Last Updated : 29 Oct, 2015 08:33 AM

 

Published : 29 Oct 2015 08:33 AM
Last Updated : 29 Oct 2015 08:33 AM

தலைமை மாற வேண்டிய தருணம்

சில மாதங்களுக்கு முன்பு வங்கதேசம் அணியிடம் ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா தோற்றபோது மகேந்திர சிங் தோனி தன் இயல்புக்கு மாறாக எதிர்வினை ஆற்றினார். “அணிக்கு நல்லது என்றால் நான் கேப்டன் பதவியிலிருந்து விலகி, சாதாரண ஆட்டக்காரராக ஆடத் தயார்” என்றார். முன்னாள் ஆட்டக்காரர்கள் பலர் இதை ஏற்கவில்லை. அணித் தலைவர் என்னும் முறையில் தோனியின் சாதனைகளை அவர்கள் நினைவு கூர்ந்தார்.

இந்தச் சாதனைகளுக்கு ‘மதிப்பு' அளிக்க வேண்டும் என்று சவுரவ் கங்கூலியும் சுனில் கவாஸ்கரும் சொன்னார்கள். ஆனால், இருவரின் பார்வையிலும் நுட்பமான வேறுபாடு இருந்தது. கேப்டனாக இருப்பதா வேண்டாமா என்பதை தோனியே முடிவெடுக்க வேண்டும் என்றார் கவாஸ்கர். கேப்டன் விஷயம் தனிநபரின் முடிவாக இருக்க முடியாது என்றார் கங்கூலி.

‘தொலைநோக்குப் பார்வை'யுடன் முடிவுசெய்யப்பட வேண்டும் என்றும் கங்கூலி கூறினார்.

மதிப்பளிப்பது என்றால் என்ன?

தத்துவார்த்தமாகவும் அன்றாட வாழ்விலும் மதிப்பு அல்லது மரியாதை என்பதற்குப் பலவிதமான பொருள்கள் உள்ளன. “உங்கள் எதிரணியை, உங்கள் அணித் தலைவரை, உங்கள் அணியை, நடுவர்களின் பங்கை, விளையாட்டை, அதன் மரபார்ந்த விழுமியங்களை மதியுங்கள்” என்று கிரிக்கெட்டின் ஆதாரமான உணர்வு அறிவுறுத்துகிறது. இதுவே கிரிக்கெட் விதிகளின் முகவுரையாகவும் உள்ளது. இத்தகைய தார்மிக உணர்வு இன்று கிரிக்கெட் களத்தில் வெளிப்படுகிறதா என்பது வேறு விஷயம்.

தோனியைப் பொறுத்தவரை ஆடுகளத்துக்கு வெளியே அவர் சில சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார். ஆனால், ஆடுகளத்துக்குள் கிரிக்கெட் உணர்வு கோரும் மரியாதையைப் பொறுத்தவரை சரியாகவே நடந்துகொள்கிறார்.

தத்துவத்தைப் போலவே கிரிக்கெட்டிலும் மரியாதை என்பது நபருக்கு நபர் வேறுபடுகிறது. ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் மகத்தான ஒரு கிரிக்கெட் வீரரை மதிப்பது என்பது அவர் எப்போது தலைமைப் பதவியைத் துறக்க அல்லது ஆட்டத்திலிருந்து ஓய்வுபெற வேண்டும் என்பதை அவரே தீர்மானித்துக்கொள்ள அனுமதிப்பதல்ல. ஒருவர் எவ்வளவுதான் மகத்தான ஆட்டக்காரராக இருந்தாலும் அவர் வெளியேறுவதற்கான நேரம் வந்துவிட்டது என நிர்வாகம் கருதினால் தேர்வாளர்களோ நிர்வாக அமைப்பைச் சேர்ந்தவர்களோ அவரிடம் அதைச் சொல்லத் தயங்குவதே இல்லை.

திரை விழும் நேரம்

புத்திசாலித்தனமான கேப்டன்கள் நாடகத்தின் திரை விழும் நேரம் குறித்த அறிகுறிகளைச் சரியாகப் புரிந்துகொள்கிறார்கள். கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும்வரை அவர்கள் காத்திருப்பதில்லை. கிரேக் சாப்பலும் சுனில் கவாஸ்கரும் கம்பீரமாக வெளியேறினார்கள். அண்மையில் ஜேக் காலிஸ், தன் முடிவைத் தானே தீர்மானித்துக்கொண்டார். டர்பன் கிங்ஸ்மீட் ஆடுகளத்தில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்து கிரிக்கெட் அரங்கிடம் பிரியாவிடை பெற்றுக்கொண்டார்.

வங்கதேசம் தொடரின் தோல்வியை அடுத்து, அவசரப்பட்டு எதிர்வினை ஆற்றக் கூடாது என்று கங்கூலியும் கவாஸ்கரும் சொன்னது சரிதான். தொலைநோக்கில் திட்டமிட வேண்டும் என்று கங்கூலி சொன்னது மிகவும் சரியானது. ஆனால், தோனியின் மீதான மரியாதையின் அடிப்படையில் கேப்டன் பதவி குறித்த முடிவை அவரிடமே விட்டுவிட வேண்டும் என்று கவாஸ்கர் கூறியது சரியல்ல.

தோனி தத்துவ நோக்கு கொண்டவர். கேப்டன் பதவியில் அவர் நீடிக்கத்தான் வேண்டுமா என்னும் கேள்வி மேலும் பலமாகவும் பகிரங்கமாகவும் விவாதிக்கப்படும்போது அவர் விடைபெற்றுக்கொண்டுவிடுவார். புத்துணர்வும், ஆவேசமான அணுகுமுறையும் சுயமான சிந்தனைகளும் கொண்ட விராட் கோலிக்கான நேரம் வந்துவிட்டதாகவே தோன்றுகிறது. தோனி தானாகவே கேப்டன் பதவியைத் துறப்பது சிறந்த முடிவாக இருக்கும். அப்படி அவர் செய்யாவிட்டால் அவரை மாற்றுவதற்குத் தேர்வாளர்கள் தயங்கக் கூடாது.

இப்போது ஏன் மாற்ற வேண்டும்?

என்னுடைய இந்தக் கருத்து எந்த அளவுக்குச் சரி என்பதை அறிய விரும்பி, தோனியைத் தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கக் கூடாது என்பதற்கான வலுவான காரணங்களை அடுக்கி, லண்டனில் இருக்கும் என் நண்பருக்கு அனுப்பினேன். ஏற்கெனவே தாமதமாகிவிட்டது, இனியும் தாமதிக்காமல் உடனடியாக மாற்ற வேண்டும் என்று அவர் பதில் அனுப்பினார். அவர் சொல்லும் காரணங்கள்:

ஒருநாள் அணியை உருவாக்குவது என்பது நான்காண்டு காலச் சுழற்சியில் நடக்க வேண்டியது. உலகக் கோப்பைக்கு ஓராண்டு முன்பே அணி நிலைபெற்ற அணியாக இருக்க வேண்டும். உலகக் கோப்பை முடிந்த முதல் 18 மாதங்களில் பல்வேறு பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். கடந்த ஆறு மாதங்களில் இந்தியா எதுவுமே செய்யவில்லை. ஆட்டக்காரரின் சராசரியை விடவும் ஸ்ட்ரைக் ரேட், பவுண்டரிகளை அடிக்கும் திறன் ஆகியவை முக்கியம். மட்டை வரிசை ஒற்றைப்படைத்தன்மை கொண்டதாக இருக்கக் கூடாது. ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், ரஹானே, கோலி ஆகியோர் மட்டை வரிசைக்கு வகைமை சேர்க்கிறார்கள். கடந்த காலத்தில் சச்சின், சேவாக், கோலி, தோனி, யுவராஜ் ஆகியோரைக் கொண்ட மட்டை வரிசை வகைமையும் நெகிழ்வுத்தன்மையும் கொண்டிருந்தது. இதை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று நண்பர் கருதுகிறார்.

என்னுடைய கருத்துகள் இவைதான்: ரோஹித்தும் தவானும் தொடக்க நிலையில் ஓரளவு நன்றாகவே ஆடிவருகிறார்கள். ரோஹித்திடம் சில குறைகள் இருந்தாலும் அவரால் ஒண்டி ஆளாகப் போட்டியை வெல்ல முடியும். கோலி மூன்றாம் ஆட்டக்காரராகவும் ரஹானே 4-ம் இடத்திலும் களம் இறங்க வேண்டும். முதல் விக்கெட் விரைவில் விழுந்தால் ரஹானே போன்ற ஒருவரை 3-ம் இடத்தில் இறக்கலாம்.

இன்றைய அணியில் சேவாக், யுவராஜ் போன்று பந்தை வலுவாக அடிக்கக்கூடியவர்கள் இல்லை. வலுவாக அடிப்பதில் தோனியின் திறன் குறைந்துவிட்டது. கண்-கை ஒருங்கிணைப்பையே நம்பி ஆடுபவர்களுக்கு அந்தத் திறன் குறைந்தால் அதை ஈடுகட்டக்கூடிய தொழில்நுட்பம் இருப்பதில்லை. காந்த், சேவாக் போன்றோர் இதற்கு உதாரணம். தோனியையும் இந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

தோனி 2019 உலகக் கோப்பையில் ஆடுவதற்கான சாத்தியம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனவே, அவர் விலகி நிற்க வேண்டும் என்று கருதுகிறேன். அவரது இழப்பு பெரிய வெற்றிடம்தான் என்றாலும், அடுத்த உலகக் கோப்பையை மனதில் கொண்டு இதைச் செய்துதான் ஆக வேண்டும். தோனி நன்றாகத்தான் ஆடிவருகிறார். ஒருநாள் போட்டியில் 235 இன்னிங்ஸ்களில் அவரது சராசரி 52.41%. ஸ்ட்ரைக் ரேட் 80.09%. 157 இன்னிங்ஸ்கள் ஆடியுள்ள கோலியின் சராசரி 50.92, ஸ்ட்ரைக் ரேட் 80.31. 2015-ல் தோனியின் சராசரியும் ஸ்ட்ரைக் ரேட்டும் (47.15 - 86.58) கோலியைக் காட்டிலும் (38.50 - 80.31) அதிகம். ரோஹித் ஷர்மாவைக் காட்டிலும் (53.26 - 95.80) குறைவு. ஆனால், அவரது இப்போதைய ஃபார்மைப் பெரிதாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. தொலைநோக்கில் சிந்திக்க வேண்டும்.

தோனியின் இடத்தை யாரால் நிரப்ப முடியும்? ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதுதான் தோனியின் முக்கியமான பங்களிப்பு. மட்டை வீச்சில் பிரகாசிக்காத நல்ல விக்கெட் கீப்பர்கள் ஒருநாள் போட்டிக்கு ஏற்றவர்கள் அல்ல. ரோபின் உத்தப்பா நல்ல தேர்வாக இருக்கும். அவர் வலுவாக அடிக்கக்கூடியவர். கீப்பிங்கும் செய்வார்.

ஆக, 4,5,6-ம் இடங்களில் மனீஷ் பாண்டே, ரஹானே, அம்பட்டி ராயுடு, உத்தப்பா, சுரேஷ் ரெய்னா ஆகியோரைப் பரிசோதித்துப் பார்க்கலாம். புதியவர்களில் குர்கீரத் சிங்கையும் சேர்த்துக்கொள்ளலாம். கோலி 3-ம் நிலையில் ஆட, அவருக்குப் பிறகு வருபவர்கள் வலுவாக அடித்து ஆடி ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

உலகக் கோப்பையின் முக்கியத்துவம்

உலகக் கோப்பைப் போட்டியை மனதில் கொண்டு அணியை உருவாக்க வேண்டும் என்று என் நண்பர் சொன்னது முக்கியமானது. கடந்த 40 ஆண்டுகளில் உலகக் கோப்பைப் போட்டிகள் பெருமளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளன. கிரிக்கெட் ஆடும் நாடுகள் அனைத்தும் உலகக் கோப்பைப் போட்டியில் ஆட விரும்புகின்றன.

கிரிக்கெட்டின் மகுடமாக டெஸ்ட் கிரிக்கெட் இருக்கலாம். ஆனால், கிரிக்கெட்டுக்கு வருவாய் ஈட்டித் தருவது ஒருநாள் போட்டிகள்தான். டெஸ்ட் கிரிக்கெட் ஆடப்படும் விதத்தை ஒருநாள் போட்டிகள் சாதகமான முறையில் கணிசமாகப் பாதித்துள்ளன என்றே பெரும்பாலான கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் கருதுகிறார்கள். ஏபி டிவிலியர்ஸ் இதற்குச் சிறந்த உதாரணம்.

தோனி யுகம் முடியும் தறுவாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கேப்டன் என்ற முறையிலும் ஆட்டக்காரர் என்ற முறையிலும் அவரது பங்களிப்பு மகத்தானது. அவருடைய சமூகப் பின்னணி, அவர் உச்சத்தை அடைந்த விதம், உடல் வலிமை, துணிச்சல், புதுமையான உத்திகள், நெருக்கடியிலிருந்து மீண்டுவரும் திறமை, நெருக்கடியில் நிலைதடுமாறாத மனம் ஆகியவை இளைஞர்களுக்கு உத்வேகமூட்டும் அம்சங்கள் என்பதில் மறுப்பில்லை. தோனியின் ஆட்டத் திறன் இன்னும் வற்றிவிடவில்லை. அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் 20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் அவர் அணியின் தலைமை ஏற்று ஆடுவார். ஒருநாள் போட்டியிலும் அவர் தொடர்ந்து ஆடலாம். ஆனால், இது கோலியின் யுகம். ஒருநாள் போட்டியிலும் அவர் தலைமைப் பொறுப்பேற்பதற்கும் தனது அணுகுமுறையின் அடிப்படையில் அணியை வளர்த்தெடுக்கவும் களம் அமைத்துக்கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

- என்.ராம்

https://sportstar.thehindu.com/ இணையதளத்தில் எழுதப்பட்ட கட்டுரையின் சுருக்கமான வடிவம்.

தமிழில்: அரவிந்தன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x