Published : 29 Nov 2020 03:12 AM
Last Updated : 29 Nov 2020 03:12 AM

விராட் கோலி ஏன் விமர்சிக்கப்படுகிறார்?

வலுவானதோர் அணி இருந்தும் ஐபிஎல் கோப்பை வெல்லும் வாய்ப்பை மீண்டும் ஒரு முறை தவறவிட்டிருக்கிறார் விராட் கோலி. இதைத் தொடர்ந்து விராட் கோலியின் தலைமைத்துவத்தைக் கடுமையாக விமர்சித்தனர். இந்திய கிரிக்கெட்டின் உச்ச நட்சத்திரங்கள் யாரும் இதுவரை எதிர்கொள்ளாத சங்கடத்தை விராட் கோலி எதிர்கொண்டார். என்ன காரணம்?

கிரிக்கெட்டில் இரண்டே வகையான கேப்டன்கள்தான். ஒன்று, ‘ஆட்களை நிர்வகிப்பவர்கள்’; மற்றொன்று, ‘தொழில்நுட்பர்கள்’. ஆட்களை நிர்வகிப்பவர்கள் தங்களுடைய பணி மைதானத்தோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை என்பதை உணர்ந்தவர்கள். தங்களை முன்னிறுத்தியோ முன்னிறுத்தாமலோ சக வீரர்களிடத்தில் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர்பவர்கள்; தட்டிக்கொடுப்பதன் மூலம் ஒன்றை இரண்டாகவும், இரண்டை நான்காகவும் உருமாற்றும் கலையில் வித்தகர்கள். முடிவுகளைக் காட்டிலும் நடைமுறையில் நம்பிக்கை கொண்டவர்கள். உதாரணம், மகேந்திர சிங் தோனி.

இரண்டாம் வகையினர் தொழில்நுட்பர்கள். இவர்களைப் பொறுத்தவரை தலைமைத்துவம் என்பது மைதானத்தோடு முடிந்துவிடுகிறது. வடிவேலு பாணியில் சொல்வதென்றால், ‘பழக்க வழக்கமெல்லாம் பஞ்சாயத்தோடு சரி’. உணர்வுகளை விடத் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். தன்னால் முடியும்போது எல்லோராலும் முடியும் என்கிற தர்க்கத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். நடைமுறையை விட முடிவுகளையே பிரதானமாகக் கொண்டவர்கள். இந்தப் பள்ளியைச் சேர்ந்த கேப்டன்தான் விராட் கோலி. இது எப்போது எடுபடும்? 11 சீட்டும் ஜோக்கராக அமையும்போது. ஆனால், அது மிகவும் அபூர்வம். தனக்கு என்றுமே கிடைக்க வாய்ப்பில்லாத ஜோக்கர்களுக்காக விராட் கோலி தவமிருந்துகொண்டிருக்கிறார்.

கோலியால் வெற்றிகரமான கேப்டனாக மாறவே முடியாதா? முடியும். அதற்கு அவர் தன்னுடைய அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். அதற்கான வழித்தடத்தை கிரிக்கெட் மேதை பிராட்மேன் போட்டுக் கொடுத்திருக்கிறார். பிராட்மேன் வீரர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கியவர் அல்ல. ஆனால், சமயோசிதமாகச் செயல்பட்டு நினைத்ததை சாதித்துக்கொண்டவர். பிராட்மேன் பாணியை இப்படி வர்ணிக்கலாம். பார்த்த மாத்திரத்தில் ஒரு வீரருடைய நிறைகுறைகளைக் கணித்துவிடும் திறன்; சக வீரரின் வெற்றிக்காக விளையாடுவது; களத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் புதுமைகளைப் புகுத்துவது.

ஆட்களை நிர்வகிப்பவருக்கான கூறுகளைத் தன்னகத்தே ஏற்றுக்கொண்ட தொழில்நுட்பர் அவர். பின்னாளில் சச்சின் இதே வழித்தடத்தைப் பின்தொடர்ந்தார். ஆனால், அவருக்குத் தோதான அணியும் தேர்வுக் குழுவும் வாய்க்கவில்லை. ஆனால், கோலிக்கு எல்லாம் சாதகமாகவே இதுவரை இருந்துவந்துள்ளது. மாற்றத்துக்கு விராட் கோலி தயாராக இருக்கிறாரா என்பதுதான் கேள்வி.

இதுவரைக்குமான கிரிக்கெட் மேதைகளில் அதிகம் எதிர்மறையாகக் கொண்டாடப்பட்டவர் விராட் கோலியாகத்தான் இருக்க முடியும். நாயக பிம்ப உருவாக்கத்துக்கு வெறுமனே திறமை மட்டுமே அளவுகோல் கிடையாது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

கிரிக்கெட்டின் கடவுள் டான் பிராட்மேன் தொடங்கி சச்சின் டெண்டுல்கர் வரை தத்தமது நாடுகளின் வரலாற்றில் முக்கியப் பாத்திரம் வகித்தவர்கள். டான் பிராட்மேன் ஆஸ்திரேலியாவின் தேசிய நாயகனாகக் கொண்டாடப்பட்டவர். இங்கிலாந்தின் காலனியக் குடிகளாக இருந்த ஆஸ்திரேலியர்களுக்குச் சுதந்திரத்துக்குப் பிறகு ஓர் அடையாளச் சிக்கல் ஏற்பட்டது. புதிதாகச் சுதந்திரம் அடைந்த நாடொன்றுக்கு அவசியமான எந்தவொரு மார்தட்டும் நினைவுகளும் அவர்களுக்கு வாய்க்கவில்லை. உலகத்தின் கண்களுக்குத் தாம் யாராகப் பார்க்கப்படுகிறோம் என்கிற கவலை அவர்களை வாட்டிவதைத்தது. 1920-ன் மத்தியில் ஏற்பட்ட பொருளியல் பெருமந்தநிலை ஆஸ்திரேலியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்த இக்கட்டான காலகட்டத்தின் பின்னணியிலிருந்துதான் டான் பிராட்மேன் ஆஸ்திரேலிய மக்களால் நேசிக்கப்பட்டதைப் புரிந்துகொள்ள முடியும். கிரிக்கெட் களத்தில் இங்கிலாந்துக்கு எதிரான பிராட்மேனின் வெற்றி ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு புது மிடுக்கையும் சுய கௌரவத்தையும் கொண்டுசேர்த்தது.

சச்சின் டெண்டுல்கரின் நாயக பிம்ப உருவாக்கத்திலும் இதேபோன்ற சமூக உளவியல் காரணங்கள் இருக்கின்றன. 90-களில் தாராளமயத்தை இந்தியா ஏற்றுக்கொண்ட பிறகு, இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை அதிகரித்தது. தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த ஒரு தேசிய பிம்பம் இல்லை என்கிற குறை அவர்களுக்கு இருந்தது. அதை சச்சினின் லட்சியவாத நடைமுறையும் கீழ் மத்தியதரப் பின்னணியும் பூர்த்திசெய்தன.

மேதைகளைக் கொஞ்சம் மறந்துவிட்டு நடைமுறையியர்களின் பக்கம் வருவோம். தோனியின் வெற்றி, விளிம்பிலிருந்து மையத்துக்கு வருபவர்களின் மேல் இந்தியர்களுக்கு இருக்கும் மையலை அடிப்படையாகக் கொண்டது. இந்த ‘ஜீரோவிலிருந்து ஹீரோ’ என்பது காலத்தைக் கடந்த வெற்றிகரமான ஒரு சூத்திரம். சுனில் காவஸ்கரை விட கபில்தேவ் அதிகம் கொண்டாடப்பட்டது இதனால்தான். விராட் கோலிக்கு இதுபோன்ற எந்தவொரு சாகசப் பின்புலமும் கிடையாது. உயர் மத்தியவர்க்கப் பின்னணியும் விராட் கோலிக்கு ஒரு சுமையாக இருப்பதை மறுக்க முடியாது.

2000-ல் ஒரு மீட்பருக்கான வரலாற்றுத் தேவை இந்திய கிரிக்கெட்டில் ஏற்பட்டது. அதை மையத்திலிருந்து விளிம்புக்கு நகர்த்தப்பட்ட சவுரவ் கங்கூலி வெற்றிகரமாக இட்டு நிரப்பினார். இதனால், கங்கூலியின் வர்க்கப் பின்னணி இங்கே பொருட்படுத்தப்படவில்லை. லட்சக்கணக்கான வங்காளிகள் சாதிகளைக் கடந்து தங்கள் பிள்ளைகளுக்கு சவுரவ் கங்கூலி எனப் பெயர் சூட்டிக் கொண்டாடினர். விராட் கோலியால் களத்தில் நிகழ்த்தப்படும் சாகசங்களை மக்கள் களத்தோடு கடந்துவிடுகின்றனர். விராட் கோலி கொண்டாடப்படுகிறார்தான். ஆனால், எண்களைக் கடந்து கொண்டாடப்படுகிறாரா?

- தினேஷ் அகிரா, ஊடகர்.

தொடர்புக்கு: dhinesh.writer@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x