Last Updated : 14 Nov, 2015 09:35 AM

 

Published : 14 Nov 2015 09:35 AM
Last Updated : 14 Nov 2015 09:35 AM

அறிஞர் நேரு

மக்களும் வரலாறும் இணை பிரியாதவை. மக்களைப் பற்றிப் பேசாத வரலாறு வரலாறே அல்ல

என் வயதில் இருக்கும் தமிழர்களில் பெரும் பாலானவர்களுக்கு உலக வரலாற்றைப் பற்றிய அறிமுகம் நேருவின் புத்தகத்திலிருந்தே கிடைத்திருக்கும். ஓ வி அழகேசன் மொழிபெயர்ப்பு என்று எண்ணுகிறேன். திருநெல்வேலி சந்திப்பு மேலரதவீதியில் இருந்த நூலகத்தில் எனக்கு நானே ஒதுக்கிக்கொண்ட ஜன்னல் விளிம்பில் உட்கார்ந்துகொண்டு படித்த ஞாபகம். 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் அவர் சொன்னது நினைவில் நிற்கிறது. ‘நாம் கன்னியாகுமரியில் கடலோரத்தில் உட்கார்ந்திருந்தது உனக்கு நினைவிருக்கிறதா, என்னுடைய எண்ணத்தில் நிறைந்திருந்தது இமயமலை. இரண்டுக்கும் இடையில் எத்தனை வறுமை, எத்தனை துன்பம்.’ என்று நேரு இந்திராவுக்கு எழுதியிருந்தார். மக்களும் வரலாறும் இணைபிரியாதவை. மக்களைப் பற்றிப் பேசாத வரலாறு வரலாறே அல்ல என்ற அடிப்படை உண்மையை அவரது புத்தகத்திலிருந்தே தெரிந்துகொண்டேன். முழுக்க முழுக்க மார்க்சியப் பார்வையில் எழுதப்பட்ட புத்தகம். என்னைப் போன்ற இளைஞர்களுக்கு உலக வரலாற்றின் அரிச்சுவடியாக அது அமைந்தது.

நேருவின் முதலிரண்டு புத்தகங்கள்

1927-ல் நேரு மாஸ்கோவுக்கு நான்கு நாட்கள் பயணம் செய்தார். அந்த அனுபவத்தை ‘தி இந்து’ ஆங்கில நாளிதழிலும் ‘யங் இந்தியா’ பத்திரிகையிலும் கட்டுரைகளாக எழுதினார். அவற்றின் தொகுப்பாக 1928-ல் ‘சோவியத் ரஷ்யா’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளிவந்தது. நேருவுக்கு அதிகம் மகிழ்ச்சி தராத புத்தகம் அது. ‘ஒன்றுக்கொன்று ஒட்டாத, மேலோட்டமான கட்டுரைகள்’ என்று அவரே சொன்னார்.

நேருவின் இரண்டாவது புத்தகம் 1929-ல் வெளிவந்தது. 10 வயது இந்திராவுக்கு அவர் எழுதிய கடிதங்களின் தொகுப்பு ‘ஒரு தந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள்’ என்று புத்தகத்துக்குத் தலைப்பிடப்பட்டிருந்தது. உலகம் எவ்வாறு உருவானது, தாவரங்கள், மிருகங்களின் தோற்றம், மனிதனின் பிறப்பு போன்றவற்றை மிக எளிய முறையில் விளக்கும் புத்தகம். ‘விவசாயி கருப்பாக இருக்கிறான் என்றால் அவன் வெயிலில் ஆடைகள் அதிகமின்றி கடுமையாக உழைக்கிறான். மனிதனின் நிறம் அவன் இருக்கும் சூழலைச் சார்ந்தது. நிறத்துக்கும், மனிதனுடைய திறமை, நல்ல குணங்கள் மற்றும் அழகு போன்றவற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்கிறார் நேரு.

உலக வரலாறு

1930 ஏப்ரலில் சிறை சென்ற நேரு அக்டோபரில் விடுதலையானார். ஒரு வாரத்துக்குள் ராஜதுரோகக் குற்றச்சாட்டில் (நமது கோவன் மீது சாட்டப்பட்டிருக்கும் அதே குற்றம்!) கைதானார். இரண்டரை ஆண்டுகள் சிறைவாசம் நிச்சயம் என்ற எண்ணத்தில் 13 வயதான இந்திராவுக்கு உலக வரலாற்றை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஒரு புதிய கடிதத் தொடரை எழுத ஆரம்பித்தார். ஆனால், மூன்று மாதங்களில் காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். மறுபடியும் சிறை செல்லும் வாய்ப்பு 1933-ல் கிடைத்தது. நான்கே மாதங்களில் மகளுக்கு எழுதிய 176 கடிதங்களின் மூலம் உலக வரலாற்றை நேரு நமக்குத் தந்தார். சிறையில் கிடைத்த மிகச் சில புத்தகங்களின் துணை கொண்டும் பெரும்பாலும் ஞாபகத்தின் அடிப்படையிலும் எழுதப்பட்ட வரலாறு அது. அன்றைய காலகட்டத்தில் புகழ் பெற்றிருந்தது ஹெ.ஜி.வெல்ஸ் எழுதிய ‘உலக வரலாறு - ஒரு வரைவு’ என்ற புத்தகம். ஆனால், அது மேற்கத்திய நோக்கிலிருந்து எழுதப்பட்டது. மாறாக, நேருவின் புத்தகம் இந்தியா, சீனா, பெர்சியா, அரேபியா போன்ற நாடுகளும், இந்து, புத்த, இஸ்லாமிய மதங்களும் உலக வரலாற்றில் ஆற்றிய பங்கைப் பற்றி விரிவாகப் பேசியது. அடிமையாக இருக்கும், விடுதலையை விரும்பும் மனிதனின் கண்ணோட்டத்திலிருந்து எழுதப்பட்ட முதல் உலக வரலாற்றுப் புத்தகம் இது. வெறுப்பை முற்றிலும் ஒதுக்கிவிட்டு, இன மத, சர்வாதிகார வெறித்தனங்களுக்கு எதிராக ஆசியாவிலிருந்து வந்த முதல் வரலாற்றுப் புத்தகமும் இதுவே.

சுயசரிதை

1933-லிருந்து 1935 வரை நேரு சிறைக்குச் செல்வதும் திரும்புவதுமாக இருந்தார். இதனாலேயே அவர் தனது சுயசரிதைக்கு வைத்த முதல் தலைப்பு ‘சிறைக்கு உள்ளேயும் வெளியேயும்’! நேருவின் சுயசரிதையை அவரது வாழ்க்கை வரலாறு என்று சொல்வதைவிட, அவரது பார்வையில் 1934 வரையான விடுதலைப் போராட்டத்தின் வரலாறு என்று சொல்லலாம். முதல் 40 பக்கங்கள் மட்டும் அவரது சொந்த வாழ்க்கையைப் பேசுகிறது. அடுத்த 550 பக்கங்கள் நாட்டு விடுதலைப் போராட்டத்தைப் பற்றி. இன்று படித்தாலும் அதிலிருந்து வீசும் உண்மையின் ஒளி நமது கண்களைக் கூச வைக்கும். உதாரணம்: ‘இந்திய அரசியல் ஒற்றுமை என்பது பிரித்தானியப் பேரரசின் முன்னேற்றப் பாதையில் தற்செயலாகத் தோன்றிய உப பொருள். பின்னால் தேசியம் வலுவடையும்போது ஒற்றுமையின்மை, பிரிவினைவாதம் போன்றவைதான் (அவர்களால்) ஊக்குவிக்கப்பட்டன.’

உலக அளவில் பெருவெற்றியடைந்த முதல் இந்தியப் புத்தகம் நேருவின் சுயசரிதை என்று சொல்லலாம். இங்கிலாந்தில் 1936 மே மாதம் வெளியான புத்தகம் விற்றுத் தீர்ந்து, ஆண்டு முடிவதற்குள் 10 முறை மறுபதிப்புகள் கண்டது. ‘டைம்ஸ்’ பத்திரிகை ‘படிக்க வேண்டிய புத்தகம்’ என்றது. ‘அவர் பிரிட்டனுக்கு எதிரியல்ல. ஒரு நாடு மற்றொரு நாட்டை ஆளலாம் என்ற கொள்கைக்கு எதிரி’ என்றது ‘எகானமிஸ்ட்’. சென்ற நூற்றாண்டின் 40-களிலும் 50-களிலும் காலனிய ஆட்சிக்கு எதிராகப் போராடிய பல தலைவர்கள் - குறிப்பாக ஆப்பிரிக்காவில் - படித்த புத்தகமும் இதுவே.

“இந்திய வரலாற்றில், முதன்முதலாக நாட்டின் அரசியல், நாட்டுக்கு வெளியிலிருந்து இயக்கப்பட்டது பிரித்தானியர் வந்த பிறகுதான். நமது பொருளாதார மையம் நாட்டுக்கு வெளியில் எங்கேயோ இருந்தது.”

இஸ்லாமிய ஆட்சிக்கும் பிரித்தானிய ஆட்சிக்கும் இடையே இருந்த முக்கியமான வேறுபாட்டை இதைவிடத் துல்லியமாக வேறு யாராலும் எழுதியிருக்க முடியுமா என்பதும் ஐயம்தான். இந்தப் புத்தகம் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் கைதாகி, அகமது நகர் கோட்டையில் நேரு சிறையிருந்தபோது எழுதப்பட்டது. அவர் இந்திய மண்ணைப் பற்றி ஏதும் தெரியாதவர் என்று சொல்பவர்கள் முதலில் படிக்க வேண்டிய புத்தகம் இது. கடந்த காலத்தில் நிகழ்காலம் புதைந்திருக்கிறது, எனவே கடந்த காலத்தைப் பற்றி தெளிவான புரிதலோடு நமது வருங்காலச் சந்ததியினர் பெருமை கொள்ளக் கூடிய நிகழ்காலம் ஒன்றை நாம் நடத்திக் காட்ட வேண்டும் என்ற உட்கனலின் வெளிச்சத்தில் எழுதப்பட்டது ‘இந்தியாவின் கண்டுபிடிப்பு’.

அமெரிக்கப் பயணம்

நேருவின் பெயரில் வேறு புத்தகங்கள் ஏதும் வரவில்லை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இந்த முறை நான் அமெரிக்காவில் இருந்தபோது நண்பர் அரவிந்தன் கண்ணையன் எனக்கு 1950-ல் அமெரிக்காவில் பதிப்பிக்கப்பட்ட ‘அமெரிக்கப் பயணம்’ என்ற புத்தகத்தைப் பரிசாக அளித்தார். 1949-ல் நேருவின் அமெரிக்கப் பயணத்தில் அவர் ஆற்றிய சொற்பொழிவு களின் தொகுப்பு. நேருவின் தெளிவுக்கு அதிலிருந்து ஓர் எடுத்துக்காட்டு: “ஒரு நாடு வெறுப்புகளையும் தடைகளையும் தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நாம் பதிலடியாக அவர்கள் செய்வதையே செய்ய முடியுமா? அந்த வலையில் நாம் விழக் கூடாது.” நாடுகளைப் பற்றிச் சொன்னது நமது நாட்டுக்குள் நடப்பவற்றுக்கும் பொருந்தும். வலதுசாரி வெறுப்புக்குப் பதில் இடதுசாரி வெறுப்பு அல்ல.

- பி.ஏ. கிருஷ்ணன், ‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com

இன்று நேருவின் 126-வது பிறந்த நாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x