

அர்ஜெண்டினா முழுவதும் துக்கத்திலும் மரோடனாவின் நினைவுகளிலும் மூழ்கியிருக்கிறது. மரடோனாவுக்காக மூன்று நாள் துக்கம் அனுசரிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்திருப்பது அவருக்குள்ள புகழை உணர்த்தும். அர்ஜெண்டினாவின் தேசிய நாயகர் மட்டும் அல்ல; கால்பந்து வரலாற்றில் மிகச் சிறந்த வீரர்களிலும் ஒருவர் மரடோனா. 2000-ல் ‘ஃபீஃபா’ அமைப்பானது, கால்பந்து வரலாற்றின் மிகச் சிறந்த வீரர்களாக பிரேசிலின் பீலேவையும் மரடோனாவையும் தேர்ந்தெடுத்தது.
மரடோனாவின் காலில் சிக்கும் பந்து ஒரு வளர்ப்பு நாயைப் போல அவர் சொன்னதையெல்லாம் கேட்டதுபோல் தோன்றியது. அற்புதமான உருமறைப்பு பாணியை அவர் பின்பற்றினார். நீண்ட நேரம் செயல்படாமல் இருந்துவிட்டு, தேவைப்படும் தருணங்களில் மதிமயக்கும்படி பந்தை முன்செலுத்திச் செல்லவும் அட்டகாசமாகப் பந்தைக் கடத்தவும் அல்லது திடீரென்று ஒரு உதை தந்து அதை கோலாக ஆக்கவும் கூடியவர் மரடோனா.
நற்பெயரும் அவப்பெயரும்
தனது விளையாட்டுக் காலம் முழுவதும் நற்பெயரையும் அவப்பெயரையும் ஒருங்கே சம்பாதித்தவர் மரடோனா. இது மெக்ஸிக்கோவின் அஸ்டெக்கா மைதானத்தில் ஜூன் 22, 1986-ல் அர்ஜெண்டினாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடைபெற்ற அவருடைய வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டத்திலும் பிரதிபலித்தது.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் அதற்கும் 4 ஆண்டுகளுக்கும் முன்பு நடைபெற்ற ஃபாக்லேண்ட்ஸ் போரின் நினைவுகள் ஏற்படுத்திய பதற்றத்திலிருந்து இரண்டு நாடுகளும் அப்போது விடுபட்டிராத சமயம். ஆட்டத்தின் முற்பகுதியில் இரண்டு அணிகளும் கோல் போடவே இல்லை. பிற்பாதியின் ஆறாவது நிமிடத்தில் இங்கிலாந்தின் தற்காப்பு அரணுக்கு உள்ளே பாய்ந்து பந்தை அருகில் உள்ள தன் அணியின் சகாவுக்குக் கடத்தினார் மரடோனா.
பந்து இங்கிலாந்து நடுக்கள வீரர் ஸ்டீவ் ஹாட்ஜின் கால்களில் தஞ்சம் புகுந்தது. அதை அவர் தம் அணியின் கோல் கீப்பர் பீட்டர் ஷில்ட்டனிடம் தட்டிவிடப் பார்த்தார். ஆனால், இடையே மரடோனா புகுந்தார். 5 அடி 5 அங்குலமே இருந்த மரடோனா நன்றாக எம்பி பந்தை வலையை நோக்கிச் செலுத்தினார். தலையால் அவர் தட்டியதுபோன்று முதலில் தோன்றினாலும் அவர் இடதுகை முஷ்டியால் தட்டியது பிறகு காணொளிகளைக் கூர்ந்து கவனித்தபோது தெரிந்தது.
கையில் பந்து பட்டுச்சென்ற அந்த கோலை துனிஷிய நடுவர் நிராகரித்திருக்க வேண்டும்; அவர் அதைக் கவனிக்கத் தவறியதால் அந்த கோலை நிராகரிக்கவில்லை. அந்த கோல் அடித்து நான்கு நிமிடங்கள் கழித்து மரடோனா மற்றுமொரு கோலை அடித்தார். அவரது இரண்டாவது கோலின்போது பந்தானது 70 கஜ தூரம் பயணித்து, 5 இங்கிலாந்து வீரர்களையும் கோல் கீப்பர் ஷில்ட்டனையும் கடந்து வலைக்குள் போய் விழுந்தது. 2-1 என்ற கணக்கில் அர்ஜெண்டினா வென்றது.
கடவுளா, சாத்தானா?
நடந்தது என்ன என்பது தொடர்பில் முரண்பாடான விளக்கங்களைக் கொடுத்த மரடோனா பிற்பாடு, “அந்தக் கை கடவுளின் கை” என்றார். இங்கிலாந்துக்காரர்களை இது சினமூட்டியது. ‘தி ஹிஸ்டரி ஆஃப் தி வேர்ல்டு கப்’ நூலின் ஆசிரியர் பிரையன் கிளான்வில் ‘கடவுளின் கை’ விவகாரம் பற்றிப் பேசும்போது “வெட்கம் கெட்டத்தனம்” என்றும், “இங்கிலாந்தைப் பொறுத்தவரை அது சாத்தானின் கை” என்றும் எழுதினார்.
ஆனால், மரடோனாவின் இரண்டாவது கோல் ஓர் அற்புதம் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. பால் கார்ட்னர் தன்னுடைய ‘தி சிம்ப்லெஸ்ட் கேம்’ நூலில் மரோடோனாவின் செயலூக்கத்தை எழுதினார், “உலகக் கோப்பை வரலாற்றில் மிகச் சிறந்த கோல்களுள் ஒன்றை அடிப்பதற்காக 10 நொடிகள் வெளிப்படுத்தப்பட்ட அற்புதமானதும் கற்பனைக்கப்பாற்பட்டதுமான கால்பந்துத் திறமை அது!”
தொடர்ந்து, இறுதிப் போட்டியில் மேற்கு ஜெர்மனியின் தற்காப்பு அரணைத் தாண்டி உதைத்து, 3-2 என்ற கணக்கில் அர்ஜெண்டினா வென்றபோது உலகமே அவரைக் கண்டு வியந்தது. “மெக்ஸிக்கோ-1986 உலகக் கோப்பைப் போட்டிகளில் மரடோனா ஆதிக்கம் செலுத்தியதுபோல் வேறு எவரும் உலகக் கோப்பையின் வரலாற்றில் ஆதிக்கம் செலுத்தியதில்லை” என்கிறார் கார்ட்னர்.
தொடர் மோதல்கள்
1990 உலகக் கோப்பையிலும் மரடோனா ஆதிக்கம் செலுத்தினார். யார் வசமும் இல்லாத பந்தைத் தட்டிக்கொண்டு, ஒரு தற்காப்பு வீரரை ஏமாற்றிக் கால்களின் கும்பலைத் தாண்டி பிரேசிலுடனான காலிறுதிப் போட்டியில் கோல் அடிக்க உதவினார். அந்த ஆட்டத்தில் அடிக்கப்பட்ட ஒரே கோல் அதுதான். அரையிறுதிப் போட்டியில் இத்தாலியை எதிர்கொண்டது அர்ஜெண்டினா. போட்டியை நடத்திய அணியான இத்தாலியை அதன் சொந்த நாட்டில் டைபிரேக்கரில் வென்றது அர்ஜெண்டினா. பெனால்டி கிக்கை அடித்தவர் மரடோனா!
மரடோனா குதூகலத்தின் உச்சத்தில் இருந்த சமயம் அது. ஆரவாரம் மிகுந்த துறைமுக நகரமான நேப்பிள்ஸில் நடந்த போட்டி அது. அங்கே தொழில்முறை ஆட்டக்காரராக மரடோனா விளையாடி நப்போலி அணிக்கு இத்தாலியன் லீகில் இரண்டு முறை கோப்பை பெற்றுத் தந்திருக்கிறார். மரடோனா துடுக்குத்தனமாக, அங்கு குழுமியிருந்த (இத்தாலிய) ரசிகர்களை இத்தாலிக்காக அல்லாமல் அர்ஜெண்டினாவுக்காக ஆதரவுக் குரல் எழுப்பும்படி கேட்டார். ஆனால், அவர்கள் கடும் கோபத்துக்கு உள்ளாகியிருந்தார்கள். விளைவாக, இறுதிப் போட்டியில் மரடோனா எப்போதெல்லாம் காலால் பந்தைத் தொட்டாரோ அப்போதெல்லாம் அந்த மைதானத்தில் திரண்டிருந்த இத்தாலியர்கள் ‘ஊ ஊ’ என்று கேலிக் கூச்சலிட்டனர்.
இறுதிப் போட்டியில் மேற்கு ஜெர்மனியை எதிர்கொண்டது அர்ஜெண்டினா. ஆனால், இப்போது மரடோனாவின் மாயம் ஏதும் மிஞ்சியிருக்கவில்லை; போட்டியில் திரும்பத் திரும்ப அவர் தவறிழைத்தார். மிக மோசமான தவறுகள் இழைத்த அவரது முக்கியமான சகாக்கள் பலருக்கும் தடை விதிக்கப்பட்டிருந்ததால் அவர்கள் இல்லாதது மரடோனாவுக்குப் பெரிய இழப்பாக இருந்தது. விளைவாக, 0-1 என்ற கணக்கில் பெனால்ட்டி உதையில் மேற்கு ஜெர்மனியிடம் தோற்றது அர்ஜெண்டினா. இத்தாலியைத் தோற்கடித்ததற்காகப் பழிக்குப் பழி வாங்கும் விதத்திலேயே அந்த பெனால்டி உதை வழங்கப்பட்டதாக ஏமாற்றத்துடன் குற்றஞ்சாட்டினார் மரடோனா.
போதை மயக்கம்
சர்வதேச அளவில் புகழ் உச்சத்தை எட்டிக்கொண்டிருந்த மரடோனா அவர் உச்சபட்ச ஆட்டத்திறன் கொண்டிருந்த நாட்களிலேயே கொகெய்னுக்கு அடிமையானார். 1991-ல் நப்போலி அணிக்காக விளையாடிக்கொண்டிருந்த போது அவரைப் பரிசோதித்துப் பார்த்ததில் அவர் கொகெய்ன் பயன்படுத்தியது தெரியவந்ததால் அவர் விளையாடுவதற்கு 15 மாதத் தடை விதிக்கப்பட்டது. அவரது நடத்தை அதன் பின்பு கட்டுப்பாடில்லாமல் போனது. 1994-ல் அர்ஜெண்டினாவில் உள்ள அவரது கோடை இல்லத்துக்கு வெளியில் குழுமியிருந்த பத்திரிகையாளர்களை நோக்கிக் காற்றழுத்தத் துப்பாக்கியால் (ஏர் ரைஃபிள்) சுட்டார். பல்வேறு ஊக்க மருந்துகள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதால் அதே ஆண்டின் இறுதியில் அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டிகளிலிருந்தும் அவர் வெளியேற்றப்பட்டார்.
கட்டுக்கோப்பாக இருந்த மரடோனாவின் உடல் ஆரோக்கியமற்ற விதத்தில் ஊதிப்பெருத்ததால் 2004-ல் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயம் பலகீனமாக இருந்தது என்றும், அவருக்கு மோசமான சுவாசப் பிரச்சினைகள் இருந்தது என்றும் மருத்துவர்கள் கூறினார்கள். அதற்குப் பிறகு மனநல மருத்துவமனை ஒன்றுக்குச் சென்றார். பின்னர் மறுவாழ்வு சிகிச்சைக்காக ஹவானாவுக்குச் சென்றார். தொடர்ந்தும், அவருக்கு மேலும் ஏராளமான உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டன. எடை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். அதீத மதுப் பழக்கத்துக்கும் சிகிச்சை எடுத்துக்கொண்டார். 2014-ல் அர்ஜெண்டினா தொலைக்காட்சி ஒன்றில் பேசும்போது மரடோனா இப்படிக் கூறினார், “நான் போதை மருந்து உட்கொள்ளவில்லை என்றால் எப்படிப்பட்ட ஆட்டக்காரனாக நான் இருந்திருப்பேன் தெரியுமா?”
பிசகிய குடும்ப வாழ்க்கை
மரடோனாவுக்கு மொத்தம் எட்டுக் குழந்தைகள் என்கிறார்கள். அவருடைய மனைவி க்ளாதியா விய்யஃபன்யேவுக்கும் அவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள். அவர்கள் பிற்பாடு விவாகரத்து செய்துகொண்டனர். கொகெய்னிடமிருந்து விடுபடுவதற்காக க்யூபாவில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த காலத்தில் அவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. ரொம்பவும் சிக்கலானது மரடோனாவின் தனிப்பட்ட வாழ்க்கை.
அக்டோபர் 30, 1960-ல் அர்ஜெண்டினாவின் லானுஸ் நகரில் பிறந்த மரடோனா, ப்யூனஸ் ஐரீஸ் நகரின் சேரிப் பகுதியில்தான் வளர்ந்தார். அங்குள்ள தூசி படிந்த வீதிகளில்தான் ஏழ்மையின் எல்லா இடர்ப்பாடுகளையெல்லாம் மீறி அவர் கால்பந்தாட்டத்தைக் கற்றுக்கொண்டார். 15 வயதிலேயே தொழில்முறை ஆட்டக்காரராக மாறியிருந்தார். ஐரோப்பாவின் புகழ் பெற்ற கால்பந்து கிளப்களான ‘நப்போலி’, ‘பார்சிலோனா’ அணிகளுக்காக விளையாடினார் மரடோனா. ஆட்டக்காரராக ஓய்வுபெற்ற பின்னரும் வெவ்வேறு அணிகளுக்குப் பயிற்சியாளராக இருந்தார். கால்பந்தை அவரால் பிரியவே முடியவில்லை.
கூட்டு மனதின் பிரதிநிதி
2020 நவம்பர் 2 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மனச்சோர்வு, ரத்தசோகை, நீரிழப்பு போன்றவற்றால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது மருத்துவர் கூறினார். தலையில் ஏற்பட்ட ஏதோவொரு காயத்தால் அவரது மூளையைச் சுற்றியுள்ள திசுக்களில் ரத்தம் கசிந்து தேங்கியிருந்தது அடுத்து தெரியவந்தது. மூளையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. மரணத்துடன் போராடியவர் நவ. 25 அன்று மறைந்தார்.
“நீங்கள் எங்களை உலகின் உச்சிக்குக் கொண்டுசென்றீர்கள். எங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தீர்கள். எல்லோரையும்விடச் சிறந்தவர் நீங்கள்” என்று மரடோனாவுக்குப் புகழாரம் சூட்டினார் அர்ஜெண்டினாவின் அதிபர் ஆல்பெர்த்தோ ஃபெர்னாண்டஸ். ப்யூனஸ் ஐரீஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பாப்லோ அலபார்சீஸின் புகழாரம் இன்னும் பொருத்தமானதாக இருக்கும், “எங்கள் கூட்டு மனதில் ஒரு மகத்தான கடந்த காலத்தின் பிரதிநிதியாக ஆகியிருக்கிறார் மரடோனா. நாங்கள் எப்படி இருந்திருக்க வேண்டும் என்பதன் அடையாளம் அவர்!”
© ‘நியூயார்க் டைம்ஸ்’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை