

முதன்முதலில் ராமகிருஷ்ணனை சென்னை, ராயப்பேட்டையில் இருந்த ‘க்ரியா பதிப்பக’த்தின் பழைய அலுவலகத்தில் சந்தித்தேன். அது 1980-களின் தொடக்கம். எழுத்தாளர் திலீப் குமார் அப்போது ‘க்ரியா’வில் பணியாற்றிக்கொண்டிருந்தார்; அவரைச் சந்திக்கும் நல்வாய்ப்பும் கிடைத்தது எனக்கு. ராமகிருஷ்ணன் கண்டெடுத்து ஊக்குவித்த பிரமாதமான எழுத்தாளர்களுள் திலீப் குமாரும் ஒருவர். அந்த அலுவலகத்தின் துடிப்புமிக்க ஆற்றலையும் உளநோக்கையும் முதல் தடவை அங்கே வருபவரால்கூட உணர முடியும்.
ராமகிருஷ்ணனுக்கும் எனக்கும் இடையே உறுதியான நட்பு மலர்ந்து காலப்போக்கில் அது இன்னும் ஆழமானது. ஒவ்வொரு தடவையும் நான் சென்னை வரும்போது ‘க்ரியா’வின் புதிய புத்தகங்களின் பொதியைச் சுமந்தபடியே என் நாட்டுக்குச் செல்வேன். ந.முத்துசாமி, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், திலீப் குமார் தொடங்கி இமையம், தங்க.ஜெயராமன், ஆசை வரையிலானவர்களின் நூல்கள், ஐராவதம் மகாதேவனின் மகத்தான நூல், காம்யு, காஃப்கா போன்றோரின் படைப்புகளின் நேரடி மொழிபெயர்ப்புகள், முக்கியமாக ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ என்று ஜெருசலேமில் உள்ள என் அலுவலகத்திலுள்ள ‘க்ரியா’வின் நேர்த்தியான நூல்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
நவீனத் தமிழ் இலக்கியத்தோடு எனக்கு இருந்த வலுவான இணைப்பு ராம்தான். அவருடைய உதவியின் காரணமாகத்தான் நவீனத் தமிழ் இலக்கியத்தின் அற்புதங்களை நான் கொஞ்சம் கொஞ்சமாகச் சுவைக்க ஆரம்பித்தேன். இதற்கு முழு முதல் காரணம் ராமின் ஆழ்ந்த ரசனைதான். ‘நம்பிக்கையல்ல, ரசனைதான் மலைகளை நகர்த்துகிறது’ என்று ரஷ்யக் கவிஞர் மண்டெல்ஸ்டாம் கூறினார். ராமுக்கு அப்படிப்பட்ட ரசனை இருந்தது, அது எப்போதும் அபூர்வமான ரசனை.
மிகுந்த அக்கறையுள்ள எடிட்டருக்கான எடுத்துக்காட்டு ராமகிருஷ்ணன். தான் வெளியிடும் ஒவ்வொரு புத்தகத்திலும் ஒவ்வொரு சொல், ஒவ்வொரு காற்புள்ளி அல்லது முற்றுப்புள்ளியையும் கூர்மையாகப் பார்த்துத் திருத்தக்கூடியவர் அவர். பின்பற்றுவதற்குக் கிட்டத்தட்ட சாத்தியமே இல்லாத தரத்தை அவர் நிறுவினார். அவருடைய ‘க்ரியா’ வெளியிடும் புத்தகங்கள் உயர் இலக்கிய, கலாச்சார, அழகியல் கோணங்களில் முழுமை பெற்றவையாக இருந்தன. இசைக் கலைஞர்கள் ‘உத்தம சுருதி’ என்று அழைக்கக் கூடியதைத் தமிழ் சார்ந்து ராம் பெற்றிருந்தார். அவர் பேசும் தமிழிலும் அந்தக் கச்சிதமான அழகை நாம் கேட்க முடியும்.
எல்லா அகராதியியலாளர்களைப் போலவும் ராமுக்கும் சொற்கள் மீது அவ்வளவு பித்து. என் பார்வையில், ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யானது நவீனத் தெற்காசிய மொழிகளுக்கு உருவாக்கப்பட்டதிலேயே மிகச் சிறந்த அகராதியாகும். அதுவொரு மகத்தான நூல். அதன் விரிவாக்கப்பட்ட ஒவ்வொரு பதிப்பிலும் அதன் மகத்துவம் மேலும் அதிகரித்திருக்கிறது.
பேராசிரியர் இ.அண்ணாமலையின் மொழியியல் அறிவும், முதல் பதிப்பின் ஆசிரியர் பா.ரா.சுப்பிரமணியனின் நிபுணத்துவமும் இந்த அகராதிக்குத் தொடர்ச்சியாக உதவியிருக்கின்றன. தமிழ் மீது அக்கறை கொண்ட எவருக்கும் இந்த அகராதி ஒரு பரிசாகும். இது இருபதாம், இருபத்தொன்றாம் நூற்றாண்டுகளின் வாழும் தமிழுக்கான தெளிவான சான்றாக சந்தேகத்துக்கு இடமில்லாமல் நீடித்த ஆயுளைக் கொண்டிருக்கும். மகத்தான உளநோக்கையும் உடல் வலுவையும் கொண்ட மனிதரொருவரே இதுபோன்ற பிரம்மாண்டமான காரியத்தைத் தொடங்கி, பிறகு முடிக்க முடியும்.
எந்த மொழியும் படைப்பூக்க மிக்க, வெளிப்பாட்டு ஊடகமாக நீடித்து வாழ்வதற்கு அசாதாரணமான கற்பனைத் திறனும் தெளிவான மதிப்பீட்டுணர்வும் கொண்ட அர்ப்பணிப்பு மிக்க ஒருசில தனிநபர்களையே எப்போதும் சார்ந்திருக்கிறது. ராம் அப்படிப்பட்ட மனிதர்தான் – அதனால்தான், நம் இழப்பு மிக மிகப் பெரியதாக இருக்கிறது. தமிழ் தனது காவல் தெய்வங்களில் ஒன்றை இழந்திருக்கிறது (இப்படிப்பட்ட பிரயோகங்களை அவர் விரும்ப மாட்டார்).
அரை நூற்றாண்டுக்கும் மேலாக நவீனத் தமிழின் உயிர்ப்பான இதயமாக அவர் இருந்தார். மிகச் சிறந்த எழுத்தாளர்களைக் கண்டறிந்து வெளியிட்டார். அவர்களின் படைப்புகளைச் சிரத்தையோடு செம்மையாக்கினார். தமிழ் அறிவுத் துறையில் மிக முக்கியமான நூல்களை வெளியிட்டார். வெளிநாட்டு இலக்கியங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டார். கூடவே, எந்த நவீன தெற்காசிய மொழியிலும் மிகச் சிறந்ததாகிய அகராதி ஒன்றை உருவாக்கினார்.
எனது இதயத்துக்கு மிக நெருக்கமானவரும், என் உள்மனதறிந்த எனது இருப்போடு இசைந்து இருந்தவருமான நண்பரை நான் இழந்துவிட்டேன். தி.ஜானகிராமன் சிறுகதைகளை நாங்கள் இருவரும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தோம்; ஆறேழு கதைகளை முடித்துவிட்டோம். எனினும், ராம் இல்லாமல் அந்தத் தொகுப்பை முடிப்பதென்பது எனக்கு மிக மிகத் துயரம் தருவதாகும். அது வெளியாகும்போது தனது கூரிய, அன்புக்குரிய விழிகளால் பார்ப்பதற்கு அவர் இருக்க மாட்டார் என்று நினைக்கும்போது இதயமே நொறுங்கிவிடும்போல் இருக்கிறது!
- டேவிட் ஷுல்மன், இஸ்ரேலைச் சேர்ந்த இந்தியவியல் அறிஞர்; சங்க இலக்கியத்தை ஹீப்ரு மொழியில் மொழிபெயர்த்தவர், ‘தமிழ்: எ பயோகிராஃபி’ நூலின் ஆசிரியர்.