

இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் தந்தையாகக் குறிப்பிடப்படும் ஃபக்கீர் சந்த் கோலியின் (1924-2020) நிறைவாழ்வு, தொழில்முனைவோரும் தொழில்நுட்பத் துறையினரும் முன்மாதிரியாகக் கொள்ளத்தக்கது. மென்பொருள் சேவைப் பணித் துறையில் மிகப் பெரும் நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீஸஸை (டிசிஎஸ்) நிறுவி, அதன் முதலாவது தலைமைச் செயலதிகாரியாக முப்பதாண்டு காலம் பொறுப்பேற்றிருந்தவர் அவர்.
இன்று இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் சந்தை மதிப்பில் முதலிடத்தில் இருக்கும் நிறுவனம் என்பதோடு, டாடா குழுமத்தின் மதிப்புமிக்க நிறுவனமாகவும் விளங்கிவருகிறது டிசிஎஸ். டாடா குழுமத்தின் மற்ற நிறுவனங்களில் மட்டுமின்றி, வேறு சில நிறுவனங்களிலும் கூட்டமைப்புகளிலும் முக்கியப் பொறுப்புகளை வகித்திருக்கிறார் எஃப்.சி.கோலி.
தற்போது பாகிஸ்தானில் அமைந்திருக்கும் பெஷாவர் நகரத்தில் பிறந்து வளர்ந்தவர் கோலி. கனடாவின் க்வீன்’ஸ் கல்லூரியில் இயந்திரப் பொறியியலில் இளங்கலைப் பட்டமும், அமெரிக்காவின் மாசசூசிட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். படிப்பை முடித்தவுடன் அமெரிக்காவில் சில காலம் பணிபுரிந்த அனுபவங்களுடன், ஐம்பதுகளின் தொடக்கத்தில் இந்தியா திரும்பினார். டாடா மின் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து அந்நிறுவனத்தின் இயக்குநராகவும் பொறுப்புவகித்தார்.
அப்போது மின்சார அமைப்புகளை இயக்கும் பணிகளில் நவீன பொறியியலின் மேலாண்மை தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியதற்காக இன்றும் நினைவுகூரப்படுகிறார். மும்பைக்கும் புணேவுக்கும் இடையிலான மின் தடத்தைக் கணினியைக் கொண்டு கட்டுப்படுத்தும் அமைப்பொன்றை அவர் உருவாக்கினார். உலகிலேயே அத்தகைய ஒரு கட்டமைப்பை உருவாக்கிய மூன்றாவது நிறுவனமாக டாடா மின் நிறுவனம் பெயர்பெற்றது.
தொழில்நுட்ப வளர்ச்சியில் கோலி
அதைத் தொடர்ந்தது டாடா குழுமத் தலைவர் ஜே.ஆர்.டி.டாடா கேட்டுக்கொண்டதன் பெயரில் 1969-ல் டிசிஎஸ் நிறுவனத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தார். முதலில் டாடா குழும நிறுவனங்களுக்கு மட்டுமே மென்பொருள் சேவைகளை வழங்கிவந்த டிசிஎஸ், 1972-க்குப் பிறகு மற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் ஈடுபடத் தொடங்கியது. இன்று தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகளவில் மூன்றாவது பெரிய நிறுவனம் அது.
டாடா குழுமத்தின் 70% வருமானம் டிசிஎஸ் நிறுவனத்திலிருந்தே கிடைக்கிறது. இந்தியாவின் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியில் ஒரு நிர்வாகியாக மட்டுமல்ல; ஒரு கல்வியாளராகவும் அவரது பங்களிப்பு முக்கியமானது. 1959-ல் கான்பூரில் ஐஐடி தொடங்கப்பட்டபோது அதன் தலைவர் பி.கே.கெல்கர் கேட்டுக்கொண்டதன்படி, அவரே பேராசிரியர்களைத் தேர்ந்தெடுத்து பணியமர்த்தினார்.
புணே பொறியியல் கல்லூரியின் தன்னாட்சி அதிகாரத்துக்கான அழுத்தங்களை உருவாக்கியதோடு, அந்தக் கல்வி நிறுவனத்தின் நிர்வாகக் குழுத் தலைவராகவும் பொறுப்புவகித்திருக்கிறார். இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான வாய்ப்புகள் உருவாகத் தொடங்கிய காலத்தில் இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கணினி அறிவியல் படிப்புகள் தொடங்கப்படுவதற்கும் கோலி காரணமாக இருந்தார்.
1970-களில் அத்தகைய முயற்சிகளை அவர் மேற்கொண்டபோது கல்வி நிறுவனங்களிடம் மட்டுமல்ல; அரசாங்கத்திடமும் அவர் பல்வேறு உறுதிமொழிகளை அளிக்க வேண்டியிருந்தது. முக்கியமாக, புதிய தலைமுறைக் கணினிகளை இறக்குமதி செய்தபோது, டிசிஎஸ் தனது சேவைப் பணிகளின் வாயிலாக அந்நியச் செலாவணியைப் பெற்றுத்தரும் என்று தனிப்பட்ட முறையில் அரசாங்கத்திடம் பேச வேண்டியிருந்தது.
உலகத்தரத்தில் ஆராய்ச்சி நிறுவனம்
புணேயில் அவர் உருவாக்கிய மென்பொருள் தொழில்நுட்பங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் உலகத்தரம் கொண்டது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விநியோகிக்கும் வகையில் கணினி சாதனங்களின் உற்பத்திப் பிரிவு ஒன்றையும் அவர் தொடங்கினார். 90-களின் இறுதியில் தகவல் தொழில்நுட்பத் துறை ‘ஒய்டூகே’ சிக்கலை எதிர்கொண்டபோது தனது ஆராய்ச்சி மையக் கட்டமைப்புகளிலிருந்து தீர்வுகளை வழங்கியது டிசிஎஸ். 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் 100க்கும் மேற்பட்ட கிளைகளுடன்
இயங்கிவருகிறது இந்நிறுவனம்.
தகவல் தொழில்நுட்பத் துறையினரின் கூட்டமைப்பான நாஸ்காம் தலைவராக 1995-96 ஆண்டுகளில் பொறுப்புவகித்தார் கோலி. இந்திய சேவைப் பணித் துறையில் அது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு உலகளாவிய வாய்ப்புகள் வந்துசேர அவர் ஒரு முக்கியக் காரணமாக இருந்தார். இன்று இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் மதிப்பு 190 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வளர்ச்சி பெற்றிருக்கிறது.
பத்மபூஷன் கோலி
1999-ல் தனது 75-வது வயதில் டிசிஎஸ் நிறுவனத்திலிருந்து ஓய்வுபெற்றார் கோலி. எனினும், வயதுவந்தோருக்கான கல்வி வாய்ப்புகள், நீர் சுத்திகரிப்பு, பிராந்திய மொழிகளில் கணினிப் பயன்பாடு என்று அவரது பல்துறைப் பங்களிப்புகள் மேலும் இருபது ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. இந்திய மென்பொருள் துறைக்கு அளித்த பங்களிப்புகளைப் பாராட்டி 2002-ல் கோலிக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவிலும் முன்னணி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் அவருக்கு கௌரவப் பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தன.
கோலியின் திட்டமிட்ட உழைப்பும் அவரால் உருவான புதிய வாய்ப்புகளும் ஆர்வமும் திறமையும் கொண்ட மற்ற தொழில்முனைவோரையும் தகவல் தொழில்நுட்பத் துறை நோக்கி ஈர்த்தது. உலகமயப் பொருளாதாரத்தை இந்தியா ஏற்றுக்கொண்ட பிறகு, பொருளியலின் மூன்றாவது துறையான சேவைத் தொழில்களே அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவைப் பேணுவதற்கு உதவிவருகின்றன. இந்தியப் பொருளாதாரத்தில் மூன்றாவது துறை முக்கியத்துவம் வகிக்கிறது என்றால், அதற்கு கோலியின் பங்களிப்புகள் மிக முக்கியமான காரணம். அவர் இந்தத் துறையின் முன்னோடி மட்டுமல்ல; சாதனையாளரும் வழிகாட்டியும்கூட.