

“நான் இறந்துவிட்டதாக வந்த தகவல்கள் எல்லாம் வதந்திதான். நான் நலமாக இருக்கிறேன்” என்று சில மாதங்களுக்கு முன் மனோரமா பேட்டி கொடுத்தபோது எத்தனை ரசிக உள்ளங்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டன. இனி, அவரால் அப்படிச் சொல்ல முடியாது எனும் செய்தியை சனிக்கிழமை நள்ளிரவில் தொலைக்காட்சி செய்திகள் தெரிவித்தபோது, பலர் மனமுடைந்து நின்றனர். பல பத்தாண்டுகள் தமிழ்த் திரை உலகில் நாயகி அந்தஸ்தோடு வலம்வந்த, பன்முக ஆற்றல் படைத்த நடிகை காலமாகிவிட்டார். மன்னார்குடியில் கோபிசந்தா என்றறியப்பட்டு, பின்னர் செட்டிநாட்டுப் பக்கம் பள்ளத்தூருக்குக் குடிபெயர்ந்து ‘பள்ளத்தூர் பாப்பா’வாகி, பின்னர் மனோரமா என்று பெயரெடுத்து ஆச்சியாக அழைக்கப்பட்ட மனோரமாவுக்கு மரணம் உண்டா என்ன!
அகல விரிந்திருக்கும் கண்களில் மின்னும் ஒளி, அப்பாவி முகவாகு, அசாத்திய உடல் மொழி என்ற வகையில் கருப்பு - வெள்ளைப் படங்களின் காலத்திலேயே நகைச்சுவை நடிகையாக அசத்தியவர் மனோரமா. கவிஞர் கண்ணதாசன் தயாரித்த ‘மாலையிட்ட மங்கை’(1958) படத்தில் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானார். தனது திரைவாழ்வில் எத்தனையோ கலைஞர்களுடன் இணைந்து நடித்தார். 1,000-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கின்னஸ் சாதனை செய்தார். பிற்காலப் படங்களில் உதறலெடுப்பது போன்ற பாவனை, பல குரல்களில் இழுத்து நீட்டி முழக்கும் வசன உச்சரிப்பு, சொந்தக் குரலில் அசத்தலான பாட்டு என்று விஸ்வரூபம் எடுத்தார்.
உச்சரிப்பில் அசத்தியவர்
ஒரு திரைப்படத்தில் அவருக்கு ‘ர’ உச்சரிக்க வராது. லாரியை ‘லாலி’ என்பார். ஒரு காட்சியில் நாகேஷ் கேட்பார், “ஸ்கூல்ல ‘ர’ நடத்தற அன்னிக்கு நீ லீவா?” என்று.
தேங்காய் சீனிவாசனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்திருப்பார். அதில், ‘ஒரு பெரிய மலை. அதில் ஒரு குயில்’ என்ற வசனத்தை அத்தனை நகைச்சுவையாகப் பேசியிருப்பார். அவர் வந்து நின்றாலே ரசிகர்கள், ‘பெய்ய மய்யி அதுல ஒரு குய்யி…’ என்று கத்தத் தொடங்கிவிடுவார்கள். ‘சரஸ்வதி சபதம்’ போன்ற பல படங்களிலும் வித்தியாசமான உச்சரிப்பில் நகைச்சுவையில் அநாயாசமாக நடித்திருப்பார். சென்னை பாஷையைப் பேசுவதிலும் தனித்திறன் காட்டியவர். அவர் பாடிய ‘வா வாத்யாரே வூட்டாண்ட’ என்ற ‘பொம்மலாட்டம்’ படப் பாடல் எந்தக் காலத்திலும் அழியாது. ‘தேன்மழை’ படத்தில் நாகேஷ், சோ இருவருக்கும் போட்டி, யார் மனோரமாவின் காதலை வெல்வது என்று. கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளாமல், இருவரையும் பரிதவிக்க வைப்பார் மனோரமா.
பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த பெண்களை அச்சுஅசலாகத் திரையில் பிரதிபலித்தவர் அவர். ‘சூரியகாந்தி’ படத்தில் பிராமணப் பெண்ணாக நடித்திருப்பார். அப்படத்தில் அவரது குரலில் ஒலிக்கும் ‘தெரியாதோ நோக்கு தெரியாதோ’ என்ற பாடல் மிகச் சிறப்பானது. ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் புதுமுக நடிகராக செட்டில் அறிமுகமாகும் நாகேஷ். இயக்குநராக ரங்காராவ். ‘நாராசம் ததும்பும் உங்கள் நாக்கும்’ என்று தமிழைப் போட்டுக் கொன்று தின்பார்.
திரைப்படங்களில் பெரும் வெற்றிகளைச் சுவைத்த பின்னரும், நாடகங்களில் தொடர்ந்து நடித்தார். கோமல் சுவாமிநாதன் இயக்கத்தில் சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘என் வீடு என் கணவன் என் குழந்தை’ நாடகத்தில் உயிர்ப்பான நடிப்பை வழங்கினார். குழந்தைப் பேறு வாய்க்காத வேதனையை மறைத்தபடி இயல்பாக இருப்பதுபோல் காட்டிக்கொள்ளும் அந்தப் பாத்திரத்தைத் தனது நடிப்பால் மிளிரச் செய்தார்.
1960-களில் ‘காப்பு கட்டிச் சத்திரம்’ எனும் வானொலி நாடகத்தில், தனது அநாயாசமான குரல் பங்களிப்பில் ஏராளமான ரசிகர்களைப் பிரம்மிக்க வைத்தார்.
பன்முகக் கலைஞர்!
‘அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆர்.தான் தாங்கள் வேலைபார்க்கும் விருந்தினர் மாளிகையின் உரிமையாளர் என்று தெரிந்தாலும், அவர் கேட்டுக்கொண்டார் என்பதற்காக உண்மையை வெளியில் சொல்ல முடியாமல் தடுமாறுவார் மனோரமா. குறிப்பாக, அதை நாகேஷிடம் காட்டிக்கொள்ளாது அவரைக் காதலிக்கும் பாத்திரத்தில் அசத்தியிருப்பார். ‘சந்திரோதயம்’ படத்தில், நாகேஷைத் துறவறம் நோக்கித் தள்ளும் மனைவி பாத்திரத்தில் திரையரங்கையே குலுங்க வைத்தார்.
'சம்சாரம் அது மின்சாரம்' படக்காட்சி
என்றென்றும் பேசப்படும் பாத்திரத்தைக் கொடுத்ததற்காக, ஏ.பி. நாகராஜனுக்கு மிகவும் நன்றி பாராட்டிக்கொண்டிருந்தார். அதுதான் ஜில் ஜில் ரமாமணியாக ஊரையே கலக்கி எடுத்த ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தின் பாத்திரம். அவரது நடிப்பை சிவாஜியே ரசித்துக் கவனித்துக்கொண்டிருக்கும் காட்சிகள் அந்தப் படத்தில் நிறைய உண்டு. ‘ஒங்க நாயனத்துலதே(ங்) அப்படி சத்தம் வருதா...?’ என்று அவர் கெஞ்சலோடு சிவாஜியிடம் கேட்பார். குரலிலும் முகபாவத்திலும் அத்தனை வெகுளித்தனம் வெளிப்படும். தன்னை சண்முக சுந்தரத்தோடு (சிவாஜி) இணைத்து மோகனா (பத்மினி) சந்தேகப்படும் இடத்தில் அவர் நியாயம் கேட்டு அடுக்கும் அவரது உதவிப் பட்டியல் அசர வைக்கும். மதுரை காரைக்குடி வட்டார வழக்கை அத்தனை அசலாகப் பயன்படுத்தியிருப்பார்.
‘காசி யாத்திரை’ படத்தில் வி.கே. ராமசாமியை ஏய்க்கும் பாத்திரம். ‘அண்ணன் ஒரு கோயில்’ படத்தில், எவர்சில்வர் பாத்திரத் திருடியாக நடித்திருப்பார். ரயில்நிலையத்தில்
ஏ. கருணாநிதியிடம், ‘கிளி கத்திச்சி, கிளியனூர்னு நெனச்சி எறங்கிட்டேன்’என்று சொல்வார். உடனே கருணாநிதி, ‘ஏம்மா கிளி கத்தினா கிளியனூரு, கோழி கத்தினா கோழியூரா’ என்று கேட்பார்.
விசு இயக்கிய ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் வீட்டு எஜமானரின் சம்பந்தியோடு வாதம் செய்யும் வேலைக்காரப் பெண்மணியாக நடித்திருப்பார் மனோரமா. ‘கம்முனா கம்மு, கம்னாட்டி கோ’ எனும் வசனம் ஒருகாலத்தில் அத்தனைப் பிரபலம்.
‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ படத்தில் அவரது பாத்திரம் ரசிகர்களின் பேரபிமானத்தைப் பெற்றுத் தந்தது. ‘டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே’ என்று ஜொலிக்கும் பாட்டியாக நடித்துக் கலக்கியிருப்பார். சிலம்பம் சுழற்றியபடி வில்லன்களைப் பந்தாடும் காட்சியில், திரையரங்கில் விசில் பறந்தது!
தாய், அத்தை, பாட்டி!
நாகேஷ், சந்திரபாபு, சோ, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், கவுண்டமணி, எஸ்.எஸ். சந்திரன் என்று எத்தனையோ நகைச்சுவை நடிகர்களுடன் நடித்த அவர், ஒரு கட்டத்துக்குப் பின்னர் அண்ணி, அம்மா, பாட்டி உள்ளிட்ட குணச்சித்திரப் பாத்திரங்களில் பரிமளிக்கத் தொடங்கினார். ‘உன்னால் முடியும் தம்பி’, ‘அபூர்வ சகோதரர்கள், ‘இதயம்’, ‘சின்ன கவுண்டர்’, ‘பங்காளி’ என்று நீளும் முடிவற்ற பட்டியல் அது. ‘ஜென்டில்மேன்’ படத்தில் தனது மகனுக்குக் கல்வி கிடைக்கத் தன்னையே நெருப்புக்கு இரையாக்கும் காட்சியில் ரசிகர்களை உறையவைத்தார். எதிர்மறையான பாத்திரங்களையும், நுட்பமான தனது நடிப்புத் திறன் மூலம் சிறக்கச் செய்தார். வி. சேகர் இயக்கிய ‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்’படத்தில் கஞ்சத்தனமான கணவனைச் (கவுண்டமணி) சமாளித்துக்கொண்டு, மறுபுறம் மருமகள்கள் மத்தியில் தனது அதிகாரத்தை நிலைநாட்டும் பாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்.
‘மனோரமா ஒரு பெண் சிவாஜி’ என்று வர்ணித்தார் சோ. அந்த அளவுக்கு நடிப்பில் பல பரிமாணங்களைக் காட்டியவர் அவர். அவரது திறமையை வெளிக்கொணரும் பாத்திரங்களை வழங்கியவர்களில் கமல்ஹாசன் முக்கியமானவர். ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் போலீஸ் ஸ்டேஷனில் அவர் ‘அய்யய்யோ அய்யோ அய்யய்யோ’ என்று கத்தி ஜனகராஜை வெறுப்பேற்றும் காட்சி ஒன்று போதும். ‘ராஜா கைய வச்சா ராங்காப் போனதில்ல’ பாடலுக்கு முன் அவரும் கமலும் தாள லயத்தோடு நடத்தும் வாய்ச் சண்டையை மறக்க முடியுமா!
‘உன்னால் முடியும் தம்பி’ படத்தில் கமலுக்கு அண்ணி வேடத்தில் உணர்ச்சிகர பாத்திரத்தில் பேசும் வசனங்களும் அவருக்கே உரித்தானவை. ‘சவால்’ படத்தில் கமலின் ‘பிக்பாக்கெட்’ கலையைக் கற்றுக்கொடுக்கும் குருவாக நடித்திருப்பார் மனோரமா! ‘அண்ணாமலை’, ‘அருணாசலம்’, ‘மன்னன்’போன்ற படங்களில் ரஜினியோடு நடித்தார் மனோரமா. ‘குரு சிஷ்யன்’ படத்தில் போலீஸ்காரராக வரும் வினுச் சக்ரவர்த்தியின் மனைவி வேடத்தில் அட்டகாசம் செய்திருப்பார்.
‘உன் ராதையைப் பார் போதையிலே கண்ணா’(படம்: பந்தாட்டம்) என்று இருமி இருமி சொந்தக் குரலில் பாடும் வேடமானாலும் சரி, ‘வயசான காலத்தில்’ சத்யராஜைக் காதலிக்கும் வேடத்தில் நடித்த ‘நடிகன்’ படத்தின் பாத்திரமானாலும் சரி, அவரது நடிப்புத் திறன் உச்சத்தில்தான் இருந்தது.
தமிழ் வசன உச்சரிப்பின் திருத்தம், ஏற்ற இறக்கம், நயம் அனைத்தும் அவர் நாவில் குடிகொண்டிருந்தது. ‘புறமுதுகிட்டு ஓடுகையில் அடிபட்டு இறந்தானா என் மகன், அய்யகோ’ என்று பதறி, மார்பில் பாய்ந்த வேல்தான் முதுகைத் துளைத்தது என்று அறிந்து பெருமிதம் பொங்கக் கதறும் புறநானூற்றுத் தாய் வேடத்தில் கலைஞர் வசனத்தை உச்சரிப்பதில் பெயர் பெற்றிருந்தவர் அவர்.
இவ்வுலகம் இருக்கும் வரை, ‘ஏ தில்லான்டோமரி டப்பாங்குத்து ஆட்டம் ஆடுவேன் / ஷோக்காப் பாட்டு பாடுவேன்/ நேக்கா ஓட்டம் ஓடுவேன்' என்று தமிழ் ரசிகர்கள் உள்ளங்களில் நிரந்தரமாக ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் நடித்தபடியும் நிலைத்து நிற்பார் ஆச்சி எனும் கலையுலக அரசி!
- எஸ்.வி. வேணுகோபாலன், எழுத்தாளர்,
தொடர்புக்கு: sv.venu@gmail.com