Published : 29 Dec 2020 03:14 am

Updated : 29 Dec 2020 08:36 am

 

Published : 29 Dec 2020 03:14 AM
Last Updated : 29 Dec 2020 08:36 AM

பீத்தோவன் என்ற மனிதத்துவக் கலை ஆளுமை!

beethoven

லூயி ஜூட் செல்வதுரை

இருப்பதா புறப்படுவதா? வரலாற்றின் மிகச் சிறந்த இசைநடத்துநராகப் பலரால் கருதப்படும் வில்லெம் ஃபர்ட்வாங்ளர் எந்த முடிவை எடுப்பது என்று வருந்திக்கொண்டிருந்தார். 1933-ல் நாஜிக்கள் ஆட்சிக்கு வந்ததும் கலையையும் கலைஞர்களையும் அவர்கள் தணிக்கைக்கு உட்படுத்த ஆரம்பித்தார்கள். தங்களுக்கு அடிபணிந்தவர்களுக்கு மட்டுமே சலுகை காட்டப்பட்டது. பல இசைக்கலைஞர்கள் செய்ததுபோல் நாஜி ஜெர்மனியை விட்டுச்செல்வது எளிதாக இருந்திருக்கும். பெர்லின் ஆர்க்கெஸ்ட்ராவின் தலைவரான ஃபர்ட்வாங்ளர் தனது ஆர்க்கெஸ்ட்ராவை மேற்கத்திய செவ்வியல் இசையின் ஆஸ்த்திரிய-ஜெர்மானிய உயர் வகைமையின் முன்னோடியாகக் கருதினார். இந்த வகைமை பாஹ், ஹெய்டன், மொஸார்ட், ஷூபர்ட், பிராம்ஸ், ப்ரக்னர் மற்றும் பீத்தோவனை உள்ளடக்கும். ஜெர்மனியை விட்டுச் செல்வது அடிபணிதல் போன்று மட்டும் தோன்றாது, ஜெர்மானிய இசை குறித்து நாஜிக்கள் கொண்டிருந்த தீய பார்வையை அவர்கள் சுதந்திரமாகப் பின்தொடர்வதற்கு வழியை ஏற்படுத்திவிடும்.

பீத்தோவனின் இசையும் இதைப் போன்றதே: ஒரு லட்சியத்தை அடையத் துடிக்கும் மனித உத்வேகம். போர் நடைபெற்ற ஆண்டுகளின் துயரத்திலிருந்து வெளிவந்து நமது இசையனுபவத்துக்கு ஃபர்ட்வாங்ளர் செழுமையூட்டினார். குறிப்பாக, பீத்தோவனின் படைப்புகள் மீதான தனது புரிதல்கள் மூலம் அவர் நமது இசையனுபவத்துக்குச் செழுமையூட்டினார்.


ஐரோப்பாவை 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆட்கொண்ட ‘ரொமான்டிக்’ காலகட்டத்தைச் சேர்ந்தவர் பீத்தோவன். ‘மேலேயுள்ள விண்மீன்களின் சொர்க்கங்கள்; நம்முள்ளே உள்ள தார்மீக விதி’ என்று இம்மானுவேல் கான்ட் வியந்தது பீத்தோவனுக்கும் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தியது.

அறிஞர்கள் பீத்தோவனின் படைப்புகளை மூன்று காலகட்டங்களாக வகைப்படுத்துவார்கள். தொடக்கம், நடுப்பகுதி, பிற்காலம். அவருடைய ஆரம்பகாலப் படைப்புகள், பெரும்பாலும் 32 வயது வரையிலானவை, பெரிதும் மரபானவை; தனது இசைத் திறமையைக் கொண்டு அவர் பிழைப்பை நடத்தினார். ஆனால், பீத்தோவனின் செவித்திறன் பெரிதும் குறைய ஆரம்பித்தது. இது அவரைத் தற்கொலையின் விளிம்புக்கே தள்ளியது. எனினும் தன் கலைக்காக, தன் கலையின் மூலம் வாழ்வது என்ற அவரது உறுதி மேலோங்கியது. பானில் உள்ள பீத்தோவன் அருங்காட்சியகத்தில் துயரமும் வெற்றியும் அருகருகே இருக்கின்றன. அவர் பயன்படுத்திய ஒலிபெருக்கும் குழல்கள் அவருடைய முக்கியமான இசைப் படைப்புகளின் குறிப்புகளுக்கு அருகே வைக்கப்பட்டிருக்கின்றன.

அடுத்த தசாப்தம் நடுப்பகுதி என்றோ ‘மகத்தான’ காலகட்டம் என்றோ அழைக்கப்படுகிறது. ஆற்றல், உத்வேகம், சுதந்திரம், விடுதலை, சமாதானம், நீதி ஆகியவற்றின் துணிவு மிகுந்த சுய வெளிப்பாடுகள் அவரது இசையில் ஊடுருவிக் காணப்படுகின்றன. பீத்தோவன் தான் கற்ற மரபான இசை வடிவங்கள், அவரது இசை எண்ணங்களுக்குப் போதாதபோது அவர் கிளர்ச்சிசெய்தார், மனோதர்மத்தின்படி இசையை வெளிப்படுத்தினார், இசையை என்றென்றைக்குமாக மாற்றியமைத்தார். இதற்கு எடுத்துக்காட்டுகளாக ஃபிடெலியோ ஓபரா, சிம்ஃபனிகள் மூன்று, ஐந்து, ஏழு போன்றவற்றைக் கூறலாம்.

ஓபராவில் துணிவு மிகுந்த நாயகி லெனோர் அரசியல் கைதியான தன் கணவரைக் காப்பாற்றுகிறாள். இந்தப் படைப்பின் மையக் கருவென்பது ஒரு நபருக்கும் ஒரு லட்சியத்துக்கும் விசுவாசமாக இருப்பதாகும். இதை மனித மனசாட்சிக்கான அறைகூவலாகச் சித்தரிக்கிறார் ஃபர்ட்வாங்ளர். பீத்தோவனின் மற்ற படைப்புகளைப் போல அவருடைய ஒரே ஒரு ஓபரா சுதந்திரமும் மனித மாண்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் இந்தக் காலத்துக்குப் பொருத்தமாக இருக்கிறது.

பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கம்

‘தி எராய்கா’ என்ற பெயருடைய மூன்றாவது சிம்ஃபனி நெப்போலியனின் ஆதர்சங்களால் தாக்கம் பெற்றதாகும். இசைநடத்துநர் ஜான் எலியட் கார்ட்னர் போன்ற பலரும் பீத்தோவன் பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கத்தால்தான் ஐந்தாவது சிம்ஃபனியைப் படைத்தார் என்று நம்புகிறார்கள். அதன் உணர்ச்சி அந்த சிம்ஃபனி முழுவதும் இழையோடுகிறது. இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் அச்சு நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நாடுகளின் போராளிகள் ஐந்தாவது சிம்ஃபனியுடன் தங்களை இனம்கண்டு கொண்டனர். அதன் நான்கு தொடக்க ஸ்வரங்களில் மனித குலம் அதன் இறையாண்மையுடனும் புனிதத்துடனும் கம்பீரமாகத் தரையில் நிற்பதை நான் செவியுறுகிறேன்.

ஒரு மாறுபட்ட உலகம், ஒருவேளை பீத்தோவனின் படைப்புகளிலேயே மிகவும் மகிழ்ச்சியானதும், கவலையேதுமற்றதுமான படைப்பு ஏழாவது சிம்ஃபனியாகும். அது வாழ்க்கையைப் பற்றிய ஆழமான விசாரணையல்ல, அதன் கொண்டாட்டமாகும்.

இறுதிக் காலகட்டத்தில், தனது படைப்புத் திறனின் உச்சத்தில் இருந்தபோது அவரது மிகச் சிறந்த இசையாகக் கருதப்படும் ஒன்பதாவது சிம்ஃபனி, மாஸ், இறுதி ஸ்ட்ரிங் குவார்ட்டெட்ஸ் போன்றவற்றை அவர் படைத்தார். அவரது கலை அக்கறைகள் மாறவில்லை, கருப்பொருள்கள் திரும்பத் திரும்ப வருகின்றன, வகைமைகள் பரிணாமமடைகின்றன. அவற்றில் ஒரு தூய்மையான தன்மை மற்ற படைப்புகளைவிட இவற்றை வேறுபட்டவையாக ஆக்குகின்றன. பீத்தோவனின் பிற்காலத்திய பாணியானது, குறிப்பாக குவார்ட்டெட்டுகளில், ‘ஒரே நேரத்தில் முன்னுதாரணமற்ற அளவில் சிக்கலாகவும் முன்னுதாரணமற்ற வகையில் எளிமையாகவும் தோன்றக்கூடும்’ என்று விமர்சகர் பெர்னார்டு ஜேக்கப்ஸன் கூறுகிறார்.

சிம்ஃபனி ஒன்பதுதான் அந்த வகைமையையே மாற்றியமைத்தது. இந்த சிம்ஃபனியின் நீளமும் அதைத் தனித்தன்மை கொண்டதாக ஆக்கியது. சிம்ஃபனிகள் தற்போது இருப்பதைப் போல முன்பு நீண்ட படைப்புகளாக இருந்ததில்லை: ஹெய்டனின் மிகக் குறுகிய சிம்ஃபனி 17 நிமிட அளவிலானது; மொஸார்டின் 40-வது சிம்ஃபனி 25 நிமிடங்கள் நீள்வது. ஒன்பதாவது சிம்ஃபனி 75 நிமிடங்கள் வரை நீளக்கூடியது. அதன் நீளம் சிம்ஃபனியின் கட்டமைப்பின் சாத்தியங்களையும் அந்தக் கலை வடிவத்தின் நுணுக்கங்களையும் பெரிதும் அதிகப்படுத்தியது. அதேபோல், மாஸ் என்ற இசைப் படைப்பில் பீத்தோவன் அதன் கலைச் சாத்தியத்தை, அந்த இசையானது வழிபாட்டுக்குரியது என்பதைத் தாண்டி, விரிவுபடுத்துகிறார்.

பிற்காலத்திய ஸ்ட்ரிங் குவார்ட்டெட்டுகள் (ஓபி. 127-லிருந்து ஓபி. 135 வரை) பீத்தோவனின் இறுதிக் கால கலை மேதைமைக்குச் சான்றாக விளங்குகின்றன. அவற்றின் சமகால எதிர்வினைகளுக்கும் அவற்றுக்கு எழும் தற்காலத்து எதிர்வினைகளுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் கிடையாது: அமைதியான வியப்பு. ‘இதற்குப் பிறகு நாங்கள் எழுதுவதற்கு என்ன இருக்கிறது?’ என்று ஷூபர்ட் கேட்டார், குறிப்பாக ஓபி. 131-ஐக் குறித்து. அதனை பீத்தோவனின் உச்சம் என்று அவர் கருதினார். அது ஒரு துயரக் கதையைச் சொல்கிறது, அது சற்றே தணிந்து மறுபடியும் துயரத்தில் போய் முடிகிறது. ஒருவேளை அது மனித இருப்பின் இயல்பை விசாரணை செய்வதாக இருக்கலாம். அதன் அமைப்பு, கருப்பொருள்கள், ஒலியளவின் ஏற்ற இறக்கங்கள், ஒத்திசைவு மற்றும் ஒவ்வொரு தொழில்நுட்பக் கூறும் அதை நிகழ்த்துபவர்களையும் இசையியலாளர்களையும் பரவசத்தில் வைத்திருக்கிறது. பீத்தோவனின் மனோதர்மங்கள் இங்கே இந்த வகைமையின் வளர்ச்சியில் தாக்கம் செலுத்தியது.

இரண்டு நூற்றாண்டுகள் கடந்தும் பீத்தோவனின் இசைக்கு இன்னும் வயதாகவில்லை. ஏனெனில், அவரை எதுவெல்லாம் சங்கடப்படுத்தினவோ அந்த சமத்துவம், நீதி, விடுதலை, சகோதரத்துவம், சமாதானம் போன்றவை தொடர்பான அக்கறைகள் நம்மையும் சங்கடப்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன.

- லூயி ஜூட் செல்வதுரை,

ஆலோசகர், உலக வங்கிக் குழுமம்.

‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை

இது பீத்தோவன் பிறந்த 250-வது ஆண்டு


பீத்தோவன்பிரெஞ்சுப் புரட்சிமனிதத்துவக் கலைகலை ஆளுமைBeethoven

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x