைப்பினரின் நடமாட்டத்தை ஊக்குவித்தவர் அவர்தான்.
சிரியா, எகிப்து, இராக் மற்றும் லிபியா ஆகிய நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சினைகளில் துருக்கி தலையிட்டது ஏன் என்று துருக்கியின் குடியரசு மக்கள் கட்சித் தலைவர் கெமல் கிளிக்டாரோக்லு கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்தச் சூழலில் சிரியாவிலும் துருக்கியிலும் பயங்கரவாத அமைப்புகளுடன் எர்டோகன் வைத்திருக்கும் தொடர்புகளைத் துண்டிக்க சர்வதேசச் சமுதாயம் முன்வர வேண்டும். அதேபோல், துருக்கி எல்லையை மூடுவதன் மூலம், சிரியாவில் செயல்படும் பயங்கரவாதிகளைத் துருக்கிக்குள் அனுமதிப்பதை நிறுத்த எர்டோகனும் முன்வர வேண்டும்.
சிரியாவில் பிரச்சினைகள் தொடங்குவதற்கு முன்னரே, தங்கள் நாட்டில் முகாம்களை அமைத்ததன் மூலம், சிரியாவில் அகதிகள் உருவாவதற்கு முக்கியக் காரணம் சிரிய அரசுதான் என்று குற்றம்சாட்ட ஏற்கெனவே திட்டமிட்டிருந்தது துருக்கி அரசு. ஆனால், பயங்கரவாதிகளின் ஆதிக்கத்திலிருந்த பகுதிகளிலிருந்து சிரிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்குத்தான் மக்கள் தப்பியோடினர். இதிலிருந்து துருக்கி உருவாக்கிய கருத்து தவறானது என்று தெரியவந்தது.
முன்பாதுகாப்புப் பகுதி மற்றும் விமானம் தடை செய்யப்பட்ட பகுதிகளை உருவாக்குவது தொடர்பாகத் தான் விதித்த நிபந்தனைகளை ஏற்க மறுத்த நாடுகளைப் பழிவாங்கவே அகதிகள் பிரச்சினை பூதாகாரமாக வெடிக்கக் காரணமாக துருக்கி இருந்தது.
இந்நிலையில், ஐ.நா-வும் ஐ.நா. பாதுகாப்பு அவையும் தங்கள் மவுனத்தைக் கலைத்துவிட்டு, சிரிய மக்கள் கொல்லப்படுவதற்கு சிரியாவில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தருபவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவிக்க வேண்டும்!
தமிழில்: வெ. சந்திரமோகன்