அண்ணாவும் பெரியாரும் எங்கே பிரிந்தார்கள்?

அண்ணாவும் பெரியாரும் எங்கே பிரிந்தார்கள்?
Updated on
3 min read

திராவிட இயக்கம் மற்றும் திமுக-வில் ஏற்பட்ட பிளவுகளுக்குக் காரணம் தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல.

ஆர்.முத்துக்குமார் எழுதிய ‘கட்சிகள் உடைந்த கதை’ கட்டுரை முன்வைக்கும் ’விளக்கமற்ற தீர்மானமான முன்வைப்புகள்’ ஏற்புடையதல்ல. ஒரு காலகட்டத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை, அதன் சமகாலத்தில் பதிவான மேலோட்டமான கருத்துக்களை வைத்து ‘வரலாறாக’ மாற்றுகிறது இந்தக் கட்டுரை. முதல் ஆட்சேபம் பெரியார்/ அண்ணா தொடர்பிலானது. அடிப்படையில் அண்ணா சுயமரியாதை இயக்கத்தின் வழியாக நீதிக்கட்சிக்கு வந்தவர் அல்ல. அவர் நீதிக்கட்சி வழியாக பெரியாருக்கு அறிமுகமானவர். அதன் பின்னர் நீதிக்கட்சி, 1944-ல் திராவிடர் கழகமானபோது அதன் பொதுச் செயலாளர் ஆனவர். நீதிக்கட்சி ஜாம்பவான்களில் பெரும்பான்மையானவர்கள் திராவிடர் கழகத்துடன் தங்களை இணைத்துக்கொள்ளவில்லை. இத்தனைக்கும் நீதிக்கட்சியின் பொதுக்குழு தீர்மான ஒப்புதலுடன்தான் திராவிடர் கழகம் உருவானது.

தன்முனைப்பு காரணமல்ல

நீதிக்கட்சி நாட்களில் அண்ணா, தனது நீதிக்கட்சி அடிப்படையிலான பார்ப்பனரல்லாதோர் அரசியலை, பெரியாரின் பார்ப்பனிய இந்துமத எதிர்ப்புக் கருத்தியல்கள் வழியாக மாற்றியமைத்துக் கொண்டார். ஆனாலும் அவர் முற்றிலுமாக ‘பெரியாரிஸ்ட்’ எனும் அடையாளத்துக்குள் தன்னை இழந்தவரல்ல. பெரியாரின் கடவுள் மறுப்பு, பார்ப்பனிய இந்து மதத்துக்கான எதிர்ப்புதான். அதாவது வர்ணாசிரம அடிப்படையிலான மதக்கட்டுமானத்தை அடியோடு சாய்த்துவிட வேண்டுமென்ற முனைப்பு சார்ந்தது. அண்ணாவின் இந்துமத எதிர்ப்பு விமர்சனங்கள் பார்ப்பனிய எதிர்ப்பின் அடிப்படையிலானது. இந்திய சுதந்திரம் நிச்சயமாகிவிட்ட நிலையில், திராவிடர் கழகம் தொடங்கப்பட்ட காலமான 1944-ல் தொடங்கி இறுதிப்பிரிவு நிகழ்ந்த 1949 வரை, ‘குடியரசு’ பத்திரிகையில் பெரியாரும், ‘திராவிட நாடு’ பத்திரிகையில் அண்ணாவும் எழுதிய கட்டுரைகளை வாசிக்க வேண்டும். தவறினால் திமுக உருவாக்கத்தை ‘தன்முனைப்பாகத்தான்’ பார்க்கத் தோன்றும். திராவிட நாடு குறித்த கருத்தாக்கங்களிலேயே அவர்களுக்கிடையிலான முரண் தெளிவாக இருக்கும். பெரியார் எப்போதும் ‘தேச அரசு’ என்ற கருத்தியலுக்கு எதிரானவர். அனைத்துவிதமான அரசுகளும் மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டவை அல்ல என்பது அவரது நிலைப்பாடு. திராவிடஸ்தான் குடிமைப்பண்பு அல்லது குடிமகன் குறித்து அவர் சொன்னது இந்தவகையில் மிக முக்கியமானது.

ஜப்பானில் வாழும் ஒருவன் பிறப்பால் உயர்வு-தாழ்வு என்ற கருத்துக்கு எதிராக இருப்பானானால் அவனும் திராவிடக் குடிமகன் என்றவர் பெரியார். ஆனால் அண்ணா ‘தேச அரசு’, ‘குடிமையுரிமை’ போன்ற விஷயங்களில் இதற்கு முரணான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். பெரியார் நில எல்லைகள் அற்ற தேசியம் பேசியபோது, அண்ணா சுதந்திர இந்தியாவின் தென்கோடி நிலப்பகுதியைத் திராவிட நாடாக உருவகித்தார். இந்திய சுதந்திர தினத்தை ‘துக்க நாள்’என பெரியார் அறிவிக்க, அண்ணா சுதந்திர இந்தியாவின் ‘குடிமகனாக’ அதை ஏற்கத் துணிந்தார். இப்படியாகத் தொடர்ந்த கருத்து நிலை வேறுபாடுகளும், தேர்தல் அரசியல் தொடர்பான அண்ணாவின் நிலைப்பாடுகளுமே இறுதிப் பிரிவுக்குக் காரணமாயின.

குறிப்பாக, கடந்த காலம் ஒரு பொற்காலம் என்ற கருத்தை பெரியார் ஒருபோதும் ஆதரித்ததில்லை. அவரைப் பொறுத்தவரை மொழி உள்ளிட்ட அனைத்துவிதமான சனாதனம் சுமந்த பழைமைகளும் முற்றிலுமாக ஒழித்து அழிக்கப்பட வேண்டியவை. ஆனால் அதற்கு மாறாக அண்ணா தமிழ் மொழியையும், அதன் சங்க இலக்கியங்களையும் தங்களது கலாச்சார அடையாளமாக முன் வைத்தார். அதுவே பின்னர் தேர்தல் அரசியல் களம் கண்டபோது ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற நிலையை எடுக்க வைத்தது. திமுக உருவான பிறகும் பெரியாருக்காக அதன் தலைமைப் பொறுப்பு நிரந்தரமாகக் காலியாக விடப்பட்டு இருந்ததை ‘தன் முனைப்பு’ எனும் எளிமையான புரிதலால் விளக்கிவிட முடியாது. ’தன் முனைப்பு’ சார்ந்து உருவான பிரிவில் என்றென்றும் அவர்தான் எங்கள் தலைவர் என்ற நிலைப்பாடு ஒருபோதும் சாத்தியமில்லை. பெரியார் மணியம்மை திருமணம், பிரிவை உறுதிப்படுத்திய நிகழ்வு மட்டுமே. இவ்விஷயத்தில் திராவிட எதிர்ப்பாளர்கள் விகாரப்படுத்தியதை திராவிட ஆய்வாளர் ஏற்பது விபரீதம்.

எம்.ஜி.ஆர். திரட்டிய ஆதரவு

திமுக-வில் எம்.ஜி.ஆர் ஏற்படுத்தியது ‘செங்குத்துப் பிளவு’ என்பதும் அடிப்படைகள் அற்றது. இந்தக் கண்டுபிடிப்பு ‘வரலாறு’ இல்லை. அதுமட்டுமின்றி எம்.ஜி.ஆர் எனும் பேராளுமைக்கு நீதி செய்வதும் ஆகாது. அ.இ.அ.திமு.க வின் வாக்கு வங்கி பாரம்பரியமான காங்கிரஸ் வாக்கு வங்கியாக இருந்த ஒடுக்கப்பட்ட சாதிகளின் வாக்குகளும், அதுவரையான காங்கிரஸ், தி.மு.க அரசியலில் முன்னுரிமை பெற வாய்க்காத பெரும்பான்மை இடைநிலை சாதியினர் மற்றும் பார்ப்பனர் உள்ளிட்ட உயர் சாதியினர் வாக்குகளும் ஆகும். எம்.ஜி.ஆர் எனும் ஆளுமை உருவாக்கம் தீவிரமான தி.மு.க. தொடர்பற்றே கட்டமைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் சரிபாதி அறுபதுகள் துவங்கி எழுபதுகள் வரையுமான காலத்தில் உருவானவை. அதிலும் அவரது புனித ஆளுமையை நிறுவிய ‘தா’ வரிசை படங்கள் ஒருபோதும் திராவிடத்தின் அடிப்படைகளான பார்ப்பன எதிர்ப்பு அரசியலையோ, கடவுள் மறுப்பையோ மறந்தும் பேசியதில்லை. அவை தொடர்ந்து முன்வைத்த பிம்பம் சமூகநலனுக்காகவும், குடும்ப உறவுகளின் நல்வாழ்வுக்காகவும், அதிலும் குறிப்பாக தாய் , தங்கை ஆகிய உறவுகளைக் கொண்டாடும், அவர்களுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயங்காத துடிப்பான, தர்மமான இளைஞன் என்பதுதான். அவர் பெரும் பணக்காரர் பாத்திரம் ஏற்றது வெகுசில படங்களில்தான். அவரது பிரதான பாத்திரங்கள் அடிநிலை வாழ்வு அடையாளம் கொண்ட மீனவன், ரிக்‌ஷாக்காரன், விவசாயி போன்றவைதான். எம்.ஜி.ஆர். எனும் ஆளுமை திராவிடக் கருத்தியலுக்கு முற்றிலும் வெளியே கட்டமைக்கப்பட்டதாகும்.

அ.தி.மு.க. தொடங்கப்பட்டபோது கட்சியின் ஒரு மாவட்டச் செயலாளர்கூட அவருடன் செல்லவில்லை. தி.மு.க.வுக்கு வெளியே ஒரு கட்சியை நிறுவியே அவர் வெற்றி கண்டார். தலித்துகள், தேவேந்திரர், அருந்ததியர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சாதிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் குறிப்பாக அதுவரை அரசியல் அதிகாரம் பெறாத முக்குலத்தோர் மற்றும் தேசியவாதிகளாக அறியப்பட்ட கொங்கு வெள்ளாள சமூகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தனது வாக்குவங்கியை உருவாக்கினார் எம்.ஜி.ஆர்.

உண்மையான பெரும்பிளவு

பெரும் பிளவைச் சந்திக்காததால்தான் தி.மு.க.வால் பதிமூன்று ஆண்டுகாலம் தாக்குப்பிடிக்க முடிந்தது. உள்ளபடியே தி.மு.க. செங்குத்தாகப் பிளக்கப்பட்டது வை.கோபால்சாமியின் அணியால்தான். தி.மு.க.வின் பதினாறு மாவட்டச் செயலாளர்கள் அந்த அணியில் இருந்தனர். அடிமட்டக் கிளையிலிருந்து ஒன்றியம் ஊடாக அனைத்து நிலையிலும் பொறுப்பாளர்கள் அணி மாறினர். தி.மு.க.வின் அசைக்க முடியாத சக்திகளாக இருந்த வலிமையான மாவட்டச் செயலா ளர்கள் வெளியேறி அங்கு ஒரு வெற்றிடத்தை உருவாக்கினர். செயற்குழுவிலும், பொதுக்குழுவிலும் கருணாநிதிக்கு மாற்றான நிலைப்பாடுகளை எடுக்கக்கூடிய வர்கள் வெளியேறி, எதிர்ப்பற்ற அரசியல் தலைமையை அவருக்கு வழங்கினர். வைகோவின் தெளிவற்ற அரசியல் தலைமை அவர்களைத் தடுமாற்றத்துக்கு உள்ளாக்கி ஒவ்வொருவராக தி.மு.க.வுக்குத் திரும்பச் செய்தது. அங்கும் அவர்களது இடம் பிறரால் நிரப்பட்டுவிட்டதால் தங்களது உன்னதமான அரசியல் அதிகார காலத்தை அசைபோடும் ஓய்வுக்கு அனுப்பப்பட்டனர். அதன் உப விளைவாகவே தி.மு.க. கருணாநிதியின் ‘குடும்பக்கட்சி’ என்ற நிலைக்கு நகர்வதானது நிகழ்ந்தது.

- வீ.எம்.எஸ். சுபகுணராஜன்,

திராவிட இயக்க ஆய்வாளர், திரைப்பட விமர்சகர்.

தொடர்புக்கு: subagunarajan@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in