Published : 16 Oct 2015 11:02 am

Updated : 16 Oct 2015 11:25 am

 

Published : 16 Oct 2015 11:02 AM
Last Updated : 16 Oct 2015 11:25 AM

மனிதர்கள் | திருவிழா ஜோரா நடக்குது... சாமிதான் அநாதை ஆயிடுச்சு!

தஞ்சாவூர் வடக்கு வாசல்.

“ஏண்ணெ, இங்கெ காமாட்சி தேவியம்மா வீடு எது?” சைக்கிளில் செல்லும் இளைஞர், கால் ஊன்றி வண்டியை நிறுத்தி, தெருவின் பின்பக்கத்தைக் காட்டுகிறார். வீடுகள் அழுதுவடிகின்றன. ஒருகாலத்தில் வடக்கு வாசல் வாழ்வாங்கு வாழ்ந்தது. வடக்கு வாசல் மட்டும் இல்லை, ரெட்டிபாளையம், கீழஅலங்கம் எல்லாமே வாழ்வாங்கு வாழ்ந்தன. தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க நாட்டுப்புறக் கலைகள் செழித்த இடங்கள் இவையெல்லாம்.


கும்மியாட்டம், மாடாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், பாம்பாட்டம், காவடியாட்டம், உறுமியாட்டம், உறியாட்டம், சிலம்பாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறையாட்டம், தப்பாட்டம், குறவன்குறத்தியாட்டம், சேவையாட்டம், சாமியாட்டம், காளியாட்டம், பேயாட்டம்.. இப்படி எந்த ஆட்டம் என்றாலும் தஞ்சாவூருக்கு வந்தால் செட்டு பிடித்துச் சென்றுவிடலாம். அதிலும், கரகாட்டத்திலும் பொய்க்கால் குதிரையாட்டத்திலும் தஞ்சாவூருக்கு என்று தனி மரபும் சிறப்பும் உண்டு.

நாட்டுப்புறக் கலைஞர்கள் உலகம் இரவுலகம் என்றாலும், பகல் பொழுதுகளில் இங்கெல்லாம் உலாத்துவது தனி அனுபவம். எந்தத் தெருவில் நுழைந்தாலும் சலங்கைச் சத்தமும் பாட்டுச் சத்தமும் கேட்கும். வீடுகளில் சிறு பிள்ளைகள் பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பார்கள். டீக்கடைகள், கோயிலடிகள், கட்டைச்சுவர்களில் அரட்டைக் கச்சேரிகள் அள்ளும். பகடிகள் பறக்கும்.

“ஏம்மா, காமாட்சி தேவியம்மா வீடு இதுதானுங்களா?”

வாசல் கதவு திறந்தே இருக்கிறது என்றாலும், உள்ளே வெளிச்சம் தெரியவில்லை. பதிலும் இல்லை. அந்தக் காலத்தில் கரகாட்டத்தில் கொடிகட்டிப் பறந்தவர் காமாட்சி தேவி. கரகாட்டத்தின் அத்தனை போக்குகளையும் அறிந்த, மிச்சமிருக்கும் வெகு சிலரில் ஒருவர். கணவர் நாடி ராவ் பொய்க்கால் குதிரையாட்டத்தில் பேர் போனவர். பிள்ளைகளும் இதே தொழிலில்தான் இருக்கிறார்கள்.

“ஏம்மா, வீட்டுல யாரும் இருக்கீங்களா?”

மெல்ல அசைவு தெரிகிறது. “வாங்கய்யா, யாரு வந்திருக்கீங்க?” நாடி ராவும் தொடர்ந்து, காமாட்சி தேவியும் வருகிறார்கள். முகத்தில் பழைய களை இல்லை. “ஆனா, இப்பவும் ஞாபகம் வெச்சித் தேடி வந்திருக்கீங்களே; இதுவே பெரிய சந்தோஷம்தான்!” என்கிறார்கள். “டீ சாப்பிடுறீங்களா?” என்கிறார்கள். பேரப் பிள்ளைகளை அனுப்பி டீ வாங்கி வரச் சொல்கிறார்கள்.

“என் பாட்டன், பூட்டன் காலத்துலேர்ந்து புள்ளைங்க வரைக்கும் இந்தக் கலைதான் சோறு போடுது. ஆனா, இதோ ஓடுதுங்களே, அதுங்களுக்கு இந்தக் கலை சோறு போடாது. ‘எப்படியாச்சும் படிச்சுக்கங்கப்பா!’ன்னு சொல்லியிருக்கேன். பசிக் கொடுமையில நாளைக்குச் செத்துடக் கூடாது, பாருங்க!” டீ வாங்கச் செல்லும் பேரப் பிள்ளைகள் சென்ற வழியையே பார்த்தபடி பேசும் நாடி ராவைப் பார்த்துக்கொண்டிருந்த காமாட்சி தேவி பேச ஆரம்பித்தார்.

“என் சொந்த ஊரு பட்டுக்கோட்டை. நான் கரகத்தைத் தூக்கித் தலையில வெச்சப்போ ஒம்போது வயசு. இப்ப அறுவத்தியேழு ஆகுது. எத்தனையோ ஆயிரம் வருஷம் நீடிச்சு நின்ன இந்தக் கலை, இந்தப் பத்திருபது வருஷத்துக்குள்ள அழிஞ்சு சிதைஞ்சு சின்னாபின்னாமாகுறதை என் கண்ணெதிரே பார்த்துக்கிட்டு இருக்கேன் தம்பி.

எப்பேர்ப்பட்ட கலைஞர்கள் எல்லாம் வாழ்ந்த எடம் தெரியுமா இது! என்னா மாதிரி வாழ்க்கை! இங்கெல்லாம் உட்கார்ந்து இப்பிடிப் பேச முடியாதுப்பா. ஒருபக்கம் ஆட்டம் ஓடிக்கிட்டு இருக்கும். இன்னொருபக்கம் சாமாஞ்சட்டைச் சரி செய்வாங்க. ஒத்திகை பாக்குற கூட்டம், புதுசா வேஷம் மாத்திப் பாக்குற கூட்டம், செட்டு கூப்பிட வெளியூர்லேர்ந்து வந்துக்கிட்டே இருக்குற கூட்டம்னு ஜகஜகன்னு கல்யாண வீடு மாரிருக்கும் ஒவ்வொரு வீடும்.

சக்ரவர்த்தி ராஜீ ராவ்னு சொல்வாங்க எங்க மாமனாரை. பொய்க்கால் குதிரையாட்டத்துல பேர் போன மனுஷன். எங்க வூட்டுக்காரங்களுக்கு, பொய்க்கால் குதிரையாட்டம் மட்டும் இல்ல; நல்லா குந்தளமும் வாசிக்கத் தெரியும். மராட்டிய வாத்தியம் இது. தஞ்சாவூரை சரபோஜி மன்னர்கள் ஆண்டப்போ இங்கெ வந்த வாத்தியங்கள்ல குந்தளமும் ஒண்ணு. மத்த தாள வாத்தியம் மாதிரி இல்ல; அஞ்சு வயசிலயே வாசிக்கப் பழகிரணும் இதை. இல்லாட்டிக் கத்துக்க முடியாது. குந்தளத்துல நாதத்தைப் படிச்சுக்கிட்டா எந்த வாத்தியத்துக்கும் ஆடிரலாம். எங்க மாமனாரு பிரமாதமா குந்தளம் வாசிப்பாரு. எங்களுக்கும் கத்துக்கொடுத்தாரு.

சாமிக்காக ஆடுற சக்திக் கரகம், ஜனத்துக்காக ஆடுற ஆட்டக் கரகம் ரெண்டு வகையும் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். ஆட்டத்துல மூணு காலம் சொல்லுவோம். மொதக் காலம் மொள்ளமா ஆடுறது; ரெண்டாம் காலம் வேகம் கூட்டுறது; மூணாம் காலம், சுத்தி அடிக்குறது. மூணாம் காலத்துல சட்டுனு ஆடலாம்; நெலைச்சு ஆட முடியாது. அப்படி ஆடுனவங்க ரொம்பக் கொறைச்ச. நான் ஆடுவன். சுத்திச் சுழண்டு ஆடுவேன்.

ஊர் ஊரா சுத்திக்கிட்டே இருப்போம். என்னா கூட்டம் வரும்கிறீங்க! ஒரு ஊர்ல திருவிழா நடக்குதுன்னா சுத்துப்பட்டு கிராமம் அத்தனையும் வண்டி கட்டிக்கிட்டு வரும். ஆறு, கண்மாயையெல்லாம் தாண்டிக்கிட்டு நீந்தி வரும். தூக்குச்சட்டியில தீனி எடுத்துக்கிட்டு வந்து விடிய விடிய உக்கார்ந்து ஆட்டம் பாக்கும். திருவிழாக் காலத்துல இங்கெ வீட்டுல கால் பதிக்க நேரம் இருக்காது எங்களுக்கு. இப்போ எல்லாம் மாறிப்போச்சு தம்பி. மாசத்துக்கு ஒரு முறைகூடக் கரகம் சுமந்து கால் பதிக்க வழி இல்லாமப் போச்சு.

வழியெல்லாம் பாத்திருப்பீங்களே, வீடுகள்ல பூந்து ஆடுற தரித்திரத்தை. எப்பேர்ப்பட்ட ஆட்டக்காரங்களெல்லாம் இன்னைக்குப் பிச்சை எடுக்காத குறையா சுத்துறாங்க, தெரியுமா? ராஜீ கேள்விப்பட்டிருக்கீங்களா, பேரு வாங்கின பொய்க்கால் குதிரையாட்டக்காரன். வாழைப்பழ வண்டி தள்ளுறான். எவ்ளோ பெரிய ஆட்டக்காரங்க சுப்புலட்சுமியம்மா, என்னா கூட்டம் கூடும் அந்நாள்ல; செத்துக்கெடந்தப்ப பொணத்தைத் தூக்கி எரிக்க காசு இல்ல, நாதி இல்ல. எல்லாம் போச்சு தம்பி! அந்த நாள்ல இந்தக் கலையில இருக்கவங்களுக்கு, சேர்த்து வைக்கத் தெரியாது. இந்த நாள்ல எடுத்து வைக்கவே காசு கெடையாது. ஒரு திருவிழாவுக்குப் போய்ட்டு வந்தா ஆளுக்கு ஆயிரம், ரெண்டாயிரம் கெடைக்கும். அதை வெச்சு எத்தன நாள் ஓடும்?

பெரிய கோயிலைக் கட்டின ராஜராஜ சோழன் அந்தக் கோயில்ல அன்னாடம் ஆடிப் பாடுறவங்களுக்குன்னே ஒரு ஊரை உருவாக்கினாம்பாங்க. அவங்க பொழப்புக்காகவே கோயில் வருமானத்துல ஒரு பகுதிய ஒதுக்கினாம்பாங்க. இன்னைக்கு அப்படிப்பட்ட பெரிய கோயில்லயே சதய விழாவுல எங்களைக் கண்டுக்க ஆள் இல்ல. உள்ளூர்லயே இதுதான் நெலமன்னா வெளியூர் கதைய பேசணுமா? ஊருக்கு ஒரு கோயில் இருந்த காலம் போய், தெருவுக்கு ஒரு கோயில் வந்திருச்சு.

காசு - பணப்புழக்கம் எல்லாமும் கரை புரண்டுதான் ஓடுது. ஆனா, சாமியைக் கொண்டாடுறவங்க சாமியை வெச்சிப் பொழைச்ச எங்கள மறந்துட்டாங்க. வீதியுலாவைப் பாருங்க, நாங்க இல்லாத குறை நல்லாத் தெரியும். திருவிழா ஜோரா நடக்குது, ஆனா, சாமி அநாதை ஆயிடுச்சு. கேட்டா, மக்கள் ரசனை மாறிடுச்சுங்குறாங்க.”

“காலத்துக்கு ஏத்த மாதிரி மாற்றங்கள் இதுல நடக்காமப் போயிடுச்சோ?”

“தெரியல தம்பி. இந்த டிவியெல்லாம் வந்ததுக்கு அப்புறமே, ஆட்டத்த ஆட்டமா ஆடினா மட்டும் பத்தாது; கூட்டத்த இழுக்க எதாவது செய்யணும்னு புரிஞ்சுச்சு. கரகத்த வெச்சிக்கிட்டே ஏணி மரம் ஏறுறது, தீப்பந்தம் சுத்தறது, எலுமிச்சம்பழம் கோக்குறது, கண்ணால ஊசி எடுக்குறதுன்னு எல்லாம் சில சுவாரஸ்யங்களைச் சேர்த்தோம். ஆட்டத்தக் கொறைச்சு தமாசை நெறைய சேர்த்தோம். ஆனா, எதைச் செஞ்சும் தலையெடுக்க முடியலை. முக்கியமா, மக்களோட மனசு மாறிப்போச்சுப்பா.

அன்னைக்கெல்லாம் தந்த காசு பெருசு இல்ல. ஏழு பேரு போனோம்னா பத்து ரூபா கொடுப்பாங்க, ஆளுக்கு ஒரூபா, ஒண்ணாரூபா கெடைக்கும். ஆனா, மரியாதை இருந்துச்சு. இன்னைக்கு அது செத்துப்போச்சே? மனுஷனோட தரம் தாழ்ந்துபோச்சே! புள்ள மாரி இருக்க, உன்கிட்ட சொல்ல என்ன தயக்கம்? அதிசயமா யாராவது நிகழ்ச்சின்னு வந்து நின்னாக்கூட ‘பதினஞ்சு பதினாறு வயசுல புள்ள இருக்கா?’ன்னு வாய் கூசாமக் கேட்குறாங்கப்பா. அரசாங்க விழாக்களுக்குக் கூப்புடுற அதிகாரிங்க, ‘செட்டுல குட்டிங்க யாரு இருக்கா?’ன்னு கேட்குறாங்கய்யா. அப்ப, இந்தக் கலையப் பத்தின நெனப்பே மாறிடுச்சுல்ல?

ஆரம்பத்துல தமாசுக்காக நெறைய ரெட்டைப் பேச்சு பேசுவோம். நல்ல வார்த்தை, கெட்ட வார்த்தைக் கணக்கெல்லாம் புராணக் கூத்துகள்லயே கெடையாதுங்குறதால. ஆனா, பாராட்டுறேங்குற பேர்ல ரவிக்கையில ரூவா நோட்டைக் குத்திவிட வந்தான் பாருங்க, அப்பவே அதைக் கிழிச்சுப் போட்டுருக்கணும். விட்டுட்டாங்க. பொழப்பு இல்லென்னு சிலர் தரங்கெட்டு ஆடினாங்க. இப்ப தைரியமா கூப்பிடுறாங்க. ஆனா, இருக்குற நெலையில இருந்தோம்னா யாருக்கும் இந்தத் தைரியம் வராதுல்ல?”

“அரசாங்கம் எதுவும் உதவுறதில்லையா?”

“ஆடிக்கு ஒண்ணு, ஆவணிக்கு ஒண்ணுன்னு எதாச்சும் வாய்ப்பு தருவாங்க. கலைநிகழ்ச்சின்னு எப்பவாச்சும் வெளிநாடுகளுக்கு அழைச்சுக்கிட்டுப் போவாங்க. பிராயணச் செலவு மட்டும் ஒரு லட்சம் ஒன்றரை லட்சம். எங்களுக்குக் கூலி எவ்ளோ தெரியுமா? தலைக்கு ஐந்நூறு ரூபா! சரிதான் போ, நமக்கு ஒரு பெருமை வெளிநாடெல்லாம் சுத்தினோம்னு. போறோம். ஆட்டத்தைப் பாக்குற வெளிநாட்டுக்காரன் அசந்துபோயி பாராட்டி பூச்செண்டு கொடுப்பான். நம்மூர் மதிப்புக்கு ஆயிரம், ரெண்டாயிரம் விலை வரும். கையில காசா கொடுத்திருந்தா நாலு நாள் செலவுக்கு ஆகுமேன்னு நெனைச்சு மருகுவோம்.

அரசாங்கத்துக்கிட்ட நாங்க உதவியெல்லாம் எதிர்பார்க்கலையப்பா. மாசம் ஒரு நிகழ்ச்சி கெடைக்குற மாதிரி கோயில்கள்ல உள்ள சூழ்நிலைய மாத்தினாலே போதும். எல்லார் பொழப்பும் ஓடும். இந்தக் கலைய ஏன் வாழ வைக்கணும்னு சொல்ல எனக்குத் தெரியல. ஆனா, இது செத்துடக் கூடாதுப்பா!” பெருகும் கண்ணீரைச் சேலைத் தலைப்பால் ஒத்திக்கொள்கிறார் காமாட்சி தேவி.

அதன் பின்னர் பேச ஏதும் இல்லாமல் போகிறது. வண்டியை எடுக்கும்போது வேகவேகமாக ஓடி வருகிறார் நாடி ராவ். கையில் ஒரு துண்டுக் காகிதம். அதில் ஒரு செல்பேசி எண்: 94437 83209. “தம்பி, இத வெச்சிக்குங்க. என்னைக்காவது எங்கயாவது திருவிழாவுல ஆட்டம் வைக்கணும்னு யாராவது உங்ககிட்ட கேட்டாங்கன்னா, எங்கள நெனப்புல வெச்சிக் கூப்பிடுங்க. ஒரு நாள் பொழப்புக்கு உதவும்!”

கண் கலங்க நிற்கிறார் ‘கலைமாமணி’ நாடி ராவ்!

- சமஸ்,
தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
தஞ்சாவூர் வடக்கு வாசல்காமாட்சி தேவியம்மாபாரம்பரிய கலைகள்நாட்டுப்புறக் கலைகள்கரகாட்டம்நாட்டுப்புறக் கலைஞர்கள்நாடி ராவ்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x