

புதுமைப்பித்தனுக்கும் ஜி.நாகராஜனுக்கும் இடைப்பட்ட யதார்த்தவாதியாக ஆ.மாதவனைக் கணிக்கிறார் சுந்தர ராமசாமி. திருவனந்தபுரத்தின் சாலைக் கம்போளம் என்னும் கடைத்தெருவைத் தன் சிறுகதைகளில் அலங்காரமில்லாமல் விரித்துவிட்டவர் ஆ.மாதவன். அந்தக் கடைத்தெருவில் அப்புக்குட்டன், ஆணிப்புற்று வளர்ந்த தன்னுடைய உள்ளங்கால் தோலைச் சிறிய பிளேடு துண்டை வைத்துச் செதுக்கிச் செதுக்கி எடுப்பதுபோல், கடைத்தெரு உதிரி மனிதர்களின் இயக்கங்களையும் மன விகாரங்களையும் இரக்கமில்லாமல் செதுக்கி எடுத்துவைத்தவர் மாதவன். அவர்களின் அன்றாடப் பாடுகளையும் அகச் சலனங்களையும் வலிந்த பரிவு எதையும் காண்பிக்காமல் துல்லியமாகப் பதிவுசெய்திருக்கிறார்.
செய்துப் பட்டாணி, உம்மிணி, ஆணிப்புற்றுக்கால் தாணு மேஸ்திரி, அமீன் நான்வெஜிடேரியன் சென்டரின் கசாப்பு வேலைக்காரர் நாயுடு, பலசரக்குக் கடை சிமென்ட் திண்ணையில் அமர்ந்து சீரகம் புடைக்கும் ஏகம்மை, நகைக்கடை புரோக்கர் மாடசாமி, பப்படக் கடை கோபால் பட்டர் என்று பல்வேறு விளிம்புநிலை மனிதர்கள், அவர்களுக்கேயான எண்ணச் சுழற்சியுடன் தங்கள் போக்கில் கடைத்தெருவில் பயணிக்கிறார்கள். ஒரு வாய் சாயாகூட அவர்களில் பலருக்கும் எட்டாமல் போய்விடுகிறது. இத்துடன் சொமட்டு வேலைக்காரர்களும், திரிகுத்துப் பேர்வழிகளும், புத்திரிகண்டம் தொழில்காரிகளும், மலட்டுப்பசு கோமதியும், பாச்சி நாயும் சாலைக் கம்போளத்தில் கதாசிரியரின் கண்காணிப்பு இல்லாமல் சுதந்திரமாகத் திரிகிறார்கள். ஒழுக்க விதிகளுக்கு அப்பாற்பட்ட உயிர் இயக்க உலகம் அது. ஈவு இரக்கம், நேரம் காலம் எதுவுமற்ற தன்னுடைய வேலையைப் பற்றி, அமீன் கடை சமையல்கார நாயுடு மனம் நொந்துகொண்டாலும், அவருடைய கையும் கத்தியும் வேலையை நறுக்குச் சுத்தமாக்கிக்கொண்டுதான் இருக்கின்றன!