Published : 01 Jan 2021 07:02 am

Updated : 01 Jan 2021 07:02 am

 

Published : 01 Jan 2021 07:02 AM
Last Updated : 01 Jan 2021 07:02 AM

வங்கத்தில் மம்தாவின் செல்வாக்கு சரிகிறதா?

west-bengal-politics

சஜ்ஜன் குமார்

வங்கத்தின் 294 தொகுதிகளிலும் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் முடிவு வாக்காளர்களின் உளவியல் பற்றி ஒரு சுவாரசியமான அம்சத்தை வெளிப்படுத்தியது. யாருக்கு வாக்களிப்பீர்கள் என்றும், யார் வெல்வார்கள் என்றும் கேட்கப்பட்ட கேள்விக்குச் சிலரே வெளிப்படையாகப் பதிலளித்தார்கள்; பெரும்பான்மையானோர் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை அல்லது தாங்கள் நினைத்ததைக் கிசுகிசுப்பான குரலில் பேசினார்கள். ஆளுங்கட்சிக்கு ஆதரவான மனநிலை இருக்கும்போது, மக்கள் வெளிப்படையாகப் பேசுவார்கள்; மாற்றத்துக்குத் தயாராகிவிட்டார்கள் என்றால், அவர்கள் அமைதியாக இருப்பார்கள். தொடர்ந்த கேள்வியொன்றுக்கு வெளிப்படையாகப் பதிலளித்தவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்ஸிஸ்ட்) முன்னாள் ஆதரவாளர்களாகவும் திரிணமூல் காங்கிரஸின் முன்னாள் ஆதரவாளர்களாகவும் இருந்தார்கள்.

கட்சியா தனிமனிதர்களா?


இந்தச் சிக்கலுக்கான பதில் வங்கத்துக்கே உரித்தான அரசியல் தனித்தன்மையில் உள்ளது. பேராசிரியர் துவைபாயன் பட்டாச்சார்யா குறிப்பிட்டதுபோல், வங்கம் என்பது ‘கட்சி சமூக’மாக இருக்கிறது. பஞ்சாயத்து அளவில் இடதுசாரித் தலைவர்களில் பெரும்பாலானோர் முதன்மையாக ஆசிரியர் சமூகத்திலிருந்து வந்தவர்களாக இருக்க, திரிணமூல் காங்கிரஸின் முன்னுரிமை பெற்றவர்களெல்லாம் உள்ளூர் ஒப்பந்தக்காரர்களாகவும் தொழிலதிபர்களாகவும் செல்வாக்கு மிகுந்த ஆளுமைகளாகவும் இருந்துவருகிறார்கள். அவர்கள் கட்சி அமைப்பைத் தங்களின் சொந்த முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இப்படியாக அந்த மாநிலத்தின் கட்சி சார்ந்த அரசியல் கலாச்சாரத்தைத் தனிநபர் ஆளுமை சார்ந்த கலாச்சாரமாக மாற்ற முயன்றுகொண்டிருக்கிறார்கள்.

இது, தற்போது வங்கத்தில் செய்யப்பட்டுவரும் அரசியல் அலசல்களில் பெரும்பாலானவை ஜங்கல்மஹாலில் திரிணமூல் காங்கிரஸின் சுவேந்து அதிகாரி, பூர்வ மேதினிபூரில் பாஜகவின் முகுல் ராய், டார்ஜிலிங்கில் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சாவின் பிமல் குருங், பஹரம்பூரில் அதிர் ரஞ்சன் சௌத்ரி, முஸ்லிம்களிடையே அஸதுதீன் ஓவைஸி, அப்பாஸ் சித்திக்கி போன்ற ஆளுமைகளின் தாக்கம் பற்றிய மதிப்பீடுகளாகவே ஏன் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இதுதான் அமைப்புரீதியாக பலவீனமாக இருக்கும் பாஜகவை அதன் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தும்படி திரிணமூல் காங்கிரஸ் தொடர்ந்து வற்புறுத்தச் செய்கிறது. இப்படியாகப் போட்டியை மம்தா பானர்ஜிக்கும் ஒரு பிராந்திய பாஜக முகத்துக்கும் இடையிலானதாக ஆக்குகிறது. தலைமைத்துவம் பற்றிய கேள்வியை எதிர்கொள்வதிலிருந்து நழுவுவதன் மூலம் இந்தப் போட்டியை மோடிக்கும் மம்தாவுக்கும் இடையிலானதாக மாற்றி, அனுகூலத்தை அடைவதற்கு பாஜக முயல்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால், கட்சி அரசியலின் பிடி இன்னமும் அங்கே இருந்தாலும், தனிப்பட்ட ஆளுமைகளுக்கான வெளி அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கட்சியிலிருந்து தனிநபர் நோக்கிய மாற்றமானது ஏற்கெனவே உள்ள அரசியல் கட்சிகள் மீது பெரும்பாலான வாக்காளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவநம்பிக்கையை உணர்த்துகிறது. வாக்காளர்களின் தெரிவுகள் எதிர்மறையானவை – ஆளுங்கட்சியை மக்கள் வெளியேற்ற விரும்புகிறார்களே தவிர, புதியவர்களுக்கு வெகுமதி அளிக்க விரும்பவில்லை. யார் மாற்றாக இருக்கிறார்களோ அவர்கள் நேர்மறையான தெரிவாக இல்லை. மாறாக, இயல்பான பலனாளிகளாகத்தான் அவர்கள் இருக்கிறார்கள். வங்கத்தில் பெரும்பாலானோர் அரசு நிறுவனங்கள் மீதும் ஏற்கெனவே உள்ள அரசியல் கட்சிகள் மீதும் கோபத்தில் உள்ளதுபோல் தெரிகிறது; இந்தப் பெரும் மாற்றத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் மட்டுமே காரணம். மாநிலத்தின் இந்நிலைக்கு மூன்று கூறுகள் காரணமாகின்றன.

பீதியும் ஊழலும்

முதலாவதாக, மாநிலமெங்கும் திரிணமூல் காங்கிரஸுக்கு எதிரான உணர்வு தொடங்கியதன் அடையாளம் 2018 பஞ்சாயத்துத் தேர்தலாகும். எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களிக்கக்கூட எப்படி அனுமதிக்கப்படவில்லை என்பதை சிபிஐ (எம்) ஊழியர்களிலிருந்து பொதுமக்கள் வரை ஒவ்வொருவரும் கதை கதையாகக் கூறினார்கள். வன்முறை ஏவப்பட்டதைப் பற்றியும் எதிர்த்தவர்கள் மீது பொய் வழக்குகளைக் காவல் துறை பதிவுசெய்ததைப் பற்றியும் பெரும்பாலானோர் கூறினார்கள். பாங்குராவிலிருந்து 9 முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாசுதேவ் ஆச்சார்யாகூட விட்டுவைக்கப்படவில்லை. தனது கட்சி வேட்பாளரை வேட்பு மனு தாக்கல் செய்யச் சொன்னபோது அதைத் தடுத்துநிறுத்தினார்கள். ஆளுங்கட்சியின் நீட்சிபோல காவல் துறையினர் செயல்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இப்படியாக அச்ச மனநிலையால் எதிர்க்கட்சியினர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர், இது 2018-லிருந்து அதிகமாக இருக்கிறது. இதனால்தான் வரும் தேர்தலில் வங்கக்
காவல் துறை தள்ளிவைக்கப்பட்டுத் தேர்தலானது வாக்குச்சாவடி அளவில்கூட மத்திய துணை ராணுவப் படையினரின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெற வேண்டும் என்று இடதுசாரிகள் உட்படப் பெரும்பாலானோர் விரும்புகிறார்கள்.

ஏகபோகமும் ஊழலும் அதிகரித்திருப்பது திரிணமூல் காங்கிரஸுக்கு எதிரான அடியோட்டமான உணர்வுக்குக் காரணமாக இருக்கிறது. இது குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்தபோது, இடதுசாரிகளின் ஆட்சிக் காலத்தில் ஊழலானது பரவலாக இருந்தது என்றும் பொதுமக்களுக்குக் கூட அதில் பங்கு கிடைத்தது என்றும் மக்கள் கருத்து தெரிவித்தார்கள். திரிணமூல் காங்கிரஸின் ஆட்சிக் காலத்தில் பெரும்பாலான உள்ளூர்த் தலைவர்கள் ஒப்பந்தக்காரர்களாகவும் தொழிலதிபர்களாகவும், ஆதிக்கம் மிகுந்த பிற பிரிவினராகவும் இருந்தார்கள். ஆகவே, மக்களுக்கென்று இருக்கும் மாநிலத்தின் வளங்கள் சூறையாடப்பட்டது மட்டுமல்லாமல், அதில் மக்களுக்குரிய பங்கும் கிடைக்காமல் போனது.

கடந்த காலத்தில், கட்சி சமூகம் என்ற சட்டகத்தில், ஆளுங்கட்சியோடு தொடர்பில் இருப்பதென்பது வங்கத்தில் பெரும்பாலான மக்களுக்கு, குறிப்பாக கிராமங்களில் உள்ள விளிம்புநிலையினருக்கு, வருவாய்க்கான ஆதாரமாக இருந்தது. திரிணமூல் காங்கிரஸின் ஆட்சியில் உள்ளூர்த் தலைவர்கள் ஏகபோகத்தை அனுபவித்தார்கள்; இது கட்சியுடன் மக்களுக்கு இருந்த பிணைப்பைத் துண்டித்தது. எடுத்துக்காட்டாக, ஹரோவா சட்டமன்றத் தொகுதியில் சுமார் 18 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில் தொழிலதிபர்கள் மீன் வளர்ப்பார்கள். இதற்காக ஒரு ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ. 36 ஆயிரத்திலிருந்து ரூ. 45 ஆயிரம் வரை அரசுக்கு அல்லாமல் கட்சியின் உள்ளூர் அலுவலகத்துக்குத் தந்துவிடுவார்கள். முன்னதாக, அந்தப் பணத்திலிருந்து ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு ரூ.1,000 பெறுவார்கள். தற்போதைய தகவலின்படி, திரிணமூல் காங்கிரஸின் ஆட்சியில் உள்ளூர்த் தலைவர்கள் கட்சிக்குப் பணம் கொடுக்காமல் தாங்களே மீன் வளர்ப்பில் ஈடுபட ஆரம்பித்தார்கள். இதனால், அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்குக் கிடைத்துவந்த பணமும் நின்றுபோனது. இந்த மாற்றத்தைக் குறித்து முறையிட்டவர்களில் பெரும்பாலானோர் பௌந்திர காத்ரி தலித்களும் ஏழை முஸ்லிம்களும்தான்.

திரிணமூல் காங்கிரஸ் 2019 பொதுத் தேர்தலில் வலுவான வெற்றிபெற்ற இடங்களில் ஊழல் அதிக அளவில் காணப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. வடக்கு 24 பார்கனாஸ், கொல்கொத்தா, ஹௌரா, ஹூக்ளியின் ஒரு பகுதி, தெற்கு 24 பார்கனாஸ், கிழக்கு மேதினிபூர் போன்றவைதான் இந்த இடங்கள். இந்த இடங்களில் உம்பன் புயல் ஏற்படுத்திய பெரும் பாதிப்புக்குப் பிறகு, நிவாரண நிதியை உள்ளூர்த் தலைவர்கள் சூறையாடியதாக மக்கள் புகார் தெரிவித்தார்கள். இந்த ஊழலுக்கு ‘உம்பன் துர்நிதி’ என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள்.

விளிம்புநிலையினரும் பாஜகவும்

இறுதியாக, பெரிய அளவில் உருவாகிவரும் எண்ணம் என்னவென்றால், ஆளுங்கட்சியானது மக்கள் மனதில் அச்சத்தை விதைத்துவருகிறது என்பதும் நாளுக்கு நாள் அதன் ஊழல் அதிகரித்துவருகிறது என்பதும்தான். இதனால், பெரும்பாலான கிராமங்களில் ‘ஆளுங்கட்சி எதிர் ஏனையோர்’ என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த மாநிலத்தின் மக்கள்தொகையில் 30% இருக்கும் தலித் மக்களும் பழங்குடியினரும்தான் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தாங்கள் கைவிடப்பட்டதாகவும், தங்களின் சுயமேம்பாட்டில் மட்டுமே ஈடுபாடு கொண்ட திரிணமூல் காங்கிரஸின் உள்ளூர்த் தலைவர்களால் தாங்கள் வேட்டையாடப்பட்டதாகவும் உணர்கிறார்கள். சிபிஐ (எம்)-மும் காங்கிரஸும் அவர்களிடையே எந்த ஈர்ப்பையும் ஏற்படுத்தவில்லை. குறிப்பாக, விளிம்புநிலையில் உள்ள சமூகங்களின் இளைஞர்களிடையே. ஏனெனில், அந்தக் கட்சிகள் சீர்குலைந்த நிலையில் இருப்பதோடு அவற்றின் தலைவர்களுக்கு வயதாகிவிட்டது. இப்படியாக, கிராமத்தில்கூட மோடி காரணியை ஒரு மாற்றாகப் பார்க்கிறார்கள். காவிக் கட்சிதான் இவை எல்லாவற்றின் பலன்களையும் அறுவடை செய்யப்போகிறது என்பதுபோல் தோன்றுகிறது.

- சஜ்ஜன் குமார், அரசியல் ஆய்வாளர், டெல்லி
- ‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை


West bengal politicsவங்கத்தில் மம்தாவின் செல்வாக்கு சரிகிறதாதிரிணமூல் காங்கிரஸ்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x