பி.கிருஷ்ணமூர்த்தி: அபூர்வக் கலைஞர்

பி.கிருஷ்ணமூர்த்தி: அபூர்வக் கலைஞர்
Updated on
3 min read

நவீனத் தமிழ் இலக்கிய இயக்கமானது, கலை இலக்கிய சிந்தனை இயக்கமாக 1960-70களில் தீவிர முகம் கொண்டது. அப்போது நவீனக் கலை, தெருக்கூத்து முதலிய நாட்டார் கலைகள், நவீன அரங்கக் கலை, நவீன சினிமா என ஒன்றுக்கொன்று ஒத்திசைவு பெற்ற கலை இயக்கமாக அது வடிவம் பெற்றது. இவ்வியக்கத்தின் தொடக்க சக்திகளில் முக்கியமானவர் கிருஷ்ணமூர்த்தி. நவீனத் தமிழ் இலக்கிய வெளியில் வந்திணைந்த முதல் நவீன ஓவியர். நவீனக் கலை, அரங்க வடிவமைப்பு, அரங்க நெறியாள்கை, சினிமாவில் கலை இயக்குநர் என அந்த இயக்கத்தின் சகல குணாம்சங்களோடும் சீரான வளர்ச்சிப் பாதையில் அவருடைய கலை வாழ்வு இயங்கியது.

1966-ல் ‘இலக்கியச் சங்கம்’ என்ற அமைப்பை ‘க்ரியா’ ராமகிருஷ்ணன், சா.கந்தசாமி, ந.கிருஷ்ணமூர்த்தி, ம.ராஜாராம் என்ற நான்கு இளைஞர்கள் இணைந்து உருவாக்கினார்கள். ஓவியர் பி.கிருஷ்ணமூர்த்தி இந்த அமைப்போடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அவருடைய யோசனைப்படி, இந்த அமைப்பின் ஒரு கூட்டத்துக்கு மலையாளக் கலை இலக்கிய இயக்கத்தின் தனித்துவமிக்க ஆளுமையான எம்.கோவிந்தன் அழைக்கப்பட்டார். எம்.கோவிந்தன் உரையாற்றிய ‘இலக்கியச் சங்கம்’ கூட்டத்தில் தமிழக நவீனக் கலைஞர்களான ஆதிமூலம், ஆர்.பி.பாஸ்கரன், சி.தட்சிணாமூர்த்தி, பி.கிருஷ்ணமூர்த்தி, வரதராஜன் போன்ற இளம் ஓவியர்கள் கலந்துகொண்டனர். உறவு தொடங்கியது. தொடர்ந்தது.

முன்னோடி ஓவியர்

1968-ல் ‘இலக்கியச் சங்கம்’ வெளியிட்ட ‘கோணல்கள்’ சிறுகதைத் தொகுப்பின் முகப்பாக, ஓவியர் பி.கிருஷ்ணமூர்த்தியின் லினோ-கட் அமைந்தது. இதுதான் நவீனத் தமிழ்ப் புத்தகமொன்றுக்கு நவீன ஓவியப் படைப்பொன்று முகப்பாக இடம்பெற்ற முதல் நிகழ்வு. 1968-ல் சி.மணியும் அவரது நண்பர்களும் தொடங்கிய ‘நடை’ இதழ்தான் இலக்கிய–ஓவியப் படைப்பாளிகள் இணைந்து பங்காற்றிய முதல் சிறுபத்திரிகை. இவ்விதழிலும் அதனைத் தொடர்ந்து வெளிவந்த அக்காலகட்டத்திய சிறுபத்திரிகைகளிலும் கிருஷ்ணமூர்த்தியின் சித்திரங்கள் வெளிவந்தன.

1943, செப்டம்பர் 8-ல் காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த பி.கிருஷ்ணமூர்த்தி சிறு வயது முதல் கொண்டிருந்த ஓவிய ஆர்வமும் ஓவியர் சில்பியின் அறிமுகமும் எஸ்.தனபால் அளித்த பயிற்சியும் வழிநடத்த 1960-ல் சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார். கே.சி.எஸ்.பணிக்கர் அக்கல்லூரியின் முதல்வராக இருந்த காலமது. பணிக்கர் காலத்தில் கோட்டோவியங்களில் சென்னைப் பள்ளி ஓவியர்கள் அபாரத் திறன் பெற்றனர். சென்னைப் பள்ளியின் சிறப்பம்சமாக இத்தன்மை நிலைபெற்றது. பொதுவாக, கோட்டோவியத்தில் ஒரு வரையறைக் கோடாக இருந்த நிலை மாறி, கோடு அர்த்தம் பொதிந்த ஒரு மொழியாக இயங்கத் தொடங்கியது.

தன்னுடைய கல்லூரிப் பருவ ஆறு ஆண்டுகள் (1960-66) கிருஷ்ணமூர்த்தி கடும் உழைப்பாலும், தீவிரமான பயிற்சியாலும் தன்னை ஆளாக்கிக்கொண்ட காலம். சக மாணவர் ஆதிமூலத்தோடு இணைந்து அறிதல் பயிற்சிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டார். கோடு ஓர் இயங்கு சக்தியாக அவருடைய ஓவிய வெளியில் உயிர்ப்பு பெற்றது. வளைவு, நெளிவு, சுழிப்பு, அறுபடுதல், நீள்தல் என கோடு, சுதந்திரமாகப் படைப்புவெளியில் இயங்கத் தொடங்கியது. 1960களில் ‘மெட்ராஸ் மூவ்மென்ட்’ என அறியப்பட்ட ஒரு நவீன கலை இயக்கம் தீர்க்கமான கதியில் இயங்கி இந்தியாவின் நவீன ஓவியப் போக்கில் பெரும் மாறுதலைக் கொண்டுவந்தது. இந்தியக் கலையின் சாரமாக எது இருக்கிறதோ அதுவே நவீனக் கலையின் உயிர்ப்பாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்தியலை முன்வைத்துச் செயல்பட்டார் பணிக்கர்.

மரபின் சாரம்

இவ்வியக்கத்தின்போது, காலனிய செல்வாக்கும் ஆதிக்கமும் இந்தியக் கலை அரங்கிலிருந்து வெளியேறின. நம் செழுமையான கலை மரபின் சாரமே நவீனக் கலையின் உயிர்ப்பாக அமைய வேண்டுமென்பது உணரப்பட்டது. இக்கோட்பாட்டின் லட்சிய உருவகமாகத் தன் படைப்புவெளியை அமைத்துக்கொண்டவர் கிருஷ்ணமூர்த்தி. தென்னிந்தியக் கோயில் சிற்பங்களும் புராணக் கதையாடல்களும் இந்திய இசையும் நடனமும் இவருடைய கோட்டோவியங்களுக்கும் வண்ண ஓவியங்களுக்கும் உந்துதல்களாக அமைந்தன. இவருடைய நவீனமென்பது, மரபின் நீட்சியாக அமைந்த தனித்துவம் கொண்டது. கோயில் சிற்பங்கள், சுவரோவியங்கள் போன்ற நம் கலை மரபுகளின் தொடர்ச்சியுடன் தனித்துவ ஆற்றலும் கொண்டவை இவருடைய நவீனப் படைப்புகள்.

எனக்கு அறிமுகமான முதல் நவீன ஓவியர் கிருஷ்ணமூர்த்திதான். என்னுடைய 23, 24 வயதுக் காலத்தில் அவருடனான சந்திப்பு நிகழ்ந்தது. 1975-76 காலகட்டத்தில், மூத்த ஓவியர் எச்.வி.ராம்கோபாலின் ஓவியக் கண்காட்சி ஒன்றை மதுரையில் நடத்தும் முகாந்திரத்துடன் அவர் வந்திருந்தார். அக்காலகட்டத்தில் சென்னைக்கு வெளியே வேறு நகரமொன்றில் மூத்த கலைஞர்களின் ஓவியக் கண்காட்சி நடத்துவதற்கு அரசு நிதியுதவி செய்தது. கல்லூரியில் ஆசிரியராக இருந்தவரும் மூத்த கலைஞருமான ராம்கோபால் உடல் நலம் குன்றியிருந்ததால் அவருக்கு நிதி உதவி செய்யும் வகையில் கிருஷ்ணமூர்த்தி இக்காரியத்தை முன்னெடுத்திருந்தார். க்ரியா ராமகிருஷ்ணன் அவருக்குத் தேவையான உதவிகள் புரியும்படி எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். அவருடைய அந்த வருகையின்போது, மதுரை பாண்டியன் ஹோட்டலில் அமைந்திருந்த ஒரு நீள் வராந்தாவைக் கண்காட்சிக்கான இடமாகத் தேர்வு செய்தார். சில நாட்களுக்குப் பின் கண்காட்சி நடைபெற்றது. இசைக் கலைஞர்களின் அலாதியான தத்ரூபமும் தொனியழகும் கூடிய ராம்கோபாலின் உருவ ஓவியங்கள் எவரையும் வசீகரிக்கக் கூடியவையாக இருந்தன. காந்தி கிராமப் பல்கலைக்கழகமும் காந்தி அருங்காட்சியகமும் சில ஓவியங்களை வாங்கின. கண்காட்சி சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நாட்களில் வெளிப்பட்ட கிருஷ்ணமூர்த்தியின் கலை வேட்கையும் தீர்க்கமான பார்வையும் அர்ப்பணிப்புணர்வும் அவர்மீது அலாதியான பிரமிப்பை ஏற்படுத்தின. நவீன ஓவியம் பற்றிய என் முதல் அறிதல் அவரிடமிருந்து பெற்றதுதான். அவருடனான நட்பு பலப்பட்டது. அதனையடுத்து நடந்த என்னுடைய திருமணத்துக்கு அவருடைய ஓவியமொன்றைப் பரிசளித்தார்.

துயரம் மிகுந்த இறுதிக் காலம்

தன்னுடைய நவீன ஓவியங்களுக்காகப் பல விருதுகளையும் கெளரவங்களையும் பெற்ற அவருடைய கலைப் பாதை, அரங்க வடிவமைப்பு, நாடக இயக்கம், திரைப்படத்தில் கலை இயக்கம் என விரிந்து செழித்தது. தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் எனப் பல மொழிகளில் 55 படங்களுக்குக் கலை இயக்குநராக அவர் பணியாற்றியிருக்கிறார். ஜீ.வி.ஐயர், கிரிஷ் கார்னாட், பி.வி.கரந்த், பாலு மகேந்திரா, பாரதிராஜா போன்ற பல திரைப்பட இயக்குநர்களோடு பணியாற்றியிருக்கிறார். கலை இயக்கம்-ஆடை வடிவமைப்புக்காக 5 தேசிய விருதுகளும், 5 கேரள அரசு விருதுகளும், 3 தமிழக அரசு விருதுகளும் கிடைத்திருக்கின்றன. எனினும். இவருடைய வாழ்வின் கடைசி சில வருடங்கள் துயரமானவை. உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு உரிய பணமின்றிக் குடும்பம் மிகவும் சிரமப்பட்டிருக்கிறது. கணவன்-மனைவி இருவர் மட்டுமேயான அவருடைய சிறியகுடும்பம் வறுமையில் வதங்கியிருக்கிறது. கடந்தசில வருடங்களாக உடல்நலம் குன்றி அவதிப்பட்டுக் கொண்டிருந்த அவர் தன்னுடைய 77-வது வயதில் டிசம்பர் 13 இரவு காலமானார். காலமெல்லாம் கலை நம்பிக்கையோடும் கலை ஞானத்தோடும் வாழ்ந்த அபூர்வப் படைப்பாளி அவர்.

- சி.மோகன், ‘கமலி’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in