Published : 10 Nov 2015 10:26 AM
Last Updated : 10 Nov 2015 10:26 AM

பிஹார் தேர்தல் முடிவுகள்: முன்னிலை வகிக்கும் பிற்படுத்தப்பட்டவர்கள்!

2014 பொதுத் தேர்தலில் நரேந்திர மோடி மாபெரும் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைப் பிடித்தவுடன், இனி இந்தியாவில் சாதிய அரசியலுக்கு இடமில்லை எனப் பரவலாகப் பேசப்பட்டது. காரணம், இந்திய அரசியல் களத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அனுபவிக்கும் அரசியல் அதிகாரத்தை பாஜக மறுத்ததுதான். ஆனால் 18 மாதங்களுக்குப் பிறகு, பிஹார் தேர்தலில் மோடிமயமான பாஜக பட்டபாட்டைப் பார்த்தவர்களுக்கு நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்கும் என்பது தெள்ளத்தெளிவாகிவிட்டது. இந்திய அரசியலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் வகிக்கும் இடம் மிகப் பெரியது. வெறும் கட்சிக்கு உட்பட்ட விஷயமாக இதைச் சுருக்கிப் பார்க்க முடியாது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியதும் புரிந்துகொள்ள வேண்டியதும் எவ்வளவோ இருக்கிறது.

முதலாவதாக, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்கள்தான் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் எனும் மேலோட்டமான பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனெனில், இதர என்னும் சொல் சேர்க்கப்பட்டதால் ஏதோ அங்குமிங்குமாக உதிரிகளாகக் கிடந்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயரல்ல இது. இந்திய மக்கள்தொகையில் பெரும்பங்கு வகிப்பவர்கள் இவர்களே. ஆரம்ப காலத்தில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரின் சதவீதம் கணக்கிட்டபோது உயர்சாதி வகுப்பினரும் இதர பிற்படுத்தப்பட்டவர்களோடு சேர்த்தே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டனர்.

ஆனால், மண்டல் கமிஷன் அமலுக்கு வந்த பிறகு பிற்படுத்தப்பட்டவர்களின் உண்மையான பலம் வெளி உலகுக்குத் தெரியவந்தது. அதில் முதல் கட்டமாக வெளியான ஒரு உண்மை, இந்திய மக்கள்தொகையில் வெறும் 15 முதல் 20 சதவீதம் வகிக்கும் உயர் சாதியினர் மட்டுமே உச்ச பட்ச அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர் என்பதே! அதிகாரத் தைக் கைப்பற்றினாலும் குறைந்த எண்ணிக்கையில் உயர் சாதி இந்துக்கள் இருந்ததால், அவர்களுக்குத் தனித்த அடையாளம் தேவைப்பட்டது. ஆகையால், மண்டலுக்கு எதிர்வினையாக இந்துத்துவா மேலும் தன்னைத் தகவ மைத்துக்கொண்டது. பிற்படுத்தப்பட்டவர்கள் என அடையாளப்படுத்தியதால்தானே இத்தனை பிரச்சினைகளும் கிளம்பின; சாதி வேறுபாடு பார்க்காத நேருவின் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்பட்டிருந்தால் இந்தியாவின் ஜனநாயகம் தழைத்தோங்கியிருக்குமோ என்னும் ஐயப்பாடுகூட எழலாம். ஆனால், இதர பிற்படுத்தப்பட்டவர்களை ஒருங்கிணைத்தது மூலமாக மண்டல் கமிஷன் இந்திய அரசியலுக்குள் புது ரத்தம் பாய்ச்சியது.

இந்திய அரசியலைப் புரிந்துகொள்வதற்குப் பிற்படுத்தப்பட்ட எனும் வகைமையைப் புரிந்துகொள்ள வேண்டியது அத்தியா வசியமாகிறது. முதலாவதாக, இந்திய மக்கள் தொகையில் 42% வகிப்பவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் என்பதே முதல் காரணம். கிட்டத்தட்ட பாதி மக்கள்தொகை எனும்போது அவர்களைத் தவிர்த்துவிட்டு எந்தக் கட்சியும் பிழைக்கவும் முடியாது தனித்து இயங்கவும் முடியாது. அதே சமயம், பிற்படுத்தப்பட்டவர்களை மட்டுமே உள்ளடக்கிய எந்தக் கட்சியும் இல்லை. தேசிய அளவில் மட்டுமல்ல மாநில அளவில்கூட இல்லை. ஆனால், பழைய தொகுதிகளிலிருந்து பிரிந்து உட்பிரிவுகளை ஏற்படுத்திப் புதிய கூட்டணிகளை உண்டாக்கித் தேர்தலைச் சந்திக்க முடியும் எனச் சமகால அரசியலுக்குச் சொல்லித் தந்ததே இந்தப் பிற்படுத்தப்பட்ட வகைமைதான் எனலாம்.

50 கோடி மக்களை உள்ளடக்கிய சாதி வகுப்பு என்றால் விளையாட்டா? பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஒன்று கூடினாலே சீன, இந்திய மக்கள்தொகைக்கு அடுத்து மூன்றாவது பெரிய மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டையே உருவாக்க முடியுமே! அதே நேரத்தில், இந்த வகுப்பைச் சேர்ந்த இந்துக்களில் நான்கில் மூன்று பங்கினர் சாதி அடுக்கில் கீழே இருப்பவர்கள் என்பதையும் நான்கில் ஒரு பங்கு மட்டுமே அவர்களைவிட உயர்ந்த நிலையினர் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

சொல்லப்போனால், நூற்றுக்கணக்கான சாதிகளும், டஜன் கணக்கில் சாதிய உட்பிரிவுகளும் அடங்கியதுதான் பிற்படுத்தப்பட்ட வகுப்பு. இதற்குள் கோடிக் கணக்கானோர் இருப்பதால் கூடுதல் கவனத்தோடு அதன் உட்பிரிவுகளை அடையாளம் கண்டு மேலும் அரசியல் அங்கீகாரம் வழங்க வேண்டும். அதற்கு முதலில் சீரிய அரசியல் பார்வை அவசியமாகிறது. இந்த பிஹார் தேர்தல் ஒரு விதத்தில் இதற்கு ஒரு தொடக்கப் புள்ளியாக இருந்ததைக் கவனிக்க முடிந்தது. பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், இஸ்லாமியர்கள் என்று மட்டும் இல்லாமல் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், மிக மிகப் பிற்படுத்தப்பட்டோர், மகா தலித்துகள், பாஸ்மண்டா முஸ்லிம்கள் இப்படிச் சிறு சிறு குழுக்கள் கூட்டணி சேர்ந்து தேர்தலைச் சந்தித்தது ஒரு புதிய ஆரம்பம்தான்.

அடுத்து சாதிய அடுக்கில் பிற்படுத்தப்பட்டவர்கள் வகிக்கும் இடமும் கவனிக்கத்தக்கது. சாதியப் படிநிலையில் இடைநிலை வகிக்கும் இவர்கள் ஒரு விதத்தில் அதிகாரம் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். மறு முனையில் ஒடுக்கப்பட்டவர்களாகவும் உணர்கிறார்கள். தலித் மக்களைப் போன்று சாதி ரீதியாக இவர்கள் நசுக்கப்படுவதில்லை என்றபோதும் வர்க்கம்தான் இவர்களின் சமூக அந்தஸ்தைத் தீர்மானிக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால், இந்திய மனங்களைப் பிடித்தாட்டும் சாதிய வெறி இவர்களையும் ஆட்கொள்ளவே செய்கிறது. குறிப்பாக, இவர்கள் செல்வாக்கு செலுத்தும் பகுதிகளில் இருக்கும் தலித்துகளை ஒடுக்குகிறார்கள். தமிழகம் முதல் ஹரியாணா வரை, குஜராத் முதல் அசாம் வரை இது நிகழ்கிறது.

சாதிய அடிப்படையிலான சமூக அடுக்கில் இடை நிலையில் இருக்கும் இவர்கள்தான் சாதியின் உச்சபட்ச வன்மத்தோடு செயல்படுகிறார்கள் என்பதை இந்தியா முழுவதும் நிகழும் தொடர் சம்பவங்கள் உணர்த்துகின்றன. சாதி இவர்களை எப்படி ஆட்டிப்படைக்கிறது, இவர்கள் சாதியைக் கொண்டு என்ன செய்யவிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே சாதி அற்ற சமூகத்தைச் சாத்தியப்படுத்தும் கனவு எப்போது நனவாகும் என்பதைத் தீர்மானிக்க முடியும்.

சுதந்திரத்துக்கு முன்பும் சுதந்திரம் அடைந்த ஆரம்ப காலகட்டத்திலும் தீண்டாமை மட்டுமே இந்தியச் சாதியத்தின் மாபெரும் சிக்கலாக நம்பப்பட்டது. முதன் முதலாக தலித் மக்களைத் தவிரவும் ஒடுக்கப்படும் பிற சாதியினரைப் பற்றிய ‘முதல் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் கமிஷ’னின் அறிக்கை 1955-ல் மத்திய அரசின் பார்வைக்கு வைக்கப்பட்டபோது அது நிராகரிக்கப்பட்டது. நேருவின் ஆட்சிக் காலத்தில் சாதியப் பிரக்ஞை துளியும் இல்லை என்பதைத்தான் அந்தச் சம்பவம் உணர்த்துகிறது. அதன் பிறகு 1960-களில்தான் மாநில அளவிலும் பிராந்திய அளவிலும் சாதிய இடஒதுக்கீட்டின் முக்கியத்துவம் விஸ்வரூபம் எடுத்தது. கிட்டத்தட்ட மாநிலத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக மளமளவெனச் சாதி உருவெடுத்தது. இருப்பினும் நேருவின் காலம் முதல் ராஜீவ் காந்தியின் காலம்வரை காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கியிருந்ததால் மாநிலங்களுக்கு அரசியல் செல்வாக்கு அவ்வளவாக இல்லை.

ஆனால், மண்டலுக்குப் பிந்தைய காலமான 1990-களின் சாதியக் கூட்டணிகள் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறத் தொடங்கின. 1980-கள் முதல் 2004-வரை சாதியம்தான் மக்களவையின் உறுப்பினர்களைத் தீர்மானிக்கும் சக்தியாகச் செயல்பட்டது என அரசியல் சிந்தனையாளர்களான கிரிஸ்டாஃப் ஜாஃப்ஃலட்டும் கில்லீஸ் வெர்னியர்ஸும் சுட்டிக்காட்டுகின்றனர். அவர்களுடைய ஆய்வில் இந்தக் காலகட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் உயர் சாதியினரின் எண்ணிக்கை 50%-லிருந்து 34%ஆகச் சரிந்தது. மறுபுறம் இதர பிற்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 11%-லிருந்து 26% ஆக உயர்ந்தது. இதற்கு முக்கியக் காரணம், பெருமளவில் பிற்படுத்தப்பட்டவர்களைப் பிரதிநிதியாகக் கொண்ட மாநிலக் கட்சிகளே!

ஆனால், 2009-ல் மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு மளமளவெனச் சரிந்துபோனது. அதன் விளைவாக 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மக்களவை உறுப்பினர்களாகக் கிட்டத்தட்ட 45% உயர் சாதிப் பிரிவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கையோ 20% ஆகக் குறைந்தது. ஆனால், எதுவாக இருந்தாலும் இந்திய அரசிய லில் பிற்படுத்தப்பட்டோரின் இடத்தை யாரும் மறுக்கவோ புறக்கணிக்கவோ முடியாது. சமகால அரசியலை நிர்ணயிக்கும் மகா சக்தி இது!

தமிழில் ம.சுசித்ரா, ‘தி இந்து’ ஆங்கிலம்

மாய வேட்டை

பிஹார் தேர்தலில் பாஜக அடைந்திருக்கும் தோல்வி அக்கட்சிக்குக் கிடைத்திருக்கும் மற்றொரு முக்கியப் பின்னடைவு. பிற்படுத்தப்பட்ட தலைவர்களின் கூட்டணியை அக்கட்சியால் வெல்ல முடியவில்லை. அத்துடன், ராம் விலாஸ் பாஸ்வான், ஜித்தன் ராம் மாஞ்சி போன்ற தலித் தலைவர்களின் துணை இருந்தும் தலித்துகளின் வாக்குகளைப் பாஜகவால் பெற முடியவில்லை. இந்து சமூக அடுக்குகளின் கீழ் வெவ்வேறு சாதிகளை ஒன்றிணைக்கும் கட்சியாகப் பரிமளிக்க முடியாமல் தோற்றுவிட்டது. - விகாஸ் பதக்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x