Last Updated : 01 Jan, 2021 06:55 AM

 

Published : 01 Jan 2021 06:55 AM
Last Updated : 01 Jan 2021 06:55 AM

அண்ணலின் 2 ஆண்டுகளும் இசைஞானியின் 40 ஆண்டுகளும்!

‘சமூகநீதிக்காக அறப்போர் தொடுத்த இந்தியர் டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் 1921-22 வரை இங்கு வாழ்ந்தார்’ என்ற பெயர்ப்பலகை பொறிக்கப்பட்ட அந்த வீடு இருப்பது லண்டன் நகரில். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு உட்பட்ட இந்தியாவிலிருந்து பிரிட்டன் தலைநகரமான லண்டனுக்குச் சென்று, அங்கு உலகப் புகழ்வாய்ந்த லண்டன் பொருளாதாரப் பள்ளியில் முதுநிலையும் முனைவர் பட்டமும் படித்து, அதிலும் பிரிட்டிஷாரைக் கடுமையாக விமர்சிக்கும் வகையில் புரட்சிகரமாக எழுதப்பட்டு இருப்பதாக அக்கல்லூரிப் பேராசிரியர்களால் குறிப்பிடப்பட்ட ‘பிரிட்டிஷ் இந்தியாவில் பேரரசின் நிதியை மாகாணங்களுக்குப் பகிர்ந்தளித்தல்’, ‘ரூபாயின் சிக்கல்’ ஆகிய ஆய்வேடுகளை அம்பேத்கர் எழுதியது இந்த வீட்டில் வசித்த நாட்களில்தான்.

அரசுகள் செலுத்திய காணிக்கை

லண்டன் நகரின் கிங் ஹென்றி சாலையில் உள்ள 2,050 சதுர அடி பரப்பளவில் மூன்றடுக்கு மாடிகள், ஆறு அறைகள் கொண்ட இந்த வீட்டை அதன் உரிமையாளர் 2015-ம் ஆண்டில் விற்க முடிவுசெய்தார். இதை அறிந்த மஹாராஷ்டிர அரசு, ரூ.31 கோடி கொடுத்து இந்த வீட்டை வாங்கி அம்பேத்கர் நினைவில்லமாக மாற்றியது. இரண்டு ஆண்டுகள் மட்டுமே இங்கு வசித்திருந்தாலும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தைக்குச் செலுத்த வேண்டிய காணிக்கையாக இதை இந்திய அரசு பாவித்தது. நினைவகமாக மட்டுமல்லாமல் அருங்காட்சியகமாகவும் இந்த இல்லம் மாற்றப்பட்டது. அதில் அம்பேத்கர் பயன்படுத்திய பொருட்கள், அவர் பாதுகாத்து வைத்திருந்த ஒளிப்படங்கள், எழுதிய கடிதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

வெறும் காட்சியகமாக அல்லாமல் இங்கிலாந்துக்குப் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்கள் தங்கிக் கல்வி பெற உதவும் அன்பாலயமாகவும் பயன்படுத்தலாமே என்று அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் ஆலோசனை வழங்கினார். திட்ட அனுமதி பெறவில்லை எனக் கூறி நினைவகத்தை மூட லண்டன் காம்டென் நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. அனுமதி கோரி இந்தியத் தூதரகம் சமர்ப்பித்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது. இல்லத்தில் உள்ள அம்பேத்கரின் பொருட்களை அப்புறப்படுத்தி வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றது பிரிட்டன் தரப்பு. இந்த இல்லம் இந்தியர்களுக்குப் பொக்கிஷம் போன்றது என்றது இந்தியத் தரப்பு. இதை ஏற்று, “அம்பேத்கரின் நினைவகம் லண்டனில் செயல்படத் திட்ட அனுமதி வழங்கப்படுகிறது” என்று பிரிட்டன் அரசு 2020 மார்ச் மாதத்தில் தீர்ப்பளித்தது.

சாவி இருந்தும் அறை இல்லை

இரண்டு ஆண்டுக்காலம் மட்டுமே அம்பேத்கர் வசித்த வீட்டின் மகிமையை இந்திய அரசும் பிரிட்டன் அரசும் உணர்ந்திருப்பதன் மூலம் தங்களுக்குப் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கின்றன. அப்படியிருக்க, 40 ஆண்டுக்காலம் இளையராஜா எனும் மகத்தான கலைஞன் தன் வாழ்வின் பெரும் பகுதியை இசையில் கரைத்துக்கொண்ட அறை இன்று அடையாளம் தெரியாதபடி தகர்க்கப்பட்டுவிட்டது இது அவருக்கு மட்டுமான இழப்பா என்ன?

‘அன்னக்கிளி’ உள்ளிட்ட ஒருசில படங்களைத் தவிர 1977-லிருந்து ராஜாவின் இசை வெள்ளம் கரைபுரண்டோடியது சாலிகிராமம் பிரசாத் ஸ்டூடியோவில்தான். இளையராஜாவுக்கும் எல்.வி.பிரசாதுக்கும் இடையில் இழையோடிய பிணைப்பால் வணிக ஒப்பந்தம் ஏதுமின்றி ராஜா அனுதினமும் அங்கு இசை வார்த்தார். அதேநேரம், இசைப் பதிவு இல்லாத நாட்களுக்கும் சேர்த்தே முறையாக வாடகை கொடுத்துவந்ததாகத் தெரியவருகிறது. இன்று உருத் தெரியாமல் சிதைக்கப்பட்டிருக்கும் அந்தத் தனி அறைக்கு முன்புதான் ஒரு காலத்தில் ஒட்டுமொத்தத் தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் ஜாம்பவான்கள் எல்லாம் ‘பூங்கதவே தாழ் திறவாய்’ என்று ராஜாவின் தரிசனத்துக்காகத் தவம் கிடந்தனர்.

தான் எழுதிய இசைக் கோப்புகள், உலகம் முழுவதிலுமிருந்து தேடித் தேடி வாங்கிச் சேகரித்த இசைக் கருவிகள், தன்னைத் தேடிவந்த பத்ம விபூஷண் விருது, அரிய ஒளிப்படங்கள், ரமண மகரிஷியின் படம் என தன் மனத்துக்கு நெருக்கமானவற்றை அந்த அறையிலேயே ராஜா வைத்திருந்தார். இவை அனைத்தும் ராஜாவுக்கு அந்த அறை வெறும் அலுவலகம் அல்ல என்பதைத்தானே காட்டுகிறது. தன்னோடு ஐக்கியமான அறையின் சாவிகூட அவர் வசமே உள்ளது. ஆனால், இன்று அந்த அறையே இல்லை. அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அத்தனையும் ஏதோ ஒரு கிடங்குக்கு அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றன.

பிரசாத் ஸ்டூடியோவின் மூன்றாவது தலைமுறையினர் ராஜாவை வெளியேறுமாறு கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கூறிவருகின்றனர். ஆனால், இதைச் சுதாரிக்காமல் தனது இசை வேலைக்கு இடையூறு இருப்பதாக ராஜா காவல் துறையிடம் புகார் அளித்தார். ஒருகட்டத்தில் தனக்கு ஏற்பட்ட மனவுளைச்சலுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கும்படி பிரசாத் ஸ்டூடியோ மீது ராஜா வழக்குத் தொடுத்தார். வழக்கைத் திரும்பப் பெற்றால் இளையராஜாவை ஸ்டூடியோவுக்குள் அனுமதிப்பதாக பிரசாத் ஸ்டூடியோ தரப்பினர் தெரிவித்தனர். அதையும் ஏற்றார் ராஜா. ஒரே ஒரு நாளேனும் அங்கு தியானம் செய்ய அனுமதி கோரினார். ராஜாவின் கோரிக்கை செவிசாய்க்கப்படவில்லை.

திசைதிருப்பல்

ராஜாவுக்கு நியாயம் கோருவதாகச் சொல்லி, கடந்த ஆண்டில் பிரசாத் ஸ்டூடியோவை முற்றுகையிட்ட சீமானும் அவர் ‘தம்பி’களும், “தெலுங்கரே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு” என்று கோஷமிட்டு, பிரச்சினையைத் திசைதிருப்பத்தான் உதவினர். இயக்குநர் பாரதிராஜாவும் தன் பங்குக்கு, “இரு தரப்பினரும் இத்தனை காலம் லாபம் அடைந்திருக்கிறார்கள். இடத்துக்குச் சொந்தக்காரங்க போகச் சொல்ல அவங்களுக்கு உரிமை இருக்கு. அதனால், இளையராஜாவுக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறோம்” என்றார். அத்தனையையும் பார்க்கும் பொதுமக்களும் சமூக ஊடகங்களில், “ஏதோ வாடகை பாக்கி விவகாரம் போல” என்றும், ‘‘இவர் ஏன் தியானம் செய்வேன்னு அடம்பிடிக்கிறார்?” என்றும் மனிதநேய மாண்பை மறந்து கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

“என்னிடம் நண்பர்களாகப் பழகியவர்கள் எல்லாம் நண்பர்கள் இல்லை. ஆர்மோனியப் பெட்டி மட்டுமே எனது நண்பன். பல காலத்துக்கு முன்பு, கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் 60 ரூபாய் கொடுத்து இந்த ஆர்மோனியப் பெட்டியை வாங்கினேன்” என்று இளையராஜாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் ராஜா பேசினார். அன்று ரூ. 60 கொடுத்து அவர் வாங்கிய ஆர்மோனியப் பெட்டிக்கு இன்று விலை வைக்க முடியுமா?!

நூற்றாண்டின் மகத்தான கலைஞனுக்கு ஆறுதலாக அரசுத் தரப்பிலிருந்தோ, எந்தப் பிரதானக் கட்சிகளிடமிருந்தோ இதுவரை எந்தத் தலையீடும் இல்லை. “சமூகநீதிக்காக அறப்போர் தொடுத்த இந்தியர் டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் 1921-22 வரை இங்கு வாழ்ந்தார்” என்ற வரியிலிருந்து மீண்டும் ஒரு முறை இந்தக் கட்டுரையை வாசித்துப் பாருங்கள். நாம் எங்கே இருக்கிறோம் என்பது துலக்கமாகும்.

- ம.சுசித்ரா,
தொடர்புக்கு: susithra.m@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x