Published : 11 Dec 2020 07:29 AM
Last Updated : 11 Dec 2020 07:29 AM

ஒவைஸி என்றொரு தவறான வழிகாட்டி

மொஹம்மது அயூப்

பிஹாரில் ஐந்து தொகுதிகளில் ஒவைஸியின் ‘ஆல் இந்தியா மஜ்லிஸே இத்திகாதுல் முஸ்லிமீன்’ கட்சி (ஏஐஎம்ஐஎம்) வென்றது தேர்தல் முடிவுகளில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தக் கட்சியின் வெற்றி ‘மகா கூட்டணி’க்குப் பாதிப்பை ஏற்படுத்தியது. முஸ்லிம் மக்கள்தொகை குறிப்பிடத் தகுந்த அளவில் இருக்கும் வங்கத்திலும், பிறகு உத்தர பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதன் மூலம் தன் கட்சியைத் தேசிய அளவில் விரிவாக்குவது தொடர்பிலான முஸ்தீபுகளில் அசதுதீன் ஒவைஸி இப்போது இருக்கிறார்.

தவறான மதிப்பீடு

பாஜகவின் செயல்பாடுகள் மீது கடுமையான விமர்சனம் வைப்பவர் ஒவைஸி. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை அது மீறுகிறது என்று அவர் கூறுகிறார். ஆனால், ‘மதச்சார்பற்ற’ கட்சிகளின், குறிப்பாக காங்கிரஸின், ‘கபட வேட’த்தைத் தோலுரித்துக் காட்டுவதே தன்னுடைய பிரதான நோக்கம் என்று அவர் கூறுகிறார். பாஜக என்ற அச்சுறுத்தலைக் காட்டியே பல தசாப்தங்களாகத் தங்களை ரட்சகராக முன்னிறுத்தி முஸ்லிம்களை காங்கிரஸ் சுரண்டியது என்று ஒவைஸி கூறுகிறார். எனினும், இந்தக் கட்சிகள் முஸ்லிம்களின் சமூக-பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு ஏதும் செய்திருக்கவில்லை என்றும், இவை ஆட்சியில் இருந்தபோது முஸ்லிம்கள் அரசியல்ரீதியாக அதிகாரம் பெறச் செய்வதற்கு ஏதும் செய்யவில்லை என்றும் ஒவைஸி கூறுகிறார்.

ஒவைஸியின் குற்றச்சாட்டுகள் முஸ்லிம்களின் சமூக-பொருளாதார நிலைமையைக் கண்டறிவதற்கான சச்சார் குழுவின் கண்டறிதல்களோடு பொருந்திப்போகின்றன. அந்த அறிக்கை 2006-ல் வெளியானது. அரசுப் பணிகளில் முஸ்லிம்கள் மிக மிகக் குறைவாகவே பணிபுரிகிறார்கள் என்பதை அந்த அறிக்கை சான்றுகளுடன் நிறுவியது. உயர் சாதி இந்துக்கள், இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த இந்துக்களை விடவும் முஸ்லிம்கள் அதிக ஏழ்மை நிலையில் உள்ளார்கள் என்பதையும் அவர்களின் பொருளாதார நிலைமை நகர்ப்புறங்களில் உள்ள பட்டியலினத்தோர், பழங்குடியினரை விட மோசமாக இருக்கிறது என்பதையும் அந்த அறிக்கை கூறியது.

ஒவைஸி முன்வைக்கும் தீர்வு

முஸ்லிம்களின் நிலைமை மீது ‘மதச்சார்பற்றக் கட்சி’களின் பாராமுகம் குறித்தும், அவர்களை வெறும் வாக்கு வங்கியாக அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்தும் ஒவைஸி கூறுவது சரியாக இருக்கும் அதே நேரத்தில் அதற்கு அவர் முன்வைக்கும் தீர்வானது அந்தப் பிரச்சினையை மேலும் மோசமாக ஆக்கவே செய்யும். முஸ்லிம்களின் சமூக-பொருளாதார நிலைமைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்களின் குடிமை, அரசியல் உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரும் பிரத்யேக முஸ்லிம் கட்சியாக ‘ஏஐஎம்ஐஎம்’ கட்சியை நாடு முழுக்க விரிவுபடுத்துவதுதான் முஸ்லிம்களின் மோசமான நிலைமைக்கு ஒவைஸி முன்வைக்கும் தீர்வாகும்.

ஒவைஸி இந்தத் தீர்வின் எதிர்மறை விளைவுகளை மிகவும், ஒருவேளை வேண்டுமென்றே, குறைத்து மதிப்பிட்டுவிட்டார். முஸ்லிம்கள் அதிகமாக உள்ள தொகுதிகளில் ‘ஏஐஎம்ஐஎம்’ கட்சி சிலவற்றில் வெற்றி பெறலாம் என்றாலும், அது பாஜக அல்லாத கட்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக் கூடியதாகவே அமையும்; இவ்வாறாக, பாஜகவும் அதன் கூட்டணிகளும் தேர்தல்களை எளிதில் வெல்வதற்கு இது வழிவகுத்துவிடும். இந்த உத்தி பெருமளவில் பிளவு ஏற்படுத்துவதாக மாறி இந்துக்கள் அதிக அளவில் பாஜகவின் பின்னால் திரள்வதற்கும் காரணமாகிவிடும். இப்படியாக, அரசியல் அரங்கில் சிறுபான்மை முஸ்லிம்களை மேலும் மேலும் அது விளிம்பு நிலைக்குத் தள்ளிவிடும்.

தொடரும் பிளவுகள்

மேலும் மேலும் பிளவுபட்டுவரும் சமூகத்தில் பெரும்பான்மைவாதத்தால் ஏற்படும் விளைவுகள் ‘மதச்சார்பற்ற கட்சி’களுக்கு மீட்சியற்ற வகையில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்; கூடவே, இந்த தேசத்தைப் பற்றிய பன்மைத்துவக் கருத்துக்கும், பெரும்பான்மைவாதக் கருத்துக்கும் இடையில் அவர்கள் முன்வைக்கும் ஒரு பாலத்தை – அது எவ்வளவு குறைபட்டதாக இருப்பினும் – பெரும்பான்மைவாதம் நீக்கிவிடும்.

இந்தப் பின்விளைவு பிஹாரில் தெளிவாகத் தெரிந்தது. ஏஐஎம்ஐஎம் கட்சி சீமாஞ்சலில் கணிசமான முஸ்லிம் வாக்குகளைப் பெற்று மகா கூட்டணியின் பெரும்பான்மை பெறுவதற்கான வாய்ப்புகளைக் கெடுத்தது. சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கிக்கொண்டிருக்கும் வங்கத்திலும் இதே கதை திரும்பவும் நடப்பதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. வங்கத்தில் நடைபெறும் போட்டியைப் பொறுத்தவரை அது பிரதானமாக திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையிலானதாக இருக்கும். 2019 மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 22 தொகுதிகளை வென்றது, பாஜக 18 தொகுதிகளை வென்றது. பாஜகவின் வாக்கு விகிதம் திரிணமூல் காங்கிரஸின் வாக்கு விகிதத்தைவிட 3%-தான் குறைவாக இருந்தது. திரிணமூல் காங்கிரஸிடமிருந்து வெறும் 2% வாக்குகள் நகர்ந்தால்கூட வங்கத்தில் பாஜக அரசு அமைவதற்கு வாய்ப்பாகிவிடும். கடந்த காலத் தேர்தல்களில் திரிணமூல் காங்கிரஸ் பெரு வெற்றி பெற்ற முர்ஷிதாபாத், மால்டா, வடக்கு தினாஜ்பூர் போன்ற தொகுதிகளில் கணிசமான முஸ்லிம்களின் வாக்குகளை ஏஐஎம்ஐஎம் கட்சி பெற்றால், அங்கே பாஜக ஆட்சி அமைவது அடுத்த ஆண்டு நிதர்சனமாகிவிடும்.

பாலங்களை ஏற்படுத்துதல்

ஏஐஎம்ஐஎம் கட்சியின் ஒருசில எம்எல்ஏக்கள் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்காகக் கூக்குரல் விடுத்தால் மட்டும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. பாலங்களை ஏற்படுத்துவதுதான் தற்போதைய தேவையே தவிர அவற்றை இடிப்பது அல்ல. செய்ய வேண்டியது என்னவென்றால் ‘மதச்சார்பற்ற கட்சி’களுக்கு அழுத்தம் கொடுப்பதுதானே தவிர ஏஐஎம்ஐஎம் கட்சியால் சில இடங்களை வெல்ல முடியும் என்பதற்காக மட்டுமே அந்தக் கட்சிகளை உதாசீனப்படுத்துவதல்ல. ஒவைஸி மிகச் சிறந்த களவீரர்; எனினும், அவர் ஒரு தவறான மீட்பர்; இந்திய முஸ்லிம்களுக்கு அவர் முன்வைக்கும் தீர்வானது அந்தப் பிரச்சினையைவிட மோசமானது. இன்று இந்திய முஸ்லிகளுக்குத் தேவை மௌலானா ஆஸாதே தவிர முகம்மது அலி ஜின்னாவைப் போன்ற இன்னொரு தவறான மீட்பர் அல்ல.

- மொஹம்மது அயூப், சர்வதேச உறவுகளுக்கான பேராசிரியர், மிஷிகன் மாநிலப் பல்கலைக்கழகம், அமெரிக்கா.

© ‘தி இந்து’, தமிழில்: ஆசை

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x