

உலக மீனவர் தினமான நவம்பர் 21 அன்று ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடற்கரையில் பாரம்பரியப் பட்டியலினக் கடலோடிகளுக்காக முன்னெடுக்கப்பட்டிருந்த மாற்று வாழ்வாதாரத் திட்டச் செயல்பாடுகள் எப்படி நடக்கின்றன என்று பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். கடலுயிர் ஆராய்ச்சி சார்ந்து இயங்கும் ஒன்றிய அரசின் ‘சிஎம்எஃப்ஆர்ஐ’ முன்னெடுக்கும் திட்டம் இது; அந்த நிறுவனத்தின் அறிவியலாளர்கள் என்னை அழைத்திருந்தார்கள்.
பல தசாப்தங்களாக, ‘சிஎம்எஃப்ஆர்ஐ’ நிறுவனத்தால், குறைந்துவரும் கரைக்கடல் மற்றும் அண்மைக் கடல்வளம் குறித்துச் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள், விசைப் படகுகளின் இழுவைமடி மீன்பிடிப்பால் அழிந்த பவளப் பாறைகளால் வீழ்ந்துவரும் மீன் உற்பத்தி போன்றவை கடல் விவசாயம் தொடர்பில் கட்டாயத் தேவையை வலிந்து உணர்த்தியிருந்தன. அந்த வகையில், 2006-ல் அறிமுகப்படுத்தப்பட்டு, கரைக்கடலில் செயலாக்கத்துக்கு வந்த கூண்டு மீன் வளர்ப்பு, பொருளாதாரரீதியாய் 2011-ல் கணிசமான வெற்றியைப் பெற்றது. கடலோரப் பொருளாதாரம் மேம்பட இந்தத் திட்டம் பாரம்பரிய மீனவரின் ஒத்துழைப்பைப் பெற வேண்டும். பாரம்பரிய மீனவர்களை வேட்டைத் தொழிலிலிருந்து பக்குவமாய்க் கடல் விவசாயம் நோக்கி மடை மாற்றுவது என்பது சவாலான பணிதான்.
புதிய விடியலுக்கான ஒளிக்கீற்று
கடலோரங்களில் அரசால் அறிமுகப்படுத்தப்படும் திட்டங்களெல்லாம் அவர்களின் கருத்து அறியப்படாமல் முன்னெடுக்கப்பட்டு, பயனற்றுப்போகிறதே என்ற நெருடல் எனக்குள் எப்போதும் உண்டு. ஆனால், தொண்டி புதுக்குடி கடற்கரையில் இறங்கியதுமே, அங்கு நின்றிருந்த திட்டப் பயனாளிகளிடம் தென்பட்ட உற்சாகத்தைப் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. திட்டச் செயலாக்கத்தில் உதவிய அறிவியலாளர்களைச் சகோதர பாசத்தோடு பயனாளிகள் அணுகியதைப் பார்க்கும்போது, இது புதிய விடியலுக்கான ஒளிக்கீற்றோ என்று தோன்றியது.
கரையில் தயாராக இருந்த நாரிழைப் படகில் கடலுக்குள் பயணித்தோம். இந்தப் பகுதி பாக் நீரிணையின் உள்வளைந்த பகுதியாதலால், அலைச் சீற்றம் அதிகம் இல்லை. பருவ மழையின் காரணமாக சமவெளி நீர் கடலுள் பாய்வதால், கடலெங்கும் பாசி வளர்ந்து பச்சைப்பசேலென்று இருக்கிறது கடல். ஒரு கடல் மைல் தூரத்தில் இரண்டு மிதக்கும் கூண்டுகள் போதுமான இடைவெளியில் அசைந்துகொண்டிருந்தன. முதல் கூண்டில் கோபியா எனப்படும் கடல் விரால் மீன்களும், இரண்டாவது கூண்டில் லாப்ஸ்டர் எனப்படும் சிங்கிறால்களும் வளர்க்கிறார்கள். 30 கிராம் அளவில் பெறப்படும் கடல் விரால் மீன் குஞ்சுகள், ஆறிலிருந்து எட்டு மாதத்துக்குள் நான்கு கிலோ வரை வளர்ந்துவிடுகின்றன. சந்தை விலை சராசரியாக ஒரு கிலோ ரூ.350. இவை வஞ்சிரம் மீன்களுக்கு ஒத்த சுவையைக் கொண்டிருப்பவை. 70 கிராம் அளவில் பெறப்படும் சிங்கிறால் குஞ்சுகள் 250 கிராம் வரை வளர்ந்து ஏற்றுமதிக்குத் தயாராகிவிடுகின்றன.
கூண்டு மீன்கள்
கடலில் கூண்டுக்குள் வளர்க்கப்படுவதால் மீன்கள் வளரும் சூழல் பாதுகாப்பானது. ஆனால், அவை இரை தேடி அலைய முடியாத காரணத்தால், உணவளிக்க வேண்டும். அதுவும் நாளில் இரண்டு முறை. பெரும்பாலும் மத்தி மீன்களே உணவாகின்றன. அலையசைவில் கூண்டுக்குள் சேகரமாகும் பாசிகளை நிதமும் அப்புறப்படுத்திக் கண்காணிக்கவும் வேண்டும். பயனாளிகள் குழுவுக்கு ஐவரென தனித்தனிக் குழுவாக இருந்தாலும், இரண்டு குழுக்களுமே ஒருவருக்கொருவர் உதவியாய் இணைந்து செயல்படுகின்றனர்.
கரையில் பெண்களுக்கான கப்பா பைகஸ் அல்வரேஸி எனப்படும் கடல்பாசி வளர்ப்பு. கரைக்கடலில் கம்பு நட்டி, கயிறு கட்டி அந்தக் கயிறுகளில் விதை நாற்றைப் பிணைத்துவிடுகிறார்கள். மூழ்கி மிதக்கும் பாசிகள் வளர்ந்து, 45 நாட்களுக்குள் அறுவடைக்கான பருவமடைந்துவிடுகின்றன. பச்சையாகக் கிலோ ரூ.8-க்கு விற்கப்படும் பாசிகள் காய்ந்தால், விலை ரூ.48. அலையோட்டத்தில் பாசிகள் அறுந்து போய்விடாதா எனக் கேட்டால், இல்லை, அலையோட்டம் பாசியின் மேல் குப்பைக் கூளங்கள் சேராமல் பாதுகாக்கிறது என்று உற்சாகமாய்ச் சொல்கிறார்கள், அங்கு கழுத்தளவு நீரில் நின்றபடி அறுவடை செய்த பெண்கள்.
கரையில் குடிசைகளில் பெண்கள் நடத்தும் அலங்கார மீன் வளர்ப்பும் அதே உற்சாகத்தோடு நடக்கிறது. கடல்நீரைக் கண்ணாடித் தொட்டிகளில் தேக்கி விடப்படும் 2 செ.மீ. நீளமுள்ள நிமோ எனப்படும் ‘க்ளெவுன்’ குஞ்சு மீன்கள் நாற்பத்தி ஐந்து நாட்களில் 4 செ.மீ. வளர்ந்து விற்பனைக்குத் தயாராகிவிடுகின்றன. ரூ.30 மதிப்பிலான குஞ்சு மீன் வளர்ந்து ரூ.150 வரை விற்பனையாகிறது.
வருமானத்துக்காக ஆண்களைச் சார்ந்திருந்த அடித்தளக் கடலோரச் சமூகப் பெண்கள் சுயதொழில் செய்வதால், இன்று வருமானம் ஈட்டுபவர்களாக மாறியிருக்கிறார்கள். இது கடலோரச் சமூக வாழ்வில் நல்ல மாற்றம். மக்களுடன் இணைந்து, அவர்களுடைய கருத்துகளையும் பெற்று முன்னெடுக்கப்படும் முயற்சிகள் எப்படியான விளைவைத் தருகின்றன என்பதற்கு ஒரு பாடம்போல இருந்தது இந்த அனுபவம். தமிழகக் கடல்புரத்துக்கு ஒரு நல்வரவு!
- ஆர்.என். ஜோ டி குருஸ், ‘ஆழி சூழ் உலகு’, ‘கொற்கை’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: rnjoedcruz@gmail.com