Published : 26 Nov 2020 03:17 am

Updated : 26 Nov 2020 07:30 am

 

Published : 26 Nov 2020 03:17 AM
Last Updated : 26 Nov 2020 07:30 AM

தருண் கோகோய்: அஸாமின் அமைதி நாயகர்

tarun-gogoi

கரோனா பலிகொண்டிருக்கும் அரசியலர்களில் ஒருவராகியிருக்கிறார் தருண் கோகோய். காங்கிரஸின் முக்கியமான தலைவர்களில் ஒருவர், அஸாமின் நீண்ட கால முதல்வர் என்கிற அடையாளங்களைத் தாண்டி வடகிழக்கின் செல்வாக்கு மிக்க முகம் என்று சொல்லத்தக்கவராக இருந்தவர் அவர். அஸாம் மாநிலத்தில் 2001 தொடங்கி தொடர்ந்து மூன்று முறை முதல்வர் பொறுப்பை வகித்த தருண் கோகோய் (1936-2020), தேசிய அரசியலில் வடகிழக்கு மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர். அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியில் இணைச்செயலாளராகவும் பொதுச்செயலாளராகவும் பொறுப்புகளை வகித்தவர்.

அஸாமின் செல்வாக்கு மிக்க ஆஹோம் சமூகத்தைச் சேர்ந்தவர் கோகோய். குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தவர். 1968-ல் ஜோர்ஹட் நகர சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971 தொடங்கி 1985 வரையிலும் ஜோர்ஹட் மக்களவைத் தொகுதியிலிருந்து மூன்று முறையும் அதைத் தொடர்ந்து கலியபோர் மக்களவைத் தொகுதியிலிருந்து மூன்று முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது கலியபோர் தொகுதியின் உறுப்பினராக அவரது மகன் கௌரவ் கோகோய் பதவி வகிக்கிறார்.


மத்தியிலிருந்து மாநிலத்துக்கு

ராவ் அமைச்சரவையில் உணவுத் துறை அமைச்சராகவும் உணவுப் பதப்படுத்தல் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர் தருண் கோகோய். ஆறாவது முறை மக்களவை உறுப்பினர் பதவிக் காலம் முடியும் முன்பே, அஸாம் மாநில அரசியலில் களம் இறக்கிவிடப்பட்டார். டெல்லிக்கு நெருக்கமாக இருந்த அவர், மாநில அரசியலில் தாக்குப்பிடிப்பாரா என்ற சந்தேகம் அப்போது நிலவியது. உல்பா, போடோலாந்து இயக்கங்களின் காரணமாக அமைதியின்மையையும் பொருளாதார வீழ்ச்சியையும் அஸாம் ஒருசேர சந்தித்துக்கொண்டிருந்த காலம் அது.

அடுத்த தேர்தலில் காங்கிரஸ், அதற்கும் அடுத்த தேர்தலில் அஸாம் கண பரிஷத் என்று அஸாம் மாநில அரசியலானது இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான போட்டியாகவே இருந்தது. தன்னுடைய செல்வாக்கால் அஸாம் கண பரிஷத்தின் செல்வாக்குக்குப் பலமான அடி கொடுத்தார் தருண் கோகோய். 2001-ல் முதல்வராகப் பொறுப்பேற்ற அவர், தொடர்ந்து 15 ஆண்டுகள் முதல்வராகப் பதவி வகித்தார்.

தருண் கோகோய் முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, ரிசர்வ் வங்கி அந்த மாநிலத்துக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அனுமதித்த அளவைக் காட்டிலும் மாநில அரசு அதிகக் கடன் வாங்கிவிட்டது என்பதுதான் அந்தக் கட்டுப்பாடுகளுக்கான காரணம். நிதிநிலை முற்றிலும் வீழ்ந்ததால் மாநில அரசு ஊழியர்களுக்கு மாதக்கணக்கில் ஊதியம் வழங்கப்படாத நிலையும் இருந்தது. அஸாமின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிக்கு ராவின் அமைச்சரவையில் பணியாற்றிய அனுபவம் தருண் கோகோய்க்கு உதவியது. புதிய வரி வருவாய்களை உருவாக்கி நிலைமையைச் சீராக்கினார்.

சமூக நலனும் வளர்ச்சியும்

அஸாமை அமைதியின்மைக்குள் ஆழ்த்தியிருந்த பயங்கரவிய அமைப்புகளைச் சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்தவர் அவர்களுடன் உரையாடலைத் தொடங்கினார். அதேநேரத்தில், அமைதி முகிழும் காலம் வரை வளர்ச்சிப் பணிகள் காத்திருக்காது என்று அறிவித்துவிட்டு சாலை, பாலங்கள் என்று போக்குவரத்துத் திட்டங்களை விரைவுபடுத்தினார். 2003-ல் போடோ விடுதலை இயக்கத்துடன் அவரது பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைந்தன. ‘காங்கிரஸ் ஆட்சிக்கு முன்பு மாநிலத்தின் சில பகுதிகளில் மட்டுமே அமைதி நிலவியது, தற்போது சில பகுதிகளில் மட்டுமே அமைதியின்மை நிலவுகிறது. சதவீதக் கணக்கில் பார்த்தால் எனது வெற்றி 80% ஆக இருக்கும்’ என்பதாக அவரது சுயமதிப்பீடு அமைந்திருந்தது.

தருண் கோகோயின் ஆட்சிக்காலத்தின் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்று பள்ளிக்கல்வி முடித்த மாணவர்களின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்தியது. 2001-ல் உயர்நிலைப் பள்ளித் தேர்வில் வென்ற மாணவர்களின் எண்ணிக்கை 33% இருந்தது. 2011-ல் அது 70.3 % ஆக வளர்ந்தது. பெண் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதில் தீவிர அக்கறை எடுத்துக்கொண்டார். சமூகநல மேம்பாட்டில் தமிழகத்தின் சில சமூகநலத் திட்டங்களை தருண் கோகோய் வரித்துக்கொண்டார். பள்ளி மாணவிகளுக்கு அவர் அறிமுகப்படுத்திய விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். அஸாமின் மலைகளிலிருந்தும், வனங்களிலிருந்தும் கல்வி நிலையம் நோக்கி வருவதில் சிரமங்களை எதிர்கொண்ட மாணவிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத் தலைநகரத்திலும் விடுதிகளைத் தொடங்கினார். விவசாயத்தை பிரதானமாகக் கொண்டிருக்கும் மாநிலம் என்பதால் வேளாண் வளர்ச்சித் திட்டங்களில் பெரும் கவனம் செலுத்தினார். அவரது ஆட்சிக்காலத்தில், எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குக் கடன் அட்டைகள் வழங்கப்பட்டன. பால் உற்பத்தியாளர்களைக் கூட்டுறவு முறையில் இணைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். அமைதி நிலையை உருவாக்கியதால், சுற்றுலாத் துறையையும் வளர்த்தெடுத்தார்.

காங்கிரஸுக்குப் பேரிடி

வரும் ஆண்டில் அஸாமில் சட்ட மன்றத் தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் காங்கிரஸுக்கு தருண் கோகோயின் மறைவு பேரிழப்பு. கோகோயின் ஆட்சிக்காலத்தை விட கடந்த ஐந்தாண்டுகளில் பாஜக என்ன பெரிதாய் செய்துவிட்டது என்ற எளிய கேள்வியை முன்வைத்தே காங்கிரஸ் தனது பிரச்சாரத்தைச் சந்திக்கவிருந்தது. மேலும், அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு பெரும் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் தருண் கோகோய். அவருடைய மறைவு காங்கிரஸ் கூட்டணிக்கான ஏற்பாடுகளை மட்டுமல்ல, அவ்வாறு உருவானாலும் கூட்டணியில் காங்கிரஸின் முக்கியத்துவத்தையும் அதன் செல்வாக்குமிக்க முகத்தையும் இழக்கச் செய்துவிட்டது.

காங்கிரஸின் சிப்பாய்களில் ஒருவர் என்று கூறிக்கொள்ளும் தருண் கோகோய் கட்சி விசுவாசத்துக்குப் பேர்போன தலைமுறையின் பிரதிநிதி. அஸாமுக்கு இணையாக காங்கிரஸையும் நேசித்தவர். தன்னுடைய சுயசரிதையை பிரம்மபுத்திரா நதியைப் பற்றிய பூபன் ஹசாரிக்கின் பாடலுடன் தொடங்கிய அவர் தன்னுடைய மரணப் படுக்கையில் பூபன் ஹசாரிக்காவின் பாடல்களோடு, இந்திரா, ராஜீவ் உரைப் பதிவுகளையும் கேட்டுக்கொண்டிருந்தார். இதுவே, காங்கிரஸுக்கு இந்த இழப்பு எவ்வளவு பெரிதென்பதைச் சொல்லிவிடும்!

சமூகநல மேம்பாட்டில் தமிழகத்தின் சில சமூகநலத் திட்டங்களை தருண் கோகோய் வரித்துக்கொண்டார். பள்ளி மாணவிகளுக்கு அவர் அறிமுகப்படுத்திய விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.


தருண் கோகோய்Tarun gogoiஅஸாமின் அமைதி நாயகர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x