Published : 29 Oct 2015 08:28 am

Updated : 29 Oct 2015 08:28 am

 

Published : 29 Oct 2015 08:28 AM
Last Updated : 29 Oct 2015 08:28 AM

துவரம் பருப்பின் அரசியல்

வருங்காலங்களில் துவரை மணிகள் அமெரிக்க வால்மார்ட்களின் உதவியுடன் நம் நாட்டுச் சந்தைகளில் இடம்பிடிக்கும்.

துவரம் பருப்பின் விலை இப்போது 200 ரூபாய் என்று என் இல்லாள் வருத்தத்துடன் தெரிவித்தார். பருப்புக் குழம்புடன் சாப்பிட்டுக்கொண்டிருந்த ருசியின் தன்மை மெல்ல மாறியது. எங்கள் காட்டில் துவரை சாகுபடி செய்த நினைவுகள் எனக்குள் அலையடித்தன.


துவரை மானாவாரிப் பயிர். ஆடிப் பருவ மழையின்போது துவரை விதைப்போம். விவசாயிகள் இரண்டு விதங்களில் துவரை விதைப்பார்கள். ஏர்பிடித்து சாலோட்டும் உழவின்போது ஏர்க்காலில் தூவிவிட்டபடி விதைக்கலாம்.

உழுவதற்கு முன் நிலத்தில் கைவிதைப்பு விதைத்துவிட்டு அதன் பிறகும் உழலாம்.

நாங்கள் இரண்டாம் முறையில் விதைப்போம்.

ஏனெனில், சாலறுப்பில் விதைத்தால், துவரைச் செடிகள் அதிகமாக கொழுகொழுப்புடன் வளரும். நாட்டார்வழக்கில் இதைக் கொழுப்புக் கட்டிக்கொண்டது என்று சொல்வார்கள். இவை காய்கள் பிடிக்காது.

கை விதைப்பு சிறந்தது

அது மட்டுமல்லாமல், அவை செழித்து வளர்ந்து நிழல் கப்பிக்கொள்ளும். இதனால், பின்னாட்களில் ஊடுபயிராகச் சாகுபடி செய்யப்போகும் நிலக்கடலைச் செடிகளின் மகசூல் விருத்திக்குக் குந்தகமாகப் போய்விடும். அதனால், துவரைச் செடிகளைக் களைய வேண்டும். இது இருவேலை யாகிவிடும். எனவே, கை விதைப்புதான் சாலச் சிறந்தது.

துவரைச் செடி ஆறு மாத வெள்ளாமை. ஆடியில் ஆரம்பித்தால், மார்கழி மாதத்தில் மகசூல் செய்யலாம். அதற்குள் ஊடுபயிர்களாக நிலக்கடலை, ஆமணக்கு, தட்டைப்பயிறு என்று மூன்று பயிர்களின் வெள்ளாமையை எடுத்துவிடலாம். துவரை ஒரு ஏக்கருக்கு இர்ண்டிலிருந்து மூன்று மூட்டை மகசூல் வரும்.

ஒரு கிலோ ஏழு ரூபாயிலிருந்து 10 ரூபாய்க்கு எங்களிடம் வியாபாரிகள் வாங்குவார்கள்.

மண்கட்டும் வேளாண்நுட்பம்

நாங்கள் எங்கள் குடும்பப் பயன்பாட்டுக்காக மூன்று மூட்டைகளை எடுத்து வைத்துக்கொள்வோம். அவற்றை அப்படியே வீட்டில் இருப்புவைத்தால் புழுப்பட்டுப் போய்விடும். அதனால், துவரம் பருப்புக்கு மண்கட்டுவோம்.

இந்த மண்கட்டுதல் என்பது ஒரு தொன்மையான வேளாண்நுட்பம். இதற்குப் பொதுவான பெயர் ‘செம்மல் கட்டுவது’ என்று சொல்வார்கள். அநேகமாக தை மாதத்தில்தான் செம்மல் கட்டுவார்கள்.

இதற்குக் கட்டப்படும் மண்ணானது, கல் தும்புதூசியில்லாத பொன் நிறத்தில் இருக்க வேண்டும். பெரும்பான்மையான காடுகளில் இருக்கும் செம்மண் போலல்லாமல், மண நாட்களில் வீசும் மனோரஞ்சித மலரின் வாசம்போல மணம் வீசும் செம்மண்ணாக இருக்க வேண்டும். எங்கள் காட்டிலிருந்து சற்றுத் தொலைவிலிருக்கும் கொம்புக்காட்டில் உள்ள மண்ணைத்தான் நாங்கள் போய் எடுத்துவருவோம். புற்று மண்ணாக இருந்தால் மிகவும் சிறப்பு.

இரவு நேரத்தில்தான் மண்கட்ட வேண்டும். வீட்டுவாசலில் துவரையைக் குமியாகக் கொட்டி, அதில் இந்த மண்ணைக் கலக்க வேண்டும். ஒரு மூட்டை துவரைக்கு இரண்டு கூடை மண். அதாவது, 100 கிலோ துவரைக்கு 50 கிலா மண் என்ற விகிதத்தில் கலந்து வட்டமாக அணைக்க வேண்டும். அந்த வட்டத்தில் தண்ணீரை நிரப்பி, அந்தத் துவரைகளை முழுக்க நனைத்து ஊறவைக்க வேண்டும். பிறகு, அவற்றைக் கால்களால் கிண்டிக் கிண்டி களைய வேண்டும். நாலாப் பகுதிகளிலும் தண்ணீர் ஊறியவுடன் அவற்றை வாசல் முழுவதும் பரப்பிவிட வேண்டும். அதன் பிறகு, சில மணி நேரங்களில் அந்த ஈரம் உலர்ந்த பிறகு மறுபடியும் அவற்றைக் குமித்துத் தண்ணீர் கட்ட வேண்டும். பிறகு, காயவிட வேண்டும். இப்படியே விடியும்வரை நான்கு அல்லது ஐந்து முறைகள் இப்படிச் செய்ய வேண்டும். அம்மா ஒரு ஆண் பிள்ளைபோல மண்வெட்டியால் ஈரமேறிய துவரைகளைக் கலைத்துவிடும் அழகில், எங்களது செம்மண் காட்டின் வாசனை, அந்தப் பகுதியெங்கும் நிறைக்கும். நான் தண்ணீரை நிறைத்துவிட்டு, சங்க இலக்கியத்தின் குறுந்தொகைக் காட்டில் வீசும் காந்தள் வாசனைக்குள் நுழைந்துவிடுவேன்.

துவரையால் ஊரே மணக்கும்

செம்மண் வாசனையும் காந்தள் வாசனையும் இணைந்து இணைந்து துவரை மணிகள் செங்காந்தள் மலரின் வாசனையாக மீளும். அதன்பிறகு அடுத்த நாள் அதிகாலையில் முத்துமுத்தாகப் பவள நிறத்தில் ஜொலிக்கும் துவரை மணிகளை, வெயிலில் பரப்பிக் காயவைக்கும்போது எங்கள் ஊரே மணக்கும்.

மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை

இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து

பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன

நறுந்தண் ணியளே நன்மா மேனி

புனற்புணை யன்ன சாயிறைப் பணைத்தோள்

மணத்தலுந் தணத்தலு மிலமே

பிரியின் வாழ்த லதனினு மிலமே.

என்பது பொருள்வலிக்கும் நெஞ்சுக்குக் கிழவன் உரைத்தது.

பெருமழை பொழிந்த விடியற்காலயில், வீடெல்லாம் மணந்து கிடக்கும் காந்தள் மலரின் நறுமணமும் தண்மையும் கொண்டவளும், மாமை நிறத்தவளுமாகிய தலைவியை முன்வைத்து, தலைவன் பாடும் வரிகள் அங்கே உயிர் பெறும். ‘அவளை யாம் கூடுதலும் இலம். பிரிதலும் இலம். பிரிவோ மாயின் உயிர் வாழ்தல் அதனைக்காட்டிலும் அறவே இலம்.’

ஒரே ஒரு சொல்லைச் சுழட்டியடித்து, வெவ்வேறுவிதமான அர்த்தப் புலமைகளை உருவாக்கும் சங்கக் கவிஞனின் மொழி லாகவத்தைப் பாருங்கள். இந்தச் சொல்லில் உருவாகும் காட்சிப் புலன்களை என் அகத்தில் நிகழ்த்திக்கொண்டே வெயில் காயும் துவரைமணிகள்.

மாலையில் அவற்றைக் கூட்டி மூட்டைகளாகக் கட்டி வைத்துக்கொள்வோம். வருடம் முழுக்க எந்தவிதமான புழு பூச்சியும் அண்டாது. வீடு முழுக்க செங்காந்தள் மலரின் நறுமணம் வீசிக்கொண்டேயிருக்கும்.

தற்போது இந்த அற்புதமான வேளாண் நுட்பங்களெல்லாம் எங்கே போயிற்று?

நம் முன்னோர்கள் வகுத்துப்போன சாகுபடி முறைகளின் சமன்நிலை குலைந்துபோய் சமனற்ற சாகுபடி முறைகளை நாம் ஏற்றுக்கொண்டதால் இன்றைக்குத் துவரம் பருப்பின் விலை 200 ரூபாய்! துவரை போன்ற மானாவாரிப் பயிரை விளைவிப் பதற்கான நிலத்தை, சுயநலமற்ற சமூக நோக்கில் இயங்கிய வேளாண் சுழற்சியை இழந்ததன் விளைவுதான் இது.

ஒவ்வொரு பருவ காலத்துக்கும் ஒரு குறிப்பிட்ட தானியங்களைச் சாகுபடிசெய்து மனித வாழ்வியலின் உணவுமுறையை ஓர் அற்புதமான உணவுச் சுழற்சியில் கட்டமைத்து வைத்திருந்தது நம் தொல் வேளாண்மை அமைப்பு.

தொலைந்த பயிர்கள்

புஞ்சைப் பருவத்தில் சாகுபடி செய்யப்படுகின்ற புஞ்சைப் பயிர்களை நிராகரித்து, பணப் பயிர்களான கரும்பு, நெல், மஞ்சள் போன்ற புஞ்சைப் பயிர்களுக்கு முக்கியத்துவம் தந்து பயிரிட்டதில் புஞ்சைப் பயிர்கள் அருகிக்கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே சாமை, குதிரைவாலி, தினை போன்ற பல பயிர்களைத் தொலைத்துவிட்டோம்.

இது மூன்றாம் உலக நாடுகள் மீது வைக்கப்படும் ஒரு சர்வதேச அரசியல். இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்குப் பணத்தாசையைக் காட்டி அவர்களது நாட்டின் தட்பவெப்பப் பருவத்தின் வேளாண் சுழற்சியைச் சர்வதேச வேளாண் சுழற்சியாக மாற்றுகின்ற சூழல், தற்காலங்களில் நுட்பமாகச் சந்தடியில்லாமல் நடந்து கொண்டிருக்கின்றது.

உதாரணமாக, சர்க்கரை உற்பத்தி செய்யும் கரும்புப் பயிரைச் சொல்லாம். இந்தக் கரும்புப் பயிர் 90 சதவிகிதம் மேற்குலகினருக்காகவே பயன்பாடாகிறது. நாம் என்றைக்குச் சிறு தானியங்களைக் குறைத்துவிட்டுப் பெரு தானியங்களுக்கு மதிப்புக் கொடுத்தோமோ, அன்றைக்கே புஞ்சைப் பயிரை அழித்துவிட்டோம். புஞ்சைத் தானிய உணவு வகைகளில் உள்ள முதன்மையான நோய் எதிர்ப்புக் கூறுகளை இழந்துவிட்டோம்.

சோளத்தின் ஒற்றைப் பிம்பம்

இந்த புஞ்சைத் தானிய வகைகளில் இந்தியாவின் பாரம்பரியப் பயிர்களான சோளம், கம்பு, கேழ்வரகு போன்றவை மிக முக்கியமானவை. அதிலும் சோளம் மிகமிக முக்கியமான நோய் எதிர்ப்புக் கூறுகள் கொண்ட சிறுதானியம். கூகுள் இணையதளத்தில் சோளம் என்ற பெயரில் காட்டப்படும் சோளம் அல்ல இது. இருங்கு சோளம், செஞ்சோளம், வெள்ளைச்சோளம், வாழைப்பூ சோளம், சாமரச் சோளம், மக்கட்டைச் சோளம் என்று தமிழனின் பாரம்பரியப் பயிர்கள் இப்போது மக்காச் சோளம் என்ற ஒற்றைப் பிம்பத்தில் கபளீகரமாகிவிட்டன.

இருங்கு சோளம் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. நல்ல புரதமும் நார்ச்சத்தும் கொண்ட இந்தத் தானியவகை மத்திய தமிழகம் சார்ந்த மண்ணில் செழித்தோங்கி வளரும்.

“சோளச் சோறு சாப்பிடுபவன் சேலை கட்ட வுட மாட்டான்..” என்று நாட்டார் வழக்குகளில் ஒரு சொலவடையே உண்டு. உடல் பலத்துக்கும், இளம் கட்டுடலுக்கும், ஆண்மை விருத்திக்கும் முக்கியமானது இந்தத் தானியவகை. இதில் நன்றாக உருண்டு திரண்டு விடைத்து நிற்கும் பால் மணம் மாறாத மக்கட்டை சோளக் கருதை நுள்ளிச் சுவைக்கும்போது, அதன் பால் அமிர்தமாக இனித்துக் கிடக்கும்.

இந்தச் சோளக் கருதின் இடத்தைத்தான் மேற்குலகின் மக்காச் சோளம் பிடித்திருக்கிறது. நம் பாரம்பரிய உணவு வகையைத் திசை திருப்பி பல்வேறுவிதமான உணவுப் பண்டங்களாக, குர்குரே போன்ற நாகரிக சிறு தீனியாக, நவீன உத்திகளில் உலகம் முழுக்கப் பரப்புகிறது. அதுமட்டுமல்லாது, தமிழ்நாட்டின் நிலங்களில் மக்காச் சோள உற்பத்தியை முன்னிலைப்படுத்துகிறது. மக்காச் சோள உற்பத்தியில், உலகில் ஐந்தாவது இடத்தில் இந்தியா இருப்பதாகத் தற்போதைய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாமக்கல் போன்ற கோழிப் பண்ணைகளுக்குத் தீவனமாகவும் மேலை நாடுகளுக்கு ஏற்றுமதியாகவும், சோள வேளாண்மை மாறிவிட்டது.

தங்களது உணவுப் பண்டங்களை உலக நாடுகள் முழுக்கப் பரப்புவதும், சிறுசிறு நாடுகளின் பாரம்பரியமான உணவுப் பண்டங்களை ஒழித்துக் கட்டுவதுமான வேலைகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது மேற்குலகம்.

இந்த உணவு அரசியல் குறித்தோ, அல்லது பாரம்பரியமான உணவுப் பயிர்களின் நாசம் குறித்தோ, மனித வாழ்வியலின் உயிராதாரமான வேளாண்மை குறித்தோ ஆள்பவர்களுக்கு எந்தப் பிரக்ஞையுமில்லை.

வருங்காலங்களில் மேற்குலகினர் கையளிக்கும் மலட்டுத் துவரை விதைகளை, உவர் அடித்துப்போய் செத்துக்கொண்டிருக்கும் நம் காடுகளில் விளைவிப்போம். துவரை மணிகள் அமெரிக்க வால்மார்ட்களின் ஜிகினாக் கவர்களில் சுற்றப்பட்டு, நம் நாட்டுச் சந்தைகளில் இடம்பிடிக்கும். நம் நடிக சிகாமணிகள் விளம்பரத் தூதுவர்களாக நடித்துக் கலக்குவார்கள்.

முன்பு சொன்ன குறுந்தொகை வரிகளை இந்தப் பாடுபொருளோடு இணைத்து ஒரு காட்சியை உருவாக்கிப் பார்க்கிறேன்.

துவரை மணிகள் மறைவதும் இலம், மீள்வதும் இலம், மீள்தலாயின் தொல் விதையாயிருப்பது அதனைக்காட்டிலும் அறவே இலம்!

- கௌதம சித்தார்த்தன், எழுத்தாளர். தொடர்புக்கு: unnatham@gmail.com


துவரம் பருப்புதுவரம் பருப்பு அரசியல்சாகுபடி முறை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x