Last Updated : 03 Jan, 2021 03:21 AM

 

Published : 03 Jan 2021 03:21 AM
Last Updated : 03 Jan 2021 03:21 AM

பிரக்ஞையின் புதிய வெளிச்சங்கள்

இந்த பூமி என் வீடு. இந்த பூமியின் மேல் என்னுடன் வசிக்கும் மனிதர்கள், விலங்குகள், இதர உயிரினங்கள் எல்லோரும் என் குடும்பம். எல்லோரும் என் உறவினர்கள். நாம் எல்லோரும் சேர்ந்து இங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறோம். என் வீட்டை நான் எப்படி வைத்துக்கொண்டிருக்கிறேன்? என் குடும்பத்தாருடன் எவ்வாறு நான் வாழ்கிறேன்? அவர்களுடனான என் உறவு எந்த விதத்தில் உள்ளது?

இந்த பூமியில் எனக்கான இடம் எப்போதும் இருக்கிறது. எந்த ஒரு குறிப்பிட்ட கணத்திலும் நான் இருக்கும் இடம் எனக்கேயானது. அந்தக் கணத்தில் என்னைத் தவிர அந்த இடத்தில் யாரும் இருக்க முடியாது. எந்தக் குறிப்பிட்ட இடமும் என் இடம் இல்லை. அதனாலேயே எல்லா இடங்களும் என் இடம்தான். நான் ஒரு குறிப்பிட்ட கணத்தில் இந்த பூமியின் மேல் எங்கே வேண்டுமானாலும் இருக்க முடியும். எனக்கும் இந்த பூமிக்கும் இடையே பிரித்துவிட முடியாத உறவு இருக்கிறது. எனக்கு இந்த பூமி எவ்வளவு தேவையோ அந்த அளவுக்கு இந்த பூமிக்கும் நான் தேவை. இந்தக் கணம் என் இருப்பை இந்த பூமியின் இருப்பிலிருந்து பிரித்துவிட முடியாது.

பிரச்சினை எங்கே இருக்கிறது?

எங்கும் எப்போதும் போட்டியும் பொறாமையும் பூசலும் சண்டையும் வன்முறையும் இருந்துகொண்டே இருக்கிறது. ஏன் நாமெல்லோரும் ஒற்றுமையாக, அன்புடன், பிரியத்துடன் இருக்க முடிவதில்லை? இது மிகவும் பழைய கேள்வி. சமூகவியலாளர்கள், உளவியலாளர்கள், வரலாற்றாசிரியர்கள் என்று பலர் தத்தம் கோணங்களில் இதை அணுகியிருக்கிறார்கள். அவரவர்கள் பதில் அவரவர்களுக்குத் திருப்திகரமாக இருக்கிறது. ஆனால், பிரச்சினை அப்படியே இருக்கிறது. இதில் ஏதோ அடிப்படையான தவறு இருக்கிறது. அது என்ன?

ஏதோ தவறாகப் பார்க்கிறோம். அடிப்படையிலேயே தவறான பார்வை இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது. பார்ப்பதைப் பற்றிய தவறு மட்டுமில்லாமல், பார்ப்பவனைப் பற்றியே தவறான கருத்து இருக்கிறது. நாம் பார்க்கும் பிரபஞ்சம் தவறு. பார்க்கும் நாம், நம் மனம் பற்றிய பார்வை முழுவதும் தவறு. மனித அறிவின் அடிப்படையே தவறாக இருக்கிறது.

நம் மனத்தில் பிரபஞ்சம் குறித்து இப்போது நமக்கிருக்கும் ஊகங்கள் அனைத்தும் தவறான முடிவுகளின் அடிப்படையில் எழுந்துள்ளவை. உலகம் முழுவதிலும் மதம், சமயம் தொடர்பான மறை நூல்கள் சொல்பவற்றையெல்லாம் ‘கடவுள்’ என்ற பெயரில் நாம் உருவாக்கியிருக்கும் ஒரு பொய்க் கருத்துடன் இணைத்து வைத்திருக்கிறோம். மதங்களின் பெயரால் பிரிவினையை வளர்த்திருக்கிறோம். அனைத்துக்கும் ஆதாரமாக நிற்கும் அந்தப் பேருண்மையை, பிரபஞ்சப் பிரக்ஞையை, நம் தரத்துக்குக் கீழிறக்கி வைத்திருக்கிறோம். ‘கடவுள்’ என்பது தன் உண்மைப் பொருளிழந்த சொல்லாக ஆகிவிட்டிருக்கும் அவல நிலைதான் இன்று இங்கே நம் உலகில் இருக்கிறது. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் கடவுளின் பெயரால் கோடிக்கணக்கான மனிதர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

மேற்கத்திய மனம் தன் பகுத்தறிவின் வரையறைக்குட்பட்ட வெளிச்சத்தில் பிரபஞ்சம் பற்றி மிகவும் தவறான கருத்துகளை உருவாக்கி வைத்திருக்கிறது. மறுபக்கம், கீழைத் தேசங்களில் ஆன்றோர்கள் தமக்குள் ஆழ்ந்து, அகவெளியின் ஆழங்களில் உட்புகுந்து, தாம் கண்டுகொண்ட மேலான உண்மைகள் வேத நூல்களாகவும், உபநிடதங்களாகவும், பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, குர்ஆன், ஹதீஸ், ஜராதுஷ்டிரரின் ஜெண்ட் அவஸ்தா, புத்தரின் திரிபீடகங்கள், தம்மபதம், போன்ற மறை நூல்களாகவும் எழுதி வைத்துள்ளனர். அவற்றின் சாரம் சாதாரண மக்களுக்குப் போய்ச் சேரும் வண்ணம் புராணக் கதைகளாகச் சொல்லி வைக்கப்பட்டுள்ளன. இந்த நூல்களெல்லாம் ஆழ்தள உண்மைகளைப் பற்றிப் பேசுகின்றன. ஆனால், அந்த உன்னதமான உண்மைகளைத் தமக்குள் ஆழ்ந்து அறிந்துகொள்ள விழையாமல், அதற்கான பிரயத்தனத்தை மேற்கொள்ளாமல், அவற்றை வெறும் வழிபாட்டுக்கான சாதனங்களாக ஆக்கி வைத்திருக்கிறோம். இதன் காரணமாக, ஆழமான உண்மைகள் வெற்று நம்பிக்கைகளாக ஆகிவிட்டிருக்கின்றன.

மறை நூல்கள் ஆழ்தள உளவியல் உண்மைகளைப் பற்றிப் பேசுகின்றன என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், அவற்றின் முக்கியத்துவம் புரியத் தொடங்கும். தெய்வ வழிபாடு என்ற பெயரில் இன்று நடக்கும் கேலிக்கூத்துகளும், ஆன்மிகம் என்று சொல்லிக்கொண்டு நடக்கும் கேளிக்கைகளும் முடிந்துபோகும். நாம் காணும் பிரபஞ்சம் நமக்குச் சிறிதும் புரியவில்லை என்று புரியும்போது, அதைப் பார்க்கும் என்னையும் எனக்குச் சிறிதும் புரியவில்லை என்பதும் புரியும். பிரபஞ்சத்தை ஆராயப் புகுவதற்கு முன்னால், அதை ஆராயப் புகும் மனித மனத்தை ஆராய்ந்தாக வேண்டும் என்னும் உண்மை வெளிச்சத்துக்கு வரும். தன்னையும் தன் மனத்தின் இயக்கங்களையும் தீர விசாரித்து அறிந்துகொள்ளாமல் பிரபஞ்சத்தை அறிய நாம் எடுக்கும் முயற்சிகளெல்லாம் வியர்த்தம் என்பது தெளிவாகத் தெரியவரும். இல்லையெனில், தன்னில் தான் பெரும் வரையறைகளுக்கு உட்பட்ட மனித மனம் படைக்கும் கருத்துகளே பிரபஞ்சம் என்று ஆகிவிடும் ஆபத்து நேரும். இதை ஆராய்வது அவசியம்... அவசரமும்கூட.

பிரக்ஞை என்பது?

பிரபஞ்சம் என்ன என்று ஆராய்வது அறிவியல். மனம் என்ன என்று அறிவது உளவியல். தான் என்ன என்று தெரிந்துகொள்ள விழைவது ஆன்மிகம். இந்த மூன்றும் தனித்தனியான துறைகளாகவே இதுவரை இருந்துவந்திருக்கின்றன. ஒன்றையொன்று எதிர்த்து, விலக்கி, ஒதுக்கி, ஏறக்குறைய நிராகரித்து வந்திருக்கின்றன. ஆனால், இப்போது இந்த மூன்று துறைகளும் சந்தித்துக் கைகுலுக்கத் தொடங்கிவிட்டன. பிரக்ஞை (Consciousness) என்பது சென்ற நூற்றாண்டின் தொடக்கம் வரை ஆன்மிகம் மட்டுமே பேசிவந்த விஷயமாக இருந்தது. ஆனால், இப்போது இந்த மூன்று துறைகளும் பிரக்ஞை பற்றி ஆராயத் தொடங்கிவிட்டன. இந்த மூன்று துறைகளிலும் ஏற்பட்டுவரும் புதிய வெளிச்சங்கள் ஒரு புதிய ஒருங்கிணைப்பை நோக்கிச் செல்லத் தொடங்கியிருக்கின்றன. இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று மிகவும் நெருங்கிய தொடர்புடையவை என்பது மெல்லப் புரியத் தொடங்கியிருக்கிறது. ஒரே விஷயத்தைத்தான் இவை மூன்றுமே ஆராய்கின்றன என்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

‘பார்வையாளன்’ என்பது மனிதன். அதாவது பிரக்ஞை. அறிவியலும் ஆன்மிகமும் இப்படித்தான் சந்தித்தன. மனித மனத்தின் இயக்கத்தின் பின்னால் அதன் விசையாக இருந்து இயங்குவது பிரக்ஞைதான் என்பது நிறுவப்பட்ட பின்னர், உளவியலும் இதில் இணைந்துகொண்டது. அறிவியல் மட்டுமில்லாமல் உயிரியலின் புதிய கிளையான துணைமரபியல் (Epigenetics) மனத்தின் நம்பிக்கைகள் உடலின் இயக்கத்தைப் பாதிக்கும் என்பதை விளக்கிக் காட்டியது. ஆக, மனித அறிவுத் தளத்தின் பல்வேறு துறைகள் ஒன்றிணையும் இயக்கம் தொடங்கிவிட்டது.

அணுவியலின் பிதாமகர்கள் என்று சொல்லக் கூடிய நீல்ஸ் போஃர், வெர்னெர் ஹீஸன்பர்க், எர்வின் ஷ்ரோடிங்கர் போன்றோர் இந்திய ஆன்மிக மரபிலக்கியங்களில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தனர். வேதங்கள், உபநிடதங்கள், பகவத் கீதை போன்ற மறை நூல்களின் பார்வையில் பிரபஞ்சம் குறித்த ஆழமான கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர்கள். பிரபஞ்சம் காலம்-இடம் என்னும் பரிமாணங்களினுள் அடங்கிவிடாதது, அவற்றைக் கடந்து நிற்பது என்னும் கருத்து அவர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது. ‘நாம் காணும் பிரபஞ்சம் ஒரு மாயத் தோற்றம் மட்டுமே; அது அடிப்படையிலேயே உண்மையானதில்லை. அதன் உண்மை இன்னும் நாம் அறியாத வேறொரு பரிமாணத்தில் நிலைகொண்டிருக்கிறது’ என்னும் இந்திய மறை நூல்களின் கோட்பாடு அவர்களின் அறிவைத் தூண்டியது. இதன் அடிப்படையில் அவர்கள் மேற்கொண்ட பல்வேறு பரிசோதனைகள் ஆச்சரியகரமான விளைவுகளைக் காட்டின. இதுவரையில் பிரபஞ்சம் பற்றி மனிதர்கள் கொண்டிருந்த கருத்துகளெல்லாம் ஆட்டம் கண்டன. நாம் காணும் இந்தப் பிரபஞ்சம் ஒரு முப்பரிமாணப் படிவம் (Hologram) என்பது கண்டறியப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்புகளின் காரணமாக இந்திய ஆன்மிகம் வெறும் வெற்று வேதாந்தம் இல்லை என்பதை இருபதாம் நூற்றாண்டு அறிவியல் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்தது.

உளவியலிலும் பல பெரும் உளவியலாளர்கள் இந்தியா, சீனா, பல கீழைத் தேசங்களின் ஆன்மிக நூல்களை வாசித்து, அவை ஆழ்தள உளவியல் கருத்துகளைத் தம்முள்ளே பொதித்து வைத்திருக்கின்றன என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தார்கள். கீழைத் தேசங்களின் ஆன்மிகப் பார்வை உலகளாவிய அளவில் உளவியல் துறையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறது.

மறை நூல்களும் புராணங்களும்

மனித வாழ்க்கை இப்போது புதிய தடங்களில், புதியதொரு திசையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. மனித மனத்தில் புதிய வாசல்கள் திறந்திருக்கின்றன. அதனால், நமக்கு ஏற்கெனவே தெரிந்த அனைத்தையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம். மறை நூல்களும் புராணங்களும் வெறும் வழிபாட்டுக்கானவை இல்லை என்னும் உண்மையை உணர்தல் அவசியம். கடவுளர்கள் என்று நாம் எண்ணியிருக்கும் கருத்துருவங்கள் ஆழ்தளப் பிரக்ஞையின் சக்திவாய்ந்த பிம்பங்கள் என்பதை அறிதல் வேண்டும். புராணங்கள் வெறும் கதையுமல்ல. கும்பிட வேண்டிய விஷயமும் அல்ல. அவை அகவெளி ஆழத்தின் உண்மைகள் பொதிந்த புதையல்கள்.

இந்தக் கண்ணோட்டத்தில் நம் புராணக் கதைகளையும் மறை நூல்களையும் புதிதாக அணுக வேண்டும். மனித வரலாற்றின் ஓட்டத்தில் உருக்கொண்டுள்ள மற்ற கலாச்சார அமைப்புகளில் உருவான நம்பிக்கைகளின் வெளிப்பாடான கதைகளையும் அவற்றின் புராணங்களையும்கூட இப்போது வெளிப்படத் தொடங்கியிருக்கும் புதிய வெளிச்சத்தின் பார்வையில் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவற்றின் உள்ளே பொதிந்திருக்கும் உட்பொருள் என்ன என்பதையும் நாம் அவதானிக்க வேண்டும். புதிய பிரக்ஞையின் வெளிச்சம் நமக்குத் திறந்துவிட்டிருக்கும் வாசல் வழியாக உள்ளே நுழைந்து, புதியதொரு உலகத்தை நிறுவ வேண்டிய கட்டத்தில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம்.

நான் – பிரபஞ்சம் – தெய்வம்

‘நான்’ இருக்கிறேன். நான் காணும் இந்தப் பிரபஞ்சம் இருக்கிறது. இது எவ்வாறு தோன்றியது? என்னையும் இந்தப் பிரபஞ்சத்தையும் படைத்தது யார்? அல்லது எது? இது இரண்டையும் கடந்த சக்தி ஏதேனும் உள்ளதா? இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொன்றும் உருவாகி, இருந்து, பின் மறையும் தன்மை கொண்டதாக இருக்கிறது. நானும் பிறப்பு, இருப்பு, இறப்பு என்னும் இலக்கணத்துக்கு உட்பட்ட ஓர் உயிராக இருக்கிறேன். அனைத்தையும் உருவாக்கி, இயக்கிக்கொண்டு, தான் அழியாமல், தொடக்கமும் முடிவும் இல்லாத தன்மையுடன் இருக்கும் ஏதாவது வஸ்து இருக்கிறதா? அதுதான் தெய்வமா? நான்-பிரபஞ்சம்-தெய்வம் இந்த மூன்றிற்கும் உள்ள தொடர்பு என்ன?

முதலில் ‘நான்’ என்பதன் தன்மை என்ன என்று பார்ப்போம். உடலுணர்வில் கவனத்தைப் பதித்து, தொடர்ந்து உள்ளே ஓடிக்கொண்டேயிருக்கும் நினைவு வரிசையைச் சில கணங்கள் விடுத்து, சுவாசத்தில் கவனத்தை மையப்படுத்தினால் உள்ளே ஆழமான அமைதி நிறையும். அந்த அமைதியை உணர்வது யார்? உள்ளே இருந்து வரும் பதில்: ‘நான்’. யார் இந்த நான்? நினைவுப் பதிவுகளை விடுத்தால் தான் என்று தன்னை உணரும் ‘ஆள்’ இல்லாமல் போய்விடுகிறான். அந்த ஆளாக இருக்கும் நான் என் சரித்திரம்; வெறும் நினைவு வரிசை. எண்ணங்களுடன் அந்த ஆள் அடங்கிவிடுகிறான். அப்படியானால் ஆழமான அமைதியை உணர்வது யார்? அந்த ‘நான்’ எது? அது ‘நான்’ என்னும் உணர்வு. அதில் நான் ஒரு ஆள் என்னும் தன்மை கிடையாது. அந்த நான் உடலையோ மனத்தையோ சார்ந்திராதது. சொல்லப்போனால், உடலும் மனமும் அதைச் சார்ந்திருந்து இயங்குகின்றன. அந்த ‘நான்’ உயிரின் தன்னுணர்வு. அது பிரபஞ்சப் பேருயிரின் தன்மை வாய்ந்தது.

இதைத்தான் ‘கடவுள் மனிதனைத் தன் சாயலில் படைத்தார்’ என்கிறது விவிலியத்தின் பழைய ஏற்பாடு. பழைய ஏற்பாட்டில் இன்னொரு இடத்தில் மோசேயிடம் கடவுள், ‘நான்தான் அந்த நான்’ என்கிறார். இந்த உண்மையை ‘நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்,’ என்கிறது புதிய ஏற்பாடு. இந்து மதத்தின் நான்கு மகா வாக்கியங்கள் என்று சொல்லப்படும் அடிப்படைத் தத்துவங்கள் இதுபற்றி என்ன சொல்கின்றன? ‘அஹம் பிரம்மா அஸ்மி’ - பிரம்மம் ‘நான்’-ஆக இருக்கிறது. பிரக்ஞானம் பிரம்மா - பிரக்ஞை - அறிவுணர்வு - பிரம்மமாக இருக்கிறது. அஹம் ஆத்ம பிரம்மா - பிரம்மமே என் ஆத்மாவாக (‘நான்’ உணர்வாக) இருக்கிறது.

இதிலிருந்து என்ன தெரிகிறது? ‘நான்’ என்பதும் ‘தெய்வம்’ என்பதும் ஒன்றே என்றுதான். தெய்வம்தான் ‘நான்’ உணர்வாக என்னுள் பரிமளிக்கிறது. பிரபஞ்சம்? தெய்வம்தான் பிரபஞ்சமாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார்கள். இந்தப் பிரபஞ்சமும் அதில் உள்ள உயிர்களும் பிரம்மமே என்கிறது அத்வைத வேதாந்தம். ஆக, நான் - பிரபஞ்சம் - தெய்வம் மூன்றுமே ஒன்றுதான் என்றாகிறது. இஸ்லாமிய மதம் இதுகுறித்து என்ன சொல்கிறது? ‘நப்ஃஸ் - ரூஹ்’ என்ற இரண்டு சொற்களுமே ‘நான்’ என்பதைத்தான் குறிக்கின்றன. ‘ரூஹ்’ என்பது புனிதமான ஆத்மா (Spirit) என்ற பொருளில் கொள்ளப்படுகிறது. ‘நப்ஃஸ்’ என்பது ஆசாபாசங்கள் கலந்துவிட்ட மனிதனின் சுயத்தைக் குறிக்கிறது. அடிப்படையில் இரண்டுமே ஒன்றுதான் என்கிறது இஸ்லாம். ‘நப்ஃஸ்’ தூய்மையடையும்போது ‘ரூஹ்’-ஆக ஆகிறது என்பதே இதன் பொருள்.

ஆக, எல்லா மதங்களுமே எந்தவித வேறுபாடுமின்றி ஒரே உண்மையைத்தான் குறிக்கின்றன. ஆனால், ஏன் நாம் எப்போதும் சண்டையும் சச்சரவுமாகவே இருக்கிறோம்? ஏன் இவ்வளவு வெறுப்புணர்வு? காழ்ப்புணர்ச்சி? விரோத பாவம்? குரோதம்? வன்முறை? வேறென்ன, அறியாமைதான் ஒரே காரணம். உண்மையின் மீது அக்கறை கொண்டால் பிரிவுகள் அற்றுப் போகும். சத்தியமே முக்கியம் என்று கருதினால் விரோதம் ஒழியும்!

- ஆனந்த், ‘சுற்றுவழிப் பாதை’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: anandh51ad@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x