

எழுபதுகளில் நான் முதன்முதலாக சென்னையில் காலடி எடுத்துவைத்ததிலிருந்தே ‘நர்மதா’ ராமலிங்கத்தை எனக்குத் தெரியும். அப்போது அவர் ராமலிங்கம்தான். பாண்டி பஜாரில் ‘கலைஞன் பதிப்பகம்’ நடத்திவந்த மாசிலாமணி, ராமலிங்கத்தின் அக்காள் கணவர். ராமலிங்கம், ‘கலைஞன் பதிப்பக’த்தில் இருப்பதைப் பலமுறை பார்த்திருக்கிறேன், பேசியிருக்கிறேன். அப்போதுதான் அவர் கல்லூரிப் படிப்பை முடித்திருந்தார். சினிமா பாடலாசிரியர் குயிலனின் மருமகனான நச்சினார்க்கினியன், அதே கட்டிடத்தில் ‘கவிதா பதிப்பக’த்தைத் தொடங்கி டி.செல்வராஜின் ‘தேநீர்’, பா.செயப்பிரகாசத்தின் ‘ஒரு ஜெருசலேம்’, எனது ‘நேசம் மறப்பதில்லை நெஞ்சம்’ முதலான நூல்களை வெளியிட்டிருந்தார். ராமலிங்கத்திடம் ‘கடல்புரத்தில்’ நாவலின் கையெழுத்துப் பிரதியைக் கொடுத்திருந்தேன். படித்துப் பார்த்து அவருக்கு நாவலைப் பிடித்துப் போயிற்று. தான் தொடங்கவிருக்கிற புதிய பதிப்பகத்தின் வெளியீடாக ‘கடல்புரத்தில்’ நாவலை வெளியிட்டுக்கொள்ளட்டுமா என்று கேட்டார்.
ராமலிங்கம் தொடங்கிய ‘நர்மதா பதிப்பக’த்தில் 1977 ஏப்ரல் வாக்கில் ‘கடல்புரத்தில்’ வெளிவந்தது. அதன் பிறகு, என்னுடைய ‘கம்பாநதி’, ‘ரெயினீஸ் ஐயர் தெரு’ முதலான நாவல்களையும் ‘எஸ்தர்’ சிறுகதைத் தொகுப்பின் இரண்டாம் பதிப்பையும், ‘தர்மம்’, ‘தாமிரபரணி கதைகள்’ முதலான சிறுகதைத் தொகுப்புகளையும் 1990-1992 வரை அவரே வெளியிட்டார். அசோகமித்திரனின் சிறுகதைத் தொகுப்புகளையும் நாவல்களையும் வெளியிட்டார். கோயில்பட்டி நண்பர் கௌரிஷங்கர் தனது சிறுகதைத் தொகுப்பை வெளியிட விரும்பினார். அப்போது அவர் பிரபலமான எழுத்தாளர் அல்ல. இருந்தாலும், விற்பனையைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் நான் சிபாரிசு செய்ததும் அவரது ‘முந்நூறு யானைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். இதுபோல், பிரபஞ்சனின் சிறுகதைத் தொகுப்பையும், சோவின் ‘எங்கே பிராமணன்’ என்ற நாவலையும் நான் கூறியதன் பேரில் வெளியிட்டார். பாலகுமாரனின் முதல் சிறுகதைத் தொகுப்பை ராமலிங்கம்தான் வெளியிட்டார்.
அப்போது ‘நர்மதா பதிப்பக’மும் அவரது வீடும் ஒன்றுதான். தி.நகர் வியாசராவ் தெருவின் கோடியில் ராமலிங்கத்தின் வீடு; வீட்டின் முன்பகுதி பதிப்பகமாகவும் பின்பகுதி குடித்தனமாகவும் இருந்தது. அது சிறிய வீடுதான். நூல்களை இருப்பு வைக்கப் போதிய இடவசதி இல்லை. அதனால், பக்கத்திலுள்ள சோமசுந்தரம் தெருவில் சற்றுப் பெரிய வீட்டுக்குக் குடியேறினார்.
இலங்கையில் கலவரம் மூண்டிருந்த நேரம் அது. கலவரத்தால் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு வந்திருந்த செ.யோகநாதன் போன்ற இலங்கை எழுத்தாளர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தார். ராமலிங்கத்தின் ரசனை, வெறும் இலக்கியம் சார்ந்தது மட்டுமல்ல. ஒருநாள் அவர் தனது சோமசுந்தரம் தெரு வீட்டில் மொசார்ட் குறித்த வரலாற்றுத் திரைப்படத்தைப் பார்க்க என்னை அழைத்தார். மொசார்ட் பற்றிய அந்தத் திரைப்படத்தை அவருடன்தான் பார்த்தேன். அன்று செ.யோகநாதனும் படம் பார்க்க வந்திருந்தார்.
தி.நகர் ராஜாபாதர் தெருவில் உள்ள மாடியில் தனது ‘நர்மதா பதிப்பக’த்துக்கென்றே தனி அலுவலகத்தைப் பின்னர் திறந்தார். இலக்கியத்தைத் தாண்டி சட்டம், வாழ்க்கை முன்னேற்றம், ஆன்மிக நூல்கள் என்று பலதுறை நூல்களையும் ராமலிங்கம் பதிப்பித்தார். அது தரமான தயாரிப்பாக இருக்க வேண்டும் என்றும் நினைத்தார். ஏறத்தாழ நான்காயிரம் நூல்களைப் பதிப்பித்திருக்கிறார்.
புத்தகங்களின் மீதுள்ள தணியாத ஆசையால் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தி.நகரிலேயே ‘நியூ புக்லேண்ட்ஸ்’ என்ற புத்தகக்கடையையும் தொடங்கினார். நவீன இலக்கிய நூல்கள் உட்பட வெவ்வேறு துறைகள் சார்ந்து தமிழ் நூல்களை வாங்கக் கூடிய ஒரு இடம் சென்னையில் இல்லை என்ற குறை நீங்கியது. எல்லா இலக்கியச் சிற்றிதழ்களையும் அங்கே போனால் வாங்கிவிட முடியும். சென்னை மாநகரின் மையப் பகுதி ஒன்றில் தமிழ்ப் புத்தகங்களுக்கான ஒரு விற்பனையகத்தைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்த முடியும் என்பதற்கு ‘நியூ புக்லேண்ட்ஸ்’ ஒரு முன்னுதாரணமாயிற்று. ‘நர்மதா’ வெளியீடுகள் மட்டுமின்றி அனைத்துப் பதிப்பக வெளியீடுகளும் அங்கு காட்சிப்படுத்தப்படுகின்றன. அந்தப் புத்தகக் கடையைத் தொடங்கிய புதிதில் அசோகமித்திரன் பற்றிய ஆவணப்படத்தை அங்கே திரையிட ஏற்பாடுசெய்தார்.
‘நர்மதா’ ராமலிங்கம் பெரும்பாலும் வெள்ளை உடைதான் அணிவார். நெற்றியில் திருநீறும் குங்குமப்பொட்டும் இருக்கும். அவரிடம் பணிபுரியும் ஊழியர்களெல்லாம் அவருடன் பல ஆண்டுகளாக இருந்துவருகிறவர்கள். அவர் பெரும் பதிப்பாளர் மட்டுமல்ல; நல்ல வாசகரும்கூட. அவருடைய பிரியத்துக்குரிய நூல்களை விட்டுவிட்டு மறைந்துவிட்டார்.