

“ஆனாலும் இந்த உலகம் இன்னும் அழகானதாகவே இருக்கிறது”, ‘ஆத்மா என்றொரு தெருப்பாடகன்’ என்ற தனது படைப்பை இப்படித்தான் தொடங்கியிருப்பார் இளவேனில். நிறையப் பேர் அதன் தாக்கத்தில் கவிதையெழுத வந்தார்கள் என்பது அப்படைப்பின் வெற்றி. நெடும் பாலையில் கொடும் பயணம் என்று சொல்லத் தக்க வாழ்வை நெடுகச் சுமக்க நேர்ந்த நிலையிலும், குதர்க்கமும் குழப்பமுமான இந்த மனிதர்களை ஒருபோதும் அவருக்கு வெறுக்கத் தெரியவில்லை. அதனால்தான் இந்த உலகம் அவருக்கு இறுதிவரை அழகானதாகவே காட்சியளித்திருக்கிறது.
“மனிதனைவிடச் சிறந்த புத்தகம் எக்காலத்திலும் எழுதப்பட்டதில்லை” என்ற அவரது கனவுநாயகன் கார்க்கியின் சொல்லாடலை அடிக்கடி உச்சரித்துப் புளகாங்கிதம் அடைவதற்கும்கூட, மானுடத்தின் மீதான தீராக் காதலே காரணம். பொதுவெளியில் பெரும் அடையாளங்களாக உலவிவரும் பலருக்கும் இளவேனில் என்ற சிந்தனையாளர், ஒரு ரகசிய சினேகிதனாகவே இருந்துவந்திருக்கிறார். ஏனெனில், மானுடம் குறித்து அவரிடமிருந்து ஊற்றெடுத்துக்கொண்டே இருந்த தீராத பாடுபொருள் மீதான மோகமே காரணம்.
சிறுவனாக இருந்தபோதே கோவில்பட்டியிலிருந்து குடும்பத்தை விட்டுப் புறப்பட்டுவிட்ட தனக்கு, எழுதப்படிக்கத் தெரியாத, லாரி டிரைவராக இருந்த தீவிரமான தோழர் ஒருவருக்கு வாசித்துக் காட்டியதன் மூலமாகத்தான் மார்க்ஸும் கார்க்கியும் வசப்பட்டார்கள் என்று அடிக்கடி சொல்வார். கல்லூரியிலேயே காலடி எடுத்துவைக்காத அவர் எழுபதுகளில் கல்லூரிகளில் படித்த மாணவர்களின் விருப்பத்துக்குரிய எழுத்தாளராக இருந்தார்.
மண்ணோடும் மனிதர்களோடும் கட்டிப் புரண்டு தனது கலையை, எழுத்தை, உணர்வை, சன்னம் சன்னமாகச் செதுக்கியபடியே மேலெழுந்தவர் இளவேனில். அவருடனான உரையாடல் என்பது அவரது எழுத்தைப் போலவே, சிறுமைகளைப் புறங்கை வீச்சில் வீசி எறியும் வீரியம் கொண்டது. அவர் சிரிப்பிலும் பேச்சிலும் எப்போதுமே ஒரு எள்ளல் இழையோடுவதைப் பழகிய நண்பர்கள் அனைவரும் அறிவார்கள். பிறரது அறியாமை பற்றிய நகைப்பா, தன் அறிவின் மீதான செருக்கா எனப் பிரித்தறிய முடியாத இளம் புன்னகை அது. எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத விமர்சனங்களை நெருப்பெனச் சுடும் வார்த்தைகளால் கொட்டி, எதிரில் இருப்போர் மனதைப் புண்ணாக்கிவிடும் போதாமையும் அவரிடத்தில் உண்டுதான். அவரது இந்தக் குணத்தால் முறிந்த நட்புகளும், பிரிந்த உறவுகளும் ஏராளம். அதையும் தாண்டி அவரது அநாயாசமான மொழி மீதான காதலில் கட்டுண்டு கிடந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.
தீப்பந்த அணிவகுப்பு
சில நேரங்களில் நெருப்பெனச் சுட்டெரிக்கும்; சில நேரங்களில் அருவி நீரெனச் சுழித்தோடிக் குளிர்விக்கும்; சில நேரங்களில் சவுக்கெனச் சுழன்று சண்டமாருதமாய் பழமையின் மீது இடியென இறங்கும்; இப்படி வாடிவாசலில் இருந்து மூர்க்கத்துடன் வெளிவரும் காளையின் திசை தெரியாத பாய்ச்சலைக் கொண்டதுதான் இளவேனிலின் மொழி. மு.கருணாநிதியின் வார்த்தைகளில் சொல்வதானால், “ஒவ்வொரு சொல்லும் தனது கையில் தீப்பந்தம் ஏந்திக்கொண்டு வாக்கிய அணிவகுப்பு நடத்துகின்றன!” எனலாம்.
“வாளோடும் தேன் சிந்தும் மலரோடும் வந்திருக்கும் நான் ஓர் கோபாக்கினி, நானோர் இளவேனில்” என்ற பிரகடனத்தோடு 70-களில் இளவேனில் நடத்திய ‘கார்க்கி’ இதழைப் படித்து மார்க்ஸிய போதம் பெற்றதாக இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த மூத்த தோழர்கள் பலர் இப்போதும் சொல்வதைக் கேட்க முடிகிறது. அவர் நடத்திய கார்க்கி இதழ் 7,000 பிரதிகள் வரையில் விற்பனையானது. சிற்றிதழ் வரலாற்றில் அது ஒரு சாதனையாகவும் அமைந்தது. ‘பிரகடனம்’, நயன்தாரா’ போன்ற மேலும் பல சிவப்பிலக்கிய ஏடுகளையும் அவர் நடத்தியிருக்கிறார். ‘மக்கள் செய்தி’, ‘தாய்நாடு’, ‘தென்னகம்’, ‘நந்தன்’ ஆகிய இதழ்களில் பத்திரிகையாளராக அவர் பங்கெடுத்திருக்கிறார்.
அவரது ‘ஆத்மா என்றொரு தெருப்பாடகன்’ தமிழின் சிறந்த படைப்பிலக்கிய நவீன வடிவங்களுள் ஒன்று. தன் வாழ்க்கையில் நேரடியாகச் சந்தித்த பாத்திரங்களைச் சித்திரமாகத் தீட்டியிருப்பார். மாக்சிம் கார்க்கிதான் தோழர் இளவேனிலை அகமும் புறமுமாக ஆக்கிரமித்திருந்த ஆதர்ச ஆளுமை.
தியாகராய நகர் பேருந்து நிலையம் எதிரே உள்ள இந்தியன் காபி ஹவுஸில் அவர் நடத்தும் மாலை நேர அறிவுப் பகிர்தல், பலருக்கும் மறக்க முடியாத அனுபவம். அவரது காபிக் கோப்பைக்குள் கார்ல் மார்க்ஸிலிருந்து கா.அப்பாதுரையார் வரை வந்து மூழ்கிக் கரைந்து மணம்பரப்புவார்கள். பெரியாரைப் பல கோணங்களில் பகுப்பாய்ந்து அறிந்துணர்ந்து, பரவசத்துடன் கொண்டாடுபவர். பின்னாளில், மு.கருணாநிதியுடன் அவர் பூண்ட நட்பைப் பலரும் விமர்சிப்பதுண்டு. ஆர்.நல்லகண்ணு, தா.பாண்டியன், சி.மகேந்திரன் முதலான பொதுவுடைமை இயக்கத் தலைவர்களுடனும் அவருக்கு அதே நட்புறவு இருந்தது. சிவப்பையும் கறுப்பையும் இரட்டைக் குழல் துப்பாக்கிச் சிந்தனைகளாக மாற்ற நினைத்த அவரது பெருமுயற்சி விமர்சனங்களையும் சந்தித்தது.
மார்க்ஸியமாகட்டும், திராவிடச் சித்தாந்த மாகட்டும், தேசிய இனங்களுக்கான போராட்டமா கட்டும், எதிலுமே அதிகக் குழப்பமின்றி தெளிவான பார்வையைக் கொண்டிருந்தவர். தன்னைச் சந்திப்பவர்களிடமும் அது குறித்த தெளிவை உண்டாக்கும் ஆளுமை அவரிடம் இருந்தது. ஊடகங்களில் பணியாற்றும் 30 வயதுக்கும் கீழ்ப்பட்ட இன்றைய தலைமுறை இளைஞர்கள் பலரும் அவரது மறைவால் அதிர்ந்துபோனதையும், நேரில் வந்திருந்ததையும் பார்க்க முடிந்தது.
இதுதான் நேர்மையான சிந்தனையாளன் ஒரு சமூகத்தில் ஏற்படுத்தும் நியாயமான தாக்கமாக இருக்க முடியும். அதனைத் தன்னளவில், எந்த ஆர்ப்பாட்டமும் இன்றிக் கச்சிதமாக அவர் செய்துவந்திருப்பதை அறியவும் உணரவும் முடிகிறது.
‘எனது சாளரத்தின் வழியே’, ‘இளவேனில் கவிதைகள்’, ‘கவிதா’ (கவிதைகள் பற்றியது), ‘25 வெண்மணித் தெரு’, ‘ஒரு ரஷ்ய மூளை என்பதாலா?’, ‘ஆத்மா என்றொரு தெருப்பாடகன்’, ‘காருவகி’ (நாவல்), ‘புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்’ என இயன்றவரை எழுதிக்கொண்டுதான் இருந்தார். இறுதியாக, பாரதி பற்றிய நாவலை அவர் எழுதி முடிக்கக் காலம் அவரை அனுமதிக்கவில்லை. நிறைய எழுதினார். நிறைய எழுத ஆர்வமும் கொண்டிருந்தார். ஆனால், தமிழ் உலகம் அவருக்கு உரிய அங்கீகாரத்தையும், உவப்பான வாழ்வையும் தந்துவிடவில்லை என்பதுதான் இறுதியாக மிஞ்சும் எதார்த்தம்.
தனிப்பட்ட வாழ்க்கை பற்றி யாரிடமுமே அவர் முழுமையாக வெளிப்படுத்தியதில்லை. அவரது வலிகள் அவருடனேயே போய்விட்டன. முதுபெரும் பொதுவுடைமை ஆளுமை வி.பி.சிந்தனைத் தனது தந்தையைப் போல் நேசித்துவந்தார். வி.பி.சிந்தன் மறைவைப் பற்றிய கட்டுரையில் ‘என் பாதை இருண்டு திரண்டிருந்தது’ எனக் குறிப்பிட்டிருப்பார். அப்படித்தான் இருக்கிறது அவரை நேசித்த பலருக்கும் இப்போது. “சமூகக் கொடுமையும் இலக்கியமும் மோதும்போது இலக்கியத்தின் பக்கம் நிற்போம். இலக்கியமும் மனிதனும் மோதும்போது நாம் மனிதனின் பக்கம் நிற்போம்” என்ற அவரது முழக்கத்தைவிட நேர்மையான லட்சியம் வேறொன்று இருக்க முடியாது.
- மேனா உலகநாதன், பத்திரிகையாளர். தொடர்புக்கு: menaulaganathan@gmail.com