Published : 20 Jan 2021 07:17 am

Updated : 20 Jan 2021 07:17 am

 

Published : 20 Jan 2021 07:17 AM
Last Updated : 20 Jan 2021 07:17 AM

ஜனநாயகத்துக்கான உரையாடல்கள்: ராஜஸ்தான் தரும் பாடங்கள்

rajasthan

சகினா தோரஜிவாலா, பூமா சந்திர கிஷன், ராஜேந்திரன் நாராயணன்

ஐம்பது நாட்களுக்கும் மேலாக டெல்லியில் கூடியுள்ள லட்சக் கணக்கான விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சட்டங்களின் நன்மை, தீமைகள் ஒருபக்கம் இருக்கட்டும், யாருக்காக இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறதோ அவர்களைக் கலந்தாலோசிக்காமல் இந்தச் சட்டங்கள் அமலாக்கப்பட்டிருப்பது குறித்துப் பலரும் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.

பயனாளிகளுடன் உரையாடலும் கலந்தாலோசனையும் செய்யும் தேவை இருப்பதைக் கொள்கை வகுப்பவர்கள் புறக்கணிக்கிறார்கள். ஒரு அரசுத் திட்டத்துக்கான சட்டமியற்றலின் ஆரம்பக் கட்டங்களில் கலந்தாலோசனைகள் தேவை, அதைப் போலவே அந்தத் திட்டம் பலனளிக்கும் விதத்தில் அமலாக்கப்படுவதற்குத் தொடர்ந்த உரையாடல்கள் தேவை. கொள்கைகள் நல்ல விதமாக இருக்கும்போதுகூட அவற்றை அமல்படுத்தும்விதம் அடிக்கடி அலங்கோலமாகிவிடும். குறிப்பாக, மறுபகிர்மானம் செய்யும் விதத்திலான, மக்களுக்கான நலத்திட்டங்களுக்குத் தொடர்ச்சியாக எதிர்வினைகள் பெறப்பட வேண்டும்.


ராஜஸ்தானில் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம்’ (ம.கா.தே.ஊ.வே.உ.ச.) எப்படி அமல்படுத்தப்பட்டிருக்கிறது என்பதன் மூலம் இதை நாங்கள் விளக்க விரும்புகிறோம். தொழிலாளர் குழுக்களிடமும் குடிமைச் சமூக அமைப்புகளிடமும் கலந்தாலோசனை செய்யும் நல்லதொரு மரபு ராஜஸ்தானில் இருக்கிறது. ஒரு திட்டத்தை உருவாக்கும்போது மட்டுமல்ல, அவற்றை அமல்படுத்தும்போதும் தொடர்ச்சியாகக் களத்திலிருந்து கருத்துகளைப் பெறுவதோடு, அந்தத் திட்டத்தின் போக்கில் திருத்தங்களும் செய்யப்படுவதுண்டு.

‘ம.கா.தே.ஊ.வே.உ.ச.’-வைப் பொறுத்தவரை குடிமைச் சமூகத்துடன் இணைந்து செயல்படுவதென்பது அதன் ஒரு அங்கமாகவே ஆகியிருக்கிறது; ‘ம.கா.தே.ஊ.வே.உ.ச.’ கூட்டங்கள் சிலவற்றில் ராஜஸ்தான் முதல்வரும்கூட கலந்துகொண்டதுண்டு.
‘ம.கா.தே.ஊ.வே.உ.ச.’ ஊதியங்களெல்லாம் தற்போது நேரடியாக ஒன்றிய அரசிடமிருந்து தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. நேரடியாக இப்படிச் செலுத்துவதில் குறைகள் இல்லாமலில்லை.

‘ம.கா.தே.ஊ.வே.உ.ச.’-ன் முறைசார் அடிப்படைகளை அதிக அளவு சார்ந்திருப்பது தொழிலாளர்களின் உரிமைகளை வலுவிழக்கச் செய்திருக்கிறது. விஷயங்கள் தவறாகப் போகும்போது பிரச்சினைகள் தீவிரமாகின்றன. தொழிலாளர்களோ வெவ்வேறு அரசு அலுவலகங்கள், வங்கிகள், ஊதியம் வழங்கும் முகமைகள், பஞ்சாயத்து அலுவலகங்கள், இன்னும் பிற என்று பல்வேறு இடங்களுக்கு அலைக்கழிக்கப்படுகின்றனர்.

ஊதியத் தொகை மறுக்கப்படுதல்

இதைப் போன்ற ஒரு பிரச்சினைதான் ஊதியத் தொகை மறுக்கப்படுதல், இது கணக்கில் பணம் இல்லாததால் திரும்பிவரும் காசோலைகள் போன்றது. அரசு தொகை வழங்குதல் செயல்பாடுகளை ஆரம்பித்து, ஆனால் துறைசார் பிரச்சினைகளால் பணம் செலுத்தப்படாததால் இந்தப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பணம் வழங்கல் மறுக்கப்படுவதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. இதில் தொடர்புடைய பல்வேறு துறைகள், வங்கிகள் போன்றவை அடங்கிய சிக்கலான கட்டமைப்பைப் புரிந்துகொள்வதில் மட்டுமல்ல ‘பணம் வழங்கலுக்கான இந்திய தேசியக் கழகம்’ (நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா- என்.பி.சி.ஐ.) என்ற நிறுவனத்தைப் பற்றியும் புரிந்துகொள்வது தீர்வுகளை எட்டுவதற்கு உதவும். இந்த விஷயத்தில் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லையென்றால், தொழிலாளர்களுக்கு அவர்களின் ஊதியத் தொகை கிடைக்காமல் போகிறது. எடுத்துக்காட்டாக, சில சமயங்களில் தரவுகளை உள்ளீடு செய்பவர்கள் தொழிலாளர்களின் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்யும்போது தவறுசெய்துவிடுகிறார்கள். வேறுசில சமயங்களில், வங்கிக் கணக்குகள் நீண்ட காலம் பயன்படுத்தப்படாததால் ‘செயல்படாத கணக்குகள்’ என்று வங்கிகளால் கருதப்பட்டுவிடுகின்றன.

இந்தப் பிரச்சினைகளையெல்லாம் கொஞ்சம் சமாளித்து விடலாம். ‘செயல்படாத ஆதார்’ என்ற காரணம் சொல்லிப் பணம் மறுக்கப்படுவது அதிகம் நிகழ்கிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதுதான் மிகவும் கடினம். என்.பி.சி.ஐ.யால் பராமரிக்கப்படும் மென்பொருளில் தொழிலாளர்களின் ஆதாருக்கும் அவர்களின் வங்கிக் கணக்குக்குமான இணைப்பு அறுந்துபோகும்போது இது நிகழ்கிறது. தொழிலாளர்களை விட்டுவிடுங்கள், ஏராளமான அரசு அதிகாரிகளும் வங்கி அதிகாரிகளும் இந்தப் பிழைகளைச் சரிசெய்வது எப்படி என்பதைப் பற்றி அறியாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஊழியர் பற்றாக்குறையாலும் அதிக வாடிக்கையாளர் சந்தடியாலும் தவிக்கும் வங்கிகளால் தொழிலாளர்கள் பல தடவை அலைக்கழிக்கப்படுகிறார்கள், ‘இன்னும் பணம் உங்கள் கணக்குக்கு வரவில்லை’ என்று சிடுசிடுப்புடன் அவர்களிடம் சொல்லிவிடுகிறார்கள். கள அதிகாரிகள் பல தடவை தற்காலிக, தவறான உடனடித் தீர்வுகளில் தஞ்சமடைய நேரிடுகிறது. இதனால், பாதிக்கப்படுபவர்கள் தொழிலாளர்கள்தான்.

வழிகாட்டும் நெறிமுறைகள்

ஊதியத் தொகைகள் மறுக்கப்படும் பிரச்சினையைச் சரிசெய்ய ராஜஸ்தான் அரசின் ஊரக வளர்ச்சித் துறை பல்வேறு கலந்தாலோசனைக் கூட்டங்களை நடத்தியது. இதன் விளைவாக ஒரு பயிற்சிப் பட்டறை நடந்தது. அதில், தொழிலாளர் குழுக்கள், குடிமைச் சமூக அமைப்புகள் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுடனும், கிராமத்து அளவிலிருந்து மாநில அளவு வரையிலான நிர்வாக அதிகாரிகளுடனும், வங்கி அதிகாரிகளுடனும் உரையாடின. இந்த உரையாடல் பரிணாம வளர்ச்சி பெற்று, பொறுப்புகள் குறித்த தெளிவான வரையறைகளுடன் விரிவான வழிகாட்டும் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு, உரிய கால எல்லைகள், வழிமுறைகள் போன்றவை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன. இதன் விளைவாக, ஊதியத் தொகை மறுக்கப்படுவது ராஜஸ்தானில் கணிசமாகக் குறைந்திருக்கிறது. அந்தப் பயிற்சிப் பட்டறையிலிருந்து ஓராண்டுக்குள் அதற்கு முன்பு தேங்கிக் கிடந்த ரூ.380 கோடி அளவிலான தொகையை ராஜஸ்தான் அரசால் வழங்கிட முடிந்திருக்கிறது. தற்போது அரசிடமிருந்து 2.7% தொகைகளும், வங்கிகளிடமிருந்து 12.3%-மும் மட்டுமே தேங்கியிருக்கின்றன; வேலை பார்த்த அனைவருக்கும் உரிய ஊதியம், உரிய நேரத்தில் கிடைக்கச் செய்வதே இலக்காகும்.

வெளிப்படையான தகவல்தொடர்பு வழிமுறைகள், தொழிலாளர் குழுக்களுடன் சேர்ந்து செயல்படுவதற்கான முனைப்பு, களத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கூர்ந்து கவனித்தல் போன்றவற்றால் ராஜஸ்தானில் ஆயிரக் கணக்கான ‘ம.கா.தே.ஊ.வே.உ.ச.’ தொழிலாளர்கள் பலனடைந்துள்ளார்கள். ராஜஸ்தானில் செயல்பட்ட மக்கள் இயக்கங்களில் தன் வேர்களைக் கொண்டிருக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டம், தகவல்களை எளிதில் தெரிந்துகொள்ளும்படி ஆக்கியிருக்கிறது. எனினும் இந்தத் திட்டத்தைப் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் எளிதில் கிடைப்பதில்லை. எனினும் 2019-ல் ராஜஸ்தான் அரசு ‘ஜன் சூச்னா போர்ட்டல்’ (https://bit.ly/2LmKLmv) என்ற இணையதளத்தைத் தொடங்கி, அதன் மூலம் 104 திட்டங்கள், 60 துறைகள் தொடர்பான தகவல்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்திருக்கிறது. ஒவ்வொரு திட்டத்தின் வடிவமைப்பும் அரசு அதிகாரிகளுக்கும் குடிமைச் சமூக அமைப்புகளுக்கும் இடையிலான ‘டிஜிட்டல் உரையாடல்’ மூலமாகச் சாத்தியமாகியிருக்கிறது.

‘கலந்தாலோசனை, விவாதம் ஆகியவைதான் நம் ஜனநாயகத்தின் ஆன்மாவைத் தூண்டிவிடுவதற்கான வழிமுறை’ என்று அமெரிக்கக் குடிமை உரிமைகள் செயல்பாட்டாளர் ஜெஸ்ஸி ஜாக்ஸன் கூறியிருக்கிறார். கூட்டாட்சித்துவமும் நல்ல அரசு நிர்வாகமும் மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான ஒருங்கிணைந்த செயல்பாட்டைச் சார்ந்திருக்கின்றன. அரசமைப்புச் சட்டத்தின் கொள்கைகளுக்கு இணங்க ஒரு அரசு நடந்துகொள்ள வேண்டுமென்றால், சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ள மக்களின் குரல்களுக்கும் செவிமடுக்க வேண்டும், பல தரப்பட்ட பார்வைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

- சகினா தோரஜிவாலா, லிப்டெக் இந்தியாவில் ஆய்வாளர்;
பூமா சந்திர கிஷன், ராஜஸ்தானில் கிராம மேம்பாட்டுக்கான செயலர்;
ராஜேந்திரன் நாராயணன், ஆசிரியர், அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம்.

‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசைRajasthanராஜஸ்தான்ஜனநாயகத்துக்கான உரையாடல்கள்விவசாயிகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x