Last Updated : 14 Oct, 2015 09:05 AM

 

Published : 14 Oct 2015 09:05 AM
Last Updated : 14 Oct 2015 09:05 AM

துட்டு போயி வெப் வந்தது டும்டும் டும்டும்!

அப்பல்லாம் தமிழ்நாடே காங்கிரஸ் கோட்டையா இருந்துச்சிடே. நம்ம கோயில்லகூட சாமி பாட்டுக்கு நடுவுல காமராஜர், இந்திரா காந்தி பாட்டுப் போடுவாங்கன்னா பாத்துக்கோயேன். ‘அப்பிடின்னா… அண்ணாத்துரை பாட்டையும் போடுங்கல்ல’ன்னு சொன்னதுக்காகக் கோயில் வரி குடுக்கிற எங்களயே அடிச்சித் தொவச்சிட்டாங்க. அந்த இக்கட்டுலேயும், அண்ணா தைரியமா நம்ம ஊருக்குக் கட்டவண்டியில வந்து ஓட்டுக் கேட்டாரு தெரியுமாடே”ன்னு அப்பா சொல்லும்போது புல்லரிக்கும். “அண்ணாவா?”ன்னு கேட்கும்போதே, “கலைஞரும் வந்திருக்காரு. ஒன் உடப்பிறந்தாளுக்கு தேன்மொழின்னு பேர் வெச்சதே அவர்தாம்”னு சொல்லி, கூடக்கொஞ்சம் ஆச்சரியப்படுத்துவாரு.

“அன்னைக்கு நம்ம ஊர்ல செரியான மழ. பொழுதும் சாஞ்சிருச்சி. அய்யய்யோ! ஜெயலலிதா வருவாங்களா, வர மாட்டாங்களான்னு நாங்கல்லாம் தவிச்சிக்கிட்டு இருந்தோம். மழ வெறிச்சதும் வந்தாங்க. போக்கஸ் லைட் வெச்சிருந்ததுக்கும் அதுக்கும் அந்தம்மா முகம் ச்சும்மா தகதகன்னு தங்கத் தட்டு மாரி ஜொலிச்சிச்சி. கரெக்ட்டா செட்டுக்காரன் போட்டாம் பாரு ஒரு பாட்டு. ‘மஞ்சள் முகமே வருக… மங்கள விளக்கே வருக’ன்னு” பரவசத்தோட சொன்னாரு சோத்தாங்கையில வாச்சு கெட்டியிருந்த எம்ச்சாரு (ராமச்சந்திரன்) மச்சான்.

வீடு தேடி வருதுல்லா

வெறும் எழநூறு ஓட்டு இருக்க நம்ம ஊருக்கா அவ்ளோ பெரிய ஆளுகல்லாம் வந்தாங்கன்னு ஆச்சரியமா இருக்கும். இந்தக் கதைய நான் கேட்ட காலத்துலகூட பெருந்தலைகள் எல்லாம் ஊராட்சி ஒன்றியத் தலைநகரான ஆலங்குளம் வரைக்கும் வந்துக்கிட்டுதான் இருந்தாங்க. இப்ப எல்லாம் அவங்க திருநெல்வேலிக்காவது வருவாங்களா, இல்ல மதுரையோட திரும்பிடுவாங்களான்னு ஆயிடுச்சி. கேட்டா, ‘தலைவர்களுக்குப் பதிலாத்தான் துட்டு வீடு தேடி வருதுல்ல?’ம்பாங்க.

அழகிரி அண்ணன் வித்தை

தேர்தல் தொடங்குன காலத்துலயே துட்டு குடுக்குற வழக்கம் இருந்திருக்குன்னாலும், அத திருமங்கலம் இடைத்தேர்தல்லயும், மதுரை மக்களவைத் தொகுதியிலயும் ‘முறைப்படுத்துனது’ அழகிரி அண்ணன்தான். ‘நீ கத்துக்கிட்ட வித்தை எல்லாம் சரியான சந்தர்ப்பத்துல மறந்துபோகும்’னு கர்ணனுக்கு பரசுராமர் சாபம் விட்டமாரி, அண்ணனோட வித்தைய சட்டசபை தேர்தல்ல பயன்படுத்த முடியாத மானிக்கு எலெக்‌ஷன் கமிஷன் கட்டைய போட்டுருச்சி.

முன்னத்தி ஏறு போற வழியிலதான பின்னேறு போவும். திருமங்கலம் ஃபார்முலாவை ‘பிரதமர் தேர்தல்’ வரைக்கும் கொண்டுபோனாங்க ஆளுங்கட்சிக்காரங்க. இதையெல்லாம் பாத்து வைகோ மாரியான ஆட்கள் பூராம், “ஜனநாயகம் கேலிக் கூத்தாயிடுச்சி. இனிமே பணம் இருந்தாத்தான் போட்டி போடவே முடியும்”ன்னு புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க.

வாஷிங் பவுடர் நிர்மா…

கலி முத்துனதும் காப்பாத்த வார கண்ணபிரான் மாரி, இதையெல்லாம் மாத்த வந்தாரு நரேந்திர மோடி. துட்டை ஊர்க்காரனுக்குக் கொடுத்து தூத்தரிக்கிறதுக்குப் பதிலா வௌம்பரக் கம்பெனிக்குக் குடுத்தாரு. “வாஷிங் பவுடர் நிர்மா… வாஷிங் பவுடர் நிர்மா…” விளம்பரம் பிரபலமான மாரி, “மோடி வந்தா இந்தியா வளந்திரும், மோடி வந்தா இந்தியா வல்லரசாயிடும்”னு ஆளாளுக்குப் பாட்டுப்பாட ஆரம்பிச்சிட்டாங்க. தேர்தல் செலவு பண்ண முடியாத குட்டித் தலைவர்களும் கூடசேந்து பாடுனாங்க.

அப்புறம் என்ன? ‘கட்சிக் கொள்க, சாதன எதயும் சொல்லாம தன்னய மட்டுமே பிரதானப்படுத்தி ஜெயிக்க முடியும்’னு மோடி காட்டிட்டாரு. ‘அப் கி பார் மோடி சர்க்கார்’ங்கிற அவரோட வெற்றிக் கத, ஸ்டாலின், அன்புமணி மாரியான ‘இளைஞர்’களுக்குப் பெரிய உந்துசக்தியாகிடுச்சி. இப்ப நடக்கிற கூத்தெல்லாம் அதோட விளைவுதான்!

நாகர்கோவில்ல ஆட்டோவுல போற ஸ்டாலின், திடீர்னு மதுரையில சைக்கிள் ஓட்டுறாரு. ஊட்டியில டான்ஸ் ஆடுறாருன்னு ஒரே கலாட்டா. “ஸ்டாலின் பண்ற காமெடியால எங்களுக்கு நல்லா பொழுதுபோகுது”ன்னு சொல்ற அன்புமணியோட பேச்சக் கேட்டா, இன்னும் பிரமாதமா பொழுதுபோகுது. அவரோட வெப்சைட்டுக்குள்ள போனா, “முதலில் அவர்கள் உன்னைப் புறக்கணிப்பார்கள், பிறகு உன்னைப் பார்த்துச் சிரிப்பார்கள், உன்னோடு சண்டை போடுவார்கள். ஆனால், கடைசியில் நீதான் ஜெயிப்பாய்”னு சிரிப்புக்காட்டுதாங்க.

மாற்றம் முன்னேற்றம்

ஒரு இங்கிலீஷ் படத்தை ஏற்கெனவே ஒருத்தர் இந்தியில காப்பியடிச்சிருப்பார். அதப் பாத்து ஒருத்தர் தமிழுக்கு சுடுவார். இந்த ரெண்டு விஷயமும் தெரியாம இன்னொருத்தர் நேரடியா இங்கிலீஷ் படத்தையே தமிழ்ப் படமாக்கிடுவார் பாருங்க... அந்த மாரி, ஒருத்தர் மோடியைப் பார்த்து ஊர் ஊரா சுத்திக்கிட்டு இருக்கும்போதே, இன்னொருத்தர் நேரடியா ஒபாமாகிட்டயே ஆட்டயப் போட்டு, ‘மாற்றம் முன்னேற்றம்’னு ஆரம்பிச்சிட்டாரு.

மோடியும் ஒபாமாவுமே கம்முன்னு இருக்காங்க. ஆனா இவங்க, என்னமோ தாங்களே யோசிச்சிக் கண்டுபிடிச்ச விஷயத்த இன்னொருத்தர் காப்பியடிச்ச மாரியே சண்ட போட்டுக்கிறாங்க. இந்தக் கொடுமய எங்க போய்ச் சொல்ல?

மோடியோட தேர்தல் ஸ்டண்ட்களை ஆஹோ ஓஹோன்னு புகழ்ந்துதள்ளிய மீடியாக்கள், ஸ்டாலினைக் கண்டுக்கிடலைன்னு கோவப்பட்டுருக்காரு துரைமுருகன். அவரோட அறிக்கையப் படிச்சா ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்துல கவுண்டமணியப் பாத்து செந்தில் கேட்குற டயலாக் ஞாவகத்துக்கு வருது. “அண்ணன் நீங்க எவ்வளவு நல்லவரு. ஆனா, அண்ணி உங்கள மாரி இல்லண்ணே”.

திமுக முதமுதல்ல ஆட்சியைப் பிடிச்ச 1967 தேர்தல்ல, அண்ணா எம்எல்ஏ பதவிக்கே போட்டியிடல. எம்பிக்கு நின்ன அவரைப் பிடிச்சாந்து, முதல்வர் சீட்ல உக்கார வெச்சாங்க. அப்படிப்பட்ட கட்சியில இருந்துக்கிட்டு, நான்தான் முதல்வர்னு சொல்றது நல்லாவா இருக்கு?

எனக்கு தேசிய, மாநில அரசியலப் பத்திக்கூடக் கவலயில்லங்க. அது எவ்வளவு அடிச்சாலும் தாங்கும். ஆனா, பஞ்சாயத்துத் தேர்தல நெனச்சாதான் பயமாருக்கு. ஏன்னா, நம்ம பஞ்சாயத்து தலைவர்களுக்கு அரசியல்வாதிங்கதான ரோல் மாடல். அவங்கள மாரியே கார் வாங்குறது, ஓட்டுக்குத் துட்டு குடுக்குறதுன்னு ஈயடிச்சான் காப்பியடிக்க ஆரம்பிச்சிட்டாங்க பாருங்க, அதாம்!

இந்த வௌம்பர யுகத்துல பஞ்சாயத்துத் தேர்தல் எப்படியிருக்கும்னு கற்பன பண்ணிப் பாருங்க. ஒவ்வொரு ஊர்லயும் ரேடியா செட்டுக்காரனும், கம்ப்யூட்டர் சென்டர்காரனும் சேந்து ‘கிங்மேக்கர் ஏஜென்ஸி’ன்னு ஒரு வௌம்பரக் கம்பெனி ஆரம்பிப்பான். “அண்ணாச்சி! இனிமே நீங்க பெட் காபில்லாம் குடிக்கப்பிடாது. விடியக்காலயிலயே நம்ம சக்திவேல் கடைக்குப் போய்தான் சாயா குடிக்கணும். டீ குடிச்சதும் கொல்லைக்குப் போயிடணும்னு அவசரப்படுறவங்கள நிறுத்தி… நிதானமா குறைகளக் கேட்கணும். தண்ணி தவிச்சா, வீட்டுக்கு வெளிய வந்து அடிகுழாய்ல அடிச்சிப் பார்த்துட்டு, ச்சே... வெறும் காத்துதான் வருது. நம்ம ஊரு பொண்டு பொடுசுங் கல்லாம் பாவம். இதுக்கு ஒரு தீர்வு கண்டேயாகணும்னு மக்கள் மத்தியில சூளுரைக்கணும்” என்று சகட்டுமேனிக்கு வகுப்பெடுத்து அனுப்புவாங்க.

அப்புறம் அவ்ளோதான்

அதுமட்டுமா? ஃபேஸ்புக்ல வீரன்மாடசாமி 4பிபின்னு தனிப் பக்கம் திறப்பாங்க. (அதென்ன? பிபிங்கிறீங்களா? பஞ்சாயத்து பிரெசிடெண்ட்!) நினைக்கவே பயமா இருக்குது.

“தம்பி நிப்பாட்டு. வாரா வாரம் கருத்துச் சொல்றேன்னு கழுத்தறுப்பியே, இந்த வாரம் ஒண்ணுத்தயும் காணோமே”னு நீங்க கேக்கறது புரியுது.

தேர்தல் காலம் நெருங்குது மக்களே, ஜாக்கிரதையா இருங்க. பயிற்சி பெற்ற ஆசாமிக உங்க ஊர் டீக்கடையிலும் உட்கார்ந்திருக்கலாம். இந்த ஆள எங்கயோ பாத்த மாரி இருக்கேன்னு வாயக் கொடுத்திடாதீங்க, அப்புறம் அவ்ளோ தான்!

- கே.கே. மகேஷ்,

தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

கே.என். ராமசந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x