

“சாதலும் புதுவது அன்றே” என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணியன் பூங்குன்றன் பாடிவிட்டுச் சென்றிருக்கிறார். என்றாலும், மரணம் - அதிலும் அரிதினும் அரிதான தமிழறிஞரின் மரணம் – நம்முள் ஏற்படுத்தும் துயரம் பெரியது. ரஷ்யாவைச் சேர்ந்த தமிழறிஞர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி கரோனா பெருந்தொற்றால் இறந்துபோவார் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
இசைக் கலைஞனாக வேண்டும் எனத் தனது இளம் வயதில் விரும்பிய துப்யான்ஸ்கி இசையோடு இரண்டறக் கலந்த தமிழால் ஈர்க்கப்பட்டதில் வியப்பில்லை. சில ஆண்டு கால ராணுவ சேவைக்குப் பின்னர், மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் இருந்த கீழைத்தேய மொழிகளுக்கான பள்ளியில் மாணவனாகச் சேர்ந்த அவர், தென்னிந்திய மொழிகளில் அதிலும் குறிப்பாகத் தமிழ் மீது ஆர்வங்கொண்டார். தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களையும் மத்தியக் கால இலக்கியங்களையும் கற்றார். படிப்பு முடிந்த பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் பணிக்குச் சேர்ந்தார். 1973 முதல் ஆசிரியராக, முதுநிலை ஆசிரியராக, இணைப் பேராசிரியராக உயர்ந்தார். பணியில் இருந்தபோது ‘செவ்வியல் தமிழ் இலக்கியத்தின் கவிதையியல்’ என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார். 1978-79-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் அவர் தமிழ் மாணவனாக இருந்திருக்கிறார். ரஷ்யாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அவர் தமிழ் மொழியைக் கற்பித்தார்.
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ரஷ்ய இலக்கியங்கள் தமிழ்நாட்டின் மீது செலுத்திய தாக்கம் அதிகம். தமிழில் சோஷலிஸ யதார்த்தவாதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இலக்கியப் படைப்புகளுக்கு அந்த மொழிபெயர்ப்புகளே ஊற்றுக்கண்களாக இருந்தன. அதுபோலவே தமிழிலிருந்து ஏராளமான படைப்புகள் ரஷ்ய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டன. செவ்வியல் இலக்கியங்கள் மட்டுமின்றி ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி உள்ளிட்ட நமது சமகாலத் தமிழ் எழுத்தாளர்கள் பலரது படைப்புகளும் ரஷ்ய மொழிக்குச் சென்றன. சோவியத் ஒன்றியத்தின் தகர்வு வரை அந்த நிலை நீடித்தது.
சோவியத் ஒன்றியத்தின் தகர்வுக்குப் பின்னர் ரஷ்யாவில் பேராசிரியர் துப்யான்ஸ்கியை மையமாகக் கொண்டுதான் தமிழ் ஆய்வுகள் நடந்துவந்தன. ‘முன்னேற்றப் பதிப்பகம்’, ‘ராதுகா பதிப்பகம்’ போன்றவை மூடப்பட்டதற்குப் பிறகு தமிழ்நாட்டுடனான ரஷ்யாவின் உறவு நைந்துபோனது. அது அறுந்துவிடாமல் கடந்த 25 ஆண்டுகளாகத் தனி ஒரு மனிதராகக் காப்பாற்றிவந்தவர் துப்யான்ஸ்கி. ஒவ்வொரு ஆண்டும் அவரால் ஒருங்கிணைக்கப்பட்ட சங்கப் பாடல்கள் குறித்த வாசிப்புப் பட்டறை ரஷ்ய ஆராய்ச்சி மாணவர்களிடையே தமிழ் ஆர்வம் குறையாமல் காப்பாற்றிவந்தது.
சங்க இலக்கிய அகப்பாடல்கள் பாணர்களின் இசையிலிருந்தும் சடங்குகளிலிருந்தும் பல்வேறு கூறுகளை உள்வாங்கியிருப்பதை துப்யான்ஸ்கி விரிவாக ஆராய்ந்து எழுதினார். சங்க இலக்கியங்களில் பேசப்படும் ‘ஆற்றல்’ என்பதற்கும், சிந்துவெளி நாகரிகத்தில் காணப்பட்ட தாய்த் தெய்வ வழிபாட்டுக்கும் இடையே உள்ள உறவை அவர் எடுத்துக்காட்டினார். இந்த ஆய்வுகளை உள்ளடக்கிய ‘சங்கப் பாடல்களின் சடங்கு மற்றும் மாந்திரிக ஆதாரங்கள்’ (Ritual and Mythological Sources o f the Early Tamil Poetry) என்ற அவரது முக்கியமான நூல் தமிழ்நாட்டில் அவ்வளவாகப் பேசப்படவே இல்லை. ஆனால், அவர் தொல்காப்பியம் குறித்துக் கூறிய கருத்து தமிழ்நாட்டில் சர்ச்சையைக் கிளப்பியது.
கோவையில் 2010-ல் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்று தொல்காப்பியம் குறித்து அவர் வாசித்த கட்டுரையில், “தொல்காப்பியத்தை ஆராய்ந்த அறிஞர்களில் ஒருவரான சுப்ரமணிய சாஸ்திரி தொல்காப்பியத்தின் பல பகுதிகள் சம்ஸ்கிருத நூல்களின் நேரடி மொழிபெயர்ப்புகள் என்று கூறியுள்ளார். நான் அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், அந்தக் காலத்தில் பிரதிகளுக்கிடையே இருந்த உறவு என்பது மொழிபெயர்ப்பு என்பதாக அமைந்திருக்கவில்லை. மாறாக, ஒரு மொழியில் இருப்பதை இன்னொன்றில் வழங்குவது என்ற விதத்தில்தான் இருந்தது. ஒன்றிலிருந்து கடன் பெறுவதையோ, ஒன்றன் கருத்தாக்கத்தை இன்னொரு மொழியில் பயன்படுத்துவதையோ அப்போது யாரும் தவறாக நினைக்கவில்லை” என்று துப்யான்ஸ்கி குறிப்பிட்டிருந்தார்.
சங்க இலக்கியங்கள் அனைத்தும் சம்ஸ்கிருதத்தைப் பார்த்து எழுதப்பட்டவை என்று அதிர்ச்சி தரும் விதமாகப் பேசிய ஹெர்மன் டீக்கனின் நூல் தமிழ்ச் சூழலில் எதிர்ப்பலைகளை எழுப்பிக்கொண்டிருந்த நேரத்தில், துப்யான்ஸ்கியின் கருத்தையும் அத்துடன் சேர்த்துப் பலரும் புரிந்துகொண்டனர். அதனால், தமிழ் மரபின் தனித்துவமான பண்புகளாக அவர் சுட்டிக்காட்டியவை கவனம் பெறாமல் போய்விட்டன. ‘‘மனிதச் சூழலுக்கும், இயற்கைப் பின்னணிக்குமான தொடர்பை எடுத்துக்கூறுவதுதான் திணைக் கோட்பாடு. அத்தகைய விவரிப்பு இந்தோ ஆரியக் கவிதை மரபிலும் உள்ளது. ஆனால், தமிழ் மரபில் அது மிகவும் ஆற்றல்வாய்ந்த கவித்துவ சாதனமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்ட துப்யான்ஸ்கி, “தொல்காப்பியர் வடக்கிலிருந்து கடன் வாங்கிய கருத்தாக்கங்களோடு சுயேச்சையான தமிழ்ச் சூழல்களைத் திறம்படக் கலந்து பேசியுள்ளார். அதற்குக் களவு பற்றி அவர் எழுதியுள்ளவை சான்றாக விளங்குகின்றன. களவு என்பது எட்டு வகையான திருமண முறைகளில் ஒன்றாகத் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. காந்தர்வ முறை என்று சம்ஸ்கிருதத்தில் சொல்லப்பட்டிருப்பதுதான் இங்கு களவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், களவுக்குள் பேசப்படும் உடன்போக்கு என்ற விஷயம் தமிழுக்கு மட்டுமே உரித்தானதாகும்” என்று விவரித்தார்.
2016 ஏப்ரலில் அவரது 75-வது பிறந்தநாளின்போது பல்வேறு தமிழறிஞர்களின் கட்டுரைகளடங்கிய சுமார் 600 பக்கங்கள் கொண்ட நூலொன்று வெளியிடப்பட்டது. அதன் பெயர் ‘தமிழ் தந்த பரிசு’. நற்றிணையை ரஷ்ய மொழியில் மொழியாக்கம் செய்துகொண்டிருந்தார் துப்யான்ஸ்கி. அது அவரது பெருங்கனவாக இருந்தது. அந்தக் கனவு நனவாகும் முன்பே அவர் வாழ்வு முடிந்துவிட்டது.
- ரவிக்குமார், ‘மணற்கேணி’ இலக்கிய ஆய்விதழின் ஆசிரியர், நாடாளுமன்ற உறுப்பினர்.
தொடர்புக்கு: adheedhan@gmail.com