Published : 20 Dec 2020 03:14 am

Updated : 20 Dec 2020 07:18 am

 

Published : 20 Dec 2020 03:14 AM
Last Updated : 20 Dec 2020 07:18 AM

எம்.வேதசகாயகுமார்: தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றாசிரியர்

vedha-sagaya-kumar

வல்லிக்கண்ணனையும் ராஜமார்த் தாண்டனையும் தவிர்த்துவிட்டு, தமிழில் புதுக்கவிதைகளின் வரலாற்றை எப்படிப் பேச முடியாதோ அதுபோல எம்.வேதசகாயகுமாரைத் தவிர்த்துவிட்டு, தமிழ்ச் சிறுகதைகளின் வரலாற்றைப் பற்றியும் பேச முடியாது. 1979-ல் தனது மாணவப் பருவத்திலேயே ‘தமிழ்ச் சிறுகதை வரலாறு’ எழுதி வெளியிட்டார். அதே காலகட்டத்தில், புதுமைப்பித்தனையும் ஜெயகாந்தனையும் ஒப்பிட்டு, தனது முனைவர் பட்ட ஆய்வையும் அவர் மேற்கொண்டிருந்தார்.

ஆய்வின் பொருட்டு, புதுமைப்பித்தனின் படைப்புகள் வெளிவந்த இதழ்களைத் தேடி அவரது சமகாலத்து எழுத்தாளர்கள் பலரையும் சந்தித்திருக்கிறார் வேதசகாயகுமார். சில இடங்களில் நினைத்த உதவி கிடைத்தது. சில இடங்களில் அவர் போராட வேண்டியிருந்தது. சில இடங்களில் அவமானப்படவும் நேர்ந்தது. செலவுக்குப் போதாத உதவித்தொகையோடு சொந்தப் பணத்தையும் செலவழித்து அவர் மேற்கொண்ட ஆய்வு அது. புதுமைப்பித்தனின் மொத்தச் சிறுகதைகளையும் காலவரிசைப்படுத்தியதோடு, பின்பு முழுத் தொகுப்பையும் அவர் வெளியிட்டார். தமிழ் இலக்கியத்தில் கல்விப் புல ஆய்வு வட்டங்களுக்கும் நவீன இலக்கியத்துக்குமான இடைவெளியை நீக்கியதில் அவரது பங்களிப்பு என்றும் நினைவில் கொள்ளத்தக்கது.


தமிழாய்வுத் துறையில் திருவனந்தபுரத்தின் பங்களிப்பு எப்போதுமே குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது. கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை வ.அய்.சுப்பிரமணியம், ச.வே.சுப்பிரமணியன் ஆகியோரின் வழிகாட்டுதலில் இரா.இளவரசு, க.ப.அறவாணன் என்று தமிழகத்தின் புகழ்பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களைக் கொடுத்தது. பல்கலைக்கழகக் கல்லூரியும் அவ்வாறே ஜேசுதாசனின் வழிகாட்டலில் எம்.வேதசகாயகுமாரைத் தமிழ் ஆய்வுலகுக்குப் பரிசளித்தது. பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் தனித்தமிழியர்களாகவும், திராவிட இயக்க ஆதரவாளர்களும் இருந்த சில ஆண்டுகளுக்குள்ளேயே, பல்கலைக்கழகக் கல்லூரியின் ஆய்வு மாணவரான வேதசகாயகுமார் அவர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட பாதையில் தனது ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டார். ஜேசுதாசனின் மாணவர்களான எம்.வேதசகாயகுமாரும் ராஜமார்த்தாண்டனும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்து நடத்திய ‘கொல்லிப்பாவை’ நவீன தமிழ் இலக்கிய இயக்கத்தின் முக்கியமான சிற்றிதழ்களில் ஒன்று. திருவனந்தபுரத்தில் ஆ.மாதவன், நாகர்கோவிலில் சுந்தர ராமசாமி, ஜெயமோகன் என்று அந்த வட்டாரத்தைச் சேர்ந்த எழுத்தாளுமைகளுடன் நெருங்கிப் பழகியதோடு அவர்களுடன் இணைந்தும் இயங்கியவர்.

இலக்கிய விமர்சனத்தில் வெங்கட் சாமிநாதன் முன்னெடுத்த ரசனை மதிப்பீடுகளை வேதசகாயகுமார் சிறிதும் வழுவாமல் ஏற்றுக்கொண்டார். கல்விப் புல ஆய்வுகளை ஒப்பாமல் விமர்சனங்களையும் படைப்பாளர்களே எழுதிக்கொள்ளும் முறையைப் பரிந்துரைக்கும் வெங்கட் சாமிநாதனை, கல்விப் புலத்திலிருந்து நவீன இலக்கியங்களை ஆராய்ந்த வேதசகாயகுமார் திறந்த மனதோடு ஏற்றுக்கொண்டார் என்பது ஆச்சர்யமே. ஆனால், வெங்கட் சாமிநாதனைப் பற்றிய பொது அபிப்ராயங்களுக்கு மாற்றாக அவர் நாட்டார் கலை வடிவங்களின் மீது ஆர்வம் காட்டியவர் என்பதையும் வேதசகாயகுமார் சுட்டிக்காட்டினார். எளிய முயற்சியில் கிடைத்துவிடக் கூடிய தமிழ்ச் சொற்களைத் தவிர்த்துவிட்டு ஆங்கில வார்த்தைகளை அப்படியே வெங்கட் சாமிநாதன் பயன்படுத்தியது குறித்தும் அவர் தனது மனக்குறையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஒருபாற்கோடாத இந்த நடுவுநிலைமையை வேதசகாயகுமாரின் கட்டுரைகளில் இயல்பாகப் பார்க்க முடியும். ஆய்வுலகின் திருட்டுத்தனங்களையும், ஆய்வு நூலகங்களின் உயர்தட்டு மனோபாவங்களையும், பதிப்பகங்களின் திரைமறைவுத் திட்டங்களையும் வெளிப்படையாகக் கண்டித்துப் பேசியவர் அவர். மாணவப் பருவத்திலேயே புதுமைப்பித்தனையும் ஜெயகாந்தனையும் ஒப்பிட்டு ஜனரஞ்சக எழுத்தின் மீதான ஈவிரக்கமற்ற விமர்சனத்தை முன்வைத்தவர். பின்னாளில் அவரது நண்பர்கள் புதுமைப்பித்தனையும் ஜெயகாந்தனையும் நவீன இலக்கிய முன்னோடிகள் என்று ஒருசேரக் கொண்டாடியபோது நட்பு கருதியே அவர் அமைதி காத்திருக்க வேண்டும்.

சுனாமியால் அழிவுக்கு ஆளான தென்மாவட்டங்களின் கடற்கரையோரப் பகுதிகளில் பிரான்சிஸ் ஜெயபதி ஒருங்கிணைப்பில் வறீதையா கான்ஸ்தந்தின் போன்ற செயற்பாட்டாளர்களுடன் இணைந்து மறுகட்டுமானப் பணிகளிலும் அவர் பங்கெடுத்துக்கொண்டிருக்கிறார். வறீதையாவுடன் இணைந்து அவர் தொகுத்த ‘விளிம்பு, மொழி, மையம்: படைப்பாளுமைகளுடன் உரையாடல்’ தமிழில் வெளிவந்த முக்கியமான நேர்காணல் தொகுப்புகளில் ஒன்று. ‘இந்து தமிழ்’ இணைப்பிதழில் வறீதையா கான்ஸ்தந்தின் எழுதிய ‘கடலம்மா பேசுறங் கண்ணு’ நூல்வடிவம் கண்டபோது, அதற்கு வேதசகாயகுமாரே முன்னுரை எழுதியிருந்தார். நெய்தலுக்கும் சமவெளிக்கும் இடையிலான பரஸ்பர உரையாடலை முன்னெடுக்கும் ‘இந்து தமிழ்’ நாளிதழை அவர் தனது முன்னுரையில் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

புனைவிலக்கியத்தின் மீது எப்போதுமே தீவிர ஆர்வம் கொண்டிருந்த வேதசகாயகுமார், கடந்த சில ஆண்டுகளாக ‘சரசு’ என்ற நாவலை எழுதிக்கொண்டிருந்தார். அந்நாவல் முற்றுப்பெற்றதா என்று தெரியவில்லை. அவரது முக்கியமான சில ஆய்வுகளும்கூட இன்னும் நூல்வடிவம் பெறவில்லை. தமிழ் விமர்சனக் கலைச்சொற்கள் அகராதி என்னும் ஆய்வுத் திட்டப் பணியொன்றை அவர் முடித்திருந்தார். இலக்கிய விமர்சனங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் துறைசார்ந்த சொற்களுக்கான அந்த அகராதி நூல்வடிவம் பெறும்பட்சத்தில், தமிழ் மாணவர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் அது பேருதவியாக இருக்கும்.

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in


எம்.வேதசகாயகுமார்தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றாசிரியர்Vedha sagaya kumar

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x