Published : 25 Oct 2015 09:33 AM
Last Updated : 25 Oct 2015 09:33 AM

பிஹார் கோட்டை யாருக்கு?

பிஹார் மாநில சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல், அரசியல் ஆராய்ச்சியாளர்களிடையேயும் தேர்தல் முடிவுகளைக் கணிக்கும் நிபுணர்களிடையேயும் கடும் பிளவை ஏற்படுத்திவிட்டது. தேர்தல் கணிப்புகளிலிருந்து எந்தவொரு முடிவுக்கும் திட்டவட்டமாக வர முடியவில்லை. இருவருமே சில அம்சங்களைச் சுட்டிக்காட்டித் தங்களுக்குத்தான் சாதகம் என்று கூறிக்கொள்கின்றனர்.

2015 சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல் பிஹாருக்கு மட்டுமல்ல; தேசிய அரசியலுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், (ஐ.ஜ.த.) லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ரா.ஜ.த.), சோனியா தலைமையிலான இந்திய தேசியக் காங்கிரஸ் (இ.தே.கா.) ஆகிய 3 பெரிய அரசியல் கட்சிகள் ‘மகாகத்பந்தன்’என்ற வலுவான கூட்டணியை உருவாக்கி உள்ளன. ‘மகாகத்பந்தன்’என்றால், பாஜகவைத் தடுத்து நிறுத்துவதற்கான ‘சமரசக் கூட்டணி’என்று பொருள். இம்மூன்று கட்சிகளுக்கும் கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும், பாஜகவின் வெற்றியைத் தடுத்து நிறுத்துவதற்காக அரசியல் கூட்டணி அமைத்துள்ளன. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஆதரவுள்ள கூட்டணி இது.

பிஹார் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, ஜித்தன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் சமதா இடம்பெற்றுள்ளன. முற்பட்ட வகுப்பினர், தலித்துகள், மகா தலித்துகள் இடையில் புதிய சமுதாயக் கூட்டணியை ஏற்படுத்தும் முயற்சி இது. அரசியல் வரலாற்றின்படி பார்த்தால், மக்கள்தொகை எண்ணிக்கை மற்றும் வாக்காளர்களின் சதவீத அடிப்படையில் ‘மகாகத்பந்தன்’ வெற்றிக் கம்பத்துக்கு நெருக்கமாக இருக்கிறது.

2014 மக்களவைப் பொதுத் தேர்தலில் தலித்துகள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதைப் பார்க்கும்போது, இந்தக் கணக்கு மாறும் என்றும் தோன்றுகிறது.

2010 சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல் முடிவில் கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகள் அடிப்படையில் பார்க்கும்போது ‘மகாகத்பந்த’னுக்கே சாதகமாக இருக்கிறது. ரா.ஜ.த., ஐ.ஜ.த., காங்கிரஸ் ஆகியவை முறையே 18.8%, 22.6%, 8.3% வாக்குகள் பெற்றன. பாஜகவுக்கு 16.4%, லோக்.ஜ.சக்திக்கு 6.7% மட்டுமே கிடைத்தன. 2014 மக்களவைப் பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 38.8% வாக்குகள் கிடைத்தன.

‘மகா கூட்டணி’ பெற்ற வாக்குகளைக் கூட்டினால் 44.3% வருகிறது. பாஜகவுக்கு எப்போதும் பிஹாரில் நகரங்களிலும் நகரங்களையொட்டிய பகுதிகளிலும் மட்டுமே செல்வாக்கு. கிராமப்புறங்களில் அதற்குக் கட்சி அமைப்புகள் வலுவாக இல்லை.

2014 மக்களவைப் பொதுத் தேர்தலின்போது பாஜக கூட்டணிக்கு இதுவரை இருந்திராத அளவில் அதிகத் தொகுதிகள் கிடைத்தன. ஆனால், அப்போது வீசிய மோடி அலையால்கூட லாலு பிரசாத் ஏற்படுத்தியுள்ள முஸ்லிம்கள் யாதவர்கள் கூட்டணி 29.5% வாக்குகளைப் பெறுவதைத் தடுக்க முடியவில்லை. இப்போது வலுவான கூட்டணி அமைத்திருப்பதுடன் வெற்றிபெற்றால் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதால் ஆதரவு அதிகரிப்பதற்கே வாய்ப்பு அதிகம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்கும் பூமிகார்களும் தாக்கூர்களும் பரஸ்பரம் சண்டையிடுபவர்கள். மக்கள்தொகையில் அவர்கள் 14% இருக்கின்றனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது மிகமிக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தலித்துகள் இணைந்து மக்கள்தொகையில் 46% இருக்கின்றனர். நிதிஷ்குமார், லாலு பிரசாத் அமைத்துள்ள கூட்டணி அனைத்து சமுதாயப் பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வானவில் கூட்டணி. நிதிஷ்குமாரின் கூட்டணியின் ஆதார வலு மிகமிக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தான்.

எனினும் மாஞ்சியும் குஷ்வாஹாவும் பிரிந்து பாஜக அணியில் சேர்ந்ததால் வானவில் கூட்டணி என்று அழைக்கப்படும் சமூகக் கூட்டணியில் வாக்குச் சிதறல் ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

அதேபோல லாலு பிரசாத்தின் சமூகத்தவர் நிதீஷை ஆதரிப்பது உறுதி என்றாலும், நிதிஷ் சமூகத்தவர் லாலுவை ஆதரிப்பார்களா என்பது கேள்விக்குறி! காரணம், 1990-களில் பிஹார் அரசியலில் யாதவ்கள் ஆதிக்கம் செலுத்தியதன் எதிர்வினையாகத்தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் மிகமிக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் மகா தலித்துகளும் ஓரணியில் திரண்டார்கள்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைப் பொறுத்தவரை முதல்வர் வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிதிஷ்குமார் மக்களிடையே அதிக ஆதரவைப் பெற்றுள்ளார். பாஜக கூட்டணியில் அவருக்கு நிகராக யாரும் இல்லை. கூட்டுத் தலைமை என்ற கோட்பாடு மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், ஹரியாணா மாநிலங்களில் எடுபட்டதற்குக் காரணம், அங்கெல்லாம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசுகள் மீது மக்களுக்கு அதிருப்தி நிலவியது.

முதலமைச்சர்கள் மக்களிடையே செல்வாக்கை இழந்திருந்தனர். டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவாலிடம் பாஜக படுதோல்வி அடைந்தது. மக்களிடம் நன்கு அறிமுகமான, செயல்திறன் மிக்க ஒருவர் முதல்வராக அறிவிக்கப்படும்போது அவர்தான் வெற்றி பெறுகிறார். டெல்லியில் மோடி ஆதரவாளர்களுக்கும் கேஜ்ரிவால் ஆதரவாளர்களுக்கும் இடையிலான விரோதம் உலகப் பிரசித்தம். ஆனால், வாக்காளர்களிடையே நாடாளுமன்றம் என்றால் மோடியையும், சட்டப்பேரவை என்றால் கேஜ்ரிவாலையும் ஆதரிக்கும் மனநிலையே காணப்பட்டது.

பிஹாரைப் பொறுத்தவரை முதல்வர் பதவிதான் முக்கியம். அதற்கு நிதிஷை ஆதரிப்பவர்கள் எண்ணிக்கையே அதிகம். மோடிக்கு ஆதரவு இருந்தாலும் அது வாக்காக மாறிவிடும் என்று சொல்ல முடியாது.

பிஹாரின் வெற்றிகரமான, முற்போக்கான முதலமைச்சராகப் பாராட்டப்படுகிறார் நிதிஷ்குமார். பெண் குழந்தைகளின் கல்வி ஊக்குவிப்புத் திட்டம், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, பள்ளிக்கூடத்துக்குப் பெண்களை ஈர்ப்பதற்காக இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் போன்றவற்றால் மக்களிடையே செல்வாக்குடன் திகழ்கிறார். கடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது சாதி, கட்சி என்ற வேறுபாடுகளைக் கடந்த மகளிர் வாக்கு வங்கி பிஹாரில் உருவானது. ராப்ரி தேவி முதல்வராக இருந்தபோதுகூட இது உருவாகவில்லை. இந்த வாக்கு வங்கி நிதிஷ்குமாரைத்தான் ஆதரித்தது.

மக்களவைத் தேர்தலில் ஒரு கட்சியைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர்கள் மாநிலங்களில் தங்களுக்கு அதிகம் நெருக்கமான கட்சியைத்தான் தேர்ந்தெடுக்கின்றனர். சட்டப் பேரவைத் தேர்தலைவிட மக்களவைப் பொதுத் தேர்தலின் போது பாஜக கூட்டணிக்கு 10% அதிக வாக்குகள் கிடைத்தன. அதற்குக் காரணம், அதன் மத்திய தலைவர்கள் மீது வைத்த நம்பிக்கை. மகாராஷ்டிரம், ஹரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீரம், டெல்லி ஆகிய மாநிலங்களில் அடுத்து நடந்த பேரவைத் தேர்தல்களில் பாஜகவின் ஆதரவு வாக்குகள் சுமார் 10% குறைந்தன.

பிஹாரில் மக்களவைப் பொதுத் தேர்தலின்போது பாஜக அணிக்குக் கிடைத்த வாக்குகள் 38%. இது மேலும் குறைந்தால் விளைவுகள் படுமோசமாக இருக்கும் பாஜக கூட்டணிக்கு. மாஞ்சி இப்போது பாஜக கூட்டணியில் இருப்பதால் ஆதரவு ஓரிரு சதவீதங்கள் அதிகரிக்கக்கூடும். மாஞ்சி இல்லாவிட்டால், பிஹார் தேர்தல் முடிவு என்ன என்று எல்லோராலும் சொல்ல முடிந்திருக்கும்.

நிதிஷ்குமாரின் ஆதரவாளர்கள் லாலு பிரசாத் கட்சிக்கும் காங்கிரஸுக்கும் வாக்களிப்பார்களா? இதுவும் மிகப்பெரிய கேள்வி. முடிவு எப்படியிருக்குமோ என்று பரபரப்புடன் காத்திருக்க வேண்டிய சட்டப் பேரவை பொதுத் தேர்தல் இதைப் போல இதுவரை நடந்ததில்லை என்பதே உண்மை.

தமிழில்: சாரி, © ‘தி இந்து’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x