

குடந்தை ப.சுந்தரேசனார், விபுலாநந்தர்
(ஆவணப் படங்கள்)
வயல்வெளித் திரைக்களம் வெளியீடு
மொத்த விலை: ரூ.400
தொடர்புக்கு: 94420 29053
பனியோடும் பாவை, பள்ளியெழுச்சியென தமிழிசையோடும் புலர்கிறது மார்கழி. தனக்கு முந்தைய சங்க இலக்கியங்களுக்கும் பின்தொடர்ந்துவந்த சிற்றிலக்கியங்களுக்கும் அவையனைத்திலும் பயின்றுநிற்கும் பண்களுக்கும் மையமாக நிற்கிறது சிலப்பதிகாரம். ஆனால், மாலை நேர இசை மேடைகளில் ஆய்ச்சியர் குரவையின் ‘வடவரையை மத்தாக்கிய’ மாயம் மட்டுமே அதுவும் எப்போதாவதுதான் பாடப்படுகிறது. தமிழிசை அறிஞர்கள் அனைவருக்கும் சிலம்பே அரிச்சுவடி. எனினும், இசைவாணர்கள் சிலம்பு பாடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை.
‘கரும்பு’ (1973) திரைப்படத்துக்காக சலீல் சௌத்ரி இசையமைப்பில் பி.சுசீலாவும் கே.ஜே.யேசுதாஸும் தனித்தனியாகப் பாடிய கானல்வரியின் ‘திங்கள் மாலை வெண்குடையா’னை ரசித்துப் பழகிய செவிகளுக்கு மற்றுமொரு நல்வாய்ப்பு. அதே பாடலை, பழந்தமிழ்ப் பண்களின் அடிப்படையில் கேட்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது குடந்தை ப.சுந்தரேசனாரைப் (1914-1981) பற்றிய மு.இளங்கோவனின் ஆவணப்படம். சோழநாட்டில் கிளைபிரிந்தோடும் காவிரியின் வெவ்வேறு கரைகளிலிருந்து படமாக்கப்பட்ட காட்சிகளின் பின்னணியில் சுந்தரேசனார் குரலில் ‘நடந்தாய் வாழி காவேரி’ பாடலைக் கேட்பது மனநெகிழ்வான அனுபவமாக இருக்கிறது. மேலும், மங்கல வாழ்த்துக்கு நடனமும் ‘கன்று குணிலாக் கனியுகுத்த மாயவன்’ என்ற ஆய்ச்சியர் குரவை வரிகளுக்கான காட்சி விளக்கமும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன.
தமிழிசை குறித்துப் பேசும்போது சிலப்பதிகாரத்தை எப்படித் தவிர்க்க முடியாதோ, அதுபோல சிலப்பதிகாரத்தைப் பேசும்போது பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனாரையும் தவிர்க்க முடியாது. தமிழிசை ஆராய்ச்சியைத் தன் வாழ்நாள் பணியாக ஏற்றுக்கொண்டவர் சுந்தரேசனார். கண்டறிந்த முடிவுகளைத் தமிழகம் முழுவதும் அலைந்து திரிந்து தமிழ்ச் சமூகத்திடம் ஒப்படைக்கத் துடித்தவர். அதன் காரணமாக, தான் எழுதிய இசை நூல்களை இலவசமாகவும் விநியோகித்தவர். நிரந்தரப் பணிவாய்ப்புகள் இல்லாத நிலையில், சில நல்ல உள்ளங்களின் உதவியால் அவரின் நோக்கங்கள் ஒருவாறு நிறைவேறின என்றாலும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அதன் பயன்கள் இன்னும் முழுமையாகச் சென்றுசேரவில்லை.
சிலம்பு மட்டுமின்றி ஆற்றுப்படைகள், தேவாரம், ஆழ்வார் அருளிச் செயல்களிலும் இடம்பெற்றிருக்கும் தமிழ்ப் பண்களின் விவரங்களைத் திரட்டியளித்தவர் சுந்தரேசனார். திருமுருகு, பெரும்பாண் வரிகளையும் அவரது குரலில் இந்த ஆவணப்படம் பதிவுசெய்திருக்கிறது. திருவாசகத்தைப் பாடியபடி இடையிடையே அவர் நடத்தும் இசைவகுப்பு ஒன்றும் இந்தப் படத்தின் வாயிலாக கேட்கக் கிடைக்கிறது. திருவாசகத்தை மோகனத்தில் மட்டுமே பாட வேண்டும் என்பது அவரின் முடிவு. சுந்தரேசனாருடன் நெருங்கிப் பழகியவர்களின் நினைவலைகளோடு ஔவை து.நடராசன், சிலம்பொலி மு.செல்லப்பன், செந்தலை கவுதமன் முதலான தமிழறிஞர்களின் கருத்துகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
தமிழிசை ஆராய்ச்சியில் சுந்தரேசனார்க்கு முன்னோடியாக இருந்தவர் ஈழத்தைச் சேர்ந்த விபுலாநந்த அடிகள் (1892-1947). அவர் குறித்தும் ஆவணப்படம் ஒன்றை இயக்கியிருக்கிறார் மு.இளங்கோவன். விபுலாநந்தரின் ‘யாழ் நூல்’ சிலம்பின் அரங்கேற்றக் காதையின் 25 அடிகளை அடிப்படையாகக் கொண்டு விரிவுபெற்றது. கரந்தை உமாமகேசுவரனாரின் வேண்டுகோளை ஏற்று எழுதப்பட்ட யாழ் நூலை அரங்கேற்றியபோது அதன் சிறப்பை விவரித்துப் பேசியவர்களில் ப.சுந்தரேசனாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ் நூல் எழுதப்பட்ட கரந்தை தமிழ்ச் சங்கம், கோனூர் சிதம்பரனாரின் புதுக்கோட்டை ராமநிலையம், ரொஸல்லா வளமனை ஆகியவற்றையும் காட்சிகளாகப் பதிவுசெய்துள்ளது இந்தப் படம்.
காரைத் தீவில் பிறந்த விபுலாநந்தர், பொறியியல் பயின்று கல்லூரி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கியவர். துறவேற்று, ராமகிருஷ்ண மிஷனின் கீழ் சமயப் பணியாற்றியவாறே இலங்கையில் 27 கல்வி நிறுவனங்களைத் தொடங்கியவர். அவரைப் பற்றிய வாழ்க்கைச் சித்திரமாக இருந்தாலும், இந்தப் படத்தின் பிற்பகுதி யாழ் நூலைப் பற்றியே பெரிதும் பேசுகிறது. விபுலாநந்தரின் இசைப் பாடல்களில் ஒன்றான ‘வெள்ளைநிற மல்லிகையோ’ நடனத்துடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கருத்துரையாளர்களில் ஒருவரான பெ.சு.மணி தனது குருநாதர் பாரதியைக் கொண்டாடிய முதல் திறனாய்வாளர் என்று அவரை நினைவுகூர்கிறார்.
சுந்தரேசனார், விபுலாநந்தர் குறித்த இரண்டு ஆவணப்படங்களுக்கும் சில பொதுத்தன்மைகள் உண்டு. ஆவணப் பட நாயகரை வில்லியனூர் கி.முனுசாமி சுடுமண் சிற்பமாக வடித்தெடுக்கும் காட்சியிலிருந்தே இரண்டு படங்களும் தொடங்குகின்றன. சில பாடல்கள் காட்சி விளக்கம் அளிப்பதோடு நடனமாகவும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. படத்தின் இறுதியில் சுந்தரேசனார்க்கு பெருஞ்சித்திரனாரும் விபுலாநந்தருக்கு பாரதிதாசனும் எழுதிய இரங்கற்பாக்களை கா.ராஜமாணிக்கம் ஓங்கிய குரலில் பாடி முடிக்கிறார். இசைப் பேரறிஞர்கள் இருவரையும் குறித்த இந்த ஆவணப்படங்கள் இசையில் ஆர்வம்கொண்டோருக்கு நல்லதொரு அறிமுகம். ஆய்வாளர்களுக்கும் சிறந்த வழிகாட்டி. சித்திரை முழு நிலவில் கண்ணகியை வழிபட்டு நிற்கும் தமிழ்ச் சமூகம், வருங்காலத்திலாவது மார்கழி விழாக்களில் சிலம்பையும் தவறாது இசைக்கட்டும்.
- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in