Published : 01 Oct 2015 10:25 AM
Last Updated : 01 Oct 2015 10:25 AM

ரொமீலா தாப்பர் பேசுகிறார் - கிருஷ்ணனுக்குப் பதிலாக புத்தர் தேரோட்டியாக இருந்திருந்தால்...

வரலாற்றாசிரியர் ரொமீலா தாப்பர் பேட்டியின் தொடர்ச்சி...

நமக்குத்தான் அதிகப்படியான சகிப்புத்தன்மை உள்ளது என்கிறோம். ஆனால், நம்முடையது அஹிம்சை வழிச் சமூகமே அல்ல. இந்து மதம் என்பதே மேட்டுக்குடியை முன்னிறுத்தித்தானே கட்டமைக்கப்பட்டுள்ளது? வெகு சமீபத்தில்தானே தலித் மக்களின் சமூக நிலைமை குறித்த புரிதல் எழுந்துள்ளது?

காலனிய ஆட்சிக் காலத்தில் தேசியவாதம் முதன்முதலில் பேசப்பட்டபோது பாரம்பரிய மதிப்பீடுகளும் தூக்கிநிறுத்தப்பட்டன. அக்காலகட்டத்தில் மக்களிடையே பிரபலமடைந்த மந்திரச் சொற்கள்தான் அகிம்சையும், சகிப்புத்தன்மையும். அப்போது ஆட்சியைப் பிடித்தவர்கள் இந்திய ஆன்மிகத்தின் உயிர்நாடி சகிப்புத்தன்மை, அகிம்சை எனவும் மேற்குக் கலாச்சாரத்தில் அவை இல்லை என்றும் பரப்பினர். ஆனால் உண்மை யாதெனில், பிற வரலாறுகளைப் போலவே இந்திய வரலாறும் வன்முறையாலும் வெறுப்பினாலும் நிரம்பி வழிகிறது. அரேபியர்களும், துருக்கியர்களும், மங்கோலியர்களும் இந்தியா வருவதற்கு முன்பும் இதே நிலைதான்.

பண்டைய காலத்தில் மதக் குழுக்கள் பேதமின்றி ஒன்றுபட்டு இயங்கின என்னும் பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அன்றும் பல பிரிவுகள் இருக்கத்தான் செய்தன. என் நினைவில் நின்றவரை, ராமகிருஷ்ண பரமஹம்சர் சம்பிரதாயங்கள் பற்றிப் பேசியபோது வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையே விவாதங்கள் எழுந்தன. ஆனால், இத்தகைய மாற்றுக் கருத்துக்களும், பன்மைத் தன்மையும் மறைக்கப்பட்டுவிட்டன. பல்வேறு குழுக்கள் அன்றும் இயங்கியதை வரலாறுதானே மக்களுக்குச் சொல்ல வேண்டும்?

முதலில் இறையியல் வேறு, மத வரலாறு வேறு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மத நூல்களைப் பற்றி மட்டும் பேசுவதல்ல வரலாறு. ஒரு மதம் பின்பற்றப்படும் விதத்தை, அதன் மேன்மை கட்டி எழுப்பப்பட்ட முறையை, அம்மத ஆதரவாளர்களின் சமூகவியலை, மத நிறுவனங்களின் கட்டமைப்பை உள்ளும் புறமும் அலசி ஆராய்வதுதான் வரலாறு. இதைக் கற்றுத்தந்தால் மட்டுமே மதத்தின் சமூக, அரசியல், பொரு0ளாதாரப் பரிமாணங்களையும் மக்கள் புரிந்துகொள்வார்கள்.

மக்கள் வாழ்விலிருந்து பிரிக்க முடியாதது மதம். பலருக்கு உணர்வுரீதியாகவும் சிலருக்கு ஓரளவேனும் அவர்களுடைய வாழ்க்கையோடு ஒன்றாய் கலந்தது மதம். இதில் வெவ்வேறு மதங்களாக இருப்பினும், ஒன்றோடு ஒன்று அனுசரித்து இயங்க வேண்டியது அவசியமாகிறது. ஆனால், நெடுங்காலம் ஆதிக்கம் செலுத்திய மதமும் ஒடுக்கப்பட்ட மதமும் சட்டென ஒன்றோடு ஒன்று சுமுகமாகப் பயணிப்பது லேசுப்பட்டதல்ல. ஆனால், நவீன சமூகங்கள் இதைப் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளன. ஆகையால், இத்தகைய உறவுச் சிக்கல்களைச் சரிசெய்யக் கூடுமானவரை அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

ஆனால், இந்திய வரலாற்றுப் புருஷர்களை நீங்கள் விமர்சித்தாலோ, பாரம்பரியத்தைக் கேள்வி கேட்டாலோ இன்றைக்கு உடனடியாக வில்லனாக வெறுக்கப்படுவீர்களே?

ஆனால், அப்படிச் செய்யவே கூடாது. முதல் முறையாக உங்க ளைச் சந்திக்கும்போது உங்களைப் புரிந்துகொள்ள விரும்பினால் என்ன வெல்லாம் செய்வேன்? உங்களுடைய வாழ்க்கை மற்றும் பின்புலத் தைப் பற்றிச் சில கேள்விகள் கேட்பேன் அல்லவா! அதன் மூலம் நீங்கள் எப்படிப்பட்டவர் என யூகிப்பேன். அந்தப் புதிய சந்திப்பில் நம்பகத்தன்மை உண்டாகலாம் அல்லது நிராகரிக்கத் தோன்றலாம்.

நூல்களும் நண்பர்களைப் போன்றவையே. அவை நமக்கு ஒரு நபரைப் பற்றியும் நிகழ்வைப் பற்றியும் சொல்கின்றன. அதற்காக அதில் உள்ளவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியுமா? முடியாது. நான் வாசிக்கும்போதே பல கேள்விகளை எழுப்புவேன். உதாரணத்துக்கு, அர்த்தசாஸ்திரம் படிக்கும்போது, உண்மையாகவே மவுரிய அரசரிடத்தில் அத்தனை அதிகாரமும் இருந்திருக்குமா? அன்றே வரி வசூலிக்கப்பட்டு அனைத்தும் மையப்படுத்தப்பட்ட ராஜ்ஜியம் நடந்திருக்குமா? அப்படியானால், வரி வசூலித்தது யார்? வசூலிக்கப்பட்ட வரி பணமா அல்லது பொருளா? பொருள் என்றால், அது எப்படிச் சேமிக்கப்பட்டது? இடம் விட்டு இடம் எப்படிக் கொண்டுசெல்லப்பட்டது? இப்ப0டிப் பல கேள்விகள் எனக்குள் எழும்.

உங்களுடைய புத்தகமான ‘எர்லி இந்தியா: ஃப்ரம் தி ஆரிஜின் டு ஏடி 1300’-ல் மகாபாரதப் போரை விவரிக்கும்போது, கிருஷ்ணனுக்குப் பதிலாக புத்தர் தேரோட்டியாக இருந்திருந்தால் அர்ஜுனருக்கு வேறுவிதமான போதனை கிடைத்திருக்கும் என்றீர்கள். அதை விளக்க முடியுமா?

நான் உட்பட வரலாற்றாசிரியர்கள் பலரும், மவுரிய சாம்ராஜ்ஜியத்துக்குப் பிந்தையது பகவத்கீதை என வாதிடுகிறோம். அந்தக் காலகட்டத்தில் பிராமணப் பாரம்பரியத்துக்கு இணையாக பவுத்தமும், சமணமும், சைவ மரபும் தழைத்தோங்கின. பதஞ்சலி கூறியதுபோல கி.பி. முதலாம் புத்தாயிரம்வரை பிராமணர்களும் சமணர்களும் இரு வேறு பிரிவுகளாக பாம்பும் கீரியும்போல மோதிக்கொண்டே இருந்தனர்.

புத்தரின் போதனைகளுக்கும் அசோகரின் கொள்கைகளுக்கும் எதிர்வினையாற்றவே பகவத்கீதை இயற்றப்பட்டது எனும் வாதமும் உண்டு. அதேபோன்று பிராமணர் களுக்கும் நாத்திகர்களுக்கும், போலிகளுக்கும், பவுத்தர்களுக்கும் (அவர்களும் பிராமணர்களைப் போலிகள் என்றே சாடினர்), சமணர்களுக்கும், இன்னும் பிற மதக் குழுக்களுக்கும் இடையே பொதுத் தளங்களில் நிகழ்ந்த விவாதங்கள் சில பிரமாண ஏடுகளில் விமர்சிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பின்புலத்தில் புத்தருக்கும் அர்ஜுனருக்கும் பேச்சு வார்த்தை நடந்திருந்தால் புத்தர் என்ன சொல்லியிருப்பார்? “இந்தப் போர் அவசியமா? எதற்காகச் சண்டையிடுகிறாய்? ராஜ்ஜி யத்துக்காகச் சண்டையிட்டு உன் உடன்பிறப்புகளையே கொன்றுவருகிறாய்” என புத்தர் கேட்டிருப்பார். அனைவரையும் சமமாக பாவித்து ஆட்சி செலுத்தும் முறையான ‘கணசங்கம்’ போன்ற அமைப்புகளை நேசித்ததால், ராஜ்ஜியம்தான் சிறந்த ஆட்சிமுறையா எனும் கேள்வியைக்கூட புத்தர் எழுப்பியிருப்பார்.

- ரொமீலா தாப்பர்

தொடரும்..

தமிழில் சுருக்கமாக: ம.சுசித்ரா,
© ஃப்ரண்ட்லைன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x